.


அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெற்று வரும் மகளிர் உலகக் கிண்ண கால்பந்து போட்டி பெரிதாக ஆரவாரம் காட்டாமல் முன்னோக்கிச் செல்கிறது. ஆடவர் கால்பந்து உலகக் கிண்ணத்துடன் ஒப்பிடுகையில் மகளிர்களுக்கு இன்னும் பெரிதாக செல்வாக்கு இல்லை என்பது தெரிந்தது. விளையாட்டில் ஆண், பெண் சமத்துவம், ஏற்றத்தாழ்வு, சம்பள முரண்பாடு எல்லாம் இந்த பின்னணியில்தான் பார்க்க வேண்டும்.

மொரோக்கோ பின்கள் வீராங்கனை நுஷைலா பென்சினா உலகக் கிண்ண வரலாற்றில் ஹிஜாப் அணிந்து போட்டியில் பங்கேற்ற முதல் வீராங்கனையாக பதிவாகி இருக்கிறார். இது ஒரு வரலாற்று திருப்பம் என்றாலும் இதன் நல்லது கெட்டது பற்றிய விவாதம் என்பது விளையாட்டைத் தாண்டி சமயம், அரசியல் எல்லாம் கலந்தது.

கடந்த ஆண்டு கட்டாரில் நடந்த ஆடவர் உலகக் கிண்ணத்தில் மொரோக்கோ அணி அரையிறுதி வரை முன்னேறி அதிர்ச்சி காட்டியது. அதன் தொடர்ச்சியா கவே மகளிர் உலகக் கிண்ணத்திற்கு மொரோக்கோ அணி முதல் முறை தகுதி பெற்றது. அதாவது அரபு பின்னணி கொண்ட அணி ஒன்று மகளிர் உலகக் கிண்ணத்திற்கு முதல் முறை முன்னேறியதாக இது இருந்தது.

பொதுவாக மொரோக்கோ மகளிர் அணி கால்பந்துக்கே உரிய அரைக் காற்சட்டை மற்றும் ஜெர்சியுடனேயே இம்முறை உலகக் கிண்ணத்தில் களமிறங்கியது.ஜெர்மனிக்கு எதிரான முதல் போட்டியில் 0-6 என தோற்ற போது உலகம் அவதானிக்கும் படி அந்த அணியில் எதுவும் இருக்கவில்லை. ஏனென்றால் 25 வயதான பின்கள வீராங்கனை நுஹைலா பென்சிமா அந்தப் போட்டியில் பதில் வீராங்கனையாக இருந்தபோதும் போட்டியில் கடைசி வரை பயன்படுத்தப்படவில்லை.

தொடர்ந்து தென் கொரியாவுக்கு எதிராக கடந்த ஜூலை 30 ஆம் திகதி இடம் பெற்ற தீர்க்கமான போட்டியில் நுஹைலா ஆரம்ப அணியிலேயே இணைக் கப்பட்டார். மைதானத்திற்கு களமிறங்கியபோது ஏனைய வீராங்கனைகளில் இருந்து அவர் முற்றாக வித்தியாசமாக இருந்தார்.

தலையை மறைக்கும் வகையில் ஹிஜாப் அணிந்திருந்த அவர் அரைக் காற் சட்டைக்கு கீழால் காலை மறைக்கும் வகையில் மெல்லியதாக ஒரு காற்சட்டை போட்டிருந்தார்.அவரது கை கூட மணிக்கட்டு வரை மறைக்கப்பட்டிருந்தது சர்வதேச கால்பந்து மைதானத்தில் அதுவும் உலகக் கிண்ணத்தில் இப்படி ஆடை அமைப்புடன் மைதானத்தில் வீராங்கனை ஒருவர் இருப்பது இது புதிது.


நுஹைலாவின் தோற்றத்திற்கு  முழுக்க முழுக்க காரணம் அவரது மத நம்பிக்கைதான்.அது விளையாட்டு உலகில் இன்னும் முழுமையாக தீர்க்கப்படாத ஒரு விவகாரமாக இருந்து வருகிறது. 

"பல ஆண்டுகளாக பல போராட்டங்களை சந்திக்க வேண்டி இருந்தது. சாதக மான முடிவு ஒன்று கிடைத்திருப்பதற்கு இறைவனுக்கு நன்றி கூற வேண்டும். உயர் தரத்தில் மொரோக்கோவுக்கு பெருமை சேர்க்கும் வகையில் நாம் விளையாட எதிர்பார்க்கிறோம்" என்கிறார் நுஹைவா.

வீராங்கனைகளின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்தை காரணம் காட்டி 2007 ஆம் ஆண்டு கால்பந்து போட்டிகளில் ஹிஜாப் அணிய சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிஃபா) தடை விதித்தது. அதாவது முக்காடு அணிந்து போட்டியில் விளையாடுவது தலை அல்லது கழுத்தில் காயத்தை ஏற்படுத்தக் கூடும் என்பதே பிஃபாவின் பிரதான தர்க்கமாக இருந்தது.

போட்டியின்போது அணியும் துணி கழுத்தை இறுக்கி மூச்சுத் திணறலை ஏற்ப டுத்தும் என்றே பிஃபா ஆரம்பத்தில் பயப்பட்டது.

என்றாலும் இந்தத் தடை ஓர் உணர்வு பூர்வமான விவகாரமாக மாறியது. 2007 ஆம் ஆண்டு 11 வயது கனேடிய சிறுமி ஒருவர் ஹிஜாபுடன் ஆட வந்தபோது நடுவர் பிஃபா தடையை காரணம் காட்டி அவர் மைதானம் வர மறுத்தது சர்வதேச அளவில் பெரிதாக அவதானம் பெற்றது. இந்த விவகாரம் பிஃபா வரை எடுத்துவரப்பட்டது. இதனைத் தொடர்ந்து பிஃபா நிலைப்பாட்டில் படிப் படியாக மாற்றம் நிகழ ஆரம்பித்தது.

குறிப்பாக இந்தத் தடை முஸ்லிம் பெண்களிடையே பெரிதாக தாக்கம் செலுத்த ஆரம்பித்தது. பல பெண்கள் கால்பந்து  விளையாட்டையே துறக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள். 2012 லண்டன் ஒலிம்பிக் போட்டிக்காக ஜோர்தான் அணிக்கு எதிரான தகுதிகாண் போட்டியில் ஆடவந்த ஈரான் மகளிர் கால்பந்து அணி வீராங்கனைகள் ஹிஜாப் அணிந்திருந்ததால் போட்டியில் ஆட தடை விதிக்கப்பட்டது.

அப்போது ஈரான் வீராங்கனைகள் மைதானத்திலேயே அழுத காட்சி உள் நாட்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஹிஜாப் விவகாரத்தில் கடும் கட்டுப்பாடு இருக்கும் ஈரானில் இந்தத் தடை பெண்களை கால்பந்தில் இருந்து தூரமாக்கியது.

என்றாலும் கால்பந்து விதிகளை தீர்மானிக்கும் சர்வதேச கால்பந்து சம்மேளன சபை,சோதனை முயற்சியாக கால்பந்து போட்டிகளில் பெண்கள் இரண்டு ஆண்டுகளுக்கு ஹிஜாப் அணிய அனுமதி அளித்தது. இந்த சோதனை பிஃபா தர்க்கத்தை பொய்யாக்குவதாக இருந்தது.

இதனை அடுத்தே 2014 ஆம் ஆண்டு ஹிஜாப் அணிவதற்கான தடையை பிஃபா நீக்கியது. 2016 ஆம் ஆண்டு ஜோர்தானில் நடைபெற்ற 17 வயதுக்கு உட்பட்ட மகளிர் உலகக்கிண்ணத்திலேயே தடை நீக்கப்பட்டிருப்பது உலகக்கு பெரிதாகத் தெரிந்தது. அந்தத் தொடரில் பல வீராங்கனைகள் ஹிஜாப் அணிந்து ஆடியதை பார்க்க முடிந்தது.

மறுபக்கம் தடை நீங்கியதற்கு என்ன உலகக் கிண்ணத்தில் நுஹைலாவுக்கு முன்னர் யாரும் ஹிஜாப் அணிந்து ஆடி இருக்கவில்லை. குறிப்பாக 2019 ஆம் ஆண்டு பிரான்ஸில் மகளிர் உலகக் கிண்ணப் போட்டி நடந்ததும் இதற்கு பாதிப்பை ஏற்படுத்தி இருந்தது. ஏனென்றால் அங்கு ஹிஜாப் தடை தொடர்ந்து நீடித்தது.

பிஃபா தடையை நீக்கி இருந்தாலும் பிரான்ஸ் இன்னும் விடாப்பிடியாகவே இருக்கிறது. பிஃபா இந்த விவகாரத்தில் நெகிழ்வு பொக்கை கையாள்வதே பிரான்ஸ் போன்ற சில நாடுகள் தனித்து முடிவு எடுக்கக் காரணம். என்றாலும் இது ஒரு இஸ்லாமோ போபியா மற்றும் பெண்கள் விளையாட்டில் பங்கேற்பதை தடுக்கிறது என்று கூறி சிலர் பிரான்ஸில் நீதிமன்றத்திற்குக் கூட சென்றார்கள்.

போட்டியின்போது கிறிஸ்தவ வீரர்கள் சிலுவை அடையாளத்தை அணிந்து ஆட
அனுமதிப்பதை வைத்து அவர்கள் வாதித்தார்கள்.

என்றாலும் மைதானத்தில் அல்லது அதற்கு அருகில் ஹிஜாப் அணிந்த பெண்களை அனுமதிப்பது நாட்டின் 1905 ஆம் ஆண்டின் மதச் சார்பின்மை சட்டத்திற்கு எதிரானது என்று பிரான்ஸ் கால்பந்து சம்மேளனம் கூறுகிறது. ஒரு தசாப்தத்திற்கு முன்னர் ஹிஜாப் விவகாரம் பெண்கள் விளையாட்டில் பூதாகாரமாக வெடித்தபோதும் அண்மைக் காலத்தில் கூடைப்பந்து மற்றும் கரப்பந்து உட்பட பல விளையாட்டுகளிலும் ஹிஜாப் தடை நீக்கப் பட்டிருக்கிறது.

சர்வதேச கூடைப்பந்து விதிகளில் ஹிஜாபுக்கு இருக்கும் தடையை நீக்க கடுமையாக போராட வேண்டி இருந்தது. இந்த ஹிஜாப் தடையாலேயே விளையாட்டை விட மதத்தை முன்னிறுத்தி தனது கூடைப்பந்து வாழ்வுக்கே விடைகொடுத்தார் அமெரிக்க வீராங்கனை பில்கிஸ் அப்துல் காதிர். இந்தப் போராட்டத்தில் அவரும் முன்னின்று செயற்பட்டார். கடைசியில் 2017 ஆம் ஆண்டு ஹிஜாப் தடை கூடைப்பந்து விளையாட்டில் இருந்து நீக்கப்பட்டது.

என்றாலும் பிரான்ஸில் தொடர்ந்தும் இந்த நிலை நீடிக்கிறது. கூடைப்பந்து வீராங்கனையும் செயற்பாட்டாளருமான சலிமதா சிலா, தனது பிரெஞ்ச் லீக் போட்டியில் ஹிஜாப் அணிந்து ஆட அந்நாட்டு கூடைப்பந்து நிர்வாகம் தடை விதித்ததாக கூறுகிறார்.

பிரான்ஸின் இந்த முடிவுகள் சாதாரணமானதாகக் குறிப்பிட முடியாது. ஏனென்றால் 2024 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி அங்குதான் நடைபெறவுள்ளது. சர்வதேச ஒலிம்பிக் குழுவுக்கு தனக்கே உரிய பாகுபா ட்டுக்கு எதிரான கொள்கைகள் இருக்கின்றன. அது பிரான்ஸின் இந்தக் கொள்கைகளுடன் நேரடியாக முரண்படுகிறது. ஈரான், சவூதி அரேபியா போன்ற ஹிஜாப் விவகாரத்தில் கண்டிப்பாக இருக்கும் நாடுகளும் பிரான்ஸ் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும். இதுவெல்லாம் அடுத்த ஒலிம்பிக் போட்டியில் எந்த அளவுக்கு தாக்கத்தை செலுத்தும் என்று தெரிய வில்லை. உள்ளூரில் கூடைப்பந்து மற்றும் கால்பந்தில் இருக்கும் ஹிஜாப் தடை அங்கு
ஏனைய விளையாட்டுகளுக்கும் பரவும் அச்சமும் நிலவுகிறது.

இது தொடர்பில் சர்வதேச ஒலிம்பிக் குழு கருத்துக் கூற மறுத்து வருகின்ற போதும் ஒலிம்பிக்கில் பாகுபாட்டுக்கு இடமில்லை என்று மீண்டும் ஒரு முறை வலியுறுத்தி இருக்கிறது.

1996 வரை ஒலிம்பிக்கில் ஹிஜாப் அணிந்த பெண்களுக்கு இடம் அளிக்கப் படாத போதும் குத்துச்சண்டை, பாரம் தூக்குதல், ஓட்டப் போட்டி, வாள் சண்டை மற்றும் ஜூடோ போட்டிகளில் வீராங்கனைகள் ஹிஜாப் அணிய அனுமதி இருந்தது.

ஐக்கிய அரபு இராச்சியத்தைச் சேர்ந்த ஸ்கெட்டிங் வீராங்கனை சஹ்ரா லாரி பியொங் சாங்கில் 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக்குக்கான தகுதிகாண் போட்டியில் முதல் வீராங்களையாக ஹிஜாபுடன் பங்கேற்றார்.

அதேபோன்று 2016 ஆம் ஆண்டு ரியோ ஒலிம்பிக் போட்டியில் எகிப்தின் டோவா
எல்கோபஷி முதல் கடற்கரை கரப்பந்தாட்ட வீராங்கனையாக ஹிஜாப் அணிந்து பங்கேற்றார். அப்போது அவர் ஹிஜாப் உடன் ஒரு பக்கம் இருக்க, மற்றப் பக்கத்தில் நீச்சல் உடையுடன் ஆடும் வீராங்கனையின் புகைப் படங்கள் பத்திரிகைகளின் முதல் பக்கங்களில் பெரிதாக வெளியாகி இருந்தன.



அவுஸ்திரேலியாவில் வலைப்பந்தாட்டத்தில் ஹிஜாப் அணிய அனுமதி இருந்தபோதும் ரக்பி லீக்கில் தலையை மறைப்பது பற்றி குறிப்பிட்டு எந்த வழிகாட்டலும் இல்லை.என்றாலும் ஆபத்து என்று கருதும் எதையும் அணிய அனுமதி இல்லை.

அவுஸ்திரேலிய ரூல்ஸ் கால்பந்தின் அவுபர்ன் ஜயன்ட்ஸ் என்ற அணி முஸ்லிம் பெண்களால் உருவாக்கப்பட்டதோடு அதிலே ஹிஜாப் அணிந்து ஆடும் பெண்களை பரவலாக பார்க்க முடிகிறது.

 ஹிஜாப் என்பது விளையாட்டில் சாதாரணமாகி வரும் நிலையில் அதற்கான சந்தைகளும் பெரிதாகி வருகின்றன.குறிப்பாக விளையாட்டு ஆடைகளை தயாரிக்கும் முன்னணி நிறுவனமான நைக்கி முஸ்லிம் பெண்களை இலக்கு வைத்து 2017 இல் நவீன நீச்சல் உடையை அறிமுகம் செய்தது. என்றாலும் மேல் மட்ட போட்டிகளில் முழு உடலையும் மறைக்கும் வகையில் ஆடை அணிய
முடியாது.

வீரர்களுக்கு அளவுக்கு அதிகமாக போட்டியில் சாதகமான நிலை இருப்பதாகக் கூறி 2010இல் முழு உடலையும் ஆடைக்கு நீச்சல் விளையாட்டு நிர்வாகம் தடை விதித்தது. இதனால் மூன்று முறை ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற எகிப்து நீச்சல் வீராங்கனை ஆயா மதனி விளையாட்டுக்கு விடை கொடுக்க வேண்டியதாயிற்று.

பொதுவாகவே முஸ்லிம் சமூகக் கட்டமைப்பில் இருந்து பெண்கள் விளையாட்டில் ஈடுபாடு காட்டுவது ஒப்பீட்டளவில் அரிதானது. இந்தக் கட்டுப்பாடுகள் இருக்கின்ற சிறிய சூழல்களையும் தடை செய்வதாக இருக்கிறது.



Post a Comment

Previous Post Next Post