.

கடனை அதிகரிப்பதை விட பசியுடன் படுக்கைக்கு செல்வது சிறந்தது என அமெரிக்க விஞ்ஞானியும் அரசியல் தத்துவவியலாளருமான பெஞ்சமின் பிராங்கிளின் இற்றைக்கு சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் பொன் எழுத்தில் பதிக்க வேண்டிய கருத்தொன்றை கூறிவிட்டுச் சென்றிருந்தார்.

கடன் எனும் போது ஒருவரது வாழ்வை திரைமறைவிலிருந்து மெல்ல மெல்ல சின்னாபின்னமாக்கும் கொடிய செயன்முறையாக பொதுவாக விமர்சிக்க ப்படுகின்ற போதும், அதன் உண்மையான தார்ப்பரியம் அதற்கு மாறானதாகும்.

கடனை ஒரு கூர்மையான கத்திக்கு ஒப்பிடலாம். உண்பதற்காக பழத்தை வெட்டுவதற்கு ஒரு கத்தியை பயன்படுத்தும் அதே சமயம் படுகொலைக்கும் ஒரு ஆயுதமாக உபயோகிக்கலாம்.அதைப் போன்றதே கடன் என்பதுவும். அதனை சரியான முறையில் பயன்படுத்தினால் அது வாழ்வை முன்னேற்றப் பாதைக்கு இட்டுச் செல்லும் ஆதார சக்தியாக அமையும் அதேசமயம் அதனைத் தவறாகப் பயன்படுத்தினால் வாழ்வை நிர்மூலமாக்கி நடுத் தெருவில் நிற்க வைத்து விடும் அபாயம் மிக்கது.

நாடளாவிய ரீதியான வருமானத்தை ஈட்டித் தரும் அபிவிருத்தித் திட்டங்கள், விவசாயம் மற்றும் தொழிற்றுறைகளிலான முதலீடுகளுக்கும் தனிநபர் ரீதியில் தொழில் முயற்சிகள்,கல்வி, முதலீடுகள், எதிர்காலத்தில் பெறுமதி கூடும் வாய்ப்புள்ள வீட்டு நிர்மாணம் என்பனவற்றுக்கும் பெறப்படும் கடன்கள் நாட்டிற்கும் மக்களுக்கும் அனுகூல பெறுபேறுகளைத் தந்து சுபீட்சத்திற்கு வித்திடக்கூடியவையாகும்.

தொழில் முயற்சி ரீதியில் வாகனத்தை வாங்குவது கடன் அடிப்படையில் ஆதாயம் தருவதாக அமையும் அதே சமயம், மற்றவர்கள் முன்பாக ஆடம்பர வாழ்க்கை வாழ வேண்டும் என்பதற்காக கடனைப் பெற்று வாகனமொன்றை வாங்குவது அந்தக் கடன் பொறிக்குள் சிக்கும் அபாயத்தைத் தோற்றுவிக்கிறது.

இன்றைய நவீன இயந்திரமயமான உலகில் மக்களின் அடிப்படைத் தேவை களுக்கு அப்பால் அனைத்து வசதியையும் உள்ளடக்கிய வீடு, சொகுசு வாகனம்,ஸ்மார்ட் தொலைக்காட்சிகள், ஐபோன் கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் விஞ்ஞான மூன்னேற்றத்தின் விளைவாக நாளுக்கு நாள் சந்தைகளில் அறிமுகமாகி வரும் நவீன உபகரணங்கள் என விரிவாக்கம் அடைந்து வருகின்றன.


நவீன உலக மாற்றத்திற்கு ஏற்ப மனிதன் தனது வசதிகளைப் பெருக்கி தனது வாழ்க்கையை இலகுபடுத்திக்கொள்ள முயற்சிப்பது தவறான ஒன்றல்ல. ஆனால் அந்த வசதிகளை தனது சொந்த வருமானத்தில் அல்லாது கடன் அடிப்படையில் நிறைவேற்றிக் கொள்ள முயற்சிக்கும் போது தான் பிரச்சினை தலைதூக்குகிறது.

கடன் வழங்கும் நாடுகள் கடனுக்கு கிடைக்கும் வட்டி மற்றும் கடன் பெறும் நாட்டை கடன் பொறிக்குள் சிக்க வைத்து அடிபணிய வைத்து தமது காரியத்தை சாதித்துக் கொள்ளும் தந்திரோபாயம் என்பவற்றின் நிமித்தம் கடன் தேவையுள்ள நாடுகளுக்கு கடன் வழங்க ஆர்வம் காட்டி வரும் அதேசமயம் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களும் வட்டிக்கு கடன் வழங்கும் தனிநபர்களும் தமது வருமான நோக்கமாகவுள்ள வட்டி இலக்கை எட்ட கடன் வாங்க மக்களை ஊக்குவித்து வருவதுண்டு.

அத்துடன் தற்போது வங்கிகளாலும் நிதி நிறுவனங்களாலும் அறிமுகப்படுத் தப்பட்டு வரும் கடன் அட்டைகள் பணம் இல்லாத சமயத்தில் குறிப்பிட்ட தொகைப் பணத்தைப் பெற்று அன்றாட தேவைப்பாடுகளை பூர்த்தி செய்ய உதவுவதால் மக்கள் மத்தியில் பிரபலம் பெற்று விளங்குகின்றன. இந்தக் கடன் அட்டைகள் மக்களை செலவு செய்யத் தூண்டி அவர்களது எதிர்கால கடன்சுமையை அதிகரிக்கிறது. பல சமயங்களில் இந்தக் கடன் அட்டைகள் வருமானத்திற்கு அதிகமான செலவுகளுக்கு வழிவகை செய்கின்றன.

கடன் கொடுக்கும், வாங்கும் செயன்முறையானது இன்றோ அல்லது நேற்றோ தோன்றிய ஒன்றல்ல. இன்றைய நவீன பொருளாதார வரலாற்றுடன் இணைந் ததாக பொதுவாகக் கருதப்படும் கடன் செயற்கிரமமானது கிறிஸ்துவுக்கு வருவதற்கு முன்னர் 3500 ஆண்டுகள் வரை நீடித்த வரலாற்றைக் கொண்டதாகும்.

பணம் புழக்கத்திற்கு முன்னர் பண்டமாற்று முறைமை உரிய கட்டுக்கோப்பை அடைவதற்கு முன்னரே கடன் செயற்கிரமம் குடும்ப மற்றும் சமூக மட்டத்தில் தோற்றமெடுத்து அதன் ஒரு அங்கமாக மாறியிருந்தது எனலாம்.அக்கால கட்டத்தில் குறிப்பிட்ட சமூகத்திற்குள் வரையறைக்குட்பட்ட கடனை திருப்பிச் செலுத்துவது என்பது சமூக மட்டத்தில் விட்டுக்கொடுப்புடன் கூடிய நெகிழ்ச்சிப் போக்குடன் காணப்பட்டது.சில சமயங்களில் அந்தக் கடன்கள் வேறு வகையான பொருட்கள் மற்றும் சேவைகளாகத் திருப்பிச் செலுத்தப்பட்டு ஈடு செய்யப்பட்டன.

ஆனால் குறிப்பிட்ட ஒருவர் வாழும் சமூக மட்டத்திலும் அதற்கு வெளியிலும் பெறப்படும் பாரிய அளவான கடன்களை திருப்பிச் செலுத்த முடியாத நிலை ஏற்படும் போது கடன் வாங்கியவரும் அவரது சந்ததியினரும் கடன் கொடுத்தவருக்கு அடிமையாகி தமது சுதந்திரத்தை இழந்து துன்பப்பட்ட நேர்ந்தது.

உலகளாவிய ரீதியான அடிமை முறைமையின் தோற்றத்திற்கு இந்தக் கடன் செயற்கிரமம் முக்கிய காரணியாக அமைந்துள்ளதற்கு கடந்த கால உலக வரலாற்றுப் பதிவுகள் சான்று பகர்கின்றன.

பண்டைய காலத்தில் மட்டுமல்லாது இன்றைய காலத்திலும் வாங்கிய கடனைக் கொடுக்க முடியாத நிலையில் கடன் கொடுத்தவருக்கு அடிமையாக வாழும் நிலைக்கு கடன் வாங்கியவர் தள்ளப்படும் அவலம் வளர்முக நாடுகளில் மட்டுமல்லாது அபிவிருத்தியடைந்த நாடுகளிலும் ஆங்காங்கே இடம்பெற்று வருகிறது.


இன்றைய உலக நாடுகளைப் பொறுத்தவரை கொவிட் 19 கொரோனா வைரஸ்
தொற்றையொட்டி அமுல்படுத்தப்பட்ட முடக்கநிலை, உக்ரேன் மீது ரஷ்யா மேற் கொண்டுள்ள படையெடுப்பால் தோற்றமெடுத்துள்ள நெருக்கடி மற்றும் வெள்ளம், வறட்சி, புயல் போன்ற இயற்கை அனர்த்தங்கள் என்பன காரண மாக ஏதோ ஒரு வகையில் பொருளாதார நெருக்கடியொன்றை எதிர் கொண்டுள்ளன. இதனால் பல நாடுகள் மேலும் கடன் வாங்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள் தள்ளப்பட்டதுடன் கடன் வழங்கும் நாடுகள் கடன் வழங்க முடியாத நிலையை எதிர்கொண்டுள்ளன.

இன்று இலங்கை எதிர்கொண்டிருக்கும் அந்நியச் செலாவணிப் பற்றாக்குறை யுடன் இணைந்ததாக விஸ்வரூபமெடுத்துள்ள பொருளாதார நெருக்கடியானது
நாட்டில் வாழும் சாதாரண மக்களில் படுமோசமான தாக்கத்தைச் செலுத்தி அவர்களை வாழ வழி தெரியாது அல்லாட வைத்துள்ளது.

வரவுக்கு தகுந்ததாக செலவுகளை மட்டுப்படுத்தாவிட்டால் கடனில் மூழ்கி வாழ்க்கையே நரகமாக நேரிடும் என காலம் காலமாக விடுக்கப்பட்டு வந்த எச்
சரிக்கைக்கு இலங்கை ஒரு முன்னுதாரணமாக தற்போது மாறியுள்ளமை விசனத்திற்குரியதாக உள்ளது.

இலங்கையின் தீர்மானம் எடுக்கும் அதிகாரத்திலுள்ள மேல்மட்ட அரசியல் வாதிகளும் அதிகாரிகளும் எதிர்காலம் தொடர்பான தொலைநோக்கின்றி பிற நாடுகள் நிபந்தனைகளின் அடிப்படையில் வழங்கும் கடனை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு முன்னெடுத்த அபிவிருத்தி திட்டங்கள் இன்று நாட்டை மீள முடியாத கடன் சுமைக்குள் தள்ளியுள்ளது.

வெளிநாடுகள் மனிதாபிமான அடிப்படையிலும் உள்நோக்கத்துடனும் வழங்கும் கடன்களை இலங்கை வாஞ்சையுடன் ஏற்றுக் கொண்டு வந்த காலத்தில் இந்தக் கடன்கள் இலங்கையின் எதிர்கால சந்ததியினர் மீது கடும் அழுத்தத்தைப் பிரயோகிக்கும் சுமையாக மாறும் என பொருளியல் நிபுணர்கள் எச்சரித்து வந்தனர்.

எனினும் எதிர்கால நிலைமையை பின்னர் பார்த்துக் கொள்ளலாம். நிகழ்காலத்தில் கிடைப்பதை அனுபவிப்போம் என்ற பாமரத்தனமான சிந்தனையுடன் முன்னெடுக்கப்பட்ட திட்டங்கள் இன்றைய இலங்கையின் அவல நிலைக்குக் காரணம் என்பதை மறுக்க முடியாது.

உலகளாவிய ரீதியிலான பொருளாதார நெருக்கடி  இலங்கையை மட்டுமல்லாது இலங்கைக்கு கடனுதவி வழங்கும் நாடுகளையும் பாதித்துள்ளமை காரணமாக பல தலைமுறைகள் கடந்து எதிர்கால சந்ததியினர் எதிர்கொள்ள நேரிடும் என எதிர்வுகூறப்பட்ட கடன் நெருக்கடி முன்கூட்டியே அரங்கேறி அதன் பிரதிகூல விளைவுகளை நிகழ்கால சமுதாயம் அனுபவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஒரு நாட்டிற்கு வீதிகள், பாலங்கள்,மற்றும் ஏனைய பொது வசதிகள் உள்ளடங்கலான உட்கட்டமைப்பு வசதிகளிலான அபிவிருத்தி நிலை கட்டாய தேவைப்பாடாகவுள்ள போதும் நாட்டின் பொருளாதார நிலைமை, கடனை மீளச் செலுத்தக் கூடிய இயலுமை, கடன் சுமைக்கு எதிராக அந்தக் கடனால் பெறப்படக்கூடிய அனுகூலம் என்பன தொடர்பில் மதிப்பிடாது மனம் போன போக்கில் திட்டமிடாது கடனை வாங்கி செலவிடுவது இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ளதையொத்த திவாலான நிலைக்கே வித்திடும் என்பதில் சந்தேகமில்லை.

உலக வர்த்தக போக்குவரத்துப் பாதையில் முக்கிய கேந்திர ஸ்தானத்தில் இருக்கும் இலங்கை மீதான தமது ஆதிக்கத்தை வலுப்படுத்துவது தொடர்பில் அமெரிக்கா, சீனா, இந்தியா உள்ளடங்கலாக உலக நாடுகள் மத்தியில் கடும் போட்டி நிலவுகிறது.

இலங்கையிலான பொருளாதார நெருக்கடி, அரசியல் ஸ்திரத்தன்மையற்ற நிலை என்பவற்றை தமக்கு சாதகமாகப் பயன்படுத்தி கவர்ச்சிகரமான கடன்களை முன் வைத்து இலங்கைக்கு வலைவிரிக்கும் நாடுகள் நாட்டை கடன் சுமைக்குள் மீள முடியாது தள்ளி தமக்கு அடிபணிய வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.இதன் பயனாக இலங்கை மக்களுக்கு காலம் காலமாக உரித்தான பிரதேசங்கள் வெளிநாட்டு அதிகார வரம்பின் கீழ் வரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அதற்குப் பிரதான உதாரணமாக இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத் திட்டம் உள்ளது. மேற்படி திட்டத்திற்கு சீன வங்கிகளிடமிருந்து கடனைப் பெறுவதற்கு சீன அரசாங்கம் இலங்கைக்கு ஆசை வார்த்தைகளைக் கூறி தூண்டியிருந்தது.ஆனால் அந்தத் துறைமுகத் திட்டம் வர்த்தக ரீதியான வெற்றியைத் தராத நிலையில் சீனா, இலங்கை அரசாங்கத்தை சீன நிறு வனமொன்றுக்கு அடிபணிந்து அதற்குக் கட்டுப்பட நிர்ப்பந்தித்துள்ளது.

இலங்கை தனது வெளிநாட்டுக் கடன்களில் ஐந்திலொரு பங்கை சீனாவிடமிருந்தே பெற்றுள்ளது.இதன் பிரகாரம் 2021 ஆம் ஆண்டு இறுதிக்குள் நாடு சுமார் 7.4 பில்லியன் டொலர் பெறுமதியான தொகையை சீன கடன் வழங்குநர்களிடமிருந்து பெற்றுள்ளது.

உலகின் முன்னணி முதலீட்டாளராக விளங்கும் அமெரிக்க வர்த்தக ஜாம்பவானான வரென் பவெட் கடன் தொடர்பில் குறிப்பிடுகையில், ஆரம்பத்தில் மிகவும் இலேசானதாகத் தோன்றும் கடன் வாங்கும் பழக்கத்தின் பாதிப்பானது அது பாரிய சுமையாக அழுத்தி சிதைக்கும் வரை  உணரப்ப டமாட்டாது எனக் கூறுகிறார்.

இலங்கை அரசாங்கத்தின் தலைமைத்துவ நிலையிலுள்ளவர்களால் உரிய நிபு ணர்களதும் புத்திஜீவிகளதும் வழிகாட்டல்களைப் பெறாது தான் தோன்றி த்தனமாக மேற்கொள்ளப்பட்ட தீர்க்கதரிசனமற்ற பொருளாதார நகர்வுகள், அரசாங்கத்தின் பல்வேறு மட்டங்களிலும் மலிந்துள்ள ஊழல்கள் மற்றும் சுயநல இலாபநோக்க காய்நகர்த்தல்கள் என்பன இன்று இலங்கையை மீள முடியாத கடன் சுமையொன்றுக்குள் சிக்கித் திணற வைத்துள்ளது.

உள்நாட்டு உற்பத்தி வருமானத்துடன் ஒப்பிடுகையில் பெறும் கடனின் விகி தாசாரம் அதிகமாக இருக்கும் போது அது பொருளாதாரத்தை மோசமாக பாதிக்கிறது.இலங்கையைப் பொறுத்தவரை கொவிட் 19 கொரோனா வைரஸ் மற்றும் சர்வதேச ரீதியான பொருளாதார நெருக்கடி தலை தூக்குவதற்கு முன்னர் 2013 ஆம் ஆண்டளவிலேயே உள்நாட்டு உற்பத்தியுடன் ஒப்பிடுகையில் படுகடனின் அளவு மித மிஞ்சிக் காணப்படும் நிலை அவதானிக்கப்பட்டுள்ளது.

மேலும் அபிவிருத்தித் திட்டங்களுக்காக பெறும் கடன்கள் அந்தக் கடன்களைக் கையாளும் அதிகாரத்தைக் கொண்ட மத்திய வங்கி மற்றும் ஏனைய அதிகார மட்டங்களிலான ஊழல்களால் உரிய முறையில் பயன்படுத்தப்படாமல் மோசடி செய்யப்பட்ட சந்தர்ப்பங்கள் நிலைமையை மோசமாக்குவதாக அமைந்தன.

இந்நிலையில் அரசாங்க மட்டத்தில் கடனை மீளச் செலுத்த முடியாத நிலையால் புதிய கடனைப் பெறமுடியாது பணத்தை புதிதாக அச்சிடும் நடவ டிக்கை முன்னெடுக்கப்பட்டதால் ஏற்பட்ட பாரிய பணவீக்கத்தால் நாளாந்தம் கட்டுப்பாடின்றி உயர்ந்து வரும் பொருட்களின் விலைகளுக்கு ஏற்ப ஊதிய உயர்வின்மையால் அன்றாட வாழ்க்கையை நடத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்ட சாதாரண மக்கள் தமது செலவுகளை சமாளிக்க கடனை ஒரு வழிமுறையாக நாட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.அதிலும் கடன் வாங்குவதை பெருமளவுக்குத் தவிர்த்து வருமானத்திற்கு ஏற்ப செலவு செய்துவந்தவர்களும் தற்போது கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட் டுள்ளமை துர்ப்பாக்கியமானது.


ஒரு நாடோ அன்றி தனிபநரோ வருமானத்தைத் திட்டமிடுவதிலும் பெற்ற கடனை எவ்வாறு செலவிடுவது எனத் திட்டமிடுவது முக்கியத்துவம் மிக்கதாக உள்ளது. கடன் பொறிக்குள் சிக்க வைத்து ஆதாயம் தேட முற்படும் நாடுகள், நிறுவனங்கள் மற்றும் நபர்களின் சுயநல நோக்கம் நிறைவேறாது தடுப்பது கடன் பெறும் நாடுகள் மற்றும் தனிநபர்களின் கைகளிலேயே தங்கியுள்ளது.

திட்டமிடாத கடன்களால் திவாலாகிய நிறுவனங்கள் ஏராளம். உலகமெங்கும் கடன் சுமையால் ஏற்பட்ட அவமானம் மற்றும் கடும் மன அழுத்தம் காரணமாக
குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் கடந்த கால மற்றும் நிகழ்கால வரலாறுகளில் கறுப்புப் புள்ளிகளாக இடம்பிடித்துள்ளன. பெற்ற கடன்களை திட்டமிட்டு உரிய முறையில் கையாளத் தவறியதால் இன்று
முழு இலங்கையும் திவாலாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

கடனுக்கான தவணைப் பணத்தை கட்டத் தவறும் போது அந்தக் கடனுக்கான வட்டியையும் உள்ளடக்கிய தொகைக்கு வட்டியை நிர்ணயிக்கும் வட்டி முறைமையானது ஒருவரை மீள முடியாத கடன்பொறிக்குள் சிக்க வைக்கக் கூடியதாகும். அத்துடன் கடனுக்காக வட்டி செலுத்துவதற்காக மேலும் கடன் வாங்குவது கடன் என்ற விஷச் சுழலில் மூழ்கடிக்கக் கூடியதாகும்.

கடனொன்றைப் பெறும் போது அதனால் பெறப்படக் கூடிய வருமானம், கடனை தவணை முறையில் வட்டியுடன் செலுத்துவதற்குள்ள இயலுமை, கடன்
செலுத்துவதற்கான காலத் தவணையின் ஏற்புடைமை என்பன குறித்துக் கவனம் செலுத்துவது அவசியமாகும்.எதிர்காலத்தில் பெறமுடியும் கருதப்பட்ட நிச்சயமற்ற வருமானத்தை நம்பி அத்தியாவசியமற்ற ஆடம்பர தேவைகளுக்காக அநாவசியமாக கடன் பெறுவதை இயன்றவரை தவிர்ப்பது சிறந்ததாகும்.கடன் பெறுவது தவிர்க்க முடியாத நிலையில் பெற்ற சரியான முறையில் பயன்படுத்தி அதனை எதிர்கால சுபீட்சத்திற்கான வரமாக மாற்றிக் கொள்வதற்கு திட்டமிட்டு கடனை முன்னெடுப்பது அவசியமாகும்.






Post a Comment

Previous Post Next Post