.

ஒருமுறை புத்தபிரானின் சீடர்கள் இருவருக்குள் வாக்குவாதம். அதைக் கவனித்த புத்தர், அவர்களை அருகில் அழைத்து விசாரித்தார். அவர்கள் இரு வருமே, 'தன்னால்தான் புத்த விஹாரப் பணிகள் செம்மையாக நடைபெ றுகின்றன' என்று வாதிட்டனர். அவர்களிடம் காலியான பானை ஒன்றைக் கொண்டு வருமாறு பணித்தார் புத்தர். சீடர்களும் பானையைக் கொண்டு வந்தனர்.அதில் தண்ணீர் ஊற்றி நிரப்பும்படி கூறினார் புத்தர். அதன்படி, சீடர்கள் இருவரும் தண்ணீரைக் கொண்டு வந்து பானையில் ஊற்றினர். பானை தண்ணீரால் நிரம்பியது. இதைக் கண்ட புத்தர்,'இப்போது சொல்லுங்கள்....உங்கள் இருவரில், யார் ஊற்றிய நீரால் இந்தப் பானை நிரம்பியது?'

இந்தக் கேள்வியே சீடர்களுக்கு உண்மையை உணர்த்த, அவர்கள் தங்களின் தவறை  உணர்ந்து மன்னிப்பு வேண்டினர். உடனே புத்தர், 'இதைப் போலத்தான் இந்த விஹாரத்தின் பணிகளில் அனைவரது உழைப்பும் உள்ளது' என்றார் புன்னகையுடன்!

தற்போதைய சூழலில் குடும்பம்,பணியிடம் என எல்லா இடங்களிலும் இதேபோன்றதொரு பிரச்னை இருக்கிறது; ஜூனியர் சீனியர்களுக்கு இடையேயான பிரச்னை! ஜூனியர்களைக் குறித்து 'என் அனுபவம் இவர்களின் வயது' என்ற சீனியர்களின் மனோபாவம்; 'Update இல்லாத மனுஷன்’என்று சீனியர்கள் குறித்த ஜூனியர்களின் மனோபாவம்... இருதரப்புமே தங்களின் மனோபாவத்தை மாற்றிக் கொள்வது அவசியம்.

அநபாயச் சோழ மன்னனுக்கு (இரண்டாம் குலோத்துங்கன்) ஒரு சந்தேகம் ஏற்பட்டது. அதுகுறித்த மூன்று கேள்விகளை அமைச்சரிடம் முன் வைத்த மன்னன், ஒருநாள் அவகாசம் எடுத்துக்கொண்டு உரிய விளக்கம் தரும்படி பணித்தான். 'மலையினும் பெரியது எது? உலகினும் பெரியது எது ? கடலினும் பெரியது எது ?'இவைதான் மன்னனின் கேள்விகள். பதில் தெரியாத நிலையில் முகவாட்டத்துடன் வீடு திரும்பினார் அமைச்சர்.அவரின் நிலையைக் கவனித்த மகன்,காரணத்தை விசாரித்தறிந்தான்.

தந்தை கேள்விகளைச் சொன்னதும் ஓலை நறுக்கெடுத்து விறுவிறுவென பதில்களை எழுதிக்கொடுத்தான்.அதைப் படித்ததும் அமைச்சரின் முகம் மலர்ந்தது. விரைந்து சென்று மன்னனிடம் கொடுக்க, அவரும் மகிழ்ந்தார். இந்தப் பதில் அமைச்சரின் மகன் கொடுத்தது என்பதை அறிந்து வியந்த மன்னர், அவனை அவைக்கு அழைத்துப் பாராட்டி 'உத்தம சோழப் பல்லவன்' எனும் பட்டத்தையும் வழங்கிச் சிறப்பித்தார்.

அரசனை வியக்கவைத்த அமைச்சரின் மகனே பிற்காலத்தில் தொண்டர்களின் பெருமையைப் பெரியபுராணமாகப் பாடிய சேக்கிழார் ஆவார்.அது சரி... அவர் அளித்த பதில்களை அறிவது அவசியம் அல்லவா?மலையை விடப் பெரியது:நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம் மலையினும் மாணப் பெரிது. உலகைவிடப் பெரியது: காலத்தி னாற் செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது. கடலைவிடப் பெரியது: பயன் தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் நன்மை கடலிற் பெரிது. ஆமாம்! தான் படித்த திருக்குறள்களையே தந்தைக்குஎழுதிக் கொடுத்தார் சேக்கிழார்.

நம் வீட்டிலும் பணியிடத்திலும் சேக்கிழார்கள் இருக்கிறார்கள். உலகைப் புரிந்துவைத்திருக்கும் பாணி, Technology update முதலான அனைத்திலும் அவர்கள் தகப்பன் சாமிகளாகத் திகழ்பவர்கள். மூத்தவர்களும் சீனியர்களும் கற்றுக்கொள்ளும் பாங்குடன் அவர்களை அணுகும்போது வெற்றி எளிதில் வசமாகும். வயதில் சிறியவர் என்றோ,அனுபவம் குறைந்தவர் என்றோ அவர்களை எடைபோடக்கூடாது.

அரசர் ஒருவருக்கு திடீரென்று ஒரு நாள், தன் பட்டத்து யானை எவ்வளவு எடை இருக்கும் என்று அறிய ஆவல் ஏற்பட்டது. அந்தக் காலத்தில் எடைமேடைகள் எல்லாம் இல்லை;யானையை அளக்கும் அளவுக்குப் பெரிய தராசும் கிடையாது 'யானையின் எடையை எப்படி அறிவது ?'என்று அமைச்சர்களிடம் கேட்டார் மன்னர். யாருக்கும் அதற்கான வழி தெரியவில்லை. அப்போது அமைச்சர் ஒருவரின் பத்து வயது மகன், 'நான் இதன் எடையைச் சரியாகக் கணித்துச் சொல்கிறேன்' என்றான்.

அனைவரும் சிரித்தனர். ஆனால்,அவனுக்கும் ஒரு வாய்ப்பு கொடுத்தார் மன்னர்.அந்தச் சிறுவன், யானையை நதிக்கு அழைத்துச் சென்றான்.அங்கே இருந்த மிகப் பெரிய படகில் யானையை ஏற்றினான். யானை ஏறியதும், தண்ணீரில் சற்று ஆழ்ந்தது படகு. உடனே அவன், தண்ணீர் நனைத்த மட்டத்தைப் படகில் குறியிட்டான்.பிறகு, யானையைப் படகிலிருந்து இறக்கி, பெரிய பெரிய கற்களைப் படகில் ஏற்றச் சொன்னான். முன்பு குறித்து வைத்திருந்த அளவுக்குப் படகு தண்ணீரில் மூழ்கும் வரை, கற்கள் ஏற்றப்பட்டன. பின்பு, அரசரிடம் அந்தக் கற்களைக் காட்டி, 'அவற்றின் எடை தான் அந்த யானையின் எடை' என்றான். அனைவரும் வியந்தனர். அவனது புத்திசாலித்தனத்தைப் போற்றிப் புகழ்ந்தனர். எல்லோரும் யானையை ஒட்டுமொத்த உருவமாக மட்டுமே பார்த்ததால், அவர்களால் அதன் எடையைக் கணிக்க முடியும் எனும் நம்பிக்கை வரவில்லை. ஆனால், சிறுவனோ, பல எடைகளின் கூட்டுத் தொகையே யானையின் எடை என்று எண்ணிச் செயல்பட்டதால் எளிதில் விடை கண்டான்.

எவ்வளவு பெரிய செயலாக இருந்தாலும், அதைச் சின்னச் சின்ன செயல் களாகப் பிரித்துக்கொள்ளவேண்டும்.பிறகு, அந்த ஒவ்வொரு செயலையும், செவ்வனே செய்து முடிக்கவேண்டும்.அப்போது, ஒட்டுமொத்தத் திட்டமும் அழகாக நிறைவேறிவிடும்.இதற்கு இளையோரின் ஒத்துழைப்பும் சாமர்த் தியமும் மிக அவசியம்!

நம்மில் பலர் பழம்பெருமை பேசிக்கொண்டிருப்பார்கள். முற்கால சாதனைகளைச் சொல்லியே காலம் கழிப்பார்கள். இவர்களுக்கு புதுமைக்குள் புகுவது சிரமமாகவே இருக்கும்.ராஜா ஒருவர் விருந்துக்கு ஏற்பாடு செய் திருந்தார்.அதில் கலந்துகொள்ள ஆசைப்பட்டான் வறியவன் ஒருவன்.ஆனால், தான் இருக்கும் கோலத்தைப் பார்த்தால் உள்ளே அனுமதிக்க மாட்டார்கள் என அறிந்தவன்,சந்தர்ப்பவசமாக கோயிலுக்கு வந்த ராஜாவை அணுகி ஒரு வேண்டுதலை முன்வைக்க முயன்றான். காவலர்கள் தடுத்தார்கள். அவர்களை விலக்கி வறியவனை அருகில் அழைத்து விவரம் கேட்டார் ராஜா. “நீங்கள் அளிக்கும் விருந்தில் கலந்துகொள்ள ஆசை.ஆனால், என்னிடம் அலங்கார உடை எதுவும் இல்லை. உங்களது பழைய ஆடையை அளித்து உதவினால், அதனை அணிந்துகொண்டு விருந்துக்கு வருவேன் என்றான் மிகவும் பவ்யமாக.அந்த ராஜா இரக்கம் மிகுந்தவர். அவனுக்கு ராஜ உடை ஒன்றை வழங்கினார்.

வறியவன் மகிழ்ந்தான். ராஜாவுக்கு நன்றிகூறிவிட்டு, ஆடையை எடுத்து வந்து அணிந்து கொண்டான். அதே நேரம், 'ஒருவேளை ராஜ உடை கிழிந்து விட்டால், அப்போது நமக்கு இந்தப் பழைய உடைகள் தேவைப்படும்' என யோசித்தவன், தன் பழைய உடைகளை எடுத்து வைத்துக்கொண்டான்.

வீடு வாசல் இல்லாத அவனால்,பழைய துணியை எங்கேயும் வைக்க முடியவில்லை. பழைய ஆடையையும் சிறு மூட்டையாக சுமந்தே திரிந்தான். அன்றைய விருந்தை மட்டுமல்ல ஒட்டுமொத்த வாழ்வையும் அவனால் ரசிக்க முடியாமல் போனது என்கிறது கதை. 'அனுபவம் அதிகம்'எனும் ஆதிக்க உணர்வு, பழம் பெருமை பீற்றுவது, பழங்கதை பேசுவது போன்றவையும் வறியவனின் கந்தல் துணி மூட்டையைப் போன்றதுதான்.சீனியர்கள் என்ற பெயரில் அவற்றைச் சுமந்துகொண்டிருந்தால், வாழ்க்கை கசந்துபோகும்.

இளையோரும் ஒரு விஷயத்தை நினைவில்கொள்ள வேண்டும்...மூத்தோரின் அனுபவங்களைவிட சிறந்த பாடங்கள் வேறு இல்லை. அனுப்வித்த பிறகு தவறுகளைக் களைவதைக் காட்டிலும் அனுபவங்களைக் கேட்டு நடந்து, தவறுகள் நிகழாவண்ணம் பார்த்துக் கொள்வது சிறப்பல்லவா?

நுண்ணறிவுத் தேர்வு ஒன்றில் கேட்கப்பட்ட கேள்வி:'ஒரு கோப்பை நீர், கடலைக் காட்டிலும் பெரிதாகும் எப்படி?' பதில் எழுத இயலாமல் விட்டுவிட்ட இளைஞன், தாத்தாவிடம் விவரத்தைப் பகிர, சட்டென்று பதில் கிடைத்தது, 'மிகுந்த கருணையுடனும்,தூய உள்ளத்துடனும் வயதான பெற்றோருக்கோ, நோயாளிக்கோ கொடுக்கப்படும் ஒரு கோப்பை நீர், கடலைக்காட்டிலும் பெரியது.இங்ஙனம், அறம் சார்ந்த அனுபவப் படிப்பினைகள் மூத்தோரிடம் இருந்தே நிறைய கிடைக்கும்!








Post a Comment

Previous Post Next Post