.

லட்சுமிபுரம் என்ற கிராமத்தில் அண்ணாமலை என்ற தனவந்தர் வாழ்ந்து வந்தார். அவரிடம் ஓரளவிற்கு கணிசமான நிலங்கள் இருந்தன. பல ஏழை விவாயிகள் அவரிடம் கூலிக்கு வயலில் வேலை செய்து வந்தனர். நேர்மையும், தயாள மனமும், நற்குணங்களும் நிரம்பிய அண்ணாமலை, தன்னிடம் வேலை செய்பவர்களின் உழைப்பிற்குத் தகுந்த ஊதியம் கொடுத்து, அவர்களை மகிழ்ச்சியுடன் வாழ வைத்தார்.

விவசாயிகளும் அண்ணாமலையை தங்களை வாழ வைக்கும் தெய்வமாகக் கருதினர். அண்ணாமலை சிறந்த மல்யுத்த வீரராகத் திகழ்ந்தார்.அவர் தனது கிராமத்தில் அடிக்கடி மல்யுத்தப் போட்டிகளை நிகழ்த்தி,அதில் வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசுகள் அளித்து ஊக்குவித்து வந்தார்.இதனால் அண்ணாமலையின் பெயரும், புகழும் பக்கத்திலுள்ள கிராமங்களுக்கெல்லாம் பரவியது.


லட்சுமிபுரம் அருகில் சமஸ்திபுரம் எனும் கிராமத்தில், ஜமீன்தாராயிருந்த பூபதி அண்ணா மலையின் புகழ் பரவுவதைக் கண்டு அவர் மீது  பொறாமை கொண்டார். அவருடைய நிலங்களை எல்லாம் அபகரித்துத் தனதாக்கிக் கொள்ள வேண்டும் என்ற தீய எண்ணம் பூபதிக்கு ஏற்பட்டது.

உடனே அவர் தன்னுடைய திவானை அழைத்து, “இந்த அண்ணாமலையின் புகழ் நாளுக்குநாள் பரவுகிறது.அவனுடைய நிலங்களை என்னுடையதாக ஆக்கிக் கொள்வதற்கு என்ன செய்யலாம் கூறு ? ” என்று கேட்டார்.

"நம்முடைய இளைய எஜமானர் அழகிரிக்கு அவருடைய மகளை திருமணம் செய்து வைத்தால்,அவருடைய சொத்துகள் நம் வசமாகும்,'' என்று திவான் யோசனை தந்தார்.

உடனே பூபதி தன் திவான் மற்றும் ஏராளமான பணியாட்களுடன் அமர்க்களமாக லட்சுமிபுரத்திற்கு வந்து,அண்ணாமலையிடம் அ வருடைய மகளை தன் மகனுக்குத் திருமணம் செய்து தருமாறு கேட்டார். ஆனால் அண்ணாமலை, "பிரபு! நீங்கள் மிகப் பெரிய ஜமீன்தார், உங்களுடைய அந்தஸ்திற்கு முன், நான் சாதாரணமானவன். ஆகவே இந்த சம்பந்தம் பொருந்தாது. தவிர, நான் ஏற்கெனவே என் நண்பருடைய மகனுக்கு அவளைத் திருமணம் செய்து தருவதாக வாக்களித்து விட்டேன்,”என்றார்.

பூபதிக்குப் பெருத்த அவமானம் ஏற்பட்டு விட்டதால் அண்ணாமலையை பயமுறுத்தினார். அண்ணாமலையும் சிலநாள்கள் அவகாசம் தரும்படிக் கேட்டுக் கொண்டார்.

ஆனால் பிறகு யோசித்துப் பார்த்ததில், பூபதியின் மிரட்டலுக்கு அடிபணிவதில் அர்த்தமில்லை என்று அண்ணாமலைக்குத் தோன்றியது.தவிர, தான் முன்னமே திட்டமிட்டு இருந்தபடி, தன் நண்பரின் மகனுக்கே தன் மகளை திருமணம் செய்து வைத்து விட்டார்.

செய்தி அறிந்ததும் அடிபட்ட புலியைப் போல் உறுமினார் பூபதி.“கேடு கெட்ட அண்ணாமலையின் திமிரைப் பார்த்தாயா? நான் வலியச் சென்று பெண் கேட்டும், என்னை முகத்தில் அடித்ததுபோல் அவமானப்படுத்தி விட்டான்” என்று ஆவேசத்துடன்கூவினார். “உங்களை மட்டுமல்ல! என்னையும் அவர் அவமானப்படுத்தி விட்டார். அப்பா! நான் அவருடைய நிலங்களை உங்களுக்குக் கைப்பற்றித் தருகிறேன்!“ என்று கோபத்துடன் அவருடைய மகன் அழகிரியும் கூவினான்.

“கேளுங்கள் அப்பா! நான் ஒரு சிறந்த மல்யுத்த வீரன் என்று உங்களுக்குத் தெரியும். தன்னை ஒரு மல்யுத்த வீரன் என்று கூறிக் கொள்ளும் அண்ணாமலையை என்னுடன் போட்டிக்கு அழைப்பேன். நான் வெற்றி பெற்றால், அந்த நிலங்களை எனக்குக் கொடுத்து விடும்படி சவால் விடுவேன். அந்தக் கிழட்டுப் புலியை மல்யுத்தத்தில் மண்ணைக் கவ்வச் செய்து விட்டு, அவருடைய நிலங்களைத் தட்டிப் பறிப்பேன்!’’ என்று தன் திட்டத்தைக் கூறினான். பூபதியும் அதைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்தார்.

தனது திட்டத்தை செயலாக்க விழைந்த அழகிரி, ஊரார் அறிய பகிரங்கமாக அண்ணாமலைக்கு ஒரு சவால் விட்டான். “தன்னை ஒரு சிறந்த மல்யுத்த வீரராகக் கருதும் அண்ணாமலை என்னுடன் ஒருமுறை போட்டியிட்டுப் பார்க்கட்டும். அவர் தோற்றால், அவருடைய நிலங்கள் எனது உடமையாகும். அவர் வெற்றி பெற்றால், அவரை எங்களுக்கு சமமான ஜமீன்தாராகக் கருதி கௌரவிப்போம்,” என்றான்.

லட்சுமிபுரவாசிகள் இந்த சவாலைக் கேட்டு அதிர்ச்சியுற்றனர்.
வயது முதிர்ந்த அண்ணாமலையால் எப்படி இளவட்டமான அழகிரியுடன்
மல்யுத்தம் செய்ய முடியும்? என்று கூறி, அண்ணாமலை போட்டியில்
சேராமல் தடுக்க முயன்றனர். ஆனால் அண்ணாமலையோ,ஒருவன் பகிரங்கமாக சவால் விட்டபிறகு,அதை ஏற்றுக் கொள்ளாமல் பின்
வாங்குவது அழகல்ல. தருமத்தின் துணை எனக்கு எப்போதும் உண்டு.
அந்த தருமமே எனக்கு வெற்றியைத் தரும்” என்று சொல்லி விட்டுப்
போட்டியில் பங்கேற்கத் தயாரானார்.

போட்டி நடக்கும் நாளும் வந்தது.போட்டியும் இனிதே தொடங்கியது.
தருமமே வெல்லும்” என்று பார்வையாளர்கள் கூச்சலிட, அழகிரிக்கு அப்போது இலேசாக பயம் ஏற்பட்டது, மனத்தைத் தேற்றிக் கொண்டு, மல்யுத்தத்தில் இறங்கினான் அழகிரி. ஆனால் என்ன ஆச்சரியம்! முதல் சுற்றிலேயே அண்ணாமலையால் தாக்கப்பட்டு அழகிரி தடுமாறி கீழே விழுந்தான். உடனே
போட்டியை நிறுத்திய அழகிரி மக்களிடம், “அண்ணாமலை என்ற தருமராஜரை என்னால் வெல்ல முடியாது. நான் என் தோல்வியை ஒப்புக்கொள்கிறேன்" எ ன்று சொல்லிவிட்டு,அவமானத்தால் குன்றிப் போயிருந்த தன் தந்தையுடன் சமஸ்திபுரம் திரும்பிச் சென்றான்.

சுற்றியிருந்த மக்கள் அண்ணாமலையைத் தோளில் தூக்கிக் கொண்டு “தருமமே வென்றது”என்று மகிழ்ச்சியில் கூக்குரலிட்டனர்.








Post a Comment

Previous Post Next Post