.

ஒரு நாள் தெனாலிராமனும் அவன் மனைவியும் ஊருக்குச் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் செல்லும் வழியில் தண்ணீர் குடிப்பதற்காக ஒரு கிராமத்தில் நின்றனர், அங்கு பளு தூக்கும் வீரர் ஒருவரைப் பார்க்க முழு கிராமமும் கூடி இருப்பதைக் கண்டார்கள். தன் பெரிய கைகளாலும், தடித்த தசைகளாலும்,500 கிலோ அரிசி மூட்டையை எளிதாக பயில்வான் எடுத்தான்.

தெனாலிராமனுக்கு பக்கத்தில் இருந்தவர், 500 கிலோ அரிசியை தூக்குவது எளிதல்ல என்று கூறினார்.அதற்கு தெனாலி ராமன் இது என்ன ஆச்சரியம் என்னால் இதைவிட பல மடங்கு அதிகமான எடை உள்ள பொருட்களைத் தூக்க முடியும். ஏன் மலையைக் கூட தூக்க முடியும் என்று சத்தமாக கூறினார்.பயில்வான் மற்றும் மக்கள் அனைவரும் வேடிக்கையாக தெனாலியை திரும்பி பார்த்தனர். தெனாலி அருகில் இருந்த மலையை காட்டி இதை என்னால் தோளில் சுமக்க முடியும் என்று கூறினார். கிராம மக்கள் அனைவரும் தெனாலிக்கு வழி விட்டு உற்சாகமாக கை தட்டி அவரை ஊக்கப்படுத்தினர்.


தெனாலி பயில்வானிடம் இந்த அரிசி மூட்டையை சுமப்பதற்கு எவ்வளவு காலம் பயிற்சி செய்தீர் என்று கேட்டார். அவர் 3 மாதங்கள் என்று சொன்னார். உடனே தெனாலி கிராம தலைவரிடம் எனக்கு 6 மாதங்கள் தேவைப்படும் மற்றும் எனக்கு தங்குவதற்கு வசதியான இடம் சாப்பிடுவதற்கு ஊட்டமளிக்கும் உணவு மற்றும் தினசரி மசாஜ்கள் தேவை என தெனாலி அறிவித்தார்.

முழு கிராம மக்களும் இதற்கு ஒப்புக்கொண்டனர்.தெனாலியின் இந்த சாதனையை பார்க்க ஊர் மக்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருந்தனர்.

ஒவ்வொரு நாளும், அவருக்கு ஆரோக்கியமான உணவுகள் கொண்டு வரப் பட்டு மசாஜ் செய்யப்பட்டது.தெனாலியும் அவரது மனைவியும் 6 மாதங்கள் ஆடம்பரமாக வாழ்ந்தனர். கடைசி நாள் வந்ததும், தெனாலி என்ன செய்யப் போகிறார் என்று காத்துக்கொண்டிருந்த முழு கிராமமும் மலையின் அடிவா ரத்தில் கூடியது.

தெனாலி கிராமத்தலைவரின் அருகில் நின்று, “சரி,அதை எனக்குக் கொடுங்கள்?”என்றான்.

“என்ன கொடுங்கள்?”,"நீங்கள் மலையை எடுக்க வேண்டும்!” என்று கிராமத்தலைவர் கூறினார். "நான் மலையை எடுப்பேன் என்று சொல்லவே இல்லையே.தோளில் சுமப்பேன் என்று தான் கூறினேன். எனவே மலையை எடுத்து என் தோளில் வையுங்கள் நான் சுமக்கிறேன் என்றான்” தெனாலி கூறியதை கேட்ட ஊர் தலைவர் சிரிக்க ஆரம்பித்தார். "உங்களுக்கும் உங்கள் புத்திசாலித்தனத்திற்கும் நான் தலைவணங்குகிறேன் என்றான்.

நீதி: தெளிவான அறிவும் புத்திசாலித்தனமும் இருந்தால் எந்த ஒரு சவாலையும் சந்திக்க முடியும்.



Post a Comment

Previous Post Next Post