.

றின்னோஸா எழுதிய உலகப் போர்களும் ஐரோப்பிய வரலாறும் என்ற புத்தகமானது ஐரோப்பிய வரலாற்றை சுருக்கமாகவும் சுவாரஸ்சியமாகவும் சொல்கிறது.அதாவது ஐரோப்பாவின் எழுச்சியையும் வீழ்ச்சியையும் பற்றி விரிவாகச் சொல்லித் தருகிறது.

ஐரோப்பா என்றாலே பூமியின் சொர்க்கம் என்று எண்ணம் எம்மில் பலருக்கு உள்ளது குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளில் உள்ளது.ஏனெனில் நாம் தொலைக்காட்சியிலும் திரைப்படங்களிலும் காணும் ஐரோப்பா மிக அழகானது. அங்கே நாம் பார்க்கும் மக்கள் கவலை இல்லாதவர்கள் அங்கே இருக்கும் சுதந்திரம் அலாதியானது.நம் பார்வைக்குத் தெரியும் ஐரோப்பா தக தகவென ஜொலிக்கும் வைரம்.ஆனால் உண்மையிலேயே அது வைரம்தானா இல்லை அதற்கு மறு பக்கமும் உள்ளதா என்பதைச் சொல்கிறது இந்தப் புத்தகம்.எனவே இதில் செழிப்பான மேற்கு ஐரோப்பாவின் வெற்றியை விவரிக்கும் அதே வேளை இருண்ட கிழக்கு ஐரோப்பாவின் அதிர்ச்சிகரமான பக்கங்களையும் புரட்டுகிறார் றின்னோஸா.தற்போதைய மேற்கு ஐரோப்பிய நாடுகளின் செல்வச் செழிப்பு எங்கே இருந்து வந்தது..?அந்தச் செல்வத்திற்கு பின்னால் இருக்கும் கதையை திரை விலக்குகிறார் றின்னோஸா.உண்மையில் மேற்கைரோப்பிய நாடுகள் இரண்டு உலகப் போர்களால் தரைமட்டமானவை ஆனால் அதிலிருந்து வெகு விரைவில் மீண்டு வந்து உலகத்திற்கே பாடம் எடுக்கிறது ஐரோப்பா.இந்த வெற்றி சாத்தியம்தானா..?அது எவ்வாறு என்ற கேள்விகளிற்கு விடையைத் தேடி ஆராய்கிறார் றின்னோஸா.

ஐரோப்பிய தேசங்கள் பற்றி எமக்கிருக்கும் கற்பிதங்களையும் கற்பனைகளையும் நிஜம் எது நிழல் எது என்று வேறுபடுத்திக் காட்டுகிறது இந்த நூல்.விஞ்ஞானம் மருத்துவம் தொழில்நுட்பம்,சுதந்திரம் என எல்லா ப்பக்கமும் எம்மை விடப் பல வருடங்கள் முன்னே சென்று விட்ட அதே ஐரோப் பாவிலேயே எமது தேசங்களை விட வறுமையில் வாடும் நாடுகள் உள்ளன.ஊழல் நிறைந்த அரசுகள் உள்ளன.குழந்தைகள் கடத்தல் போதைப் பொருள் மாபியா எனக் கறை படிந்த ஒரு மிகப் பெரிய நிழலுலகம் கிழக்கு ஐரோப்பாவில் பரந்து விரிகிறது என்ற கசக்கும் உண்மைகளைச் சுட்டிக் காட்டுகிறது இந் நூல்.


ஐரோப்பிய நாடுகளின் விசா நடைமுறைகள்,அங்கே அரசால் வழங்கப்படும் மக்கள் நலன்கள்,அவை யாருக்கு எந்த விகிதத்தில் சென்று சேருகிறன,வேலை வாய்ப்புக்கும் உயர் கல்விக்கும் ஐரோப்பாவிற்கு வருபவர்களின் நோக்கம் நூறு சதவீதம் நிறைவேறுகிறதா போன்ற விடயங்களைச் சுட்டிக் காட்டியி ருக்கிறது இந் நூல்.

உலகத்தில் எந்த ஒரு நாட்டின் வரலாற்றையும் இங்கிலாந்து என்ற நாட்டின் பெயரைத் தவிர்த்துவிட்டு எழுதிவிட முடியாது.இங்கிலாந்தின் வரலாறும் அது ஐரோப்பாவில்,உலக வரலாற்றில் பொருளாதாரத்தில் ஏற்படுத்திய தாக்கத்தையும் அறிந்து கொள்ள முடிகிறது.

ஒரு காலத்தில் உலகைக் கட்டி ஆண்ட ஓட்டோமன் பேரரசு,ரோமன் பேரரசு,ஸ்பானிஸ்,கிரேக்கம் போன்ற பண்பட்ட கலாச்சாரத்தினை கொண்ட நாடுகளையும் தன்னகத்தே கொண்ட ஐரோப்பிய கண்டம் காலப்போக்கில் பல சூழ்ச்சிகளைக் கண்டு,துரோகங்களில் தடுமாறி,இரண்டு உலகப் போர்களில் விழுந்து,ஒரு கட்டத்தில் ஏறக்குறைய முற்றாகவே அழிந்து போனது.ஆனால் விழுந்த குதிரை விரைவாக எழுந்து ஓடுவதைப்போல வீழ்வேனென்று நினைத்தாயோ என சூழுரைத்து குறுகிய காலத்தில் எழுந்து நின்ற அதன் எழுச்சி வரலாறு ஒவ்வொருவரும் அறிய வேண்டிய அவசியமான பாடம்.

இந்தப் புத்தகத்தினை எழுதுவதற்காக றின்னோஸா ஜேர்மனி, ஒஸ்ரியா, ஹங்கேரி,போலந்து,பிரான்ஸ்,சுவீடன்,நெதர்லாந்து என முக்கிய வரலாற்று நிகழ்வுகள் நடந்த பல இடங்களிற்கு நேரில் சென்று தகவல்களைத் திரட்டியி ருக்கிறார்.இரண்டாம் உலகப்போரில் போரிட்ட இராணுவ வீரர்களின் குடும்ப உறுப்பினர்களினைச் சந்தித்துப் பேசியிருக்கிறார் அதாவது கள ஆய்வு ஒன்றைச் செய்துதான் இந்தப் புத்தகத்தினை எழுதியிருக்கிறார் றின்னோஸா.

பதினைந்தாம் நூற்றாண்டிலிருந்து இந்தப் புத்தகத்தினை தொடங்கி விவசாயப் புரட்சி,தொழிற்புரட்சி,முதல் இரண்டு உலகப் போர்கள், பனிப் போர்கள்,ஐரோப்பாவின் அதிரடித் தலைவர்கள்,அங்கு நிகழ்ந்த முக்கிய நிகழ்வகள் என பயணித்து சமகால ஐரோப்பாவில் வந்து நிற்கிறது இப் புத்தகம்.இதற்காக உழைப்பும் நேரமும் அசாத்தியமானவை.

நாம் பார்க்கும் இன்றைய ஐரோப்பாவின் எதிர்காலம் பற்றியும் எதிர்வு கூறுகிறார் றின்னோஸா.ஐரோப்பா எதிர்காலத்தில் சந்திக்கவிருக்கும் பிரச்ச னைகளில் முதன்மையானது காலநிலை மாற்றம்.ஏனெனில் இப்போதே சுட்டெரிக்கும் வெயிலை ஐரோப்பிய மக்கள் உணரத் தொடங்கி விட்டார்கள். இது எதிர்காலத்தில் பெரிய தலைவலியைக் கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.அதனை விட எரிபொருள் நெருக்கடி பிளவுபடத் துடிக்கும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் பிரச்சனையாகவுள்ளன.ஆனாலும் இவை எல்லாவ ற்றையும் தூக்கிச் சாப்பிடும் அளவிற்கு வேறு ஒரு பிரச்சனை இருக்கிறது அதுதான் ரஸ்யா.ரஸ்யாவுடன் ஐரோப்பா எந்த வகையான உறவினைப் பேணுகிறது என்பதைப் பொறுத்தே ஐரோப்பாவின் எதிர்காலம் தீர்மானி க்கப்படும் என்பதில் சந்தேகமில்லை அதாவது ஐரோப்பாவின் அமைதி என்பது ரஸ்யாவைத் தவிர்த்து சாத்தியமில்லை என்கிறார் றின்னோஸா.

மொத்தத்தில் இந்த நூலானது வரலாற்றில் ஆர்வமுள்ளவர்களிற்கு ஏற்றது வாசிப்போம்.




Post a Comment

Previous Post Next Post