மிகெய்ல் நைமி எழுதிய மிர்தாதின் புத்தகம் என்னும் நூலானது ஒரு ஆன்மிகப் புத்தகமாகும்.ஆன்மீக ரீதியில் ஈர்க்கப்பட்டுள்ளவர்களிற்கு இப்புத்தகம் தீனி போடுவதாக அமையக்கூடும்.அவ்வளவு ஆன்மீக விடயங்கள் இப்புத்தகத்திலே கொட்டிக் கிடக்கிறன.நம்புவதற்கு கடினமாயினும் வாசிக்க நன்றாக இருந்தது என்று சொன்னால் மிகையில்லை.ஆனாலும் இந்தப் புத்தகமானது எனக்கு அவ்வளவு சுவாரஸ்யமளிக்கவில்லை இடையிலேயே அலுப்புத் தட்டுகிறது. விறு விறு மொழிநடையில் சொல்வதற்கு இப்புத்தகம் நாவல் அல்லத்தான். ஆனாலும் நாவல் பாணியில் கதை சொல்ல முற்பட்டிருக்கிறார் நைமி. நிகழ் காலத்தோடு ஒட்டாமல் பயணிக்கும் மிர்தாதின் புத்தகம் ஒரு கட்டத்திற்கு மேல் வாசிப்பைச் சோதனைக்குள்ளாக்குகிறது.
எந்தப் படைப்பாளியாவது தமது படைப்பு படிக்க முடியாதது என்று பயமுறுத்துவரா என்று கேட்டால் இல்லை என்றுதான் பதில் சொல்லலாம். ஆனால் அப்படி பயமுறுத்துகிறார் மிகெய்ல் நைமி அவ்வாறு பயமுறுத் துவதற்கு எதுவும் இல்லை என்பதே யதார்த்தம்.ஒரு வேளை ஞான நாட்டம் உள்ளவர்கள் இந்த நூலை வாசித்தால் இது அவர்களிற்குப் பிரயோசனம் உள்ளதாக அமையும். அது அவர்கள் வாசிக்கும் கடைசிப் புத்தகமாகக் கூட அமையலாம்.ஏனெனில் திரும்பத் திரும்ப இதனையே வாசிக்க வேண்டி வரலாம் என எச்சரிக்கை கொடுக்கப்படுகிறது.ஒருமுறை வாசிக்கவே எனக்கு போதும் போதும் என்று ஆகிவிட்டது.
தம்மால் வெளிப்படுத்த முடியாததை வெளிப்படுத்த இலட்சக்கணக்கான எழுத்தாளர்கள் முயற்சி செய்து பார்த்திருக்கிறார்கள்.ஆனால் அவர்க ளொல்லாம் படுதோல்விதான் அடைந்திருக்கிறார்கள்.அந்த முயற்சியில் தோற்றுப் போகாத ஒரே படைப்பு மிர்தாதின் புத்தகம் தான் இதன் சாரத் தை நீங்கள் உணர்ந்து கொள்ளவில்லையென்றால் அது உங்கள் தோல்வி தானே தவிர அவர் தோல்வியன்று என்று இந்தப் புத்தகத்தை விமர்சிக்கிறார் ஓசோ. இந்த விமர்சனம் தான் அதிகப் பேரை வாசிக்கத் தூண்டியது.என்னையும் சேர்த்து.எனக்கென்னவோ அவர் சொல்வது போல் எதுவும் தென்படவில்லை. ஆன்மிக ஞானம் இல்லையோ என்னவோ.
மனிதனுக்குள் கிடக்கும் இருள்மையை உள்ளுணர்வில் கரைத்து ஒருமைப்படுத்தி அவனுக்குள் இருக்கும் தெய்வீகத்தை அவனுக்குத் திரை நீக்கிக் காட்டும் சுயதரிசனத்திற்கான தூண்டுதல்தான் மிர்தாதின் புத்தகமா கும்.இருள்மையை நீக்க விரும்புகிறவர்களிற்கு இப் புத்தகம் பயன் பெறலாம்.
ஒருவகையில் மிர்தாதின் புத்தகம் ஒரு புதினம்தான்.தத்துவார்த்த புதினம். பொறுமையைச் சோதிக்கும் புதினம்.முதல் மூன்று அத்தியாயங்களும் எளிய மொழி நடையில் சுவாரஸ்யமாகச் சொல்லப்பட்டுள்ளன.இதன் பிறகுதான் தத்துவ தரிசனம்.அதற்கான பக்குவப்படுத்தலே முதல் மூன்று அத்தியா யங்கள்.
சில வாக்கியங்கள் மின்வெட்டுக்களைப் போல மனதைக் கவர்கிறன. அவையாவன ''அன்பே வாழ்வின் சாறு,வெறுப்பு மரணத்தின் சீழ்'',''சிறந்த பேச்சு,ஒரு நேர்மையான பொய்,மோசமான மௌனம் ஒரு நிர்வாணமான உண்மை'',''எந்த வாளாலும் காயப்படுத்த முடியாத சுதந்திரக் காற்றைப் போல் திகழுங்கள்''போன்ற வாசகங்கள் நைமியின் எழுத்துக்களில் பதிந்திருக்கும் தெளிவை சாகசத்தை விபரிக்கிறன.
இந்தப் புத்தகத்தின் பின் புலத்தைக் கவனித்தால் இளைஞன் ஒருவன் பல்லாயிரம் அடி உயரமுள்ள செங்குத்தான மலை மீது ஏற முடிவு செய்கிறான்.அடிவாரத்து ஊர் மக்கள் சுட்டிக் காட்டிய பாதையைப் புறக்கணித்து விட்டு செங்குத்து வழியில் ஏற முற்படுகிறான் அவன்.
ஓர் ஊன்றுகோலையும், ஏழு ரொட்டித் துண்டுகளையும் எடுத்துக் கொண்டு அவன் புறப்படுகிறான். அவன் படும்பாடு கொஞ்ச நஞ்சமல்ல. போகப்போக மலை நெட்டுக் குத்தாகவும்,கரடுமுரடானதாகவும், குத்துப்பாறைகள், கற்கள் நிரம்பியதாகவும் அமைந்து விடுகிறது.
அவனுடைய கைகால்களில் காயம்பட்டு இரத்தம் வடிய,முழந்தாழிட்டும், கைகளால் ஊர்ந்தும், மூச்சுத் திணறியபடி அவன் விடாப்பிடியாக மலையேறி ஒரு குகையை அடைகிறான்.
அவனது அந்தக் கடினமான முயற்சியின் நோக்கமே,வெள்ளப் பெருக்கின் இறுதியில், உலகமெல்லாம் மூழ்கிவிட்ட பிறகு, நோவாவின் கப்பல் கரையொதுங்கிய இடத்தைக் காண வேண்டும் என்பதுதான். அது, அராரத் மலைமேல் உள்ள பலிபீடச் சிகரத்தில், பாழடைந்த ஒரு மடாலய வடிவில் இருந்தது.
மலையேற்றத்தின்போது, பல அதிசய நிகழ்ச்சிகள் நடக்கின்றன.கடைசியில் அவன் மூர்ச்சை அடைந்து ஒரு குகை வாயிலில் சாய்ந்துவிடுகிறான். ஒரு வயதான துறவி அவனுடைய மயக்கத்தைத் தெளிவித்து அவனைக் காப்பாற்றுகிறார். அவர், அவனுக்காக, நூற்றைம்பது ஆண்டுகளாகக் காத்திருந்ததாகக் கூறுகிறார்.அவனிடம் அவர் ஒரு புத்தகத்தைக் கொடுக்கிறார்; பிறகு கல்லாகிப் போகிறார்!
அவர் கொடுத்ததுதான், 'மிர்தாதின் புத்தகம்.'
அதைக் கொடுத்துவிட்டுக் கல்லாகிப் போனவர் பெயர் சமாதம்.நோவாவின் புதல்வன் சேம் என்பவனால் உருவாக்கப்பட்டது அந்த மடாலயம். பல நூற்றாண்டுகளாக இருந்து வந்த அந்த மடாலயத்தின் மூத்த துறவியாக, நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன் இருந்தவர் சமாதம்.
மடாலயத்தில் ஒன்பதுபேர் மட்டுமே வாழ்ந்து வரவேண்டும் என்பது நோவாவின் கட்டளை. ஒருவர் இறந்துவிட்டால், அதை நிறைவு செய்ய, இறைவன் தகுந்த ஆளை அனுப்பி வைப்பான் என்பது நம்பிக்கை.
அப்படி ஒருவர் இறந்துவிட்டபோது, மிர்தாத் அங்கே வந்து கதவைத் தட்டுகிறார். அவரது கந்தலணிந்த பிச்சைக்காரத் தோற்றத்தைக் கண்டு வெறுப்படைந்த மூத்த துறவி சமாதம்,அவரை விரட்டுகிறார். மிர்தாத் பிடிவாதமாகக் கெஞ்சவே ஒரு வேலைக்காரனாகவே உள்ளே அனுமதிக்கிறார் எல்லாப் பணிகளையும் மிர்தாத் செய்து வருகிறார். சமாதம் அவரைத் தொடர்ந்து அவமானப்படுத்தி வருகிறார். மிர்தாத் மௌன விரதம் பூண்கிறார்.
ஏழு ஆண்டுகள் உருண்டோடி விடுகின்றன.
இறைவன் அனுப்பிய ஆள் வரவேயில்லை.
அதனால், மிர்தாதை ஒன்பதாவது துறவியாக ஏற்றுக் கொள்கிறார்கள்.
மிர்தாத் அதன் பிறகு, மடாலயத்தில் பெரிய மாற்றங்களைக் கொண்டு வருகிறார். எல்லா நிலபுலன்களையும், செல்வங்களையும், மலையோர மக்களுக்குப் பகிர்ந்து கொடுத்துவிடுகிறார்.
மூத்த துறவி சமாதம் கொதித்துப் போகிறார்.
மடாலயத் துறவிகளுக்குள் குழப்பம் ஏற்படுகின்றது. இந்தச் சூழலில், மிர்தாத் மௌனம் கலைத்துப் பேச ஆரம்பிக்கிறார்.
அவரது பேச்சையும், முழு நிகழ்வுகளையும் இளம் துறவி நரோண்டா பதிவு செய்கிறார்.
அந்தப் பதிவேடுதான், 'மிர்தாதின் புத்தகம்.'
முன்னுரைபோல் அமைந்துள்ள, மூன்று அத்தியாயக் கதைக்குப் பிறகுதான், 'மிர்தாதின் புத்தகம்' ஆரம்பமாகிறது.
இந்தக் கதையின் ஆரம்ப ஆதாரமான நோவா என்பவர் யார்?
திருவிவிலியத்தின் பழைய ஏற்பாட்டில், ஆதியாகமத்தின் ஆறு,ஏழாம் பகுதிகளில் ஆதி வெள்ளப் பெருக்கு பற்றியும், நோவா பற்றியும் கூறப்பட்டுள்ளது.இந்தப் பூமியின் ஆதிமனிதர்களில் மிக நீண்ட காலம் உயிர் வாழ்ந்தவன் 'மெத்துசேலா' என்பவன்தான். (ஆதாம்கூட 930 ஆண்டுகள்தான் வாழ்ந்தான்.) மெத்துசேலா 969 ஆண்டுகள் உயிர் வாழ்ந்த மனிதன்! பெர்னாட்ஷா, 'மெத்துசேலாவுக்குத் திரும்ப' என்று ஓர் அருமையான நாடகம் எழுதியிருக்கிறார்.
இந்த மெத்துசேலாவின் பேரன்தான் நோவா. நோவாவின் காலத்திற்குள்ளாகவே உலகம் கெட்டுச் சீரழிந்துபோயிற்று. ஆகவே, அந்தச் சீர்கெட்ட மனித குலத்தை அழித்து, புதியதோர் உலகம் படைக்க இறைவன் விரும்புகிறான்.
நோவா மிகவும் நல்லவர். 'தம் காலத்தவருள் நோவா நேர்மையானவராகவும், குற்றமற்றவராகவும் இருந்தார். நோவா கடவுளோடு நடந்தார்,' என்று விவிலியம் குறிப்பிடுகிறது. (ஆதரி இறைவன், நோவாவிடம் தம் விருப்பத்தைச் சொல்லி, ஒரு யோசனை தெரிவிக்க, அதன்படி, நோவா ஒரு பெரிய மூன்றடுக்குப் பெட்டியைச் செய்கிறார்.
கோபர் மரத்தால் செய்யப்பட்ட அந்தப் பேழை மூன்றடுக்குகள் கொண்டதாகவும், 300 முழ நீளம், 50 முழ அகலம், 30 முழ உயரம் கொண்டதாகவும் அமைகிறது.
உலகிற்குத் தேவையான பறவை, விலங்குகளில் தேர்ந்தெடுத்த 15 சோடிகள் (ஆணும் பெண்ணுமாக) ஓர் அடுக்கில், தனித்தனி அறைகளில் விடப்பட்டன. இன்னோர் அடுக்கில், விலங்கு பறவைகளுக்கும், நோவாவின் குடும்பத்தார்க்கும் தேவையான உணவுப் பொருள்கள் நிரப்பப்பட்டன. மேல் அடுக்கில், நோவாவும், அவர் மனைவியும், மக்கள் சேம், காம், எப்பேத்து என்ற மூவரும்,இவர்களின் மனைவியர் மூவரும் தங்கிக் கொண்டனர். இவர்கள் எட்டுப் பேரும், பறவை விலங்குகள் முப்பதும் சேர்ந்து, அந்தப் பேழையில் 38 உயிர்கள் இருந்தன.
இறைவன் முன்பு சொன்னபடி 40 நாள்கள் பெருமழை பெய்வித்தான். இது, நோவாவின் 600 ஆம் வயதின், 2 ஆம் மாதத்தின் 17 ஆம் நாளில் ஏற்பட்டது. நாற்பது இரவு பகல்கள் இடைவிடாமல் பெய்த பெருமழையில் உலகம் அழிந்தது. நோவாவின் பேழை மட்டும் நீரில் மிதந்தது.150 நாள்கள் மிதந்து சென்றபின், 150வது நாள் மாலை அந்தப் பேழையான கப்பல் அராரத் மலை உச்சியில் சென்று தங்கியது.
பின்னர்தான் வெள்ளம் வடிந்து பழைய பூமி வெளிப்பட்டது.அங்கே நோவா தம் குடும்பத்தாருடன் 350 ஆண்டுகள் வாழ்ந்தார்.அவருடைய யோசனைப் படித்தான் அவரது புதல்வன் சேம் அங்கே ஒரு மடாலயம் அமைத்தான். அங்கே நிகழ்ந்தவைதாம்.'மிர்தாதின் புத்தகம்'
இது, பூர்வ கதையின் பின்னணிதானே தவிர, மிர்தாதின் சிந்தனைகளுக்கும் விவிலியத்திற்கும் நெருக்கமான தொடர்பில்லை.மிர்தாத், அல்லது அவர் குரலாகப் பேசும் மிகெய்ல் நைமி மதப்பிரச்சாரகர் அல்லர். சுதந்தரமான சுய சிந்தனையாளராகவே அவர் வெளிப்படுகிறார்.
மிர்தாதின் புத்தகம் தெளிவான தொடக்கமும் முடிவும் கொண்டது.ஞானப் பாதையில் குறுக்கிடும் பிரச்சனைகளை படிப்படியாக விளக்கி,மேலெடுத்துச் சென்று சரியான இடத்தில் முடித்து நிறைவு செய்திருக்கிறார்.தான் சார்ந்தி ருக்கும் சமயக் கோட்பாட்டிற்கு முரணாக இருந்தாலும் சரி நியாயம் இதுதான் என்பதை தெளிவாகவும் திடமாகவும் சொல்கிறார் நைமி. பொருளாதார ஏற்றத்தாழ்வுக்கான காரணங்களை மார்க்சைப் போல் கூறுகிறார்.
மொத்தத்தில் மிர்தாதின் புத்தகமானது ஆன்மிகத்தில் ஊறியவர்களிற்கும் ஆன்மீக நாட்டம் கொண்டவர்களிற்கும் மிகவும் ஏற்ற புத்தகமாகும். நடுநிலையாளர்களிற்கு இப்புத்தகம் பொறுமையைச் சோதிக்கக் கூடும். வாசிப்போம்.
மிர்தாதின் புத்தகத்தினை வாசிக்க கீழுள்ள இணைப்பை அழுத்தவும்.
Post a Comment