.

சத்யன் தன் குழந்தை பருவத்திலேயே தந்தையை இழந்து விட்டான். தந்தையற்ற மகனை அவன் தாய் லட்சுமி மிகவும் அன்புடன் வளர்த்து வந்தாள். இயல்பாகவே நல்லவனாக இருந்தும், கெட்ட நண்பர்களின் சகவாசத்தால், சத்யன் முறை தவறி நடக்க ஆரம்பித்தான்.லட்சுமி  அவனுக்கு எவ்வளவோ புத்திமதி கூறியும் சத்யன் திருந்தவில்லை.இளைஞனாக மாறிய பிறகும், பொறுப்பின்றி திரிந்த தன் மகனின் எதிர்காலத்தைப் பற்றி கவலைப்பட்டே, லட்சுமி ஒருநாள் இறந்து போனாள்.

தனக்கு ஒரே துணையாயிருந்த தாயைப் பறிகொடுத்த பிறகுதான் தன் நிலைமை சத்யனுக்குப் புரிந்தது.கையில் காசு பணமில்லை. வேலையும் கிடையாது. ஆதரவு காட்ட உறவினர்களும் இல்லை. விரக்தி அடைந்த சத்யன், ஊரை விட்டு, மக்களை விட்டு காட்டை நோக்கிச் சென்றான்.

காட்டிற்குச் செல்லும் வழியில்,ஒரு மரத்தடியில் ஒரு கிழவி சீதாப் பழங்களை விற்றுக் கொண்டு இருந்ததைக் கண்டான். சத்யனைப் பார்த்த கிழவி அவனை, “இந்த வெயிலில் எங்கே செல்கிறாய்? இந்த மர நிழலில் சிறிது ஓய்வெடுத்துக்
கொள்” என்று சீதாப்பழங்களைக் கொடுத்து உபசரித்தாள்.



"பாட்டி, என்னிடம் காசு இல்லையே!” என்றான் சத்யன். ''நீ என்னுடைய பேரப்பிள்ளை மாதிரி இருக்கிறாய். பணம் எதுவும் எனக்கு நீ தர வேண்டாம். இந்தா, சாப்பிடு!’என்று அன்புடன் கூறினாள்.

பசியுடன் இருந்த சத்யனுக்கு அந்தப் பழங்கள் அமுதம் போல் இருந்தன. அவற்றை உண்ட பின் மரநிழலில் ஓய்வெடுத்துக் கொண்டு இருந்த சத்யனிடம், கிழவி தன்னைப் பற்றி பேசத் தொடங்கினாள். “மகனே! எனக்கு எண்பது வயது ஆகி விட்டது.என்னுடைய மகன், மருமகள் பேரன் அனைவரும் இறைவனடி சேர்ந்து விட்டனர். நான் மட்டும் தனியே இருக்கிறேன். எனக்கு இன்னும் சாவு வரவில்லை. என்ன செய்வது? வயிறு என்று ஒன்று இருக்கிறதே! ஆகையால் இந்தப் பழங்களை விற்று, என் நாள்களைக் கழிக்கிறேன்! " என்றாள்.

சத்யன் கிழவியிடம் இருந்து விடை பெற்றுக் கொண்டு, தன் பயணத்தைத் தொடங்கினான்.வழியில் மரம் ஒன்றில் அமர்ந்து கிளைகளை வெட்டிக் கொண்டிருந்த ஒரு சிறுவனை பார்க்க நேரிட்டது.அவனுடைய செய்கையைக் கண்டு வியப்படைந்த சத்யன் அவனை நோக்கி, "தம்பி! சிறுவனான நீ இவ்வளவு கடினமான வேலையை ஏன் செய்கிறாய்?” என்று கேட்டான்.
அதற்கு அவன், "ஐயா, தாய் தந்தையற்ற அநாதை நான். விறகு வெட்டி
விற்று, அதில் கிடைக்கும் பணத்தைக் கொண்டு வாழ்க்கை நடத்துகிறேன்”
என்றான்.

சிறுவனின் அந்த சொற்களை கேட்டதும், சத்யனுக்கு 'சுள்' என உரைத்தது. ஒரு சிறுவன் கூட தானே உழைத்து தன் பிழைப்பை கவனிக்கிறான். வயதான கிழவி கூட உழைக்கிறாள். நான் மட்டும் ஏன் இவ்வாறு பொறுப்பின்றி, வேலை
எதுவும் செய்யாமல் காலம் கழிக்கிறேன்? நானும் இவர்களைப் போல் உழைத்து வாழ வேண்டும் என்று அவன் சிந்தனை அலைகளை ஓடின. உடனேஅவன் தன் கிராமத்தை நோக்கித் திரும்பிச் சென்றான். கிராம அதிகாரியான சந்திரனை சந்தித்தான்.

“வா, சத்யா!” என்று அவனை சந்திரன் வரவேற்றார். அவரை வணங்கி விட்டு, சத்யன், “ஐயா! என்னைப் பற்றி உங்களுக்குத் தெரியும். என் பெற்றோர் ஈட்டிய
சொத்துகளை வீணே கரைத்த பாவி நான்! ஆனால் நான் இப்போது திருந்தி
விட்டேன். நானும் மற்றவர்களைப் போல் உழைத்து வாழ விரும்புகிறேன். எனக்கு ஏதாவது வேலை போட்டுக் கொடுத்தீர்களானால், நான் மிக நன்றியுள்ளவனாக இருப்பேன்!”என்று பணிவுடன் வேண்டினான்.

புன்னகையுடன் அவனை நோக்கிய சந்திரன், “இப்போது உனக்கு தருகிற மாதிரி வேலை எதுவும் என்னிடம் இல்லை. ஆனால் நீ இவ்வாறு மனம் திருந்த வேண்டும் என்பதே உன் தாயின் விருப்பமாக இருந்தது. ஒருநாள் நீ கட்டாயம்
திருந்துவாய் எ ன்ற நம்பிக்கையும் அவளுக்கு இருந்தது. அதனால்தான் அவள் என்னிடம் சிறிது பணமும்,இரண்டு ஏக்கர் நிலமும் கொடுத்து வைத்திருக்கிறாள். உழைத்து வாழ வேண்டும் என்ற உறுதி உனக்கு ஏற்பட்டு விட்டதால் உன் தாய் உனக்காக தந்திருப்பதை உன்னிடம் இன்று அளிக்கிறேன்!" என்று கூறி விட்டு உள்ளே சென்றவர் திரும்பி வந்து சிறிது ரொக்கப்பணமும்,நிலங்களுக்கான பத்திரத்தையும் அவனிடம் அளித்து அவனை வாழ்த்தி அனுப்பினார்.

சத்யன் மீ ண்டும் ஒருமுறை அவரை வணங்கி வி ட்டு, தன்' அன்னைக்கு தன் இதயப்பூர்வமான நன்றிகளை மனதாரத் தெரிவித்துக் கொண்டான். தன் வளமான எதிர்காலத்திற்காக மிகவும் புத்திசாலித்தனமாகத் திட்டமிட்டிருந்த தன் தாயின் அன்பினை நினைத்துக் கண்ணீர் வடித்தான். “அம்மா! நீ என் மீது வைத்திருந்த நம்பிக்கை வீணாகவில்லை. நான் திருந்தி விட்டேன் அம்மா! இனி உழைத்து வாழ்ந்து,வாழ்வில் வெற்றியடைவேன்! நீ
என் அருகில் இல்லாமல் போய் விட்டாயே!" என்று அழுதான்.





Post a Comment

Previous Post Next Post