.

 புத்தகத்தின் பெயர்:- மரணம் 

ஆசிரியர் :-                     சத்குரு 

நூல் வெளியீடு .            ஈஷா அறக்கட்டளை 

விலை:- '                          350/-

பக்கம்:-                            455

பெறுவதற்கு :-                91 8300083111

பெரியோர்களே,தாய்மார்களே,இல்லை வேண்டாம்,நாம் வாழ்க்கையில் அனுபவித்து வாழ்வதற்கு இன்னும் எவ்வளவோ காலம் இருக்கிறது, அதற்கு முன் ஏன் சார் இதை அறிமுகம் செய்கிறீர்கள்.இந்தச் சொல்லைக் காலம் காலமாக எங்கள் உதட்டிலிருந்து வரவே கூடாது என்று, நம் முன்னோர்கள் சொல்லி வந்தார்கள், அதனையும் நாம் வேதவாக்காக எண்ணி பயன்படுத்தி வந்தோம். அதுதான் மரணம் நண்பர்களே.அத்துடன் இப்புத்தகம் இறக்கக்கூடியவர்களுக்கே என்ற பொருளையும் போடுகிறார்,சத்குரு அவர்கள்.

எனது உற்ற நண்பன் ரமேஷ்  என்பவர், சத்குரு வின் ஆன்ம, யோக தியானங்களில் ஈடுபட்டு,அதில் பல உண்மைகளைக் கண்டறிந்தார். அவரது சிறந்த சிந்தனை மூலம்,நீங்களும் இதனை ஒருமுறை வாசியுங்கள், பல தெரியாத, வழக்கத்துக்கு மாறான உண்மை விளக்கங்களை அறியலாம் என்ற சிபார்சுடன், சரிதான் சத்குரு  என் சொல்கிறார் என்று பார்த்தால், மனிதன் வாழும் போது பல துன்பங்கள், கவலைகள்,மன அழுத்தங்கள், நோய்கள் இவற்றுடன் ஏதோவொன்றின் மூலம் முட்டி மோதினபடியே தான் தன் உயிரை இந்தப் பூமிக்கு அர்ப்பணிக்கின்றான் நான் சொல்வதெல்லாம்,நீங்கள் இவ்வுலகை விட்டுப்போகும் போது, சந்தோஷமாக, எந்தவித நோயில்லாமல், மனநிம்மதியுடன்  உங்கள் உயிரை விடுங்கள் என்ற அடிப் படைக் கருத்தினை மையமாக வைத்தே இந்த சொல்லப்படாத ரகசிய ங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்கிறார் சத்குரு அவர்கள்.

இப் புதினம் 3 பாகங்களாகப் பிரித்து, 12 அத்தியாயங்களாக நகர்த்துகிறார் சத்குரு அவர் நேரடியாகவே எங்கள் முன் பிரசங்கம் செய்யும் முறையிலேயே அமைந்திருப்பது, வாசிப்பினைத் தொடர மிகவும் சிறப்பாக அமைந்துள்ளமை, எல்லோரையும் நிச்சயமாக ஈர்க்கும் என்பதில் சந்தேகமில்லை.

*மரணம் என்றால் என்ன *
*இறப்பின் ரகசியங்கள் *
*மரணத்தின் தரம் *
*மரணத்தை வெல்ல முடியமா*
*மஹாசமாதி*

இவற்றின் ஆழமான, அறிவு சார்ந்த, நடைமுறைக்குக் சாத்தியமான பல விடயங்களைத் தெழிவு படுத்துகிறார் அடுத்துவரும் பாகங்களில்,

நல்ல முறையில் இறப்பது எப்படி 
மரணத்திற்குப் பிறகு எப்படி 

இதிலும் பலவிதமான நிலைப்பாடுகளை விளக்குகிறார் சத்குரு.மரணத்தை மட்டும ல்லாது,உயிரின் தோற்றம்,அதன் பரிணாம வளர்ச்சி,கர்மாவின் வகைகள் கோஷம் மற்றும் வாயு,சக்கரம் இவற்றின் மூலம் மனிதனது வாழ்க்கை, இறந்தபின், ஏற்படும் மாற்றங்கள் ஆகியவற்றை, சில ஆதாரங்களுடன் முன் வைக்கிறார்.

ஞாபகம்  எப்படி ஒரு உயிருடன் தொடர்பு கொண்டுள்ளதோ, அதன் அடிப்படையில் தான் அவை பஞ்ச பூதங்களுடன் ஏனைய நிகழ்வுகளையும் நடத்துகின்றன என்கிறார் சத்குரு.8 வகையான ஞாபகம் ஒரு மனிதனது வாழ்க்கையை இழுத்துச் செல்கின்றன.அத்துடன் சக்தி, ஞாபகம் புத்தி இவற்றின் செயற்பாடுகள் முக்கியமானதாக கருதப்படுகிறது. அதன் விளக்கங்களை வாசிக்கும் போது உண்மையிலேயே இப்படி நடக்குமா என எண்ணத் தோன்றுகின்றது.

எங்களது உயிர் இறுதியாக உடலைவிட்டுப் பிரியும் வழிகளை 7 சக்கரங்கள்  வழியாகவும், அதிலே எந்தப் பதை சிறந்தது என்றும்,அதனால் ஏற்படும் பாதிப்புகளையும் கூறுகிறார் சத்குரு.

சாதாரண மரணத்திற்கும், தற்கொலை, அகாலமரணத்திற்கும், பின் இறந்தவர் போவதெங்கே விழிப்புணர்வு இல்லாதவர்கள் உருவாக்கியதே மரணம் நீங்கள் விழிப்புணர்வுடன் இருந்தால் இது வெறும் வாழ்வு  மட்டுமே, இருப்பதெல்லாம் வெறும் உயிர்,உயிர்,உயிர்  அதாவது வாழ்வின் ஒரு பரிமாணத்திலிருந்து இன்னொரு பரிமாணத்திற்கு நகர்வதே அவ்வளவுதான் என்கிறார் சத்குரு .



மரணத்தை மட்டுமல்லாது உயிரோட்டமுள்ள பஞ்ச பூதங்கள் கூட அதன் உயிரோட்டமுள்ள தன்மைகளை மனிதனுடைய வாழ்க்கையில் எப்படியாக ஆளுமை செய்கின்றது என்பதனை அறிவு பூர்வமாக விளக்குகிறார். ஆதிகாலம் தொட்டு மனிதன் தனக்கு ஏற்றமாதிரி சில கோட்பாடுகள், பிடிமானங்களை உருவாக்கியிருக்கிறார்கள். இதனை அவர் நீர்க்குமிழியின் செயற்பாட்டின் மூலம் வாசிக்கக்கூடியதாக உள்ளது. 8 விதமான ஞாபகத்தில்,நாம் இறக்கும் போதே அதில் 7 விதமான ஞாபகங்களும் இறந்து விடுகின்றன.மீதமான கர்ம ஞாபகம் மட்டுமே தொடர்கிறது. அதுவே பின்னர் அடிப்படையில் கர்மாவாகத் தொடர்கிறது என்கிறார்.

இறப்பு என்னும் நிகழ்வு அல்லது உடலற்றுப் போகும் நிகழ்வு என்பது, வெறும் மூச்சு நின்றுபோகும் தருணத்துடன் முடிந்து விடுவதில்லை, அதையும் தாண்டி வெகுதூரம் செல்கிறது. இதனை விளக்க அவர்,

*அன்னமய கோஷம் *
*மனோமய கோஷம்*
*பிராணமய கோஷம்*
*விஞ்ஞான மயகோஷம்*
*ஆனந்தமய கோஷம்*

மற்றும் 5 விதமான வாயுக்கள்  மூலம், அத்துடன் பல உதாரணங்களை முன்வைத்து இலகுவாகப் புரியும் படி நகர்த்துகிறார்.

ஒருவர் முக்தி அடைய வேண்டுமாயின், அவர் வாழ்க்கையிலும் விழிப்புணர்வுடன் வாழ்ந்திருக்க வேண்டும். இறக்கும் தறுவாயில் 100% விழிப்புடன் இருந்தால் அவருக்கு மறுபிறவி எடுத்திடும் தேவை கிடையாது என்கிறார்.

எங்கள் வாழ்க்கையை முடிக்க வேண்டுமாயின், நாம் எங்களுடைய பிராரப்த கர்மா வை கரைத்திட வேண்டும் என்கிறார் சத்குரு. இறந்தவர்கள் மீண்டும் உயிர்தெழுவது பற்றியும், அதன் மரபுரீதியான மூட நம்பிக்கைகளுக்கும், விஞ்ஞான ரீதியான முழு விளக்கங்களும் அற்புதமாகத் தந்துள்ளார்.இப் புதினத்தில், பலவிதமான (மரணத்தோடு ஒட்டியுள்ள) கோள்விகளுக்குப் பதில் கூறும் வண்ணமே அவரது விளக்கங்கள் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மரணத்தைக் கண்டு நாம் எல்லோரும் பயப்பிடுகிறோம். ஆனால் சத்குரு சொல்கிறார், அதையிட்டு நீங்கள் (அது வரும்போது) சந்தோஷம் அடைய வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த பூமியில் வந்தவர்கள் என்றோ ஒரு நாள் போயே ஆக வேண்டும்.ஆனால் அவர் இன்னுமொரு செய்தியையும் தருகிறார், அதாவது மரணத்தைப் பிற்போடலாம் என்றும் அல்லது வாழ்ந்தது காணும் சிறிது நாட்களின் பின், என் உடலை விட்டுப் பிரிய முடிவாகியுள்ளேன் (உயிர்) என்று உங்கள் முடிவை நிறைவேற்ற முடியும் என்று அடித்துச் சொல்கிறார். ஆனால் ஒரு விடையம், இவையனைத்தும் ஒரு யோகி, ஞானி, போன்றவர்களால் மட்டும் அல்லது வாழ்வில் விழிப்படைந்தவர்களுக்கு மட்டுமே சாத்தியம் என்றும், அதற்கு தனது வாழ்க்கையில் ஏற்பட்ட உண்மைச் சம்பவங்களையும்,அவர் சந்தித்த, எதிர் கொண்ட மகான்களையும் உதாரணமாக இங்கே தருகிறார். அதில் பல ஆச்சரியமான உண்மைகளைக் காணலாம்.

மரணம் ஒரு போதும் திடீரென நடப்பதில்லை என்று அடித்துச் சொல்கிறார் சத்குரு. ஒரு தாயின் கருவறையில் நாம் திடீரெனப் புகுந்து சில நாட்களில் வெளி வருவதில்லை,அதே போல் இறப்பவர்கள் (இயற்கையாக) உடனடி இல்லாமல் சில வாரமோ,மாதமோ,வருடங்களோ தங்களைத் தயார்படுத்திக் கொள்கிறார்கள். ஆனால் அது அவருக்கு மட்டும் அல்லது ஞானி, யோகிகளுக்கு மட்டுமே புரிகிறது. திடீரென இறப்பவர்கள் கூட, அவர்களுக்கே தெரியும், அவர்களது மரணம் எப்படியானதென்று. மகான்கள், யோகிகளோ, இறக்குமுன் தனிமையைத் தெரிவு செய்கிறார்கள். இதற்கு விவங்குகளை உதாரணமாகக் காட்டுகிறார் சத்குரு.

5 வகையான ஆசிரமம்.ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய ஒரு பருவம் ஆகும். அதனை அட்டவணை மூலம் தருகிறார் சத்குரு அவர்கள். இறந்த உடலுக்கு நாம் கொடுக்கும் மரியாதை என்ன? அப்போது நாம் செய்யவேண்டிய கடமைகள், செய்யக் கூடாதவை என்ன? எதற்காக நாம் அதற்குக் கிரிகைகள் செய்யவேண்டும், உடலை நாம் எரிக்கலாமா அல்லது புதைக்கலாமா அல்லது பிணம் தின்னும் பறவைகளுக்கு வைக்கலாமா, இதனால் அவர் சொர்க்கம் போவாரா அல்லது நரகம் போவாரா?இது போன்ற நூற்றுக்கணக்கான கேள்விகளுக்கு சத்குரு அவர்கள் தரும் விளக்கம், உண்மையில் நாம் அறிந்திராத விடையம் தான் என எண்ணத் தோன்றுகின்றது.

ஆன்மிகத்தில் உங்களை முடிந்தவரை இணைத்துக் கொண்டு வாழப் பழகுங்கள் என்ற அடிப்படையில் சத்குரு பல கருத்துக்களையும், அதன் பலாபலன்களையும் தந்து, முதுமையான காலத்தில் உங்களை எப்படி மரணத்திற்குத் தயார் செய்வது என்ற சூட்சுமத்தை அறிய,நண்பர்களே வாசித்து,தெரியாதனவற்றைத் தெரிந்து வைத்துக் கொள்வது, சிறந்தது எனக் கூறி, சொல்லப்படாத ரகசியங்களை அறிய நல்ல வாய்ப்பென்றே நான் சொல்வேன்.வாசிப்போம்


@பொன் விஜி - சுவிஸ்

மரணம் சொல்லப்படாத இரகசியங்கள் புத்தகத்தினை வாசிப்பதற்கு கீழுள்ள இணைப்பை அழுத்தவும்
You have to wait 45 seconds.

Generating Download Link...

Post a Comment

Previous Post Next Post