.

கொன்றைக் காட்டில் குரங்குகள் ஏராளமாக இருந்தன. க்ராக்...க்ராக்... என்று குரங்குகளின் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. இதனால் மற்ற விலங்குகளுக்கு நிம்மதி இல்லாமல் போனது.

குரங்குகளே, நிம்மதியாக உணவுகூடச் சாப்பிட முடியவில்லை என்று பிளிறியது யானை. யானையின் பிளிறலைக் கேட்டவுடன் குரங்குகள் அமைதியாயின. ஆனால்,அந்த அமைதி கொஞ்ச நேரம்கூட நீடிக்கவில்லை.

'குரங்குகளை என்ன செய்வது ?' என்று யானைகள் கவலைப்பட்டன. கரடிகள், மான்கள், சிறுத்தைகள் எனப் பலவும் குரங்குகளை எச்சரித்தன. கொஞ்ச நேரம் அமைதியாக இருக்கும் குரங்குகள், பிறகு அட்டகாசம் செய்ய ஆரம்பித்துவிடும்.

விலங்குகள் சிங்கராஜாவைச் சந்தித்தன.

நண்பர்களே, நீங்கள் உங்கள் மகிழ்ச்சியைக் கொண்டாடுவதில் தவறில்லை. ஆனால், மற்றவர்களின் உணர்வுகளை மதிக்காமல் இருப்பது தவறு. சிங்கராஜாவிடம் புகார் அளிக்கச் சென்றிருக்கிறார்கள் என்றது ஒரு வயதான குரங்கு.

அதெல்லாம் சரிதான். நாம் மரத்துக்கு மேலே இருந்துதானே சத்தம் போட்டு விளையாடுகிறோம். இது தவறா? என்று துடுக்குத்தனமாகக் கேட்டது ஒரு குட்டிக் குரங்கு.

ஆமாம். நம் சத்தம் அதிகமாக இருந்தால் அதை எச்சரிக்கை செய்ய வேண்டியது பறவைகள்தான். ஆனால், அவை எதுவும் சொல்வதில்லையே? என்றது மற்றொரு குரங்கு.

நாம் நம் பக்கத்து நியாயத்தை மட்டுமே சொல்லிக் கொண்டிருப்பதில் எந்த நன்மையும் இல்லை. அவர்களின் நியாயத்தையும் கேட்க வேண்டும். அதுதானே சரியான முறை என்றது வயதான குரங்கு.

அப்போது தண்டோரா சத்தம் கேட்டது.

இதனால் சகலமானவருக்கும் தெரிவிப்பது என்னவென்றால், எல்லா விலங்குகளும் குரங்குகள் மீது புகார் கொடுத்துள்ளன. எல்லோரும் குகை மேட்டுக்கு மாலையில் வந்து சேரணும். இது அரசரின் உத்தரவு...

நான் பயந்தபடியே ஆகிவிட்டது. தண்டோரா போடும் அளவுக்கு நாம் அட்ட காசம் செய்திருக்கிறோம் என்று வருந்தியது வயதான குரங்கு.

தாத்தா, நீங்க எதுக்கும் கவலைப் படாமல் இருங்க. சிங்கராஜாவிடம் நாங்க பேசிக்கிறோம் என்றது ஒரு வாலிபக் குரங்கு.

நான் சொல்ல வேண்டியதைச் சொல்லி விட்டேன். இனி உங்க விருப்பம் என்றது வயதான குரங்கு.

அனைத்து விலங்குகளும் மாலை நேரம் சிங்கராஜாவின் குகை மேட்டுக்கு வந்தன.

மிகப் பெரிய கர்ஜனையுடன் மலைக் குன்றின் மீது கம்பீரமாக வந்து அமர்ந்தது சிங்கராஜா.



என் அழைப்பை ஏற்று இங்கு வந்ததற்கு நன்றி. இன்றைய சிக்கலுக்கு வருவோம்.குரங்குகளே, உங்கள் மகிழ்ச்சிக்காக மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளாமல், மதிக்காமல் இருப்பது தவறுதானே? என்றது சிங்கராஜா.

குரங்குகள் தங்கள் தரப்பு நியாயத்தைக் கூறின. மற்ற விலங்குகள் அவர்கள் தரப்பு ஆதங்கத்தை வெளியிட்டன.

சரி. நீங்கள் மட்டுமே இந்தக் காட்டில் வாழ்வதாக நினைத்துக்கொண்டு அட்டகாசம் செய்வது தவறு. அதை நீங்கள் ஒப்புக்கொள்ளாதது அதைவிடப் பெருந்தவறு. அதனால் நீங்கள் வசிக்கும் அந்த மூங்கில் காட்டில் இனி எந்த விலங்கும் உள்ளே வராது. நீங்களும் அதைத் தாண்டி வெளியே வரக் கூடாது. அந்தக் காட்டுக்கு நீங்களே ராஜா என்றது சிங்கராஜா.

ஓ என்று மகிழ்ச்சியில் குரங்குகள் கத்தின.

அமைதி. நான் இன்னும் முழுவதுமாகச் சொல்லி முடிக்கவில்லை. அந்த மூங்கில் காடு மூன்று மாதம் வரை உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும். உங்கள் தவறைப் புரிந்துகொண்டு, சரியாக நடந்து கொண்டால் முன்பு போல காட்டில் எங்கு வேண்டுமானாலும் தங்கலாம். இல்லை என்றால் அந்த மூங்கில் காட்டைத் தாண்டி வரக்கூடாது. சம்மதமா?

சம்மதம்... சம்மதம்... என்று மகிழ்ச்சியில் கத்தின குரங்குகள்.

சரி. எல்லோரும் கிளம்பலாம் என்று சொல்லிவிட்டு, குகையை நோக்கிச் சென்றது சிங்கராஜா.

மூங்கில் காட்டில் ஒரு வாரம் குரங்குகளின் ஆரவாரம்தான். ஆஹா! நமக்கென்று ஒரு காடு. குரங்குகளே இந்தக் காட்டுக்கு ராஜா என்று சொல்லிச் சொல்லி மகிழ்ந்தன.

நண்பர்களே, நீங்கள் நினைப்பது தவறு.எல்லோரும் இணைந்து வாழ்வதுதான் சிறந்த வாழ்க்கை. நாம் இப்போது தண்டனையை ஏற்றுக் கொண்டிருக்கிறோம். இது உங்களுக்குப் புரியவில்லையா? என்று வருந்தியது வயதான குரங்கு.

அட, தாத்தா பேச்சை விடுங்கப்பா! நாம மகிழ்ச்சியைக் கொண்டாடலாம் வாங்கப்பா என்றது ஓர் இளைய குரங்கு.

குரங்குகளின் மகிழ்ச்சி ஒரு வாரம்கூட நீடிக்கவில்லை. மூங்கிலின் உராய்வால் காடு தீப்பற்றி எரிய ஆரம்பித்தது.

குரங்குகளுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. அருகில் குளம் இருந்தும்,போதுமான தண்ணீரைக் கொண்டுவந்து அணைக்க முடியவில்லை.

நாம் இத்தனை பேர் இருந்தும் தீயை அணைக்க முடியவில்லையே என்று வருந்தின.

நாம் இப்படியே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தால் இந்த மூங்கில் காடு அழிந்துவிடும். வாங்க சிங்கராஜாவிடம் மன்னிப்பு கேட்டு, தீயை அணைக்க ஏற்பாடு செய்யலாம் என்றது வயதான குரங்கு.

ஆமாம், அதுதான் சரியான முடிவு.இல்லை என்றால் தீயில் நாம் பலியாகிவி டுவோம் என்றது ஒரு குரங்கு.

அனைத்துக் குரங்குகளும் சிங்கராஜாவைச் சந்தித்தன.

உடனே சிங்கராஜா யானைப் படைகளை அனுப்பியது.

யானைகள் குளத்து நீரை உறிஞ்சி, தீயை அணைக்கும் பணியில் இறங்கின. இரண்டு மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு தீ அணைக்கப்பட்டது.

உங்கள் உதவி இல்லை என்றால் எங்கள் இனமும், மூங்கில் காடும் அழிந்துப் போயிருக்கும். அனைவருக்கும் நன்றி.இனி எங்களுக்குத் தனிக் காடு வேண்டாம். நாங்களும் உங்களுடன் இணைந்து வாழவே விரும்புகிறோம் என்றன குரங்குகள். தவறை உணர்ந்துவிட்டீர்கள். இனி எல்லோரும் ஒற்றுமையாகவே வாழலாம் என்றது சிங்கராஜா



Post a Comment

Previous Post Next Post