.

மனிதன் சிந்தித்துச் செயல்படுவது போன்று,பல்வேறு கணினிச் செய்நிரல்களை உருவாக்கி,அவற்றைக் கணினியில் உள்ளீடு செய்து, அதன் வழியாக ஒரு இயந்திரத்தை சிந்தித்துச் செயல்பட வைக்கும் முறையினை செயற்கை நுண்ணறிவு என்று எளிமையாக கூறலாம்.கணினி அறிவியலின் பரந்த கிளையாக செயற்கை நுண்ணறிவு (Artificial intelligence - Al) இருக்கிறது. சிறப்பு செயற்கை நுண்ணறிவு என்பது மனிதர்களை விடப் பன்மடங்கு சிந்திக்கும் திறன் கொண்டது.அதிவேகமாகச் செயல்படக் கூடியது. இந்தத் தொழில் நுட்பம் பயன்படுத்திச் செய்ய முடியாத வேலைகளே இல்லை என்று சொல்லப்படுகிறது.எனினும் இந்தத் தொழில்நுட்பம் மனிதனுக்கு வரமா? சாபமா?,மனித சமூகத்திற்கு, சுற்றுச் சூழலுக்கு இதனால் தீங்கு எதுவும் வந்து விடாதா? என்கிற கேள்விகளும் அதிகரித்துள்ள நிலையில்,மனித சமூகத்திற்கும் சுற்றுச் சூழலுக்கும் இதனால் ஆபத்து என்ற எச்சரிக்கைகளும் வெளியிடப்படுகின்றன.

இவ்வாறான நிலையில் OpenAl நிறுவனம், ChatGPT என்னும் செயற்கை நுண்ணறிவு மென்பொருளை அண்மையில் அறிமுகப்படுத்தியது. இதையடுத்து,இந்த மென்பொருளைத் தங்கள்  Bing எனும் தேடு பொறியுடன் இணைக்கும் பணியில் Microsoft நிறுவனம் ஈடுபட்டது. இதனையடுத்து கூகுள் நிறுவனம், உடனடியாக Bard எனும் செயற்கை நுண்ணறிவு அரட்டை மென்பொருளைக் களமிறக்கியது. இந்தப் பந்தயத்தில் அமேசான் நிறுவனமும் சீனாவின் பைடூ நிறுவனமும் இணைந்திருக்கின்றன.

OpenAi என்ற நிறுவனம் உருவாக்கிய ChatGPT மற்றொரு தேடு பொறி தானே என்று அவ்வளவு எளிதாக நாம் கடந்து சென்று விட முடியாது. இது அதுக்கும் மேலானது உலகத்தின் இப்போதைய பேசு பொருள் இதுதான். இதைப் பற்றி ஆயிரக்கணக்கான செய்திகள்,கட்டுரைகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இதனை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.இதன் வரவால் கூகுள் தேடு பொறி உட்பட தற்போது பயன்பாட்டில் உள்ள இன்னும் பிற தொழில்நுட்பங்கள் பயன்பாடுகள் காணாமல் போகுமா என்ற தலைப்பில் உலகம் முழுவதும் கருத்துக்கள் வெளிக் கிளம்பியுள்ளன.

ஆனால் OpenAi நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட, ChatGPT  என்னும் செயற்கை நுண்ணறிவு மென்பொருளால் எதிர்காலத்தில் கார்பன் உமிழ்வு (Carbon emission) அதிகரித்து சுற்றுச்சூழல் கேடுகள் ஏற்படும் எனச் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.இந்த செயற்கை நுண்ணறிவு மென்பொருள் பல வேலைகளை எளிமையாக்கும் என்பது உண்மைதான்.ஆனால், உடன்விளைவாகப் பல பிரச்சினைகளையும் கொண்டு வருவதுதான் கவலைக்குரிய விடயம்.அவற்றில் குறிப்பிடத்தக்கது கார்பன் உமிழ்வு என்கின்றனர் சுற்றுச் சூழல் செயற்பாட்டாளர்கள்.

இவ்வாறான நிலையில் செயற்கை நுண்ணறிவு மனித இனத்தின் அழிவுக்கு வழிவகுக்கும் என OpenAI, கூகுள் (Google Deepmind)-ன் தலைவர்கள் மற்றும் அத்துறையைச் சேர்ந்த வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.செயற்கை நுண்ணறிவு குறித்த பாதுகாப்பு மையத்தின் (Centre for Al Safety) வலைப் பக்கத்தில் வெளியிடப்பட்ட இது போன்ற பதிவுக்கு ஏராளமானோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.'செயற்கை நுண்ணறிவின் காரணமாக மனித குல அழிவிற்கான ஆபத்து ஏற்படுவதைத் தடுக்க, கொரோனா, அணு ஆயுதப் போர் உள்ளிட்டவற்றைத் தடுப்பதற்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவத்தை அளிக்க வேண்டும்' என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.ஆனால் இது போன்ற அச்சம் மிகைப்படுத்தப்பட்ட ஒன்று என பலர் விமர்சித்துள்ளனர்.


ChatGPT என்னும் செயலியை உருவாக்கிய OpenAi இன் தலைமை நிர்வாகி சாம் அல்ட்மேன், கூகுள் டீப்மைண்ட் தலைமை நிர்வாகிடெமிஸ் ஹஸ்ஸாபிஸ் மற்றும் Anthropic நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டரியோ அமோடி ஆகியோர் செயற்கை நுண்ணறிவு குறித்த பாதுகாப்பு மையத்தின் இந்த பதிவை ஆதரித்துள்ளனர்

செயற்கை நுண்ணறிவினால் என்ன மாதிரியான பேரிடர்கள் ஏற்படும் என்பது குறித்த சில சூழ்நிலைகளை செயற்கை நுண்ணறிவு குறித்த பாதுகாப்பு மையம் வெளியிட்டுள்ளது. அவை;செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் பல மென்பொருட்கள் மற்றும் மின் அணு கருவிகளை பெரும் ஆயுதங்களாக சமூக விரோத கும்பல்கள் மற்றும் சில நாடுகளின் அரசுகள் பயன்படுத்தலாம்.

  •  செயற்கை நுண்ணறிவின் துணையுடன் உருவாக்கப்படும் தவறான தகவல்கள், சமூகத்தை சீர்குலைத்து "பலர் ஒன்றிணைந்து முடிவெடுப்பதை எதிர்மறையாக பாதிக்கும்."
  • செயற்கை நுண்ணறிவின் சக்தி, மிகக்குறைவான கைகளில் அதிக அளவில் குவிந்து, உலக அரசுகள் பொதுமக்களை தனிப்பட்ட முறையில் கண்காணிக்கக் கொடங்கலாம் அவர்கள் மீது அடக்குமுறையை ஏவவும் உதவும்.
  • Wall-E திரைப்படத்தில் காட்டப்பட்டது போல், மனிதர்கள் பெரும்பாலும் செயற்கை நுண்ணறிவைச் சார்ந்திருக்கும் நிலைமை ஏற்படும்.

ChatGPT என்றால் என்ன?

GPT என்பதன் விரிவாக்கம் Generative Pre&trained Transformer. Generative Model என்பது புள்ளியியல் படிப்பு துறையை சார்ந்தது.புதிய Data புள்ளிகளை கண்டுபிடிக்க பயன்படுத்தும் ஒரு மொடல். உதாரணமாக பல மனிதர்களால் எழுதப்பட்ட பலவிதமான கருத்துக்களையும் செய்திகளையும் அடிப்படையாக வைத்துக் கொண்டு, முன்னரே சொல்லப்பட்ட அந்த பலவிதமான கருத்துக்களை எடுத்து பயன்படுத்தி நவீன கட்டுரைகள் அல்லது கதைகளை மென்பொருள் எழுத Generative Model பயன்படுகிறது.

ChatGPT மனிதன் எப்படி பேசுகிறானோ,எப்படி எழுதுகிறானோ அதை அப்படியே புரிந்து கொள்ள வல்லமை படைத்தது.கேட்கின்ற கேள்விகளுக்கு, சந்தேகங்களுக்கு பெரும்பாலான வலையமைப்புக்கள் ஆம் அல்லது இல்லை அல்லது எளிய வாக்கியங்களை விடையாக கொடுக்க மட்டுமே திறன் கொண்டவை.ஆனால், ChatGPT யால் உரைநடை மாதிரி நீண்ட வாக்கியங்களை விடையாக தர முடியும்.

மற்றவர்கள் குறை சொல்ல இயலாதவாறு,வேலைகளை மிக நேர்த்தியாக சிறப்பாக உன்னதமாக செய்து முடிக்கும் கலையை இது கொண் டுள்ளது.இயந்திர மொழிபெயர்ப்பு,கேள்வி பதில் போன்ற வேலைகளில் ChatGPT அருமையாக செய்து முடித்து, மனித குலத்தை ஆச்சரியப்பட வைத்துள்ளது.

ChatGPT யின் பயன்பாடுகள்

ChatGPT ஒரு குறிப்பிட்ட எழுத்தாளரின் பாணியில் கவிதைகள், பாடல்கள் மற்றும் சிறுகதைகளை எழுத முடியும். அதிக அளவிலான தகவல்களை, சுருக்கி பகுப்பாய்வு செய்வதன் மூலம்,பயனர் கருத்து மற்றும் சமூக ஊடக உரையாடல்களை புரிந்து கொள்வதில் ChatGPT உங்கள் நேரத்தையும், முயற்சியையும் பெரிய அளவில் சேமிக்கும்.சுமார் ஒரு லட்சம் பேர் உங்களது பொருளுக்கு பின்னூட்டம் கொடுத்துள்ளார்கள் என்று உதாரணமாக எடுத்துக் கொண்டால் அத்தனை பின்னூட்டங்களையும் மிக விரைவாக ஆராய்ச்சி செய்து உங்களுக்கு அதன் முடிவுகளை தெரிவிக்கும்.

உங்கள் வாடிக்கையாளரின் தேவைகளை எவ்வாறு பூர்த்தி செய்வது என்பது குறித்து சிறந்த,விரைவான முடிவுகளை எடுக்க உங்களுக்கு உதவும். இது உங்களுக்கு சில யோசனைகளை உருவாக்க உதவும். குறைந்த நேரத்தில் அதிக மற்றும் உயர்தர வேலைகளை செய்து முடிக்கும்.உதாரணமாக ஒன்லைன் Tution தொழில் நடத்தும் போது அந்த இணையத்தில் என்ன எழுத வேண்டும் என்று கேட்டால் இந்த ChatGPT அருமையான விளக்கத்தை உங்களுக்கு கொடுக்கும்.வரி வரியாக பல வரிகளில் இருக்கும், கணினி நிரலில்  தவறு எங்கு உள்ளது என்று சொல்வதோடு மட்டுமல்லாமல் அந்தத் தவறை திருத்தி கொடுப்பதும் ChatGPT யின் மிகப்பெரிய பயன்பாடாக பார்க்கப்படுகிறது.

சுற்றுச் சூழலுக்கு பேராபத்து

மனித குலத்துக்கு பெரும் வரமாக கிடைத்துள்ளதாக கூறப்படும்  ChatGPT  என்னும் செயற்கை நுண்ணறிவால் இயற்கைக்கு அதாவது சுற்று சூழலுக்கு எப்படி ஆபத்து ஏற்படுமென்பதனை இனிப் பார்ப்போம்.

செயற்கை நுண்ணறிவு ஆற்றல் பயன்பாட்டின் போது, கடந்த ஆண்டில் அதிக அளவு கார்பன் உமிழ்வு நிகழ்ந்திருப்பதாக சர்வதேச ஆற்றல் முகவர் (International Energy Agency) அமைப்பு கண்டறிந்துள்ளது. இந் நிலையிலேயே கார்பன் உமிழ்வால் புவி வெப்பமாதல் வேகமடைந்து,அதன் நீட்சியாகக் காலநிலை மாற்றத்தின் விளைவுகளாகப் பல சிக்கல்கள் ஏற்படும்.அவை பல புதிய சுற்றுச்சூழல் பிரச்சினைகளை உருவாக்கும் என அறிவியலாளர்கள், சுற்று சூழலியலாளர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர்.

இந்நிலையில், ChatGPT போன்ற செயற்கை நுண்ணறிவு மென்பொருள்களைத் தேடுபொறிகளுடன் இணைத்தால், கார்பன் உமிழ்வு அதிகமாவதைத் தவிர்க்கவே முடியாது.பிரம்மாண்ட தரவு மையங்கள்: ChatGPT மாதிரியான செயற்கை நுண்ணறிவு மென்பொருள்கள் இயங்க, அவை இயந்திரக் கற்றலை (Machine Learning) மேற்கொள்ள வேண்டும். அதாவது, இணையத்தில் இருக்கும் தகவல்களை உள்ளீடு செய்வதன் மூலம், அந்தத் தகவல்களைப் பகுத்தாராய்ந்து,அவற்றிலிருந்து கற்க இந்த மென்பொருள்கள் முயல்கின்றன.அதனால் அவை பல புதிய சுற்றுச் சூழல் பிரச்சினைகளை உருவாக்கும் என அறிவியலாளர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர்.

இந்த இயந்திரக் கற்றலை நிகழ்த்த, பல தரவு மையங்கள் (Data Centers), 24 மணி நேரமும் இயங்கியாக வேண்டும். மேம்படுத்தப்பட்ட பல ஆயிரம் கணினிகளை ஒன்றிணைத்துத் தரவு மையங்கள் உருவாக்கப்படுகின்றன. அந்தக் கணினிகள் எகக் (Graphics Processing Unit) எனப்படும் அதிவேகக் கணிதம் மேற்கொள்ளும் Browser களைக் கொண்டிருக்கும்.சுமார் 35,000 சதுர அடிகளுக்கு ஒரு தரவு மையம் விரிந்திருக்கும். மிக வேகமாகக் கணினிகள் இயங்குவதைக் கணினி ஆற்றல் (Computing Power) என்கிறோம்.செயற்கை நுண்ணறிவுக் கணினிகள் இயங்க அத்தகைய கணினி ஆற்றல் வேண்டும் நாம் பயன்படுத்தும் கணினியைவிட இதன் ஆற்றல் லட்சம் மடங்கு அதிகம்.





அவ்வளவு கணினிகளும் 24 மணி நேரம் இயங்கினால், இயந்திரங்கள் சூடாகத் தொடங்கும். இந்தச் சூட்டைத் தணித்துக் குளிர்விக்கவில்லை எனில், கணினிகள் எரிந்துவிடும்.இப்படி பிரம்மாண்டமான தரவு மையங்களின் கணினிச் சூட்டைத் தணிக்க பல தொழில்நுட்பங்கள் கையாளப்படுகின்றன. நூற்றுக்கணக்கில் அல்லது ஆயிரக்கணக்கில் குளிர்சாதனப் பெட்டிகள், மின்விசிறிகள் இதற்காகப் பயன்படுத்தப்படும். அப்படியெனில், இவ்வளவு பெரிய தரவு மையத்தை இயக்க எவ்வளவு மின்சாரம் தேவைப்படும் என்பதை நாம் கணக்கிட்டுப் பார்த்துக்கொள்ளலாம்.இந்த மின்சாரம் முழுக்க முழுக்கச் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் புதைபடிவ எரிபொருள்களைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது.

ChatGPTயின் முந்தைய பதிப்பைப் பயிற்றுவிக்க, சுமார் 1287 மெகாவாட் ஆற்றல் தேவைப்பட்டது.ChatGPTயின் தற்போதைய பதிப்பு இன்னும் அதிக ஆற்றல் தேவைப்படக் கூடியது.ஒருவேளை, தினமும் பல கோடிப் பேர் அதைப் பயன்படுத்துவதாக இருந்தால், அதன் ஆற்றல் தேவை இன்னும் அதிகமாக இருக்கும்.இதைத் தேடுபொறிகளுடன் இணைத்துவிட்டால், ஒரு நாளில் பல கோடி தேடுதல்கள் மேற்கொள்ளப்படும்.அப்படியெனில், மின்சாரத் தேவை பல மடங்கு அதிகரித்துவிடும். சுற்றுச்சூழலைப் பாதிக்கும் எரிபொருளைக் கொண்டுதான் இந்தத் தேவைக்கான மின்சாரத்தை உருவாக்க முடியும் என்பதால், இதன் கார்பன் உமிழ்வு தற்போது இருப்பதைவிட ஐந்து மடங்கு அதிகமாகச் சாத்தியமுள்ளது.

கார்பன் உமிழ்வைக் கட்டுப்படுத்த, இன்றைக்குப் பல்வேறு முயற்சிகள் நடைபெற்றுவருகின்றன.மறுபுறம், கூகுள் தேடுபொறி கணிசமான அளவு கார்பன் உமிழ்வை உருவாக்குகிறது.கூகுள் தரவு மையங்களின் கார்பன் உமிழ்வைப் பற்றிய தகவல்கள் வெளிப்படையாக இல்லை.ஆனால், கார்பன் உமிழ்வைக் கட்டுப்படுத்துவதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளதாக கூகுள், மைக்ரோசொப்ட் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

சூழலியல் ஒப்பந்தத்தைப் பொறுத்து உலகின் கார்பன் உமிழ்வை 2050 ஆம் ஆண்டுக்குள் நிகரப் பூஜ்ஜியத்துக்கு குறைக்க வேண்டும் என்பதுதான் இலக்கு.ஆனால்,அது அவ்வளவு எளிதானதல்ல. கார்பன் உமிழ்வால் ஏற்படும் புவி வெப்பமாதல் உள்ளிட்ட சுற்றுச்சூழல் சிக்கல்கள் குறித்து அனைவருக்கும் தெரியும் என்றாலும் இன்றைய குடிமைச் சமூகத்துக்கு ஆற்றலின்தேவை என்பது அதிகரித்துக்கொண்டே போகிறது. இதனால் நிகர பூஜ்ஜியத்தை எட்டுவதில் பல தடங்கல்கள் உள்ளன.

உலக கார்பன் உமிழ்வைப் பொறுத்தவரை தரவு மையங்கள் உருவாக்கும் கார்பன் உமிழ்வு குறித்து மிகுந்த கவனத்தைக் செலுத்த வேண்டியது அவசியம். வரும் 2030 ஆம் ஆண்டுக்குள் கார்பன் உமிழ்வை நிகரப் பூஜ்ஜியத்துக்கு கொண்டுவர கூகுள் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனம் 2050 வரை கால அவகாசம் கேட்டுள்ளது. ஆனால் சிக்கலை அதிகப்படுத்தும் விதமாக நவீன செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்களுக்குத் தேவையான புதிய அளவு கணினி ஆற்றல் காரணமாக அதிக அளவு கார்பன் உமிழ்வு ஓர் அபாயமாக மாறவிருக்கிறது என்கின்றனர் சுற்றுச்சூழலியலாளர்கள் மற்றும் அறிவியலாளர்கள்.

ஜனநாயகத்தின் விரோதி

அதுமட்டுமன்றி இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஜனநாயக அமைப்பிலும் பாரதூரமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது என செயற்கை நுண்ணறிவு மென்பொருளை விமர்சிக்கும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஆபாசப் பட நடிகைக்குப் பணம் கொடுத்ததாக அவர் மீது தொடரப்பட்ட வழக்கு அண்மையில் உலகையே உலுக்கியது.அவர் எந்நேரமும் கைது செய்யப்படலாம் எனும் சூழலில்,திடீரென அவர் கைது செய்யப்பட்டு பொலிஸாரால் இழுத்துச் செல்லப்படுவது போன்ற ஒளிப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின.பிரபலமான ஊடகங்கள் கூட அந்தப் ஒளிப்படங்களைப் பார்த்து சற்றே தடுமாறின.பின்னர்தான் அவை செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence &AI) கொண்டு உருவாக்கப்பட்ட போலிப் படங்கள் எனத் தெரிய வந்தது.

செயற்கை நுண்ணறிவு மென்பொருளை விமர்சிக்கும் நிபுணர்கள் மத்தியில், இது பெரும் விவாதத்தை உருவாக்கியது.Deepfakes,Generative Al தொழில்நுட்பங்களால் வருங்காலத்தில் ஜனநாயகத்துக்கு ஏற்படப்போகும் ஆபத்துகளை விவாதிக்க வேண்டும் என அவர்கள் வாதிட்டனர்.நவீன GPT4 (OpenAI'sGP-T-4) ஆய்வுகளைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

சமூகத்திலும் அரசியல் களத்திலும் பெரும் குழப்பங்களை உருவாக்கும் வகையில் ஏற்கெனவே பொய்ச் செய்திகள் பரப்பப்படுகின்றன. இந் நிலையில் மேம்பட்ட செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் மூலம், எளிதில் கண்டறிய முடியாத வகையில் துல்லியமாகப் பொய்ச் செய்திகளைப் பரப்ப முடியும் எனும் சூழல் தற்போது உருவாகியிருக்கிறது. இது ஜனநாயக அமைப்பில் பாரதூரமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது.

இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி போலியான ஒலிப்பதிவுகளை, காணொளிகளைத் துல்லியமாக உருவாக்க முடியும். ஓர் அரசியல்வாதி ஒரு குறிப்பிட்ட இனத்தை, மதத்தை இழிவுபடுத்தி பேசுவதாக ஒரு காணொளியை உருவாக்கி WhatsApp வைரலாக்க முடியும். ஒரு நடிகர் அல்லது நடிகை ஆடும் சிறு காணொளி ஒன்றில் உங்கள் ஒளிப்படத்தைக் கொடுத்தால் அந்த நடிகரின் அல்லது நடிகையின் முகத்தை நீக்கிவிட்டு,உங்கள் முகத்தைக் கனகச்சிதமாகப் பொருத்தி,அதே அசைவுகளுடன் ஒரு புதிய காணொளியை உருவாக்கித் தரும்,

நீங்கள் தமிழில் ஒரு வசனத்தைப் பேசி, அதை இந்த மென்பொருளுக்கு கொடுத்து, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உருவத்தைத் தேர்வு செய்தால், உங்கள் தமிழ் வசனத்தை ரணில் விக்கிரமசிங்க பேசுவது போலவே காணொளியை உருவாக்கிக் கொடுக்கும். உலகப் பிரபலங்கள் தமிழ்ப் புத்தாண்டுக்குத் தமிழில் வாழ்த்துச் சொல்வதைப் போன்ற காணொளிகள் Deepfake செயலியைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டவைள தாம்.இதுபோன்ற ஆபத்துகளைத்தான் நிபுணர்கள்  கவலையுடன் சுட்டிக்காட்டுகிறார்கள்.

இந்தத் தொழில்நுட்பங்களால் பல நன்மைகளும் விளைகின்றன என்பதை மறுக்க முடியாது.இந்தத் தொழில்நுட்பங்கள் தவறான நோக்கத்துடன் பயன்படுத்தப்படும்போதுதான் சிக்கல் உருவாகிறது.இன,மத விரோதிகள் இதைப் பயன்படுத்தி இனங்கள், மதங்களிடையில் பிளவை ஏற்படுத்தவும் குழப்பம் விளைவிக்கவும் முடியும்.அரசியல் நோக்கத்துக்காக தவறாகப் பயன்படுத்தவும் முடியும். மக்களை ஏமாற்றிப் பணம் பறிக்கும் கும்பல்களும் இந்தத் தொழில்நுட்பங்களைத் துஷ்பிரயோகம் செய்ய முடியும். ஏற்கெனவே, சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி மக்கள் மத்தியில் விரிசலை ஏற்படுத்துவதில் பலர் ஈடுபட்டிருக்கிறார்கள். இந்தச் சூழலில், இப்படியான அதிநவீனத் தொழில்நுட்பங்கள் அந்த விரிசலைப் பெரும் பிளவுகளாக மாற்றிவிடும் ஆபத்துக்களும் உள்ளன என்கின்றனர் செயற்கை நுண்ணறிவு மென்பொருளை விமர்சிக்கும் நிபுணர்கள்.


இவற்றையும் வாசிக்கவும்









Post a Comment

Previous Post Next Post