.

இராவணன், இராமாயணம் என்னும் இதிகாசத்தின் முக்கிய கதாபாத்திரம். இந்த மன்னனின் சிறப்புத்தன்மை என்ன என்பது பற்றி பல அறிஞர்களும், ஆய்வாளர்களும் எடுத்துக் கூறியது மட்டுமன்றி அண்மைக் காலத்தில் இராவணன் பற்றிய ஆய்வு முயற்சிகள் விரிவடைந்து வருவதாகவும், அவன் தொடர்பான கல்வெட்டுக்கள்,செப்பேடுகள், இலங்கையிலும் இந்தியாவிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், 200 வருடங்களுக்கு முன் இலங்கையில் பொறிக்கப்பட்ட பிராமிக் கல்வெட்டுக்கள், பாண்டியர் கால செப்பேடுகளும் முக்கியம் கொண்டதாக கருதப்படுகிறது இராவணன் தொடர்பாக 50 இடங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவை தவிர ஐதீகங்கள், கர்ண பரம்பரை கதைகள், மூலமும் பின்வரும் விபரங்கள் எடுத்துக்காட்டப்படுகின்றன.

1. இராவணன் புலஸ்திய முனிவர் பரம்பரையில் தோன்றிய ஒரு பிராமணன். (புலஸ்திய முனிவர் பிரம்மாவின் மகன் இந்த புலத்தியரே புராணங்களை முதன் முதல் வெளியிட்டவர்.)

2. சிவனுடைய பக்தனாக மேலான திருநீறு அணிந்து சிவனை வழிபட்டுவந்தவன்.

3. இவனுடைய தாயார் கைகேசி ஒரு சிறந்த சிவபக்தை.

4. இராவணனுடைய மனைவி மண்டோதரி தீவிர சிவபக்தை

5 சிவனிடமிருந்து ஆத்மலிங்கத்தைப் பெறுவதற்காக நோக்கி தவமிருந்து லிங்கத்தை பெற்றவன். (சந்திரஹாசம் என்ற வாளையும் சிவனை பெற்றவன்)

6. சாமவேதத்தை பாடுவதில் நிகரற்றவனாக திகழ்ந்தவன்,

7.தனது நரம்புகளை வீணையாக்கி சாமவேதத்தை கானமாக பாடி சிவனிடம் வரம் பெற்றவன்.

8.இராவணன் பிராமணனாகவும் சிவபக்தனாகவும் அனைத்து இதிகாசங்களாலும் சித்தரிக்கப்பட்டிருக்கிறான்.

9. 7 ஆம் நூற்றாண்டில் பல்லவர் காலத்தில் வாழ்ந்ததாக கருதப்படும் சம்பந்தபெருமான்,நாவுக்கரசரால் பாராட்டி பாடப்பெற்றவன்.

10.அதுவுமன்றி சம்பந்தர் 350 பாடல்களில் இராவணனை புகழ்ந்து பாடியுள்ளார்.

11.இராவணனின் இயற்பெயர் சிவதாசன். நிலவழகி பாண்டியன் என்றும் அழைக்கப்பட்டுள்ளான்.

12.இலங்கையிலுள்ள ஈஸ்வரங்களான நகுலேஸ்வரம், முனீஸ்வரம், திருக்கேதீச்சரம்,திருக்கோணேஸ்வரம், தொண்டேஸ்வரம் ஆகியவற்றை வழிபட்டவன் என்ற காரணத்தினால் இராவணேஸ்வரன் என்று அழைக்கப்பட்டான்.

13.ஈஸ்வரம் பெற்ற 9 சான்றோரில் இவனுமொருவன்.அரக்கன் ஒருவனை மக்கள் கடவுளாக வழிபட்டிருக்க முடியாது இந்தியாவிலுள்ள பல பிரதேச மக்கள் இன்றும் இவனை கடவுளாக வழிபட்டு வருகிறார்கள். கோயில் அமைத்துள்ளனர்,

15. சித்த மருத்தவம் பற்றி 25 நூல்களை தமிழில் எழுதியுள்ளான்.

16. பாண்டிய வம்சத்தை சேர்ந்தவன் என்பதால் நில வழங்கி பாண்டியன் எனவும் அழைக்கப்பட்டு வந்திருக்கிறான்.

17. வீணை பதித்த கொடியை ஏந்தியவன்.

18. தன் தாயாரின் விருப்பத்தை நிறைவேற்ற திருக்கோணேஸ்வரத்துக்கு வந்து கோணை நாதரை வழிபட்டு லிங்கம் பெற்றவன்.

19. தாயார் இறந்த செய்தி கேட்டு அவளுக்கு ஈமக்கிரியைகளை செய்ய திருமலை கன்னியா வெந்நீரூற்று தீர்த்தத்துக்கு சென்று ஈமம் செய்தவன். (தெட்ஷண கைலாச புராணம்)

20. கன்னியா மலையில் இராவணனின் தாய் கைகேசியின் 60 அடி சமாதி இருப்பதாக கூறப்படுகிறது.

இவை அனைத்துமே இராவணன் இந்து பாரம்பரியம் கொண்ட ஒரு தமிழ் மன்னன் என்பதற்குரிய ஆதாரங்கள். கவிஞர் பாரதிதாசன் தனது பாடலில் அன்று அந்த இலங்கையை ஆண்ட தமிழர் என்று விளித்திருப்பதும். புலவர் குழந்தை தனது இராவண காவியத்திலும், பேராசிரியர் வெற்றியழகன், பழந்தமிழர் என்ற நூலிலும், தென்புலோலியூர் மு.கணபதிப்பிள்ளை தமிழன் எங்கே என்ற நூலிலும், பேராசிரியர் கணபதிப்பிள்ளை இலங்கை வாழ் தமிழர் வரலாறு என்ற நூலிலும், பொ.சங்கரப்பிள்ளை நாம் தமிழர், என்ற நூலிலும், யாழ்ப்பாண வைபவ மாலையில் இலங்கையில் வாழ்ந்த இயக்கர் நாகர் என்ற கட்டுரையிலும் இராவணன் திராவிட இனத்தை சேர்ந்தவன் என்பதை தெளிவுபட எடுத்துரைத்திருக்கிறார்கள்.

பிராமணக் குலத்தில் பிறந்தவனை வட இந்திய இலக்கியங்கள் அசுரனாக. யக்ஷர் ஆக சித்தரித்தமைக்கு காரணம் ஆரிய மாயை என பேரறிஞர் அண்ணா தீ பரவட்டும் நூலில் தெளிவாக்கியுள்ளார்.


இராவணனுடைய வாழ்க்கை வரலாறு :

பத்து பிரஜாபதிகளில் ஒருவரான புலஸ்திய முனிவரின் மகனான வைச்சிரவ மகரிஷிக்கும் (விஸ்ரவ முனிவர்) அசுரர்குல தலைவர் சுமாலியின் புத்திரி கைகேசிக்கும் பிறந்தவன் இராவணன். இவன் புரிந்த கலப்பு திருமணம் காரணமாகவே அசுரன் என்று வர்ணிக்கப்பட்டான். இவன் மிருக பலம் கொண்டவன் அல்லன். ஆன்ம வலிமை நிரம்பப்பெற்றவன்.

இராவணனின் உடன்பிறப்புகள் கும்பகர்ணன்,விபீடணன், மற்றும் சூர்ப்பனகை.இவன் பிறப்பு தொடர்பில் இன்னொரு கர்ண பரம்பரை கதையுமுண்டு. இலங்கையை ஆண்ட நாகர் குலத்தைச் சேர்ந்த கைகேசிக்கும் ஏகர் இனத்தை சேர்ந்த வஜ்ரவாகுவுக்கும் பிறந்தவன் என்றும் கூறுவதுண்டு.

பேர்அழகன் என்பதால் இராவணன் என்ற புனைவுப்பெயர் வந்ததாகவும்  அல்லது இவனது விரோதிகளால் இழைக்கப்பட்ட பெயர் இராவணன் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இவன் இயற்பெயர் சிவதாசன் என்றும் இவன் சகோதரர்கள் பெயர் பரமன், பசுபதி, உமையம்மை என்று கூறப்படுகிறது. இராவணன் தசக்கிரீவன், இலங்கேஸ்வரன், அசுரகுலவேந்தன், தசமுகன், திரிலோக அதிபதி, தசகிரிவா,தசான்னா என பல பெயர்களைக் கொண்டவன் என்றும் இதிகாசங்கள் கூறுகின்றன.

இவன் மண்டோதரி என்ற ராஜகுமாரியை மணம் முடித்து இந்திரஜித், அட்சயகுமாரன், திரிசிரன்,அதிகாயன், பிரகஸ்தன் மற்றும் நராகந்தகன், தேவாந்தகன் ஆகிய ஏழு ஆண்பிள்ளைகளை பெற்றெடுத்தான் என வரலாறு தெரிவிக்கிறது.

தனது தந்தையின் மூத்த மனைவியாகிய வாரவர்னினியின் மகனாகிய குபேரன் ஆண்ட  இலங்கையை அவனோடு போரிட்டு கைப்பற்றினான் என்றும் குபேரனுக்கு விஸ்வர்மா என்பவரால் நிர்மாணித்துக் கொடுக்கப்பட்ட இராச்சியமே இலங்காபுரி என்றும்,தனது தம்பியுடன் போர் புரிய விரும்பாத குபேரன் நாட்டையும் தன்னிடமிருந்த புஷ்பக விமானத்தையும் இராவணனுக்கு தாரை வார்த்து கொடுத்தான் என்றும் கூறப்படுகிறது.

பறக்கும் ஊர்தியை முதலில் பயன்படுத்தியவன் குபேரன் என்றும் காற்றைக் கட்டுப்படுத்தி வானில் பறந்து செல்லும் வகையில் விஸ்வகர்மா என்பவரால் மரத்தினால் அமைக்கப்பட்ட வானவூர்தியே இந்த புஷ்பக விமானம் என்றும் இதை தனது அண்ணனான குபேரனிடமிருந்து பெறுவதற்கு முதலே சிறுவயது முதல் இதை இயக்கும் வல்லமை பெற்றிருந்தான் என்றும் தனது அண்ணனிடமிருந்து இதை கைப்பற்றி வைத்திருந்தவன் சிவனிடம் ஆத்ம லிங்கத்தை பெற மூன்று தடவைகள் இந்த புஷ்பக விமானத்தை பயன்படுத்தி இலங்கைக்கு விஜயம் செய்திருக்கிறான்.சீதையை கடத்த இதையே பயன்படுத்தினான் என வட இந்திய ஆலயக்குறிப்புக்கள் தெரிவிக்கின்றன.


இராமன், இராவணன் ஆகிய இரு பிரதான நாயகர்களைக் கொண்ட இராமாயணக் காப்பியத்தை வட நாட்டைச்சேர்ந்த வால்மீகி முனிவர் முனிவர் வட மொழியில் கி.மு 6,7 ஆம் நூற்றாண்டில் வால்மீகி இராமாயணம் என்ற பெயரில் எழுதியதாகவும் சுமார் 7 ஆயிரம் வருடங்களுக்கு முன் இலங்கை-இந்திய பிரதேசங்களில் நடந்த சம்பவங்களை திரட்டி, 24,000 ஆயிரம் பாடல்களைக்கொண்ட வால்மீகி இராமாயணத்தை ஆக்கினார் என்றும், மொத்தம் இது ஏழு காண்டங்களைக் கொண்டதெனவும், இக் காப்பியக்கதையையே கம்பர், கம்பராமாயணம் என்ற பெயரில் சோழர் ஆட்சி செய்த 13 ஆம் நூற்றாண்டில் எழுதியதாகவும் கூறப்படுகிறது.

சில ஆய்வாளர்கள் 9 ஆம், 10 ஆம், 11 ஆம் நூற்றாண்டுகளில் எழுதப்பட்டிருக்கலாம் என்ற ஆதாரத்தையும் முன் வைத்துள்ளனர். எது எப்படி இருப்பினும் இராவணனை வால்மீகி கண்ட விதம் வேறு கம்பர் காட்டிய விதம் வேறு. கம்பன் இராவணனை ஒரு காப்பிய தலைவனாகவே சித்தரித்துள்ளார்.

கம்பர் இராமாயணத்தை எழுதிய காலம் தென்னகத்தை குலோத்துங்க சோழன் ஆட்சி செய்த காலம் எனவும் வடமொழிப்புலமை கொண்ட கம்பர், ஆறு காண்டங்களாக 10,569 பாடல்களில் பாடி சோழச் சக்கரவாத்தி முன்னிலையில் கம்பராமாயணத்தை அரங்கேற்றினார் என்றும் 7 ஆவது காண்டமாகிய உத்தர காண்டத்தை இவர் காலத்தவரான ஒட்டகக்கூத்தர் பாடி வைத்தார் என்றும் பல்வேறு சான்றுகள் தெரிவிக்கின்றன. இந்தக் காப்பியத்துக்கு கம்பநாடகம்,கம்பசித்திரம், என்ற மாற்றுப்பெயர்கள் இருந்த போதும், 'இராம அவதாரம்' என்ற பெயரே கம்பரால் இடப்பட்டபோதும் பிற்காலத்தில் பல இராமாயணங்கள் எழுதப்பட்டதால் கம்பராமாயணம் என்ற பெயரே நிலைத்துவிட்டது என்றும் கூறுவர்.

இராமன் மற்றும் இராவணன் பற்றி 400 வகையான கதைகள் உண்டென்றும் குறிப்பாக பௌத்த இராமாயணம் என்ற பெயரில்கூட ஒரு நூல் எழுதப்பட்டிருப்பதாகவும் உலகில் பல மொழிகளில் எழுதப்பட்ட ஒரு இதிகாசம் இதுவென்றும் கூறப்படுகிறது.

உதாரணமாக வால்மீகி இராமாயணம், துளசிதாசர் இராமாயணம், வட மொழியில் வஷிட்டர் இராமாயணம் அத்யாத்ம இராமாயணம், அற்புத இராமாயணம்,ஆனந்த இராமாயணம் இவ்வாறு ஹிந்தி, மலையாளம் என இந்திய மொழிகள் பலவற்றில் எழுதப்பட்டுள்ளன.

இராவணன் பத்து தலை கொண்டவன் என்பது ஒரு புனைவாகும். இது ஒரு ஓவிய சித்தரிப்பேயன்றி உண்மையானதல்ல.



பத்து தலைப்பற்றி வால்மீகி இராமாயணத்தில் எங்கும் குறிப்பிடப்படவில்லை. இங்கு பத்துத் தலை என்பது பத்து வகையான ஆற்றல் என்றும் இராவணன் மனோதத்துவம், இசை, மருத்துவம் போன்ற பத்து துறைகளில் கைதேர்ந்தவனாக காணப்பட்ட காரணத்தினால் அல்லது 10 நாடுகளை வென்றவன் அல்லது கிரீடம் அணிந்தவன் என்ற காரணத்தினால் பத்து தலை கொண்டவனாக அழைக்கப்பட்டான் என ஆய்வாளர்கள் குறிப்பிடுவர்.


திரோதா யுகத்தின் இறுதியாண்டான 5200 இல் இராம,இராவண யுத்தம் நிகழ்ந்ததாக கூறப்படும் நிலையில் இராவணன் இலங்கையை ஆட்சி செய்த காலம் 7514 என கணக்கிடப்படுகிறது. ஆனால், மகாவம்சத்தின்படி இலங்கை வரலாறு விஜயன் வருகையுடன்தான் ஆரம்பிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

அதற்கு முன்பே இலங்கையில் இயக்கர், நாகர் என்ற ஆதிக்குடிகள் வாழ்ந்ததாக மகாவம்சம் கூறுகிறது.இவ்வாறானதொரு வரலாற்றுப் பின்னணியில் இராவணன் தனது ஆட்சிக்காலத்தில் பரம்பரையை சேர்ந்த கைகேசி என்னும் சுமாலியின் மகள்) தமிழ் ராஜகுமாரியை மணம் முடித்துள்ளான்.

இராவணன் ஆட்சிக்காலத்தில் இலங்கையில்,உன்னத ஆட்சி நிலவியதாகவும், நாடும் நகரும் வளம்மிக்கதாக விளங்கியதாகவும் கம்ப சக்கரவாத்தி இவ்வாறு வர்ணித்துள்ளார்.

பளிங்கு மாளிகைத் தலந்தோறும் இடந்தோறும் 

பசுந்தேன் துளிக்கும் கற்பகத் 

தண்ணறுஞ் சோலைகள் தோறும்

அளிக்கும் தேறலுண்டு ஆடநர் படுநர் ஆகிக் களிக்கின்றார் 

ஆதலால் கவர்கின்றார் ஒருவரைக்காணேன்.-4864

இராவணன் ஆண்ட இலங்கை பற்றி வால்மீகி முனிவர் வர்ணிக்கையில் அழகிய தங்க மதில்கள் பொன்தோரணங்கள்,தூண்கள்,தங்க சாளரங்கள் எட்டு அடுக்கு மாளிகைகள்,வைடூரியமும் முத்தும் பதித்த தலங்கள் உள்ள தீவு என வர்ணித்துள்ளார்.

இராமாயணக் காவியத்தில் இராவணன் அசுரனாக சித்தரிக்கப்பட்டிருக்கிறான்.இராமனை ஆன்மிக தலைவனாக சித்தரித்த வால்மீகி இராவணனை அசுரத்தலைவனாக சித்தரித்தமைக்கு சீதையை கவர்ந்தமை முக்கிய காரணமாகிறது. இதனை பிற்புலமாகக் கொண்டே சிவ பக்தனான இராவணனை இராம வழிபாடு கொண்ட கம்பர்,

'வளர்ந்த தாளினன் மாதிரம்

அனைத்தையும் மறைவித்து

அளந்த தோளினன் அனல்

சொரி கண்ணினன்' 

என அசுரத்தனமாக சித்தரித்து காட்டியிருந்தார்.

கம்பர் இராமாயணத்தை எழுதுவதற்கு முன்பே இராவணன் பற்றிய குறிப்புக்கள் செய்திகள், சிறப்புக்கள்,புறநானூறு, அகநானூறு, கலித்தொகை, ஆழ்வார் இலக்கியங்கள், நாயன்மார் பாடல்கள், சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற சங்க இலக்கியங்களிலும் பல்லவர் கால பக்தி இலக்கியங்களிலும் அதிகமாக காணலாம்.

இராவணன் ஒரு சிங்கள மன்னன் என்று சிங்களவர்கள் இயம்புவதற்குரிய காரணம் இராவணனை பற்றிய குறிப்புக்கள் இலங்கையில் தமிழில் இருப்பதைவிட சிங்களத்தில் அதிகமாகவே காணப்படுகின்றன. இதன்காரணமாக இவன் சிங்கள மன்னன் என்ற கதைகளை முன்வைக்கின்றனர்.

புத்தரின் அவதாரம் நடப்பதற்கு முன்பே இராவணன் இலங்கையை ஆண்டதற்கான ஆதாரங்கள் மேலே எடுத்துக்காட்டப்பட்டிருக்கின்றன. இன்றைய இந்தியாவின் தென்பகுதி தவிர்ந்த ஏனைய பகுதிகள் பலவற்றை இராவணன் ஆட்சி செய்துள்ளான். அது குமரி கண்டத்தின் பெரிய நாடாக இருந்துள்ளது.இந்த நாட்டின் வட, கிழக்குப் பகுதியில் லங்கா என்னும் நகரம் இருந்துள்ளது.

இந்த நகரம் அமைந்திருந்த பகுதியே பல ஆழிப் பேரலைகளுக்குப் பின் அழிவுற்று இப்போது எஞ்சியிருக்கும் இலங்கையாகும். விஜயன் வருவதற்கு முன் இலங்கையில் எந்தவொரு பௌத்த ராஜ்ஜியங்களோ மன்னர்களோ இருந்ததற்கான ஆதாரங்கள் சொல்லப்படவில்லை என்பது மகாவம்சம் தெரிவிக்கும் தகவல்.

இலங்கையை ஆண்ட இராவணன் ஒரு சிவபக்தன்.இந்தியாவிலுள்ள பல பிரதேச மக்கள் அவனை கடவுளாக வழிபட்டதன் காரணமாகவே இலங்கையிலும்,இந்தியாவிலும் பல கோயில்கள் கட்டப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள். இந்தியாவில் மத்திய பிரதேசத்தில் விதிசா என்னும் மாவட்டத்தில் ராவன் எனும் கிராமத்தில் கோயிலும் சிலையும், உத்தர பிரதேசத்திள்ள கான்பூர் என்னும் இடத்திலும் கேரள மாநிலத்தில் இராவணேஸ்வரம் என்னும் இடத்திலும் ராஜஸ்தான் மாநிலத்தில் மண்டோதரி எனும் ஊரிலும், உத்தர பிரதேசத்தில் பிஸ்ரா கிராமத்திலும்,மத்திய பிரதேசத்தில், கர்நாடக மாநிலத்தில் உள்ள கோலார் மாவட்டத்தில் மற்றும் தலையூ ஆகிய இடங்களிலும் இராவணனுக்கு கோயிலும், சிலையும் அமைக்கப்பட்டுள்ளன. இதே போன்றே இலங்கையில் அம்பாறை மாவட்டத்தில் உகந்தை என்னும் இடத்திலும், திருகோணமலையில் கன்னியாவிலும்,மலை நாட்டில் எல்லமலை,கதிர்காமம் இடங்களில் இராவணனுக்கு கோயில் அமைக்கப்பட்டு மக்கள் வழிபட்டு வந்திருக்கிறார்கள்.

இவை பௌத்த விகாரைகளாகவோ தாதுகோபுரங்களாகவோ கூறப்படவில்லை.கன்னியா வெந்நீரூற்று மற்றும் திருக்கோணேஸ்வரம் என்பன இராவணனுடன் மிகுந்த ஆன்மிகமாக தொடர்பு கொண்டது என்பதை தெட்ஷண கைலாச புராணம் (1887), திருக்கரசை புராணம் (1890), திரிகோணாசல புராணம் (1903), கதிர்காமப்புராணம் (1932), திருகோணமலை புரணம் (1909), வெருகல் சித்திரவேலாயுதர் காதல் (1885), கோணமலை அந்தாதி (1886), மட்டக்களப்பு மான்மியம், சிவராத்திரி புராணம் ஆகியன எடுத்து இயம்புகின்றன.

இராவணன் புகழ் இலங்கை மற்றும் இந்தியாவில் மட்டுமல்ல இந்தோனேஷியா நிக்கோபர், அந்தமான் தீவுகள், கிழக்கு இந்தியா, தென்சீனா, நேபாளம், திபெத் ஆகிய இடங்களில் பரவியதாகவும் பல்வேறு தகவல்கள் தெரிவிக்கின்றன.


Post a Comment

Previous Post Next Post