.

புத்தகத் தலைப்பு :-ஜரதுஷ்ட்ரா இவ்வாறு கூறினான்

ஆசிரியர் :- நீட்ஷே

தமிழில் :- ரவி

நூல் வெளியீடு  :- காலச் சுவடு 

பக்கங்கள் : -422


1883-1885 காலகட்டங்களில் எழுதி முடிக்கப்பட்ட இந் நூல், அதனைத் தொடர்ந்து வந்த ஆண்டுகளில் ஐரோப்பாவிலும் ஏனைய உலக நாடுகளிலும் ஒரு பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி, மதம் சார்ந்த மக்களையும், கிறிஸ்தவ தேவாலய ங்களுடன் மிக நெருக்கமாவர்களையும் ஒரு தாக்குத் தாக்கி, அவர்களால் மன்னிக்க முடியாத குற்றவாளியாகக் கருதப்பட்டவரின் வரிகளுக்குச் சொந்தக்காரனாக இருந்த ஃப்ரெடரிக் வில்லியம் நீட்ஷே அவர்கள் எழுதிய நூல் தான் இந் நூல். அதாவது அவரது பிரகடனம், கடவுள் இறந்துவிட்டார், அவரை நாம் கொன்று விட்டோம். இனிமேல் இந்த உலகத்தைக் கொண்டு நடத்த ஒரு அதீத மனிதன் தேவை. அவனை நாங்கள் கண்டுபிடித்து அவரிடம் மிகுதி வேலைகளை ஒப்படைப்போம் என்று அறை கூவல் விடுத்தார். அவர் தெரிவு செய்த மனிதன் தான் அந்த சுப்பர்மான்.
இதன் தமிழ் மொழிபெயர்ப்பாளர் ரவி (1964-2015) அவர்கள் மூன்றாண்டுகளின் கடும் உழைப்பால் இதனைத் மிகத் தெளிவாக மொழிபெயர்த்துள்ளார். மொழி பெயர்ப்பாளர் ரவி அவர்களுக்கு எனது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். அவரது முன்னுரையில் நீட்ஷேயைப் பற்றிய சிறு குறிப்புடன், அவரது தத்துவவியல் குறித்தும் விளக்கம் தந்துள்ளார். என்னைப் பொறுத்தவரை இந் நூலை வாசிப்பதற்கு முன் நீட்ஷேயைப்பற்றி தெரிந்து வைத்திருப்பது கொஞ்சம் நல்லது என நினைக்கிறேன். எடுத்தவுடன் புரிந்து கொள்வது ஆரம்பத்தில் சிறிது கடுமையாகவே இருந்தது. மதங்களையும், அது சார்புடைய எல்லா செயல் பாடுகளையும் அப்பட்டமாக எதிர்க்கிறார். ஏன் அப்படியாக அவர் படைத்தார் என்பதை அவரது வாழ்க்கை ஆரம்ப வரலாறுகள், அவரது அடி மனதில் ஏற்படுத்திய தாங்கள்களை இங்கே வாசிக்கலாம். 1944 அக்டோபர் 15 ஆம் திகதி ஜெர்மனியில் ராக்கன் (Röcken) நகரில் பிறந்தார். ஒரு தம்பி, ஒரு தங்கை இவருடன் கூடப் பிறந்தவர்கள். 5 வயதாக இருக்கும் போதே தந்தை காலமாகிவிட்டார்.
அவரது தந்தை, கிறிஸ்தவ மதத்தில் முற்று முழுதாக தன்னை அர்ப்பணித்து, ஒரு தேவாலயத்தின் அருட்தந்தையாக இருந்து, தனது குடும்பத்தையும் அதற்குள் கொண்டு வந்தது விட வேண்டும் என்ற அவரது தீர்க்கமான எண்ணத்தை, முற்றிலுமாக முறியடித்தவராகவே நீட்ஷே தனது தந்தையின் இறப்பிற்குப் பின்னர் தனது தத்துவத்தை முன்வைப்பதை இங்கே காணலாம்.
நீட்ஷேயின் தத்துவார்த்தக் கொள்கைகளுக்கு அவரை ஈர்த்துச்சென்றதில் முக்கியபங்கு வகிப்பதில், ஷோப்பனேயரின் Will to live மற்றும் The World as Will and Representation என்ற நூல்கள் தான் முக்கியமாகக் கருதப்படுகிறது.
1869 இல் சுவிற்சலாந்தின் பாசெல் நகரில் கிளாசிக்கல் பிலாலஜியில் ஒரு பேராசிரியர் பதவி காலியாக இருந்தபோது, ரிட்ச்ல் நீட் சேவை நிகரற்ற பாராட்டுடன் பரிந்துரைத்தார். அவர் தனது முனைவர் பட்ட ஆய்வையோ அல்லது ஜேர்மன் பட்டப்படிப்புக்குத் தேவையான கூடுதல் ஆய்வுக் கட்டுரையையோ முடிக்கவில்லை, ஆயினும், 40 ஆண்டுகால கற்பித்தலில் நீட்சே போன்ற எவரையும் தான் பார்த்ததில்லை என்றும், அவனது திறமைகள் எல்லையற்றது என்றும் பார்சல் (Basel, Switzerland) பல்கலைக்கழகத்திற்கு ரிட்ச்ல் உறுதியளித்தார். 1869 இல் லீப்ஜிக் பல்கலைக்கழகம் அவரது வெளியிடப்பட்ட எழுத்துக்களின் வலிமையைக் கருத்தில் கொண்டு ஆய்வு அல்லது ஆய்வுக் கட்டுரை இல்லாமல் முனைவர் பட்டம் வழங்கியது, மேலும் பாசல் பல்கலைக்கழகம் அவரை பாரம்பரிய மொழியியல் பேராசிரியராக நியமித்தது. அடுத்த ஆண்டு நீட்சே பேராசிரியராகப் பதவி உயர்வு பெற்றார்.
(Birth of tragedy) சோகத்தின் பிறப்பு 1872 நீட்ஷேயின் முதல் புத்தகம். ஆனால் அவரை உலக தத்துவவியலாளர்கள் மற்றும் அனைத்துத் தரப்பினராலும் திரும்பி ஆச்சரியப்பட வைத்த நூல் என்றால் அது ஜரதுஷ்ட்ரா இவ்வாறு கூறினார் (Also sprach Zarathustra). அதன் பின் எழுதிய புத்தகமாகிய Will to Power என்ற புத்தகமே ஹிட்லரின் வெற்றிக்கு வித்திட்டதாக அறியப்படுகிறது.
1881 தொடக்கம் 1888 வரை சுவிற்சலாந்தில் சில்ஸ் மரியா, லுட்சேன் என்ற இடங்களில் வாழ்ந்துள்ளார். இறுதியாக இத்தாலியிலுள்ள டுறின் என்ற இடத்திலும் (கடைசிக்காலகட்டத்தில் மனநலக்காப்பகத்திலும்) இறுதியாக அவரது சகோதரியின் பாதுகாப்பில் இருந்து 1900 ஆண்டு அவரது ஆன்மா உடலை விட்டு சென்றதையும் காணலாம்.




இப்படியாக அவரைப்பற்றிய நீளமான குறிப்புகள் நீண்டு கொண்டே போகின்றது. ஜரதுஷ்ட்ரா என்ன கூறினார் என்பதை இப்புத்தகத்தில் 4 அத்தியாயங்களாக விபரிக்கப்பட்டுள்ளன.ஆண்டாடு காலமாகக் கடவுளினால் வரையறுக் கப்பட்டதாகச் சொல்லப்படும் கோட்பாடுகளை முற்றிலுமாகத் தூக்கி எறியும் நீட்ஷே, மக்களின் சுயவிழிப்புணர்ச்சியை சிந்திக்கும் வண்ணமே தனது கருத்துக்களை முன் வைக்கிறார்.
ஜரதுஷ்ட்ரா மலைமீது ஏறும் போதும் சரி இறங்கும் போதும் சரி பல இடஞ்சல்களைச் சந்திக்கிறான். நீட்ஷேயால் சிருஷ்டிக்கப்பட்டவர் தான் இந்த ஜரதுஷ்ட்ரா.ஆனால் நூலை வாசித்துக் கொண்டு போகும் போது அந்த மனிதனுக்குள் நீட்ஷே ஒளிந்திருருப்பது தெரியவருகிறதை அவதானிக்கலாம். பல காலம் தனிமையில் இருந்து தனது ஞானத்தின் வழியாகத் தான் உணர்ந்தவற்றை மக்களுக்குப் போதிப்பதற்காக கிழே இறங்கிவருகிறார்.தத்துவத்திற்கான அறிஞர் என்ற போதிலும் அவரது எழுத்துக்கள் கவிதை வரிகளாகவே இதில் பார்க்க முடிகிறது. பல இடங்களில் நாம் வாசிக்கும் போது முழுமையாக எங்களை ஈடுபடுத்திக் கொண்டால் மட்டுமே நாம் புரிந்து கொள்ள முடியும். யாதெனில், அந்த வரிகளுக்குள் மறைமுகமான பல ஆழமான கருத்துகள் இருப்பதை உணரலாம்.
ஜரதுஷ்ட்ரா மலைக் குகையில் வாழும் போது தனது நண்பர்களாகிய கழுகு, பாம்பு என்பவற்றுடன் கலந்துரையாடுகிறார். இந்தப் பிரபஞ்சமே ஓட்டு மொத்த மக்களின் வாழ்வுக்கு ஓளியாக இருப்பதை எடுத்துரைக்கின்றார். மறைமுகமாக, அரசியல், நிர்வாகம், மக்களின் மந்தமான வாழ்க்கை, இதுபோன்ற இன்னும் பல நிகழ்ச்சிகளை ஜரதுஷ்ட்ரா மூலமாக கடுமையாக விமர்சித்து அதற்கான தீர்வுகளையும் முன்வைப்பது குறிப்பிடத்தக்கது.

மக்களின் வாழ்க்கை முறையை 3 கோணங்களில் உருமாறுவதை பார்க்கிறார் நீட்ஷே. அவை,
  • ஒட்டகம்
  • சிங்கம்
  • குழந்தை
ஆரம்பத்தில் ஒட்டகத்தின் மேல் ஏற்றப்பட்ட பாரங்களைச் சுமக்கிறான் மனிதன். ஒரு காலகட்டத்தில் அவன் எதையும் இழந்தவனாக சிங்கமாக மாறுகிறான். இறுதியில் அவன் குழந்தைபோல் ஆம் என்ற நிலைக்கு வந்து செத்து மடிகிறான். பின்னர் மீண்டும் உயிர்த்தெழுகிறான். இப்படியாக ஒரு சுழற்சி முறையினை ஆழமாகப் பதிக்கிறார் நீட்ஷே.
கிறிஸ்தவமதத்தின் புனித நூலான பைபிளை அவர், இது ஒவ்வொரு கிறிஸ்தவனுக்கு மேலேயும் தொங்கிக்கொண்டிருக்கும் ஒரு அட்டவணை என்றும், அதனை மீறினால் நரகம் தான் என்றும் சொல்லப்பட்டதாக கிண்டல் செய்கிறார். அதிலிருந்து மக்களை வெளியேறாதபடி இறுக்கி வைத்திருப்பதாகவும், மக்களின் கும்பல் மனப்போக்கை உடைத்தெறியவே அதிமனிதன் நிட்சயம் தேவை என்றும் வலியுறுத்திக் கூறுகிறார் நீட்ஷே.
நீட்ஷேயின் மற்றுமொரு மிக முக்கியமான தத்துவக் கருத்தினை இங்கே ஜரதுஷ்ட்ராவின் முலம் பதிவு செய்கிறார். அதுதான் எஜமானிக்கும் அடிமைக்கும் உள்ள வேறுபாடுகளை கடுமையாக கண்டிக்கிறார். இவை ஐரோப்பிய, மேற்கத்திய நாடுகளில் பெருவாரியாகப் பேசப்பட்டது. அவர் நல்லது, தீமை, மனசாட்சி, குற்றம், தண்டனை, வாக்குறுதி போன்ற மையத் தார்மீகக் கருத்துக்களைக் கண்டறிந்தார். ஜரதுஷ்ட்ரா தனது விலங்குகளுடனும், தனது மனசாட்சியுடனும் அடிக்கடி உரையாடுவதை நாம் வாசிக்கும் போது, அதன் அர்த்தங்கள் அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைவது ஆச்சரியப்பட வைக்கும் என்பதில் சந்தேகமில்லை. சிந்தனையின் போது தனித்திருப்பதே சிறந்த தெரிவு என்கிறார் நீட்ஷே. ஒரு கூட்டமாகவோ அல்லது ஒரு குழுவாகவோ சேர்ந்து ஒரு சிறந்த முடிவையும் உன்னால் எடுக்கவே முடியாது என்கிறார். தனிமனித எண்ணங்க ளுக்கும்,தனிமனித தெரிவிக்கும் மிக முக்கியத்தும் வேண்டும்,என்பதில் உறுதியாக இருக்கிறார்.
முக்கிய உள்ளுணர்வின் கட்டுப்பாடற்ற வாழ்க்கையைப் பற்றி நீட்ஷே குறை கூறவில்லை. மாறாக, அவரது வாழ்க்கைக் கருத்து மனித இனத்துடன் தொடர்புடைய ஒரு மாறும் கூறுகளைக் கொண்டுள்ளது. வாழ்க்கை அதன் சக்தியை விரிவுபடுத்துவதற்காக வளர வேண்டும். இது மிக உயர்ந்த வகைகளை செயல்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, மேலும் தனிப்பட்ட மதிப்புமிக்க தனிநபர்கள் என்ற அர்த்தத்தில் மனிதனின் வகையை மனிதநேயமற்றதாக அதிகரிக்க முயற்சிக்கிறது. வேறுபாட்டின் நெறிமுறைகளின் நோக்கம் மிகச்சிறந்த விதிவிலக்கான மனிதர்.
நீட்ஷே பொதுவாக தனிநபர்களின் வரம்பு மற்றும் ஒடுக்குமுறை பற்றி புலம்பவில்லை, ஆனால் உயர்ந்த நபர்களை மட்டுமே. தார்மீக தடைகள் பலவீனமானவர்களை எப்படியும் பாதிக்காது, ஏனென்றால் அவர்களால் செய்ய முடியாத ஒன்று தடைசெய்யப்பட்டுள்ளது.நீங்கள் என்ன செய்ய முடியும் என்பதற்கு மீறாத ஒழுக்கம் ஒரு தடையல்ல. நீட்ஷேயின் தார்மீக தத்துவம் மிகவும் சர்ச்சைக்குரியது, மற்றும் பாதிக்கப்படக்கூடியது என்பது வெளிப்படையானது. துஷ்பிரயோகத்தை அனுமதிக்கும் கருத்துக்கள் மிகவும் வெளிப்படையானவை. இதற்கு எடுத்துக்காட்டுகள் முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர்களின் இராணுவவாதம் ஆகும், இது நீட்ஷேயின் இராணுவ வலிமை பற்றிய புகழ்ச்சி அல்லது தேசிய சோசலிஸ்டுகளால் மனிதநேயமற்ற தவறான விளக்கம்.

நீட்ஷேயின் ஒவ்வொரு வரிகளையும் மிகவும் ரசனையோடு வாசித்ததை நான் உணர்கின்றேன்.காரணம் அந்தளவுக்குக் கவித்துவம் ஓங்கி நிற்கின்றதைப் பார்க்கலாம்.தார்மீக வளர்ச்சியின் வரலாற்று சூழலுக்கு நம் கண்களைத் திறந்த நீட்சேக்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். அவ்வாறு செய்யும்போது, உலகளவில் செல்லுபடியாகும், காலத்தைக் கடந்த ஒழுக்க நெறிமுறைகளை அவ்வளவு எளிதாகக் கண்டுபிடிக்க முடியாது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார்.
ஜரதுஷ்ட்ரா இவ்வாறு கூறினான்.
உண்மை மனிதனின் மன உறுதி அடிமை மகிழ்ச்சியிலிருந்து விடுதலை ஆகி,கடவுளிடமிருந்தும் பிரார்த்தனையில் இருந்தும் மீட்கப்பட்டு, பயமின்றி,பயம் நிறைந்து, மகத்தானதாகவும் தனிமையானதாகவும் இருக்கிறது.
அற்பஎண்ணம் அரிக்கும் புழுவைப் போன்றது. அது நகர்ந்து மறைந்து கொள்கிறது. அது வெளிப்பட விரும்புவதில்லை. அவற்றால் முழு உடலும் மோசம் ஆகி உதிரும் வரை.
மனிதர்களுடன் வாழ்வது சிரமமானது. ஏனெனில் மௌனமாக இருப்பது மிகவும் கடினமானது. உனது நண்பன் ஒரு தவறு செய்ய நேர்ந்தால் சொல் நீ எனக்கு செய்ததை மன்னிக்கிறேன். ஆனால் நீ உனக்கு செய்து கொண்டாய் அதை எவ்வாறு மன்னிக்க முடியும்.
அனைத்திலும் மோசமானது அற்ப எண்ணங்கள். உண்மையில் அற்பத்தனமாக எண்ணுவதை காட்டிலும் போக்கிரித்தனமாக செயல்படுவது சிறந்தது.
நீ உன்னுடன் தனியே இருப்பதை உன்னால் சகித்துக் கொள்ள இயலாது. அத்துடன் நீ போதுமான அளவுக்கு உன்னை நேசிக்கவில்லை. இப்பொழுது உன் அண்டை வீட்டுக்காரனை தவறாக அன்புக்கு வழிகாட்டி அவனது தவறால் உன்னை முலாம் பூசிக்கொள்ள விரும்புகிறாய் .
பழிவாங்கல் உனது ஆத்மாவிற்குள் அமர்ந்திருக்கிறது. நீ அடிக்கும் இடமெல்லாம் ஒரு கருப்பு தழும்பு பரவுகிறது. உன் பழிவாங்கலுடன் உனது நஞ்சு ஆத்மாவை கிறுகிறுக்க வைக்கிறது.
இவ்வாறு நான் உங்களிடம் உருவக் கதைகளாக பேசுகிறேன். சமத்துவத்தின் போதகர்களாகிய நீங்கள் ஆத்மாவை கிறுகிறுக்க வைக்கிறீர்கள். நீங்கள் தெரிந்து கொள் மறைக்கப்பட்ட பழிவாங்கலின் விற்பனை முகவர்கள்.
மூன்று தீய விஷங்களைப் பற்றி ஜரதுஷ்ட்ரா இப்படிக் கூறினார். சிற்றின்பம், அதிகாரத்திற்கான இச்சை, சுயநலம், இவை மூன்றும் மிகவும் சபிக்கப்பட்டுள்ளது. மோசமான மிகவும் நியாயமற்ற இடத்தில் வைக்கப்பட்டுள்ளவை இந்த மூன்றையும் நான் நன்றாகவும் மனிதத் தன்மையாகவும் எடை போடுவேன்.
அனைத்து மக்களின் சமத்துவம் என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்ட நவீன, ஜனநாயக சமூகங்கள் மற்றும் கலாச்சாரங்களில் மக்கள் தங்களைப் பார்க்கும் விதத்தில் நீட்ஷேயின் கருத்துக்கள் பல விஷயங்களில் முரண்படுகின்றன.ஆனால் அவரது தத்துவத்தின் அனைத்து இனவெறி, பாலியல், யூத எதிர்ப்பு மற்றும் ஜனநாயக விரோத கூறுகளை நீங்கள் அகற்றும்போது என்ன இருக்கிறது? ஒருவன் எப்படி ஒழுக்கத்தில் ஈடுபடக்கூடாது என்பதை இவரிடம் இருந்து மட்டும் கற்றுக்கொள்ள முடியுமா? அல்லது நீட்ஷேயின் மீதான தத்துவ அவமதிப்பு நியாயமற்றதா? தார்மீக வளர்ச்சியின் வரலாற்று சூழலுக்கு நம் கண்களைத் திறந்த நீட்ஷேக்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். அவ்வாறு செய்யும்போது, உலகளவில் செல்லுபடியாகும், காலத்தைக் கடந்த ஒழுக்க நெறிமுறைகளை அவ்வளவு எளிதாகக் கண்டுபிடிக்க முடியாது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார்.
நீட்ஷேயின் தத்துவக் கருத்துக்களை நிச்சயமாக உள்வாங்கிக் கொள்வீர்கள் என்ற நம்பிக்கையில்,மிகப் பெரிய விமர்சனத்தை எழுதி உள்ளேன் என்று நினைக்கின்றேன். கண்டிப்பாக எல்லோரும் பொறுமையுடன் வாசிக்க வேண்டிய மிகவும் அருமையான நூல் என்பதனை அன்புடன் கூறிக்கொள்கின்றேன். வாசிப்போம்

@பொன் விஜி - சுவிஸ்.

4 Comments

Post a Comment

Previous Post Next Post