.

ஒருமுறை, காட்டு விலங்குகளுக்கும்,வானில் பறக்கும் பறவைகளுக்கும் யார் பெரியவர் என, கடும் போட்டி ஏற்பட்டது.மிகவும் அலட்சியமாக, வலுவான கால்கள் இருக்கின்றன; அதன் மூலம்,எத்தனை தூரத்தையும் எளிதாக கடந்து விடுவேன். வானில் பறப்பதற்கு எந்த அவசிய தேவையும் இல்லை. இரைகள் நிலத்திலேயே இருக்கின்றன என்றது சிறுத்தை.

சிரித்தபடி, இந்த பிரம்மாண்ட காடு,வானிலிருந்து பார்த்தால் மிகச் சிறிய ஒன்று. இறகுகள், கடவுள் தந்த மிகப் பெரிய வரம். எந்த வித கட்டுப்பாடுகளும் இன்றி, பரந்த வெளியில் சுதந்திரமாக பறப்பதில் உள்ள பேரானந்தம் வேறெதிலும் இல்லை என்றது கழுகு.

இருக்கலாம் ஆனால், எத்தனை நேரம் தான் வானிலேயே பறந்து கொண்டிருப்பீர் கூடுகள் நிலத்தில் வளர்ந்திருக்கும் மரங்களில் தானே இருக்கின்றன நீங்கள் தின்னும் உணவு வானிலா விளைகிறது...நிலத்தில் தானே இருக்கிறது என கொதித்தது குள்ளநரி.

கை தட்டிப் பாராட்டின விலங்குகள்.மனிதர்களுக்கு நெருக்கமாக இருப்பது பறவை இனம் தான்; அவர்களுக்கு பயனுள்ளதாக இருப்பதும் நாங்கள்தான். வளர்ப்பு பறவைகள் என்றால் குழந்தைகளுக்கு மிகவும் விருப்பம் என்றது காகம்.

மிகவும் நுட்பமாக, ஆடு, மாடு, நாய்,பூனை, ஒட்டகம், பசு, காளை இதெல்லாம் என்ன பறவை இனமா... இவற்றுக்கு மனிதனிடம் இல்லாத நெருக்கமா என கேட்டது யானை.

உங்கள் பெயரை திட்டுவதற்கு மட்டுமே பயன்படுத்துகின்றனர். என்ன நடந்தாலும் கண்டுகொள்ளாதவர்களை,எருமை மாடு என்றும், தந்திரத்தால் ஏமாற்றுபவர்களை குள்ள நரி என்றும்,மந்த புத்தியுள்ளோரை, பன்றி என்றும் மனிதர்கள் கேவலமாக அழைப்பதை மறுக்க முடியுமா கத்தியது பருந்து.

நீங்கள் மட்டும் உன்னதமா... திருட்டுப் புத்தியுள்ளவனை காகம் என்றும், சுயநலக்காரனை, கழுகு என்றும், முட்டாளை, வாத்து எனவும் குறிப்பிட்டு அழைப்பது யாராம் என்றது புலி.

சண்டை போட்டு வாக்குவாதம் செய்வதில் நேரம் கடந்தபடியே இருந்தது. 

எந்தமுடிவும் எட்டப்படவில்லை.

வார்த்தை மோதல் முற்றி, ஒன்றை ஒன்று தாக்க துவங்கின.

வயதான சிங்கம் ஒன்று அவற்றை தடுத்து, படைத்தவனிடமே இதுபற்றி கேட்டு விடலாம். யார் பெரியவர் என்பதை அவரே முடிவு செய்து சொல்லட்டும்; என்ன பதில் சொன்னாலும், அதை ஒரே மனதுடன் ஏற்றுக் கொள்ளலாம் என்றது.

பறவைகளுக்கும், அது சரி என தோன்ற ஒத்துக்கொண்டன.

நீண்ட அழைப்புக்குப் பின் தோன்றிய இறைவன், எதற்கு அழைத்தீர்... கடுமை யான வேலைப் பளுவுக்கு இடையில் வந்திருக்கிறேன்; சுருக்கமாக குறைகளைச் சொல்லுங்கள் என்றார்.

படைப்பில் ஏன் இத்தனை பாகுபாடு...

வலுவான இறகுகளை பறவைகளுக்கு மட்டும் தந்தது ஏன்... அவற்றுக்கு மட்டும் எதற்கு பறக்கும் சக்தி என்றன மிருகங்கள்.

வெறும் இறகுகளை மட்டும் வைத்து என்ன செய்ய... போதுமான உடல் சக்தி இல்லையே எங்களுக்கு விலங்குகள் போல என வருத்தப்பட்டன பறவைகள்.

பதில் கூறுவதற்கு முன் எங்களையும் கொஞ்சம் கவனியுங்கள் இறைவா... 

சத்தம் கேட்டு அனைத்தும் திரும்பின.

அங்கே, புன்னகையுடன் நின்று கொண்டிருந்த சுறாமீன், போட்டிக்கு எங்களை யாருமே சேர்த்துக் கொள்ளவில்லை...நிலத்தில் வாழும் உயிரினங்களில் பெரி யது யானை. ஆனால், அது என் உருவத்தோடு ஒப்பிடுகையில் மிகவும் சிறியது; என் பார்வையில் சிறு எறும்பை போன்றது.


‘பறவைகளில் பெரியது ராஜாளி, அதனுடன் என்னை ஒப்பிடவே முடியாது. இத்தனை பெருமைகள் உள்ள எங்களை ஏன் போட்டியில் சேர்த்துக் கொள்ளவில்லை' என கொக்கரித்தது.

'உங்களில் யாராவது சிறிது நேரம் கடலில் வாழ முடியுமா... இந்த சவாலுக்கு மட்டும் பதில் சொல்லுங்கள். யார் பெரியவர் என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம்' என்றது கடல்குதிரை.

இதென்ன புது குழப்பம் என்பது போல, பறவை மற்றும் மிருகங்கள் பரிதாபமாக பார்த்தன.

புன்னகை பூத்தபடியே, 'எந்த உயிரினமும் வீணாகவோ, தேவையின்றியோ படைக்கப்படவில்லை; கூர்ந்து கவனித்தால் தான் என் படைப்பின் நோக்கம் புரியும்; அதை தெரிந்து கொள்ளாமல்,வீண் வாக்குவாதம் செய்கிறீர்கள்' என்றார் இறைவன்.

உயிரினங்கள் நடுங்க ஆரம்பித்தன.

‘கோபத்தில் இருக்கிறார்; அவசரப்பட்டு ஏதேனும் சாபம் கொடுத்து விட்டால் அப்புறம் அதை அனுபவிப்பது யார்? என முணுமுணுத்தன.

‘மனிதர்கள் தான் பொறாமை கொண்டு புலம்புவதாக பார்த்தால், நீங்களும் ஆரம்பித்து விட்டீர்களா... படைப்பு வீண் என்று நினைத்தால், எல்லாருமே பயனற்றவர்கள் தானே... எனவே,எதற்கு வீணாக இங்கே வாழ வேண்டும்; படைப்புகளை திரும்ப பெற்றுக் கொள்கிறேன். இனி, யாரும் பூமியில் இருக்க வேண்டாம்; எல்லாரையும் அழித்து விடுகிறேன்

இறைவன் ஆவேசம் கண்டு, விலங்குகள், பறவைகள், நீர் வாழ் உயிரினங்கள் எல்லாம் பயந்து நடுங்க ஆரம்பித்தன.

இறைவா... சிறுமதியை உணர்ந்தோம்!இனி ஒருவருக்கொருவர் அனுசரித்து, இன்பமுடன் வாழ்வோம். அவரவர் குறைகளை ஒப்பிட்டு, நிம்மதி இழக்க மாட்டோம்; படைப்பின் அருமை உணர்ந்து மகிழ்வுடன் வாழ்வோம்; மன் னித்து அருள் செய்திடும். என வேண்டின.

இருப்பதை வைத்து இன்பமாக வாழ பழகுங்கள்; இன்னொரு முறை இப்படி முட்டாள் தனமாக நடந்துக் கொள்ளாதீர் எச்சரித்தவாறே மறைந்தார் இறைவன்.

நீதி-திறன்களை உணர்ந்து,மனம் மகிழ்ந்து, நிம்மதியாக வாழ பழக வேண்டும்; அடுத்தவர்களுடன் தேவையில்லாமல் ஒப்பிட்டால், வீண் விரோதம் தான் வளரும்; நிம்மதி கெடும்.





Post a Comment

Previous Post Next Post