.

மனநலம் குறித்த புத்தகங்கள் எனக்குத் தேவைப்படாது' என்று நினைப்பவர்கள் கூட, வீட்டில் வைத்திருக்க வேண்டிய கையேடு இந்த நூல். ஏனெனில், மனநலம் என்பது மனநோயற்ற நிலை மட்டுமல்ல.

மனநல/ பாலியல் மருத்துவத் துறைகளைப் பற்றிய பேச்சு எழும்போதெல்லாம் எனக்கு பிதாமகன் என்கிற திரைப்படத்தில் சாலையோரத்தில் கடைவிரித்து, வாயுத் தொல்லைக்கு மருந்து விற்கிற சூரியா நினைவுக்கு வருவார். அவரது சரளமான வெண்டர் வாசகங்கள் குறிப்பிட்ட வணிக இலக்கை மையமிடும் துல்லியத் தாக்குதல். முதல் பார்வையில் பகடியாய்த் தோன்றுகிற அக் காட்சி, நுகர்வு உளவியலின் நுட்பமான சித்திரிப்பு. கார்ப்பொரேட் நிறுவனங்களும் இதைத்தான் செய்து கொண்டிருக்கின்றன-வேறொரு வடிவத்தில். மனிதர்களின் பலவீனங்களும் நிறைவேறாத ஆசைகளுமே இம்மாதிரி நிறுவனங்களின் மூலதனம். இதில் பாமரர், படித்தவர் என்கிற பேதம் ஏதுமில்லை.மூடநம்பிக்கைகள் பகலும் இரவும் போல,ஒளியும் இருளும் போல, நம் கூடவே பயணித்துக் கொண்டிருக்கின்றன.வாசிப்பினால், உரையா டலினால் இக் கிடுக்கிப் பிடியிலிருந்து நம்மை விடு வித்துக்கொள்ள முடியும்.மருத்துவச் சிகிச்சை என்பது மருத்துவப் பணியாளர்களும் நோயரும் இணைந்து மேற்கொள்ளவேண்டிய ஒன்று. இந்த அடிப்படைப் புரிதல் பொது வெளிக்கு வந்துசேரவில்லை.நோய் முற்றிப்போன நிலையிலும் கூட தயக்க த்துடன்தான் மருத்துவமனைக்குப் போகிறார்கள். பரஸ்பர மரியாதையும் நம்பிக்கையும் இல்லாத நிலையில், நோய் குறித்த சரியான விவரங்களைப் பகிர்வதிலும் மருத்துவரின் அறிவுரைகளைப் பின் பற்றுவதிலும், சிகிச்சையில் தொடர்ச்சி பேணுவதிலும் (follow up) நோயாளிகள் மருத்துவரோடு ஒத்துழைப்பதில்லை. இது ஓர் அபாயமான இடைவெளி. இந்த இடைவெளிதான் குறி சொல்பவர்கள், ஓதிக் கட்டுபவர்கள், ஆவிக்குரிய எழுப்புதல்,செபவீரர்கள், மார்க்க வழிகாட்டிகள்,நாற்சந்தி மருத்துவ விற்பன்னர் முதலியவர்களின் மூலதனம் ஆகும். போதாததற்கு, சமூக நனவிலியில் இவற்றை நியாயப்படுத்துகிற சொலவடைகள் பலவும் ஆழ ப்பதிந்து கிடக்கின்றன உதாரணத்துக்கு ஒன்று- ‘நோய்க்கும் பார், பேய்க்கும் பார்'.

'அகக்கண்ணாடி'யின் இலக்கு மேலே குறிப்பிட்ட இந்த இடைவெளியை நேர்செய்வது என்பதாக உள்ளது. 'அறியாமையே சுரண்டலின் ஊற்றுக்கண்' என்பார்கள் மலையாளிகள். மனநோயருக்குக் சிகிச்சையளிப்பதிலும் பராமரி ப்பதிலும் எழுகிற முக்கியமான சிக்கல், மனநோய் குறித்த சமூகத்தின் தீட்டுப் பார்வையே.இதன் வெளிப்பாடுகளில் ஒன்று-ஒரு மனநல மருத்துவருடன் பரிச்சயமாய் இருப்பதே இழிவானது என்று பலரும் கருதுவது; உடல்நோய் சார் துறையிலுள்ள மருத்துவர்கள் பலரிடமும் மனநல மருத்துவர்களைக் குறித்த ஒவ்வாமை இருக்கிறது என்பது இதைவிட அதிர்ச்சியூட்டும் தகவல். கடலின் அடியாழத்தில் நிலவுகிற மிகை அழுத்தம் போலவே, இத் தீட்டுப்பார்வையின் அதிகபட்ச அழுத்தத்தை அனுபவிப்பது அடித்தட்டில் இருக்கிற மனநோயரின் தரப்புதான். நோயைவிட, அதன் பொருளாதாரத் தாக்கத்தை விட, இவ் அழுத்தமே அவர்களின் கொடுங்கனவாய் இருக்கிறது. இதற்குத் தீர்வு,அந்த சிதம்பர ரகசியத்தைப் பொதுவெளியில் பேசுபொருள் ஆக்குவதுதான்.

யாரும் அக்கறை கொள்ள விரும்பாத, ஒவ்வாமை வெளிப்படுத்துகிற இப் பேசுபொருளைக் கையாள்வதற்கு துறைசார் புலமையும், அனுபவப் பின்புலமும் இருந்தால் மட்டும் போதாது;மானுட அக்கறை வேண்டும். அந்த அக்கறைதான் ஒருவரைப் பாமரனுக்குப் புரிகிற மொழியைத் தேர்ந்துகொள்ள வைக்கும். இந்தப் பின்னணியில்தான் மருத்துவர் ரைஸ் இஸ்மாயிலின் 'அகக்கண்ணாடி’யை நாம் அணுக வேண்டியுள்ளது. நவீன மருத்துவம்/ மனநலம் குறித்துப் பொதுவெளியில் நிலவிவரும் அடிப்படையற்ற பயங்கள், மூட நம்பிக்கைகள், பண்பாட்டுத் தடைகள், சமயக் குறுக்கீடுகள் உள்ளிட்ட சிக்கல்களை எல்லாக் கோணங்களிலும் அலசுகிற இந்த நூலின் மிகப்பெரிய பலம், case studies என்கிற உண்மைக் கதைகள்.


மேலை நாடுகளைப் (வடகோள நாடுகள்) போலன்றி, கிழக்குலகச் சூழலில் சரியான நேரத்தில் முறையான சிகிச்சை கிடைப்பதே குதிரைக்கொம்பாக உள்ளது.உயர்நிலை மருத்துவச் சிகிச்சை வசதிகள் இன்றைக்குப் பெரு நகரங்களில் மட்டுமே கிடைக் கின்றன. அவற்றைக் குறிப்பிட்ட பொருளாதார அடுக்கில் உள்ளவர்கள் மட்டுமே பெற முடிகிறது என்பதே நடைமுறை. துறைசார் குழு விவாதம்,நோயர்/ பராமரிப்பாளருடன் கலந்தாய்வு (counselling), பிறிதோர் மருத்துவ நிபுணரின் கருத்தறிதல் வாய்ப்பு (second opinion) என்பதெல்லாம் பாமரர்களுக்கு எட்டாத் தொலைவிலுள்ள விடயங்கள். அவர்கள் கடவுளிடம் பிரார்த்திப்பதெல்லாம் 'பணக்கார வியாதிக ளையெல்லாம் ஏதிலிகளுக்குத் தந்துவிடாதே' என்பதுதான். இந்த நிலைமையில், 'மனநலம் குறித்த அடிப்படை அறிவை எல்லோருக்கும் கொண்டு சேர்க்கிற' மாபெரும் இலக்கை நோக்கி நம்மை நகர்த்துகிறது இந்நூல்; பொதுமக்கள்,நோயர், பராமரிப்பாளர், சுயம்பு மருத்துவர்கள், மக்கள் நல்வாழ்வுத் துறை,சக மருத்துவர்கள், அரசின் கொளகைத் தளம் என்பதாக சமூகத்தின் அனைத்துத் தரப்பினரையும் நோக்கிப் பேசுகிறது.

மனநோய், நரம்பியல் கோளாறு மூளை வளர்ச்சிக் குறைபாடு, கட்டளை நரம்பு முடக்கம் போன்ற போன்ற சிக்கல்களை வேறுபடுத்திப் பார்க்கும் தெளிவு நமக்கு இல்லை.இயல்பு, பிறழ்வு குறித்த நம் பார்வையும் அவ்வாறானதே. எல்லாவற்றையும் 'பயித்தியம்' என்றுபொதுமைப்படுத்துவதோடு நம்

வேலை முடிந்துவிடுகிறது. ஆட்டிசம் (Autism) என்பது நோயல்ல, தகவல் தொடர்பு ஆற்றல் சார்ந்த குறைபாடு ; போலவே, ஆஸ்பெர்ஜிசம்(Aspergism) என்பது சமூகத் தொடர்பாற்றலில் நேரும் குறைபாடு, அவ்வளவுதான். பல வகையான மனநோய்களை முழுமையாய்க் குணமாக்கிவிட முடியும்.

மற்றவைகளை மருத்துவ, சமூக இடையீடுகளால் (psycho-social interventions) கட்டுக்குள் வைத்திருக்க முடியும். இங்கு ஃப்ரான்சிஸ் அசிசி எனும் துறவியின் பிரார்த்தனையை மேற்கோள் காட்டுவது பொருத்தமாய் இருக்கும்:டிஜிட்டல் யுகம் புதுவகையான மனநலச் சிக்கல்களை உருவாக்கி வருகிறது. கோவிட் தொற்றுக்காலத்தில் அது பகாசுர வடிவம் எடுத்துள்ளது.

மனநல சிகிச்சையில் தனிப்பிரிவாகிற அளவுக்கு உலக அளாவில் டிஜிட்டல் போதை நோய் விசுவரூபம் எடுத்திருக்கிறது. தங்கள் கதையைக் கேட்பதற்கு யாருமே இல்லையா என்று என்று ஏங்குகிற மனிதர்கள் சமூக ஊடகங்களில் அதற்கு வடிகால் தேடுகின்றனர்.

தங்களைப் பற்றிய எல்லாவற்றையும் கூச்சமின்றி, தனிநபர் உரிமை/ சுதந்திர எல்லைகளை மீறி டிஜிட்டல்வெளியில் பகிர்வது இன்றைக்கு 'நார்மல்' ஆகியி ருக்கிறது! இது விசித்திரமாயில்லை?பப்ஜி, ஆன்லைன் ரம்மி, போர்னோ போன்றவை மட்டுமே ஆபத்தானவை என்கிற பார்வையும் இருக்கிறது. 'ஏக்கங்களும் இன்ஸ்டாகிரமும்' என்கிற பத்தி சமூக ஊடகம் என்னும் இந்த டிஜிட்டல் பனிப்பாறையின் சிறுமுனையை வெளிப்படுத்துகிறது.

இப்படிப் பல விசயங்களிலும் பொதுப்புத்தியைத் தலைகீழாகப் புரட்டிப் போடுகிறது 'அகக்கண்ணாடி'.வாசித்துச் செல்லும்போது, மூளைக்குள் ஒரு பொறி கிளம்பும். ஒவ்வொரு கட்டுரையும் புதியதொரு களத்தில் வெளிச்சம் பாய்ச்சி, வாசகனின் முன்காப்பு உணர்வைச் (pro-active) செதுக்கும். இந்நூலின் ஆகச் சிறந்த பங்களிப்பு இதுதான். மனச்சிதைவு, மாய மனவிலகல், சுழல் பதட்ட நோய், மன அழுத்தம், வீண் உணர்ச்சிக் குவியல்,விடா நோயெண்ணம், தற்கொலை எண்ணம், மாய எண்ணம், காதலற்ற காதல், மனவலி வடு, நார்சிசம்,கருப்பைப் பொறாமை, மஞ்சாசென்சிண்ட்ரோம், சார்லஸ் போனட் சிண்ட்ரோம், ஆட்டொமாடிஸம் இப்படி நூறு நூறு புதுப்புது விசயங்களைப் பேசுகிறார் ஆசிரியர். இவற்றை மருத்துவக் கலைச்சொற்களின் சிடுக்கு களின்றிப் பேசுவது தனிச்சிறப்பு.மருத்துவத் துறையின் முதன்மைக் கரிசன ங்களை நம்முடன் பகிர்ந்து, நமது புரிதலைக் கோருகிற அதே வேளையில், நவீன மருத்துவத்தின் பெயரால் ஆபத்தான வேலைகளைச் செய்யும் ஹாரி பெய்லி போன்ற இராட்சத மருத்துவர்களிடம் நாம் எச்சரிக்கை பேண வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துச் சொல்கிறார்.

ஒரு மனநல மருத்துவக் களஞ்சியத்துக்குள் மூழ்கிக் களித்த புத்தறிவோடு இப் பதிவை நிறைவு செய்கிறேன்.வாசிப்போம்.





Post a Comment

Previous Post Next Post