.

பிரம்மதத்தன் காசியை ஆண்ட போது போதிசத்வர் அவரது அமைச்சராக இருந்தார். ஒரு முறை பிரம்மதத்தனுக்குத் தன் மகன் மீது ஏதோ ஒரு காரணத்தால் கோபம் ஏற்பட்டு விட்டது. அதனால் அவனை நாட்டை விட்டே வெளியேற்றி விட்டான்.அரசகுமாரனும் தன் மனைவியுடன் அங்கிருந்து கிளம்பிப் போய் பல நாடுகளில் அலைந்து திரிந்து பல துன்பங்களை அனுபவித்தான்.

சில வருடங்களுக்குப் பின் பிரம்மதத்தன் இறந்து போனான். அதைக் கேட்டதும் அவனது மகன் அயல் நாட்டிலிருந்து கிளம்பி காசியை நோக்கி நடந்து வரலானான். அவனது மனைவியால் அவனுக்குச் சமமாக வேகமாக நடக்க முடியவில்லை.இருவருக்கும் பசி எடுத்தது.

அவர்கள் ஒரு ஊரை அடைந்த போது அந்த ஊர்க்காரர்கள் அவர்களைப் பார்த்து 'ஐயோ பாவம் ரொம்பவும் களைத்துப் போய் இருக்கிறீர்களே. இங்கேயே சாப்பிட்டு விட்டுக் கையில் சிறிதுகட்டி எடுத்துக் கொண்டும் போகிறீர்களா?” என்றனர்.


அரசகுமாரனோ “சாப்பிடுவதற்கு நேரமில்லை. சிறிது கட்டிக் கொடுங்கள். எடுத்துக் கொண்டு போகிறோம்” எனக் கூறித் தன் மனைவியை ஓரிடத்தில் சற்று நேரம் உட்கார்ந்திருக்கச் சொன்னான். பிறகு உணவு கொடுப்பதாகச் சொன்னவன் வீட்டிற்கு அவன் போனான். அந்த வீட்டுக்காரனும் இருவரும் சாப்பிடும் அளவிற்கு உணவை இலையில் கட்டிக் கொடுத்து அனுப்பினான்.

அரசகுமாரனும் உணவுப் பொட்டலத்தை எடுத்து வரும் போது 'இதில் இருவருக்கான உணவு உள்ளது. காசிக்குப் போய்ச் சேர வேண்டியவன் நான்தானே. என் மனைவியைப் பற்றிக் கவலைப்படுவானேன்? அதனால் இரண்டு பேர்களுக்கான உணவை நானே சாப்பிட்டு விடுகிறேன்' என எண்ணிக் கொண்டபடியே அவன் தன் மனைவி இருந்த இ டத்திற்குப் போய் ' 'நீ முன்னால் போய்க் கொண்டிரு. நான் நித்திய கடன்களை முடித்து விட்டு வருகிறேன்” எ னக் கூறி அ வளை அனுப்பி விட்டு, அவள் போனதும் அவன் உணவுப் பொட்டலத்தை பிரித்து எல்லாவற்றையும் தனே சாப்பிட்டான். பிறகு வெறும் இலைகளைப் பொட்டலம் போலச் செய்து எடுத்துக் கொண்டு அவன் மனைவி இருந்த இடத்தை அடைந்தான்.

அவளிடம் அவன் பொட்டலத்தைக் கொடுப்பது போல நடித்து திடீரென்று “ஆ! என்ன மோசம்! நமக்கு உணவு கொடுப்பதாகச் சொல்லி விட்டு வெறும் இலைகளைக் கட்டிக் கொடுத்திருக்கிறார்களே!” என்று அப்பொட்டலத்தைப் பிரித்தான்.

அவனது மனைவி உண்மையைப் புரிந்து கொண்டு விட்டாள்.ஆனாலும் கணவனுக்கு மரியாதைக் காட்ட வேண்டும் என்பதற்காக எதுவும் பேசாமல் இருந்தாள். இன்னும் சில நாள்கள் நடந்து சென்று முடிவில் ஒருவாறாக காசியை அடைந்தார்கள்.

அரசகுமாரன் நேராக அரண்மனைக்குப் போய் தான் வந்திருப்பதைக் கூறி பட்டாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளைச் செய்து சிம்மாசனத்தில் அமர்ந்தும் வி ட்டான்.

அரசனான பிறகு அவன் தன் மனைவியைப் பற்றிச் சற்றும் கவலைப்படவில்லை. அதனால் அவள் முன் போலக் கவலைப் பட்டுக் கொண்டே இருக்கலானாள்.

அரசனின் அமைச்சரான போதிசத்வர் ராணி எப்போதும் கவலையுடன் இருப்பதைக் கவனித்து அவளிடம் சென்று “அம்மணீ! அரசர் தமக்கு நல்ல காலம் வந்ததற்காக எனக்கு ஏராளமான பரிசுகள் அளித்தார்.

ஆனால் நீங்கள் ஒரு பரிசு கூட அளிக்கவில்லையே” என்று கேட்டார். அதற்கு ராணியும் "ஐயா! நான் பெயருக்குத்தான் ராணியாக இருக்கிறேனே ஒழிய எனக்கும் அந்தப்புரத்தில் பணிபுரியும் பெண்களுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லை”என்று தன் மனத்தில் உள்ளவற்றைக் கூறி, அதுதான் "போகட்டும். இப்போதாவது நான் சாப்பிட்டேனா சௌகரியமாக இருக்கிறேனா என்று அவர் என்னிடம் கேட்கலாமல்லவா”எனக் கூறிக் கண்ணீர் வடித்தாள்.

போதிசத்வரும் 'மகாராணி நடந்ததை மறந்து விடுங்கள். உங்கள் துயரத்தை உங்களிடமிருந்தே கேட்டு அறிய வேண்டும் என்றுதான் நான் இங்கு வந்தேன். நான் நாளை தர்பாரில் உங்களிடம் கேள்வி கேட்கிறேன்.இதே பதிலை நாளை நீங்கள் சொல்லுங்கள். உங்கள் கவலையைப் போக்கச் செய்கிறேன்” என்று ஆறுதல் கூறி விட்டுச் சென்றார்.

மறுநாள் தர்பாருக்கு ராணியும் வந்தாள். அப்போது போதிசத்வர் ராணியிடம் “அரசியார் பட்டத்திற்கு வந்தும் ஏழைப் பணியாளர்களான எங்களைக் கவனிக்கவில்லையே” என்று கேட்டார். உடனே அவள்தன் கணவனின் செயலைப் பற்றிக் கூறினாள். தான் அவளுக்கு உணவு கூடக் கொடுக்காமல் திருட்டுத் தனமாகச் சாப்பிட்ட விஷயம் அனைவர் முன்பும் வெளிப்பட்டதும் அரசனுக்கு அவமானமாகப் போயிற்று.

உடனே போதிசத்வர் “ராணியாரே! அரசர் உங்களை மதிக்கிறதில்லை என்பது தெளிவாகி விட்டது. பின் ஏன் அவரோடு இருக்க வேண்டும்?” எனக் கூறி ஒரு சமஸ்கிருத சுலோகத்தையும் கூறினார்.

அதன் கருத்து பின் வருமாறு:
“விட்டுப் போகிறவனை விட்டு விடு. அவனது நட்பையும் தொடர்பையும் விரும்பாதே. மதியாத ஒருவனை நீயும் மதிக்காதே.பறவைகள் பழங்கள் இல்லாத மரங்களை விட்டுப் பறந்து வேறு பழம் கொடுக்கும் மரத்தில் போய்
வசிக்கின்றன. உலகம் பரந்து கிடக்கிறது. அதில் உனக்கா இடம் இல்லை?”

இப்படி போதிசத்வர் கூறியதும் பிரம்மதத்தனின் மகன் போதிசத்வரின்
கால்களில் விழுந்து “அமைச்சரே! என்னை மன்னியுங்கள். நான் என் அகம்பாவத்தால் குருடனாகி விட்டேன். இனி என் மனைவியை கண்ணியமுடன் நடத்துவேன்” எனக் கூறிக் கண்ணீர் வடித்தான். பின்னர்
அவன் தன் மனைவியோடு சுகமாக வாழலானான்.







Post a Comment

Previous Post Next Post