.

பிரையன் சக்ஸ் எழுதிய ஏவாளின் ஏழு மகள்கள் என்ற புத்தகமானது ஒரு DNA வரலாற்று ஆராய்ச்சிப் புத்தகமாகும்.மரபணுவியலால் எமக்கு அறியப்பட்ட இவ்வுலகின் வரலாற்றைப் பற்றியதே ஏவாளின் ஏழு மகள்கள் புத்தகமாகும். மானுட வரலாற்றை இடப்பெயர்வை இன்று சம்பந்தமில்லாத கூட்டங்கள் என்று தோன்றக் கூடிய மக்கள் பரப்புக்களிற்கிடையேயான உறவினை எடுத்து விளக்கும் புதிய அறிவுப் பாலமாக விளங்குகிறது ஏவாளின் ஏழு மகள்கள். தாயின் கொடி வழியில் ஆய்வு செய்து மனித குலத்தில் வரலாற்றை நிறுவுகிறது ஏவாளின் ஏழு மகள்கள் புத்தகம்.ஆனாலும் இந்தப் புத்தகமானது ஐரோப்பிய மக்கள் கூட்டத்தையே ஆய்வு செய்கிறது.ஆசிய ஆபிரிக்க சமூகங்களைப் பற்றி இந் நூல் பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சில இடங்களில் அலுப்புத் தட்டினாலும் வாசிக்க வாசிக்க மெதுவாகவே நகர்கிறது இப் புத்தகம்.சுவாரஸ்யம் சில இடங்களில் அத்தியாயங்களில் அறவே இல்லை என்பது வாசகர்களிற்கு ஏற்புடையதாக இல்லாமல் இருக்கலாம்.

எப்போதுமே கடந்த காலத்தை திரும்பிப் பார்ப்பது ஆர்வமூட்டுவதாய் இருக்கிறது.இதில் பழங்கதைகள் சுவாரஸ்யமானவை.அதிலும் மனிதப் பரிணாமத்தின் அறிவியல் சார்ந்த கதைகள் மேலும் பிரமிப்பைத் தருவதோடு சில மர்ம முடிச்சுக்களையும் மேலும் பல புதிய கேள்விகளையும் வெளிக் கொணர்கிறது.இந்த நூல் அம் மர்ம முடிச்சுக்களை மரபணு ஆய்வின் மூலம் அவிழ்க்கிறது.அதாவது சுமார் எழுபதாயிரம் ஆண்டுகளில் நடைபெற்ற மனிதப் பரிணாம வளர்ச்சியை ஒரு கதையைப் போல சொல்லிப் போகிறது ஏவாளின் ஏழு மகள்கள்.

ஏழு உலகம்,ஏழு கடல்,ஏழு சப்த கன்னிகள் எனும் பண்டைய போக்கில் ஏவாளின் ஏழு மகள்கள் ஒரு கூடுதல் புனைவாக இங்கே தரப்பட்டுள்ளது.முதல் பெண்ணைக் காட்டிலும் ஏழாவது பெண்ணிடம் நம்மை இணைத்துப் பார்க்க முடிகிறது.அறிவு,ஆற்றல்,கற்பனை,புதியதைத் தேடுவது போன்ற அடிப்படை மனிதன செயல்பாடு எப்படியாக கடந்த ஒன்றரை இலட்சம் வருடங்களில் எம்மை தற்போதுள்ள இடத்திற்கு கொண்டு வந்து சேர்த்துள்ளது என்பதை இந் நூலின் மூலமாக ஆழமாக அறிய முடிகிறது.


ஒரு அகழாய்வு எப்படி நிகழ்கிறது,ஒரு தொல்லியல் பொருளின் காலமறிதல், அதனிலும் மேலாக ஒரு உயிர்பொருளான ஓர் எலும்புத் துண்டு,தலைமயிர் போன்றவற்றிலிருந்து மரபணுக்களைப் பிரித்தறிதல்,பிற தற்கால உயிரின ங்களுடன் மனிதரையும் சேர்த்து உறவுத் தொடர்பறிதல் ஆகிய பல அம்சங்களை எமக்குச் சொல்லித் தருகிறார் சைக்ஸ் ஒரு வரலாற்று ஆய்வாளருக்கு ஆர்வலருக்கு இந் நூல் நிறைய சொல்லித் தருகிறது.இன்னும் குறிப்பாக மரபணு ஆராய்ச்சி நிகழ்வதெப்படி அதன் சவால்கள்,விஞ்ஞான செயல்முறைகள்,அதன் சவால்கள், எல்லாவ ற்றிற்கும் மேலாக ஓர் ஆய்வுப் பணியின் மையத் தரவுகளை எப்படியெல்லாம் புரிந்து கொள்ள முயல வேண்டும் அல்லது ஓர் இரண்டாம் நிலைத் தகவல் அல்லது தரவை வைத்துக் கொண்டு மையத் தரவை எவ்வாறு யூகிப்பது எல்லா வற்றையும் விட விஞ்ஞான ஆராய்ச்சியின் ஒரு யூகத்தின் வரையறைகளும் எல்லைகளும் என்ன என்பதையெல்லாம் இக்கதையின் வழியல் எம்முடன் பகிர்கிறார் சைக்ஸ்.

முதன் முதலில் ஆய்வகமொன்றில் சொந்த இரத்தத்திலிருந்து குரோமோ சோம்களைப் பிரித்தெடுத்து நுணுக்குக்காட்டியினூடாகப் பார்க்கும் போது எவ்வளவு பரவசமாயிருக்கும் என்பதை ஒவ்வொரு விஞ்ஞானியும் சில வேளைகளில் முதுகலை மாணவர்களும் அறிவார்கள்.அதே போல ஒவவொரு அறிவியல் ஆய்வாளரும் தொல்லியல் அறிஞர்களும் இந் நூலின் மூலம் அந்தப் பரவசத்தை அடையப் பெறுவார்கள் என்பது உறுதி.அப்படியாக கதை வடிவில் இந் நூல் வழங்கப்பட்டுள்ளது.சாதாரண தமிழ் வாசகர்களுக்கும் ஆர்வமூட்டும் வழதமாக இத் தொல்லியல் சார்ந்த மரபணு மனிதப் பரிணாமம் பேசப்படுகிறது.

விஞ்ஞானக் கலைச் சொற்கள் முதன் மறையாகக் குறிப்பிடப்படும் போதே விளக்கமளிக்கப்பட்டுள்ளது.பிற சொற்கள் புத்தகத்தின் இறுதியில் கொடுக்கப் பட்டுள்ளன.தேவைப்படும் போது ஆங்கிலத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளன.இந் நூலை வாசித்து முடிக்கையில் ஒவ்வொரு உயிரினமும் தனித்தனியானதல்ல, அனைத்தும் ஒன்றனுள் ஒன்றாகப் பிரிக்க முடியாதபடிக்கு பின்னிப் பிணைந் துள்ளது என்பதை உணர முடிவது இந் நுலிக்கான ஒரு வெற்றி என்றே சொல்லலாம்.நீங்களும் அதனை வாசித்து முடிக்கும் போது உணர்வீர்கள் என்றே எதிர்பார்க்கிறேன்.மனிதர்களும் விலங்குகளும் பிற அனைத்து உயிர்களும் தனிப்பட்டவர்கள் அல்ல,மாறாக ஒன்றோடொன்று தொடர்புடைய மகத்தானதொரு உயிரியல் கலவை என்பதை இந்நூல் ஆழமாக உணர்த்துகிறது.எல்லாக் காலங்களிலும் ஒன்றரை இலட்சம் மனிதப் பரிணாமத்தில் தொக்கி நிற்பது மனித இனத்தின் தீராத தேடல்தான்.சந்தர்ப்ப சூழ்நிலைகள் மனித இனத்தை தள்ளுவது ஒரு புறமிருந்தாலும் எந்த சூழ் நிலைக்கும் அப்பாற்பட்டு மனித மனம் எதையோ தேடிக் கொண்டே இருக் கிறது ஒரு புதிய நிலத்தை ஒரு புதிய கருவியை ஒரு புதிய கதையை என எப்போதும் ஒன்றைச் சமைக்க உருவாக்க மனம் அலாவுறுகிறது. இதற்கப்பால் என்ன என்பது போல.அதிலிருந்தே மீண்டும் மீண்டும் புதியவை, மனித குலத்திற்கு வாய்க்க கிடைக்கிறன.இனியும் இது தொடரத்தான் போகிறது.

ஒரு மரபணுவிற்குள் தனிப்பட்ட வரலாறுகள் மட்டுமல்ல நம் மனித இனத்தின் ஒட்டு மொத்த வரலாறுமே எழுதப்பட்டுள்ளது.சமீபத்திய விஞ்ஞான வளர்ச்சியில் மரபணு நுட்பவியலின் மூலம் அவ் வரலாறு தற்போது எமக்கு வெளிப்பட்டுள்ளது.ஒரு வழியாக எமது கடந்த காலத்தின் செய்திகளை நாம் கண்டறிய தொடங்கியுள்ளோம்.எமது DNA என்பது பதப்படுத்தப்பட்ட தோலில் வரையப்பட்ட பழைய எழுத்துக்களைப் போல் காலத்தால் அழிந்து போகக் கூடியதல்ல.நீண்ட காலத்திற்கு முன் இறந்து பொன ஒரு போர் வீரனின் மண்ணில் புதைக்கப்பட்ட வாளைப் போல அது துருப்பிடிக்காது.காற்றாலும் மழையாலும் அது அரித்துப் போகாது.நெருப்பாலும் நில நடுக்காத்தாலும் அது சிதைந்து போகாது.அது முற் காலத்தின் நிலப் பகுதியிலிருந்து நம்மனைவ ரினுள்ளும் வாழ்ந்து வரும் பயணி.

Homo Sapiens எனும் மனித இனத்தின் வரலாறு எவ்வாறு எமது மரபணுக்களில் பதிந்து வைக்கப்பட்டுள்ளது என்பதை அதன் தடங்களைப் பின் தொடர்வதன் மூலம் நம்மின் அதி முற்காலத்தை எழுதப்பட்ட வரலாற்றுச் சான்றுகளையும் கல் வரைவுகள் தாண்டியும் அறிய முடிகிறது.அம் மரபணுக்கள் ஒரு இலட்சம் ஆண்டுகளிற்கு முன்பிருந்தே அதன் சமீபத்திய அத்தியாயங்கள் வரையில் கலங்கள் ஒவ்வொன்றிலும் கவனமாகப் பொதிந்து வைத்துள்ள கதையை எமக்குச் சொல்கின்றன.

ஒரு மரபணு ஆய்வுக் கூடத்தில் உண்மையில் என்ன நடைபெறுகிறது என்பதை இந்தப் புத்தகத்தில் நீங்கள் உணர்வீர்கள்.வாழ்வின் பிற பகுதிகளைப் போலவே  இங்கும் ஏற்ற இறக்கங்கள் நாயக வில்லன் பாத்திரங்களும் நிகழும்.

மொத்தத்தில் ஏவாளின் ஏழு மகள்கள் புத்தகமானது ஒரு ஆதி ஆபிரிக்கத் தாயான ஏவாள் வழி வந்த ஏழு மரபணு சகோதரிகளின் பரம்பரைகள் பல்வேறு கண்டங்கள் நாடுகள் தேசங்கள் மொழிகள் என கிளை பிரிந்து வாழும் வரலாற்றை DNA யின் உதவியுடன் எமக்குச் சொல்கிறது.வரலாற்று ஆர்வலர்கள் விஞ்ஞானிகள் மட்டுமன்றி யாவரும் வாசித்து மனித குல வரலாற்றைத் தெரிந்து கொள்ள உதவும் ஒரு அறிவியல் புத்தகமாகும். வாசிப்போம்.

ஏவாளின் ஏழு மகள்கள் புத்தகத்தினை வாசிப்பதற்கு கீழுள்ள இணைப்பினை அழுத்தவும்.


You have to wait 30 seconds.

Generating Download Link...

2 Comments

Post a Comment

Previous Post Next Post