.

ரோன்டா பைர்ன் எழுதிய இரகசியம் என்னும் புத்தகமானது எமது ஆழ் மனதிற்குள் மறைந்திருக்கும் சக்தியைப் பற்றி பேசுகிறது.இது ஈர்ப்பு விதி பற்றிய புத்தகம் இதுவாகும்.மனிதர்கள் தங்கள் விருப்பங்களையும் கனவுக ளையும் அடைய முடியும் என்று கூறுகிறது. அவர்கள் நேர்மறையாக சிந்திக்க வேண்டும், நம்ப வேண்டும்.பணம், ஆரோக்கியம், உறவுகள்,மகிழ்ச்சி போன்ற வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் இரகசியத்தை எப்படிப் பயன்படுத்துவது என்பதை இந்தப் புத்தகம் சொல்லித் தருகிறது. உங்களுக்குள் மறைந்திருக்கும் இதுவரை வெளிக் கொண்டு வராத சக்தியை நீங்கள் அறிந்து கொள்ள இந்தப் புத்தகம் உதவக் கூடும்.

தங்களது வாழ்வின் ஆரோக்கியம்,செல்வச் செழிப்பு,மற்றும் மகிழ்ச்சி ஆகியவற்றைக் கொண்டு வர இரகசியத்தை உபயோகித்த ஞானிகளின் கதைகளை இந்தப் புத்தகம் உள்ளடக்கியுள்ளது.இரகசியத்தின் அறிவைக் கொண்டு குணப்படுத்த முடியாத வியாதிகள் எப்படிக் குணப்படுத்தப்பட்டன, அளப்பரிய செல்வம் எவ்வாறு குவிக்கப்பட்டன,பெரிய தடைகள் எவ்வாறு தாண்டப்பட்டன முடியவே முடியாது என்று நினைத்த காரியங்கள் எப்படி சாத்தியப்பட்டன என்பதை உண்மைக் கதைகளுடன் சொல்லியிருக்கிறார் பைர்ன்.அந்தக் கதைகளை நம்புவதும் நம்பாமல் விடுவதும் வாசகர்களின் தனிப்பட்ட விருப்பமாகும்.இப் புத்தகத்தில் சொல்லப்பட்ட விடயங்களைச் செயற்படுத்தி வெற்றி கண்டால் வாசகர்கள் நம்பக் கூடும்.ஆனால் முயற்சியே செய்யாமல் பொய் என்று சொல்வது இலகுவானது.

யோசப் மர்பி எழுதிய ஆழ் மனதின் அற்புத சக்தி என்ற புத்தகமும் மனதின் சக்தி பற்றியே சொல்கிறது அதையேதான் இரகசியம் புத்தகமும் சொல்கிறது. மனதின் இரகசியங்கள் அறியப்படாமலேயே உள்ளதால் மனோதத்துவ வியலாளர்கள் ஆராய்ச்சி செய்து சில உண்மைகளைச் சொல்கிறார்கள் ஆனால் விஞ்ஞானம் சிலவற்றை ஏற்றுக் கொள்ள மறுக்கிறது.அது போல ஈர்ப்பு விதியையும் விஞ்ஞானம் ஏற்றுக் கொள்ளவில்லை ஆனால் மக்கள் நம்புகிறார்கள்.



நேர்மறை சிந்தனை மற்றும் எண்ணங்களின் உயர் அதிர்வுகளை பராமரிப்பது ஒருவரின் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களுக்கு வழிவகுக்கும், அதே நேரத்தில் எதிர்மறை எண்ணங்கள் எதிர்மறையான அனுபவங்களை ஈர்க்கும் என்ற கருத்தை இரகசியம் புத்தகம் வலியுறுத்துகிறது. பல்வேறு தத்துவ வாதிகள்,விஞ்ஞானிகள் மற்றும் ஆன்மீகத் தலைவர்களின் போதனைகள் மேற்கோள்கள் மற்றும் கதைகளின் கலவையின் மூலம் புத்தகம் இந்த கருத்தை முன்வைக்கிறது.

இரகசியம் புத்தகம் கூறும் கருத்தின்  மையமானது, தனிநபர்கள் தங்கள் எண்ணங்கள் மற்றும் உணர்ச்சிகளில் கவனம் செலுத்துவதன் மூலம் அவர்களின் ஆசைகள் மற்றும் குறிக்கோள்களை வெளிப்படுத்தும் சக்தியைக் கொண்டுள்ளனர் என்ற நம்பிக்கை.நீங்கள் விரும்புவதைக் காட்சிப்ப டுத்துவதன் மூலமும் நம்புவதன் மூலமும், உங்கள் ஆற்றலை அந்த ஆசைக ளுடன் சீரமைத்து, இறுதியில் அவற்றை உங்கள் வாழ்க்கையில் ஈர்க்க முடியும் என்று அது அறிவுறுத்துகிறது.

இரகசியம் புத்தகம் உற்சாகத்தையும் விமர்சனத்தையும் தூண்டியுள்ளது. சில வாசகர்கள் அதன் போதனைகளில் உத்வேகம் மற்றும் உந்துதலைக் கண்டறிந்துள்ளனர்,மற்றவர்கள் அதன் கூற்றுகளின் விஞ்ஞான செல்லுபடியை கேள்விக்குள்ளாக்கியுள்ளனர்.மாறுபட்ட கருத்துக்களைப் பொருட்படுத்தாமல், இந்த புத்தகம் பிரபலமான கலாச்சாரத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது மற்றும் தொடர்புடைய புத்தகங்கள்,ஆவணப்படங்கள், கருத்தரங்குகள் மற்றும் ஈர்ப்பு விதி மற்றும் நேர்மறையான சிந்தனை பற்றிய விவாதங்களை உருவாக்க வழிவகுத்துள்ளது.

இரகசியம் புத்தகமானது இருபத்தி நான்கு ஆசான்களின் கதைகளைக் கொண்டுள்ளது.இக் கதைகள் அமெரிக்காவெங்கும் பல்வேறு காலகட்டங்களில் பதிவு செய்யப்பட்டபோதும் அவர்கள் தெரிவித்த கருத்துக்களில் பெரியளவில் மாற்றங்கள் இல்லை.ஈர்ப்பு விதியை கற்றுக் கொடுத்த ஆசான்களின் வார்த்தைகளும் கதைகளையும் இப் புத்தகம் கொண்டுள்ளது.வாசகர்களின் வாழ்க்கை கனவுகளை நனவாக்கி கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் எளிய வழிகளை கொடுக்கிறது இப்புத்தகம் முயற்சிப்பது வாசகர்களின் விருப்பமாகும்.

ஈர்ப்பு விதியின் இயக்க நியதி பற்றிய ஒரு உதாரணத்தை பார்க்கலாம்.பெரும் செல்வத்தை சேர்த்து இவை அனைத்தையும் குறுகிய காலத்திற்குள்ளேயே இழந்து மீண்டும் பெரும் பணத்தினைச் சேர்த்திருக்கும் நபர்களை கேள்விப்பட்டிருக்கலாம்.இப்படிப்பட்டவர்களை ஆக்கிரமித்திருந்த எணணங்கள் செல்வத்தின் மீதுதான் குவிந்திருக்கும்.செல்வத்தை முதலில் சேர்த்ததே அப்படித்தான்.பின்னர் அதை இழந்து விடுவோமோ என்று பயம் தங்களது எண்ணத்தில் புக அனுமதித்தனர்.பிறகு அந்த எண்ணம் மிகவும் கூடியதும் அவர்களது எண்ணத் தராசு ஒரு பக்கம் சாயந்து சரிந்தது. அனைத்தையும் இழந்த பிறகு இழப்பு குறித்த எண்ணம் மறைந்தது.மீண்டும் செழிப்பின் பக்கம் கவனம் திரும்பியதால் செல்வம் மீண்டும் வந்தது என்று சொல்கிறது இப் புத்தகம்.இது ஈர்ப்பு விதியின் ஒரு உதாரணமாகும்.இதைப் போன்ற ஏராளமான உதாரணங்கள் இப் புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ளன.

இந்த புத்தகத்திலுள்ள சில எனக்குப் பிடித்த அறிவுரைகள்,

  • மற்றவர்கள் உங்களை எப்படி நடத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களோ அப்படி உங்களை நீங்களே நடத்திக் கொள்ளாவிட்டால் உங்களால் எதையும் மாற்ற முடியாது.உங்களது நடவடிக்கைகள் சக்தி வாய்ந்த எண்ணங்கள் என்பதால் நீங்கள் உங்களை மரியாதையுடனும் அன்புடனும் நடத்திக் கொள்ளாவிட்டால் நீங்கள் அவ்வளவு முக்கியத்துவம் அற்றவர்,தகுதியற்றவர் என்ற சமிக்ஞைகளைத்தான் அனுப்பிக் கொண்டிருப்பீர்கள்.
  • உங்களுடைய மகிழ்ச்சியையும் உங்களுடைய பேரானந்தத்ததையும் கட்டுப்படுத்த ஒரு ஒருவரால் தான் முடியும்.அது நீங்கள்தான்.உங்களுடைய சந்தோசத்தைக் கட்டுப்படுத்த உங்களுடைய வாழ்க்கைத் துணைவரால் உங்களுடைய பெற்றோரால் குழந்தைகளால் கூட முடியாது.
  • ஒவ்வொரு வெறுப்புணர்வு எண்ணமும் நமது உடலில் நாம் விதைத்துக் கொள்ளும் மோசமான விடயம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
  • தான் எப்படிச் சிந்திக்கிறானோ அப்படியே ஆகிறான் மனிதன்.
  • மகிழ்ச்சியான மனநிலையில் இருக்கும் போது நீங்கள் வாழ்க்கையை மேன்மைப்படுத்துகிறீர்கள்,உலகையும் மேனமையடையச் செய்கிறீர்கள்.
  • உங்களது கனவுகளிலும் உங்களது முன்னேற்றத்திலும் மட்டும் கவனம் செலுத்துங்கள்.போட்டி மனப்பான்மையை குப்பைத் தொட்டியில் போட்டு விடுங்கள்.
  • உங்கள் வாழ்க்கையின் நிகழ்வுகள் அனைத்தையும் உங்களை நோக்கிக் கவர்ந்திழுத்துக் கொண்டீரப்பது நீங்கள்தான்.உங்கள் மனதில் தக்க வைத்துக் கொண்டிருக்கும் காட்சிகள் மூலமாகவே அவை உங்களை நோக்கி ஈர்க்கப்படுகிறன.
  • பெரும்பாலான மக்கள் தங்களுக்கு என்ன வேண்டாம் என்பதைப் பற்றித்தான் சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.தாங்கள் விரும்பியவற்றை மக்கள் பெறாதிருப்பதற்கு காரணம் அவர்கள் தங்களுக்கு எது வேண்டும் என்பதை விட தங்களுக்கு எது வேண்டாம் என்பது குறித்து அதிகமாகச் சிந்துத்துக் கொண்டிருப்பதுதான்.
  • நீங்கள் ஒரு கட்டிடத்தின் மேலிருந்து கீழே குதித்தால்  நீங்கள் நல்லவராக இருந்தாலும் சரி கெட்டவராக இருந்தாலும் சரி நிலத்தில் விழப்போவது நிச்சயம்.

மொத்த்தில் இரகசியம் புத்தகமானது ஈர்ப்பு விதியின் இரகசியங்களைச் சொல்லுகிறது அது பற்றிய ஒரு புதிய விவாதத்தை தொடங்கி வைக்கிறது. முயற்சி செய்து பாருங்கள்.வாசிப்போம்.

இரகசியம் புத்தகத்தினை வாசிப்பதற்கு கீழுள்ள இணைப்பை அழுத்தவும்



You have to wait 45 seconds.

Generating Download Link...

2 Comments

  1. ஈர்ப்பு விதி என்பது கற்பனை விதியே தவிர நிஜத்தில் சாத்தியமே இல்லாத ஒன்று. நமக்கு என்ன வேண்டுமோ அதனை ஆழமாக நம்ப வேண்டும், அது நமக்கு கிடைத்து விட்டதாக ஆழமாக கற்பனை செய்துகொண்டிருந்தால் நமக்கு வேண்டியது கிடைத்துவிடும் என்று ஈர்ப்பு விதி சொல்கின்றது. அது எப்படி சாத்தியம், நாம் எதுவும் செய்யாமல் கற்பனை மட்டும் செய்துகொண்டிருந்தால் நமக்கு எதுவும் கிடைக்காது என்பதுதான் உண்மை.

    நம் மீது நாம் நம்பிக்கை வைக்கலாம், நாம் செய்யும் செயல்கள் மீது செய்யப் போகும் செயல்கள் மீது ஆழமான நம்பிக்கை வைக்கலாம், நான் நினைப்பது எனக்கு கிடைத்துவிடும் என்றும் ஆழமாக நம்பலாம். ஆனால் அதற்காக முயற்சி செய்ய வேண்டும், உழைக்க வேண்டும், ஏதாவது செய்ய வேண்டும். ஏதாவது செய்தால் மட்டும்தான் நாம் வேண்டும் என்று நினைப்பது கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் இருக்கும்.

    எந்த முயற்சியும் இல்லாமல் நமக்கு என்ன வேண்டுமோ அதனை ஆழமாக நம்பிக்கொண்டு கற்பனை செய்து கொண்டு மட்டும் இருந்தால் எந்தப் பயனும் இல்லை.

    ஒரு வேளை நாம் ஒன்றின் மீது ஆழமாக நம்பிக்கை வைத்த பின் அதற்காக உழைத்து, முயற்சிகளை மேற்கொண்டு அதனை அடைந்துவிட்டால் நாம் அதனை அடைந்ததற்கான காரணம் நமது உழைப்பாகவோ முயற்சியாகவோ இருக்குமே தவிர ஈர்ப்பு விதி எனும் கற்பனை விதியாக இருக்க முடியாது.

    இப்புத்தகத்தின் எழுத்தாளர் இரகசியம் என்ற ஒரு புத்தகத்துடன் நிறுத்திக்கொள்ளமால் வரிசையாக இரகசியம் என்ற விடயத்தை மையமாகக்கொண்டு பல நூல்களை எழுதிக்கொண்டேயிருக்கின்றார். அவருடைய நோக்கம் இரகசியத்தை வாசகர்களுக்கு சொல்வது கிடையாது. புத்தகம் எழுதுவதன் மூலம் பணம் சம்பாதிப்பதும், பிரபல்யமடைவதும்தான் என்று நினைக்கின்றேன்.

    நான் அவருடைய நூல்கள் எதையும் வாசிக்கவில்லை. வாசித்தால்தான் எழுத்தாளர் அவர்கள் எப்படியெல்லாம் கற்பனைக் கதைகளை சொல்லியிருக்கின்றார் என்பதை விரிவாக எழுத முடியும். நன்றி

    ReplyDelete
  2. ஈர்ப்பு விதி என்ற ஒன்றை வைத்தே அவர் அனேகமான புத்தகங்கள் எழுதியுள்ளார.;திரைப்படங்களும் வெளிவந்துள்ளன.இந்த நூலாசரியர் மட்டுமல்ல அனேக நூலாசிரியர்கள் ஈர்ப்பு விதி பற்றிச் சொல்லியிருக்கிறனர்.ஆனாலும் ஈர்ப்பு விதி விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்படாத ஒன்று.

    ReplyDelete

Post a Comment

Previous Post Next Post