.

இன்று வரை கண்டுபிடிப்புகளிலோ ஆய்வுகளிலோ பெண்களின் பங்களிப்பு குறிப்பிடத் தகுந்த வகையில் இல்லை. 140 ஆண்டுகளுக்கு முன் பிறந்த ஹரியட் சாமர்ஸுக்கு வாய்ப்புகள் எப்படி இருந்திருக்கும் என சொல்லத் தேவையில்லை. ஆனாலும், ஒரு கண்டுபிடிப்பாளராகவும் எழுத்தாளராகவும் புகைப்படக் கலைஞராகவும் இருந்து தனக்கென தனி முத்திரையை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார், ஹரியட். அமெரிக்காவில் பிறந்த ஹரியட்டுக்கு இளம் வயதில் இருந்தே சாகசப் பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. 8 வயதில் அவரது அப்பா குதிரையில் ஏற்றிக்கொண்டு கலிஃபோர்னியா மாநிலம் முழுவதும் சுற்றி வந்தார். கிராமம், நகரம், வயல்வெளி,மலைகள், பள்ளத்தாக்கு என்று ஒவ்வொரு நாளும் ஒவ்வோர் அனுபவம். ஹரியட்டுக்கு பயணம் மிகவும் பிடித்துப்போனது.


நீச்சல்,வேட்டை,மீன் பிடித்தல், குதிரையேற்றம் முதலியவற்றை கற்றுக் கொண்டார்.வீட்டிலேயே படிப்பு சொல்லித் தரப்பட்டது. 14 வயதில் மீண்டும் அப்பாவுடன் குதிரையில் மெக்ஸிகோவை ஓராண்டு முழுவதும் சுற்றி வந்தார். 1889இல் ஹரியட்டின் விருப்பத்துக்கும் லட்சியத்துக்கும் ஏற்ற ஃப்ராங்க்ளின் பியர்ஸ் ஆடம்ஸைத் திருமணம் செய்துகொண்டார். இருவரும் மோட்டார் கார் மூலம் கலிஃபோர்னியாவையும் மெக்ஸிகோவையும் சுற்றி வந்தனர். சுரங்கத்தில் வேலை செய்து வந்தார் ஃப்ராங்க்ளின். நல்ல வருமானம். பிரமாதமான வீடு, உணவு என்று சொகுசான வாழ்க்கை. இருப்பினும் இருவருக்கும் அந்த வாழ்க்கையில் திருப்தியில்லை.தேவையான பணத்தைச் சேர்த்துக்கொண்டு, 2 ஆண்டு காலப் பயணத்துக்குக் கிளம்பினார்கள். உலகிலேயே மிக நீண்ட மலைத்தொடரான ஆண்டிஸ் மலை மீது ஏறினார்கள். அமேசன் காட்டுக்குள் பயணித்தார்கள்.இந்தப் பயணம் மிகவும் கடினமாக இருந்தது. மோசமான வானிலை, உணவுப் பற்றாக்குறை, காட்டு விலங்குகள் என்று அச்சம் தரும் பயணமாக அமைந்தது. அமேசன் காட்டுக்குள் பூர்வகுடி மக்களுடன் பெரும்பாலான நேரத்தைச் செலவிட்டனர். குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகுஃப்ராங்க்ளினால் பயணத்தைத் தொடர இயலவில்லை.ஹரியட் தனியாகவே பயணம் செய்தார்.

பிறகொரு பயணத்தை முடித்துக்கொண்டு இருவரும் திரும்பிய பிறகு, தங்கள் அனுபவங்களை ஆவணப்படுத்தினர். கட்டுரைகள் எழுதினர். புகைப் படங்களை வரிசைப்படுத்தினர். பிறகு இந்தக் கட்டுரைகளையும் புகைப்ப டங்களையும் நியூயோர்க் டைம்ஸ்,நெஷனல் ஜியோகிராபிக், பெண்கள் பத்திரிகை போன்றவற்றுக்கு அனுப்பினர். ஹைதி, சைபீரியா, சுமத்ரா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளுக்குப் பயணம் செய்தார் ஹரியட் ஒவ்வொரு நாட்டு மக்களுக்கும் லத்தீன் அமெரிக்க மக்களுக்கும் இருந்த தொடர்பை ஆராய்ந்தார். ஆசிய மக்களுக்கும் லத்தீன் அமெரிக்க மக்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்ததைக் கண்டறிந்தார். தென் அமெரிக்காவில் முதலில் குடியேறியவர்கள் ஆசியாவைச் சேர்ந்த மூதாதையரே என்ற முடிவுக்கு வந்தார்.

முதல் உலகப்போர் ஆரம்பமானது. ஹார்பர் பத்திரிகையின் போர் செய்தியாளராகச் செயல்பட்டார் ஹரியட். போர் நடக்கும் இடங்களில் அனுமதிக்கப்பட்ட முதல் பெண் பத்திரிகையாளர் ஹரியட் என்ற சிறப்பைப் பெற்றார். போர் முடிவுற்றதும் ஹரியட்டும் ஃப்ராங்க்ளினும் மத்திய தரைக்கடல் பயணத்தை மேற்கொண்டனர். அப்பொழுது தவறி விழுந்ததில் ஹரியட்டின் முதுகுத்தண்டு பாதிக்கப்பட்டது. பயணத்தை நிறுத்திவிட்டு, சிகிச்சை எடுத்துக்கொண்டார். இனிமேல் ஹரியட்டால் நடக்கவே முடியாது என்றார்கள் மருத்துவர்கள். ஆனால், கொஞ்சம் கூட நம்பிக்கை இழக்கவில்லை ஹரியட் முயற்சியும் பயிற்சியும் செய்து விரைவில் நடக்க ஆரம்பித்துவிட்டார். அடுத்தது ஆபிரிக்கா கிளம்பினார். அமெரிக்காவில் கொலம்பஸ் பயணித்த பாதையில் பயணித்தார் ஹரியட். 1907 -1935 வரை நெஷனல் ஜியோகிராபிக் பத்திரிகையில் ஹரியட்டின் 21 கட்டுரைகளும் புகைப்படங்களும் வெளியாகின. ஏராளமான உரைகளை நிகழ்த்தினார்.1925இல் பெண் புவியியலாளர்களுக்கான ஓர் அமைப்பைத் தோற்றுவித்தார் ஹரியட்.

“பல்லாயிரக்கணக்கான மைல்கள் பயணித்து, ஏராளமான மனிதர்களைச் சந்தித்து, அற்புதமான விடயங்களை ஆவணப்படுத்திய ஹரியட்டைப் போல இன்னொரு பெண்ணோ,ஆணோ இதுவரை இருந்ததில்லை!” என்று நியூயோர்க் டைம்ஸ் பாராட்டியது.ஹரியட்டும் ஃப்ராங்க்ளினும் தங்கள் ஓய்வு காலத்தை ஐரோப்பிய நாடுகளில் செலவிட்டனர். தன் வாழ்நாள் முழுவதும் புதிய புதிய இடங்களை நோக்கிப் பயணம் செய்த, புதிய விஷயங்களைக் கண்டுபிடித்து உலகத்துக்குச் சொன்ன ஹரியட் 61 வயதில் நிரந்தர ஓய்வுக்குச் சென்றுவிட்டார். பிரான்ஸில் இருந்து அவரது உடல் எடுத்து வரப்பட்டு, கலிஃபோர்னியாவில் புதைக்கப்பட்டது.





Post a Comment

Previous Post Next Post