.

ஆண்,பெண் வேறுபாடின்றி காலை கண் விழிப்பது முதல் இரவு தூங்கப்போகும் வரை முகம் கழுவ ஒரு கிரீம், முகம் கழுவிய பின் தடவிக் கொள்ள ஒரு கிரீம்,குளிக்க -உடம்புக்கு ஒருகிரீம், முகத்துக்கு வேறு ஒரு கிரீம், கை, கால் சரும அழகைப் பாதுகாத்து அவற்றை மிருதுவாக்க மற்றொரு கிரீம் அல்லது லோஷன்,மூக்கு, கண்கள்,உதடு என்று எல்லா உறுப்புகளுக்கும் தனித்தனி கிரீம்கள் அல்லது லோஷன்கள் எனப் பயன்படுத்துகின்றனர். உச்சி முதல் உள்ளங்கால் வரை தேய்த்துக் கொள்ள ஆயிரமாயிரம் கிரீம்களும், லோஷன்களும், சவர்க்காரங்களுமாக தினம் தினம் இப்படி அமிலங்களிலும், காரங்களிலும் மூழ்கிக் கொண்டிருக்கின்றார்கள்.

மாதம் தோறும் வாங்கும் பலசரக்கு சாமான்களோடு பல வண்ணச் சாயங்களும், செயற்கை நிறமூட்டிகளும்,செயற்கை வாசனைத் திரவி யங்களும் சேர்ந்து விட்டன.செயற்கை நிறமூட்டிகள் மூலம் முகத்தை வெள்ளை அடித்து, உதட்டிற்கு சிவப்பு நிறமடித்து, இமைக்கு கறுப்பு நிறமடித்து வீட்டிற்கு வர்ணம் பூசுவது போல ஒவ்வொரு பாகத்திற்கும் வர்ணம் அடிக்கும் இளைய தலைமுறையினர் சராசரியாக 515 இரசாயன நச்சுக்களை உடலில் ஏற்றிக் கொள்கின்றனர் என்ற ஆய்வுத் தகவல் 'ஆயுளை முடிக்கும்' தகவலாகவே அச்சுறுத்துகின்றது.

நம் சமூகத்தில் வெள்ளைத் தோலுக்கு உள்ள மரியாதை,வரவேற்பு மாநிறத்தவர்களுக்கு இல்லை என்பதே உண்மை.'கறுப்பாக இருந்தாலும் களையாக இருந்தால் போதும்' என்ற பெருந்தன்மை மாறி 'வெள்ளையாக இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்' என்றளவுக்கு நம் சமூகம் வெள்ளைத் தோலுக்கு அடிமையாகி விட்டது, விளைவு?வெள்ளை அழகுக்கு உத்தரவாதம் தருவதாக விளம்பரப்படுத்தப்படும் அத்தனை அழகு கிரீம்களையும் நோக்கிய மக்களின் படையெடுப்பு.

முகம் பொலிவுடன் இருக்க வேண்டும் என்பது ஒவ்வொரு பெண்ணும் ஆசைப்படும் விஷயம்.தங்கள் முகம் மாசு மருவின்றி அழகாக வெள்ளையாக பளிங்கு போல மினுங்க வேண்டும் என்பது தான் இவர்களின் விருப்பம்.தங்கள் முகம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை விட வெள்ளையாக இருக்க வேண்டும் என்றே பலரும் ஆசைப்படுகின்றனர்.இந்த ஆசையை மேலும் தூண்டி தங்கள் வியாபாரத்தை பெருக்கி கொள்ளவே முகப்பொலிவு கிரீம் (fairness cream) தயாரிப்பாளர்கள் தங்களது தயாரிப்புகளை போட்டி போட்டு விளம்பரப்படுத்தி விற்பனை செய்து வருகின்றனர்.




தோலை வெள்ளையாக்கும் கிரீம்கள் நிஜமாகவே நம் சருமத்தை வெள்ளையாக்குகின்றதா என்றால் இல்லை என்பதே உண்மை.நம் சருமத்தில் இருக்கும் மெலனின்(Melanin) என்னும் நிறமி தான் நம் தோலுக்கு நிறத்தை கொடுக்கிறது.வெயிலில் நம் தோல் கறுத்து போவதற்கு முக்கிய காரணம் இந்த மெலனின் தான்.மெலனின் அளவு அதிகரிக்கும் போது தோல் கறுத்து போகும்.மெலனின் அளவு குறைவாக இருக்கும் போது தோல் வெளுப்பாக தெரியும். வெள்ளையாக்கும் கிரீம்கள் நம் தோலில் இருக்கும் தைரோ சினேஸை (Tyrosinase ) தடுத்து மெலனினை அதிகரிக்க செய்கிறது.இவ்வாறு தைரோசினேஸை தடுப்பதற்காக கிரீம்களில் ஹைட்ரோகுவினோன் எனும் இரசாயனப் பொருள் சேர்க்கப்படும். இவற்றோடு சேர்க்கப்பட்டிருக்கும் சன் ஸ்க்ரீன் லோஷன், புற ஊதா கதிர்களை தடுத்து நிறுத்தி விடுகிறது.இதனால் நம் தோலின் நிறம் இந்த முகப்பொலிவு கிரீம்களால் சிறிது அதிகரித்தது போன்ற தோற்றத்தை தருகிறது.நாம் இந்த முகப்பொலிவு கிரீம்களை உபயோகம் செய்வதை நிறுத்தி விடும் போது நம் சருமம் திரும்பவும் பழைய நிறத்துக்கு திரும்புகிறது.இதனால் எம்மால் அந்த கிரீம்களை விட முடியாத நிலை ஏற்படுகிறது.இதுதான் அந்த தயாரிப்புகளின் விற்பனை யுக்தியும் கூட.



ஏற்கனவே பாரம்பரியமான இயற்கை விவசாயப் பொருள்களை இழந்து, இரசாயன பூச்சிக்கொல்லி கலந்த உணவுகளை உண்டு வரும் நிலையில், நமது வெளிப்புறத் தோலுக்கும் இரசாயனத்தை உணவாக கொடுத்து வரு கிறோம்.கண் புருவ மை, தலைக்குப்போடும் ஷாம்பூ முகப்பூச்சு, நகப்பூச்சு, வியர்வை தடுப்பான்கள், முகத்தில் போடும் நிறமேற்றிகள் எல்லாமே அலுமினியம், பாதரசம், காரீயம், ப்ளூரிட், சிலிகான், எதில் அல்கஹோல், பாரபின், ப்ரோபிளின்க்ளிக்கோல் போன்ற நச்சுக்கிருமிகளின் கலவைகளால் தான் தயா ரிக்கப்படுகின்றன. இந்த நச்சுக்களால் இதய நோய், சிறுநீரக பாதிப்பு, நீரிழிவுநோய், மார்பக புற்று நோய், மலட்டுத் தன்மை, ஆஸ்த்மா, தோல் வியாதிகள் ஏற்படுவதாக ஆய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

காரியம் நச்சை உதட்டுச் சாயமாக பயன்படுத்துவோர் நாளமில்லா சுரப்பிகள் செயல்பாட்டு குறைவையும், வியர்வை தடுக்கும் நறுமண பொருள்களில் உள்ள அலுமினியம் என்ற நச்சு பெண்களுக்கு மார்பக புற்று நோயைத் தருவதாகவும், வெயிலில் முகம் கறுப்பாக மாறாமல் இருக்க பயன்படுத்தும் அழகு சாதனப்பொருளில் உள்ள ஆக்சி பென்சொன், பெண்களின் சுரப்பிகள் செயல்பாட்டை தடுப்பதாகவும் சோடியம் லாரெட் மன அழுத்த நோயையும், ப்யுடைல்க்ளிக்கோல் கல்லீரல் பாதிப்பையும்,ட்ரை கிளோசன் குழந்தை பிறப்பை தடுக்கும் காரணியாகவும் செயல்படுவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இவ்வாறான நிலையில்தான் நம் நாட்டில் சருமத்தை வெள்ளையாக்கப் பயன்படுத்தப்படும் கிரீம்கள் மற்றும் லோஷன்களில் அனுமதிக்கப்பட்ட அளவைத் தாண்டி பாதரசம் கலந்திருப்பதாக ஆய்வக அறிக்கைகள் உறுதி செய்துள்ளன. கொழும்பு புறக்கோட்டையில் உள்ள ஒரு அழகுசாதன பொருட்கள் விற்பனை கடையில் விற்பனைக்குக் வைக்கப்பட்டிருந்த சருமத்தை வெள்ளை யாக்கப் பயன்படுத்தப்படும் கிரீம் வகைகள் தொடர்பாக நடத்தப்பட்ட பரிசோதனையிலேயே இந்த அதிர்ச்சித் தகவல் வெளிவந் துள்ளது.

நுகர்வோர் அதிகார சபையின் கொழும்பு மாவட்ட சுற்றிவளைப்புப் பிரிவினர் அண்மையில் புறக்கோட்டை பகுதியில் சுற்றிவளைப்பு ஒன்றை மேற் கொண்டிருந்த நிலையிலேயே பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப் பட்டதாக சந்தேகிக்கப்படும் பல வகையான அழகு சாதனப் பொருட்கள், உள்நாட்டில் குறிப்பிடப்பட்ட எந்த உத்தரவாதமும் இல்லாதவை, தரமற்றவை மற்றும் சட்டவிரோதமாக பொதி செய்யப்பட்டவையாக இருந்ததால் அதன் தரத்தை பரிசோதிப்பதற்காக 6 வகையான கிரீம்களின் மாதிரிகள் இலங்கை கைத்தொழில் தொழிநுட்ப நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இது தொடர்பான சருமத்தை வெள்ளையாக்கும் கிரீம்களில் அதிக அளவு பாதரசம் கலந்திருப்பது தெரியவந்துள்ளது.2003 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க நுகர்வோர் விவகார அதிகார சபைச் சட்டத்தின்படி, ஒப்பனை கிரீம்கள் மற்றும் லோஷன்களில் இருக்கக்கூடிய பாதரசத்தின் அங்கீகரிக்கப்பட்ட அளவு ஒரு கிலோவிற்கு ஒரு மில்லிகிராம் மட்டுமே.ஆனால் சோதனை முடிவுகளின் படி,அங்கீகரிக்கப்பட்ட வரம்பை விட அதிக அளவு பாதரசம் உள்ளது.அதிக அளவு பாதரசம் உள்ள இவ்வகையான அழகுசாதனக் கிரீம்களைப் பயன்படுத்துவதன் மூலம் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்படுத்தும்.எனவே இவ்வாறான தரமற்ற பொருட்களைப் பயன்படுத்த வேண்டாம் என நுகர்வோர் விவகார அதிகார சபை மக்களுக்கு எச்சரித்துள்ளது.

இன்று அழகு சாதனங்கள் பயன்படுத்தாத இளவயதினரே இல்லை எனலாம்.சமீப காலங்களில் பெண்களுக்கிணையாக ஆண்களும் இவற்றை பயன்படுத்தத் தொங்கிவிட்டனர்.ஹேர் டை, பேஸ் கிரீம், லிப்ஸ்டிக், டல்கம் பவுடர்,காஜல், மஸ்காரா, ரோஸ் பவுடர் என இவற்றின் பட்டியல் நீள்கிறது. விளம்பரங்கள் சினிமா பிரபலங்கள் தாங்கள் இந்த பொருட்களை பயன்படுத்தி முகப்பொலிவு பெற்றதாக நடிப்பதை நம்பும் சமூகமாக இன்றைய இளம் தலைமுறையினர் மாறி வருகின்றனர்.அந்த விளம்பரங்களில்
அல்லது தயாரிப்புக்களில் அழகு சாதனங்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும் மூல பொருட்களும், அவற்றில் ஒளிந்துள்ள ஆபத்துகளும் என்றாவது பயனாளருக்கு விளக்கப்பட்டுள்ளதா என்றால் இல்லை என்பதே பதில். எனவே
இது தொடர்பில் மருத்துவ நிபுணர்கள் என்ன கூறுகின்றனர் என்பதனைப் பார்ப்போம்.

தோலை வெள்ளையாக்கும் கிரீம்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் தொடர்பில் தோல் நோய் மருத்துவர் கனகராஜ் கூறுகையில்,

நம் உணவுப்பழக்கம் முதல் வாழ்வியல் முறை வரை எல்லாமே மாறிவிட்டது.சொல்லப்போனால் இரசாயனங்களுடன்தான் வாழ்கிறோம். இதில் அழகு சாதனப் பொருட்கள் வடிவில் இருப்பவையே மிகவும் ஆபத்தானவை. ஆண்களோ, பெண்களோ தங்கள் முகத்தை அழகுபடுத் திக்கொள்ள விரும்பாதவர்கள் யாருமே இல்லை. இந்த உளவியலைப் புரிந்துகொண்டதால்தான் பல நுகர்பொருள் நிறுவனங்கள் அழகு சாதன பொருட்களை சந்தையில் அள்ளிக் கொட்டி வருகின்றன.ஆனால், சந்தையில் விற்கப்படும் சோப் முதல் முகத்திற்குப் போடும் கிரீம் வரை எதுவும் நம் முகத்திற்கு நிரந்தர அழகை தராது.மாறாக வேறு சில பக்க விளைவுகளை மட்டுமே உண்டாக்கும்.

சில கிரீம்களை பயன்படுத்தினால் 14 நாட்களில்,30 நாட்களில் முகம் அழகாகிவிடும், தோல் வெள்ளையாகி விடும் என விளம்பரம் செய்கிறார்கள்.ஆனால் எந்த அழகு கிரீம்களைப் பயன்படுத்தினாலும் நம் முகத்திற்கு நிரந்தர அழகு கிடைத்து விடாது. ஆனால்,முக அழகு கிரீம்களை பயன்படுத்தும் போது சில மணி நேரத்திற்கு நம் முகம் சற்று 'பளிச்’என இருக்கும்.அதைத்தான் அழகு என நம்பிக்கொண்டு இருக்கிறோம்.அதற்குக் காரணம்,அழகு சாதன கிரீம்களில் ஒளிந்திருக்கும் நியாசின் அமைட் (niacinamide)மற்றும் ஸ்டீரொய்ட் (steroid) இரசாயனங்களே.

இயற்கையிலேயே நம் உடலில் ஸ்டீரொய்ட் சுரப்பி உள்ளது. அதுதான் அதிகப்படியான சக்தியைக் கொடுக்கிறது. இளமையாகக் காட்டுகிறது.ஆனால், தொடர்ந்து முக அழகு கிரீம்களை பயன்படுத்துவதால் அதில் உள்ள ஸ்டீரொய்ட்,நியாசின் அமைட் இரசாயனங்களினால் நம் முகத்தில் உள்ள தோல் மெலிதாகி விடும்.முகப்பருக்கள் வரும். அதனால் தேவையற்ற பதற்றம் ஏற்படும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.எந்த ஒரு இரசாயனமும் அளவுடன் இருக்கும் வரை எந்தப் பிரச்சினையும் ஏற்படுவதில்லை. 

இந்த நேரத்தில் இன்னொன்றையும் முக்கியமாக சொல்ல வேண்டும் பெரும்பாலானவர்களுக்கு முகத்தில் கரும்புள்ளி,பருக்கள் தொந்தரவு உள்ளது. உணவுப்பழக்கம் மாற்றம்,புகைப்பிடித்தல், தூக்க மின்மை,மன அழுத்தம், மரபியல் குறைபாடு ஆகிய காரணங்களால் கரும்புள்ளிகள் தோன்றுகின்றன. அழகு சாதன கிரீம்களை பூசினால் இதற்கு தீர்வு கிடைக்காது.நார்ச்சத்து நிறைந்த பச்சை காய்கறிகள், ஒரேஞ் அப்பிள் போன்ற நல்ல நிறமுள்ள பழங்களை எடுத்துக் கொள்வதன் மூலம் முகப்பரு, கரும்புள்ளிகள் வராமல் தவிர்க்கலாம் என்கின்றார்.

தோல் மருத்துவர் செல்வி ராஜேந்திரன் கூறுகையில்,

உண்மையில் தோல் நிறம் என்பது கரு உருவாகும்போதே தீர்மானிக்கப்படும் விஷயம். நூற்றுக்கும் மேலான மரபணுக்களின் பங்கு உண்டு அதில். ஹீமோகுளோபின், கெராட்டின்,மெலனின் என எல்லாம் சேர்ந்து முடிவு செய்யும் விஷயம் அது. ஆசிய மக்களின் தோலுக்கும் வெள்ளைக்காரர்களின் தோலுக்கும் அடிப்படையான வித்தியாசம் ஒன்று உண்டு.நம் தோலில் மெலனினின் அளவு அதிகமாகவும், மெலனோசோம்களின் அளவு பெரிதாகவும் இருக்கும்.வெள்ளைக்காரர்களின் தோலில் இது தலைகீழ். வெயில் பட்டதும்,மெலனின், சருமத்தைப் பாதுகாக்க மேல் பகுதிக்கு வரும். அதாவது தோலைப் பாதுகாக்கும் கேடயம் மாதிரியானது மெலனின். கருப்பான சருமத்தை வெளுக்கச் செய்வதாக சொல்லப்படும் கிரீம்கள் பலதும்,தோலின் இயற்கைத் தன்மையைப் பதம் பார்த்து, மெலனின் பாதுகா ப்பைத் தடை செய்யும்.அது மிகவும் ஆபத்தானது.

பெரும்பாலான தோலை வெள்ளையாக்கும் தயாரிப்புகளில் 'ஹைட்ரோக்வினைன் உபயோகப்படுத்தப்படும்' ஒரு வகையான பிளீச். 'ஃபிலிம் டெவலப்பிங்' தயாரிப்புகளிலும் இதன் உபயோகம் உள்ளது. புற்றுநோயை உண்டாக்கும் தன்மை கொண்டதாகவும் சுவாசப் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடியதாகவும் இது உள்ளது.அடுத்தது மெர்க்குரி.
மெர்க்குரி குளோரைட் அல்லது அமோனியேட்டட் மெர்க்குரி என்ற பெயரில், இது அழகு சாதனங்களில் கலக்கப்படுகிறது.இதிலும் புற்றுநோய் அபாயம் உண்டு.தவிர அளவு கூடும் போது, நரம்பு தொடர்பான நோய்கள் வரலாம். சிறுநீரகங்கள் பழுதடையாலாம். மனநலம் பாதிக்கப்படலாம். பிறவிக் கோளாறுகளுக்கும் காரணமாகலாம்.ஹைட்ரோக்வினைனும் மெர்க்குரியும் தோலில் பூசினால் தோல் விரைவில் முதிர்ச்சியடையும். தோல் தனது இயற் கையான எதிர்ப்பு சக்தியை இழக்கும்.

எனவே எந்த அழகு சாதனம் வாங்குவதற்கு முன்னர்,தோல் மருத்துவரிடம் ஒரு ஆலோசனை கேட்கலாம்.அந்தத் தயாரிப்புகளில் என்னவெல்லாம் கலந்தி ருக்கிறது என்று தெரிந்து கொண்டு,அது சருமத்துக்குப் பாதுகாப்பானதுதானா என்று பார்த்து வாங்க வேண்டும்..வெளிநாட்டு நண்பர்களிடம் சொல்லி வைத்தும், ஒன்லைன் மூலமாகவும் இந்தப் பொருள்களை வாங்கும் போது கூடுதல் கவனம் தேவை என்கின்றார்.

அழகாக இருக்க வேண்டும் என அழகு நிலையத்திற்கும்,அழகு சாதனப் பொருளுக்கும் செலவு செய்யும் தொகை அதிகமாகவும், ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என நினைத்து உடல் பயிற்சிக் கூடத்திற்கும், நடை பயிற்சி க்கும் வருபவர்களது எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளதும் இன்றைய இளைய தலைமுறையினர் செயற்கையான அழகை விரும்பு கிறார்கள் என்பதை உறுதிப்படுத்துகிறது.அழகு சாதனப் பொருள்களால் அழகு கூடுகின்றதோ இல்லையோ ஆபத்து அதிகரிக்கிறது என்பது மட்டும் உண்மை.அழகை வாங்க ஆபத்தையும் சேர்த்து வாங்க வேண்டுமா என்பதனை சிந்திக்க வேண்டும். ஏனெனில் அழகாக இருப்பதை விட அன்பாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதுதான் குடும்ப வாழ்விற்கு முக்கியம்.









Post a Comment

Previous Post Next Post