மிகைப்படுத்தல்களும் திரிபுபடுத்தல்களும் இல்லாது, வரலாற்றினை அடியொற்றி எழுதிய 'அகதியின் பேர்ளின் வாசல்' என்னும் நாவல், ஈழத் தமிழர்களின் ஆரம்பகால புலம் பெயர்வின் தெளிவான குறுக்கு வெட்டு முகம் எனலாம்.ஜேர்மனிக்கான அன்றைய புலம்பெயர்வின் பயணப் பாதைகள் பற்றியும் அதன் பின்னணியில் ஆதிக்க நாடுகளின் பனிப்போர்கள் பற்றியும் இதுவரை அறியப்படாத பல உண்மைகள் அந் நாவலில் எழுதப்பட்டுள்ளன. தமிழினத்தின் மீதான அரச வன்முறைகளை அடுத்து,தமிழ் இயக்கங்கள் தமது உரிமைகளுக்காக அஹிம்சை வழியிலிருந்து ஆயுதப் போராட்டத்துக்கு மாறிய காலமாகிய 1970 களில் ஆரம்பமாகி 2017 இல் நிறைவு பெறும் ஐந்து தசாப்தங்கள், நாவலின் பேசுபொருள்.
பேரினவாதத்தின் அரசியல் ஆதாயங்களுக்காக தாயகத்தில் தமிழினத்துக்கான பல வாயில்கள் மூடப்பட்டன. இதுவே, சர்வதேச அரசியலின் தந்திரோபாய நடவடிக்கைகளால் மேற்கு நாடான ஜேர்மனியில் ஏற்கனவே இருந்த ஓர் வாயிலை புலம்பெயர்ந்த அகதிகளுக்கு இனங் காட்டியது.புலம்பெயர்வின் வரலாற்றுப் புலங்களும் காட்சிப்புலங்களும் நாம் அறிந்தவை,அறியாதவை என இரு பிரிவுகளுள் அடங்குகின்றன. உண்மையிலேயே நாட்டில் வாழ முடியாத உயிராபத்து நிறைந்த சூழ்நிலையில் அரசியல் தஞ்சம் கோரி புலம் பெயர்ந்தவர்கள் ஒரு பகுதியினர். நிலைமையை சாதகமாகப் பயன்படுத்தி பொருளாதார மேன்மைகளுக்காக அகதி என்ற பெயரில் புலம் பெயர்ந்தவர்கள் மற்றுமோர் பகுதியினர்.இந்த இருபகுதியினரையும் இலக்காகக் கொண்டு, மனிதக்கடத்தல், போதைவஸ்துக் கடத்தல் உட்பட அனைத்து சட்டவிரோத நடவடிக்கைகளையும் செய்த பணமுதலைகள்,சட்டவிரோதமாக புலம்பெயரும் பெண்களை சீரழித்த காமுகர்கள்,விரும்பியோ விரும்பாமலோ பயணமுகவர்களை நம்பி இடைநடுவில் அகப்பட்டு மொழியறியா நாட்டுச் சிறைகளில் வாடும் அப்பாவிகள், பயணவழியில் பரிதாபமாக உயிரிழந்தவர்கள் என பலரின் கதைகள் இங்கு கூறப்பட்டுள்ளன.ஆனால்1983களில் இனக்கலவரங்களை அடுத்து,'நெல்லிக்காய் மூட்டையை அவிழ்த்து விட்டது போலவும்', 'செல்லச்சந்நிதி கோயில் தேர்த்திருவிழாவிற்கு அள்ளுப்பட்டு போனது போலவும்' ரஷ்ய ஏரோபுளோட் விமானத்தின் மூலம் ஜேர்மனியை நோக்கி அகதிகளாக படையெடுத்த எம்மவர்களுக்கான வாயில் எங்கே திறந்திருந்தது என்ற உண்மையோ,எப்படித் திறந்தது என்ற வரலாற்றையோ யாரும் அறிந்திருக்கவில்லை.
இந்த இடத்தில் ஒழுங்கின்மைக் கோட்பாட்டின் தந்தையான Edward Lorenz இன் 'பட்டாம் பூச்சி விளைவை' (Butterfly effect) ஞாபகத்தில் கொள்ளலாம். பிரேசில் நாட்டில் பறந்து கொண்டிருக்கும் பட்டாம் பூச்சியின் சிறகின் படபடப்பினால் ஏற்படும் சலசலப்பிற்கும் டெக்ஸாசில் ஏற்படும் சூறாவளிக்கும் தொடர்புண்டு என்று கூறிய அவர்,கணிதமுறைப்படியும் வானிலை மாற்றங்களின் படியும் அதனை சரியென்று நிறுவிக் காட்டினார்(1963).இதுபோலவே இந்நாவலின் மையக்கருவுக்குக் காரணமான பட்டாம் பூச்சி விளைவு' இரண்டாம் உலகப்போரின் பின்புலத்தில் உதயமானதாக கருதிக்கொள்ளலாம்.
சர்வாதிகாரி ஹிட்லரின் ஆட்சிக்காலத்தில் ஒரே நாடாக இருந்த ஜேர்மனி, இரண்டாம் உலகப்போரில் அவரது வீழ்ச்சியின் பின் இரண்டானது.ரஷ்ய மேலாதிக்கத்துடன் சோஷலிச ஆட்சி கொண்ட கிழக்காகவும்,அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ் நாடுகளின் கூட்டணியில் முதலாளித்துவ ஆட்சி கொண்ட மேற்காகவும் பிரிக்கப்பட்டது.இரண்டாம் உலகப்போரில் தோல்விய டைந்த ஜேர்மனியை பங்குபோட்ட நான்கு வல்லாதிக்க நாடுகளுக்கு இடையிலான 'பொட்ஸ்டம்' உடன்படிக்கை இங்கு முக்கியத்துவம் பெறுகிறது. இந்த ஒப்பந்தம், புலம் பெயர்ந்த அகதிகளுக்கான இறங்குதுறையாக சோஷலிச கிழக்கு ஜேர்மனியை உருமாற்ற மறைமுகக் காரணி ஆகியது. இந்த அகதிகள் கிழக்கு ஜேர்மனியின் எல்லைக்குள் இருந்த,மேற்கு ஜேர்மனியின் தலைநகரான மேற்கு பேர்லினுக்கு சுரங்க ரயில் பாதை ஒன்றின் மூலமாக திட்டமிட்டு மாற்றம் செய்ய வழி காட்டப்பட்டனர். முதலாளித்துவ ஆதிக்கத்தின் கீழ் உள்ள மேற்கு ஜேர்மனிக்கு தொல்லை கொடுப்பதே கிழக்கின் திட்டம்.மேற்குலக அரசியல் தந்திரத்தை விளக்க ஆசிரியர் எடுத்துக் கொண்ட சுவாரசியமான அழகியல் மிக்க உதாரணம் வடக்கின் பாரம் பரியங்களுள் ஒன்றான 'சொரியல் காணியும்,பங்குக் கிணறும், வழிவாய்க்கால் பாதையும்'.
இத்தகைய பின்புலத்தில் 1970இல் ஜேர்மனியில் உயர்கல்வி பயிலச்செல்லும் ஏழ்மை நிலை கொண்ட பாலமுருகன்,அவனைவிட அந்தஸ்தில் உயர்ந்த சித்ரலேகா, இவர்களிடேயே தென்றல் போல வருடிச் செல்லும்காதல், சட்டவிரோதமாக குடிபெயரும் போது போதைவஸ்துக் கடத்தலில் தொடர்புபட்டதான சந்தேகத்தில் ஜேர்மனிய சிறையில் வாடும் நண்பன் தவராசா, பாலமுருகனின் அந்தஸ்து உயர்வின் பின் அவனுக்குப் பெண் கொடுக்க போட்டியிடும் உறவினர்கள் ஆகியோர் முக்கிய கதைமாந்தர் ஆகின்றனர்.
இவர்களூடாக சொல்லப்படும் கதையில் யாழ்.சமூகத்தின் அன்றைய வாழ்வியல் முறைகள், அரசியல் மற்றும் கலாசாரக் கூறுகள், விடாமுயற்சி என்பன மாத்திரம் கூறப்படவில்லை. அந்தஸ்து பேதங்களால் மேலோங்கிய செருக்குகள், சாதிய மேலாண்மைகள், மூட நம்பிக்கைகள், சுயநலம் சார்ந்த நடவடிக்கைகள் என்பனவும் மூலக்கதையின் உறுதியை சிதைக்கா வண்ணம் வெளிக்காட்டப்பட்டு உள்ளன.
பெற்றோர் உற்றோரின் மறைவுக்கு கூட சமுகமளிக்க முடியாத அன்றைய போர்சூழ்ந்த காலகட்டத்தின் கையறு நிலைமையை வாசிக்கும் பலர் இதனைத் தமது சொந்த அனுபவமாகவே உணர்வர். கண்ணிவெடியில் சிக்கி பரிதாபமாக இறந்த பாலமுருகனின் தாயின் மரண அந்தியேட்டி நிகழ்வில் வெளிப்படும் மனிதமன அவசங்கள் வெட்கித் தலை குனிய வைக்கின்றன. 'எல்லாப் பிழையும் பொறுத்தருள்வாய் கச்சிஏகம்பனே' என அந்தியேட்டிக் கிரியைகளில் குருக்கள் பாடிய போது, மனதில் அடக்கி வைத்திருந்த சோகம் தாங்காது வாய்விட்டு அழுத பாலமுருகனுடன் வாசகர் மனமும் சேர்ந்து கசிந்துருகும் என்பது உறுதி.
தாய்மொழி என்பதும் தாயின் அரவணைப்பை ஒத்ததுதான். மொழியறியாது ஜேர்மனிய சிறையில் தனிமையில் வாடும் தவராஜா, நண்பனான பாலமுருகனின் 'தமிழ் கேட்டுக் குரலுடைந்தான்' எனும் போது அந்நிய தேசமொன்றில் தாய்மொழி தரும் பாதுகாப்பினை உணர முடிகிறது.'பயத்தில் கைகள் நடுங்கியதால் கைவிலங்குகள் சத்தமிட்டன,கண்களில் வழிந்த கண்ணீர் காற்றாடியின் வேகத்தில் துளிகளாயின' என்ற வரிகளில் அநாதரவான அவனது நிலையை எண்ணி வாசகநெஞ்சங்கள் உருகும் என்பதும் நிஜம்.
நாவலின் மற்றுமோர் பேசுபொருளாக,சட்ட விரோத புலம் பெயர்வாளர்களது இடைத்தங்கலாக விளங்கிய மும்பாய் நகரின் தாராவியும் அதனை அண்மித்த மாத்துங்கா,மற்றும் 'சிவப்பு விளக்குப் பகுதி' என அறியப்பட்ட காமாத்திபுராவும் விளங்குகின்றன.கடவுச்சீட்டில் தலைமாற்றி ஒட்டுதல், அப் பாவிப் பெண்களை சீரழித்து அவர்களின் தலைவிதியை மாற்றுதல், சட்டவிரோத கருக்கலைப்பு ஈறாக பல அக்கிரமங்களின் களமாக விளங்கிய இப்பகுதிகளில் பாதிக்கப்பட்ட பெண்களின் பிரதிநிதியாக வளர்மதியும் அநாதரவான சூழலில் உதவும் ஆபத்பாந்தவனாக தவராசாவும் நம்மைச் சந்திக்கின்றனர்.தருமம் தலைகாக்கும் என்ற முதுமொழிக்கமைய, தவராசா செய்த தருமமே, பின்னாளில் ஜேர்மனிய சிறையில் வாடிய போது பாலமு ருகனின் ரூபத்தில் உதவியது எனலாம். அது போலவே அன்றைய காலகட்டத்தில் 'ஐம்பது சதமும்' ஒரு வைத்தியரின் மனிதாபிமானமும் பாலமுருகனின் இன்றைய உயர்நிலைக்கு காரணமாயின என்பதும் மனதில் கொள்ள வேண்டிய வாழ்க்கைப் பாடங்கள் ஆகின்றன.
புலம்பெயர் வரலாறும், வடக்கின் சமூக அரசியல் பாரம்பரியங்களும், மேற்கு லகின் ராஜதந்திரங்களும் சமாந்திரமாகப் பயணிக்கும் இப்படைப்பின் வடிவ நேர்த்தி,சொற்சுருக்கம், சொல்லாடல் நயம் என்பன சிலாகிக்கப்பட வேண்டியன.'கோழிகூவிய பருவம்', 'பால்பிடித்த நெற்பயிர் போல', 'செம்பாட்டான் மாம்பழ நிறம் போல', 'அறிமுகக் காட்சி', 'உசார் ஏத்தல்', இன்னும் பல சொற்கள் வாசிப்பின் ரம்மியத்தை அதிகரிக்கின்றன. ஆசிரியருக்கு கைவந்த கலையாகிய அங்கதம், நக்கல், நையாண்டி அனைத்தும் கனதியான கதைக்களத்திலும் 'கொடுப்புக்குள் சிரிப்பை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளன.
ஈழத்தமிழர்களின் மீதான ஒடுக்குமுறையும் அதன் மூலமான புலம்பெயர்வும் சர்வதேச அரசியலின் வஞ்சனை மிகுந்த சதுரங்க ஆட்டத்தின் ஒரு அத்தியாயம்.மேற்குலகிற்கான புலம்பெயர்வின் மூலம் ஈழத்தமிழர்கள் பெற்றவைகளும் இழந்தவைகளும் ஏராளம். பொருண்மிய வளமும், இரண்டாவது தலைமுறையினர் பெற்று மகிழும் சமத்துவ வாழ்வும் சாதகமான பக்கங்களாக,முதல் தலைமுறையினர் மனதளவில் ஏற்றுக் கொள்ளத் தயங்கும் மாறுபட்ட கலாசார விழுமியங்களும் தாய் மண்ணின் நினைவுகளும் மறுபக்கமாக இரட்டைத் தன்மை கொண்ட வாழ்நிலை.எனினும் எத்தகைய சூழ்நிலைகளிலும் சாபங்களை வரமாக மாற்றி அமைப்பதில் தளர்ந்து விடாத ஈழத் தமிழர்களின் மன ஓர்மம் வெளிப்படுவது சிறப்பம்சம்.
ஈற்றில் ஒன்றிணைக்கப்பட்ட ஜேர்மனியும், பலகூறுகள் ஆக்கப்பட்ட சோவியத் ரஷ்யாவும் மீண்டும் 'பட்டாம் பூச்சியினை' நினைவில் கொண்டுவர மற்றுமோர் அதிர்ச்சியைத் தந்து நாவல் நிறைவு காண்கிறது.கடந்த காலத்தின் சுவடுகளாகவும் நிகழ்காலத்தின் நீட்சியாகவும் படைக்கப்பட்ட இவ் வரலாறு சார்ந்த நவீனம், எதிர்காலத்தில் ஆவணமாகும் தகுதி பெற்றது.
This comment has been removed by the author.
ReplyDeleteரஞ்ஜனி சுப்ரமணியம் அனுப்பிய புகாரை கீழே தந்துள்ளேன்.
ReplyDelete'அகதியின் பேர்ளின் வாசல்' என்னும் நாவலுக்காக ரஞ்ஜனி சுப்ரமணியம் என்னும் பெயரில் நான்எழுதிய வாசிப்பு அனுபவத்தின் அப்பட்டமான பிரதியே இது. இப்பதிவு 9/7/2023 அன்று வீரகேசரியிலும் 16/7/2023 அன்று பதிவுகள் இணைய இதழிலும்
வெளிவந்தது. 26/4/2024 அன்று S.R.S.வானொலியில் விமர்சன அரங்கம் நிகழ்வில் திருமதி. ஆனந்தராணி பாலேந்திரா அவர்களால் வாசித்தளிக்கப்பட்டது.
இதனை 'மழைத்துளி ' என்ற புனைபெயரில் rainbowbooktamil என இணையத்தில்
தனது பதிவு போன்று இட்டவர், எனது பெயரைக் குறிப்பிடவில்லை. 216 விருப்புகளையும் பெற்றுள்ளார். குறிப்பிட்ட தளத்தில் என்னால் எதிர்ப்பினைப் பதிவு செய்ய இயலவில்லை.
எந்த ஒரு வாசிப்பு அனுபவத்தையும் மிகுந்த சிரத்தையுடன் பதிவு செய்யும் எனக்கு இது மிகுந்த அதிர்ச்சியையும் மனவருத்தத்தையும் தருகின்றது. முதலில் வெளிவந்த பதிவுகள், தங்கள் முகநூலில் பகிரப்பட்ட இணைப்புகளைக் கீழே பகிர்கிறேன்
https://www.facebook.com/share/p/JJKCGYwyCRBSP4ZS/?mibextid=oFDknk
https://www.facebook.com/share/p/6mPsGoCj6yrGJqDK/?mibextid=oFDknk
https://www.facebook.com/share/p/yY8XcTMrbAgSFfwG/?mibextid=oFDknk
'அகதியின் பேர்ளின் வாசல்' என்னும் நாவலுக்காக நான் 'ரஞ்ஜனி சுப்ரமணியம்' என்னும் பெயரில் எழுதிய வாசிப்பு அனுபவத்தின் அப்பட்டமான பிரதியே இது. இப்பதிவு 9/7/2023 அன்று வீரகேசரியிலும் 16/7/2023 அன்று பதிவுகள் இணைய இதழிலும்
ReplyDeleteவெளிவந்தது. 26/4/2024 அன்று S.R.S.வானொலியில் விமர்சன அரங்கம் நிகழ்வில் திருமதி. ஆனந்தராணி பாலேந்திரா அவர்களால் வாசித்தளிக்கப்பட்டது.
இதனை 'மழைத்துளி ' என்ற புனைபெயரில் rainbowbooktamil என இணையத்தில்
தனது பதிவு போன்று இட்டவர், எனது பெயரைக் குறிப்பிடவில்லை. 216 விருப்புகளையும் பெற்றுள்ளார்.
எந்த ஒரு வாசிப்பு அனுபவத்தையும் மிகுந்த சிரத்தையுடன் பதிவு செய்யும் எனக்கு இது மிகுந்த அதிர்ச்சியையும் மனவருத்தத்தையும் தருகின்றது. முதலில் வெளிவந்த பதிவுகள், முகநூலில் பகிரப்பட்ட இணைப்புகளைக் கீழே பகிர்கிறேன்.
https://www.facebook.com/share/p/JJKCGYwyCRBSP4ZS/?mibextid=oFDknk
https://www.facebook.com/share/p/6mPsGoCj6yrGJqDK/?mibextid=oFDknk
https://www.facebook.com/share/p/yY8XcTMrbAgSFfwG/?mibextid=oFDknk
Post a Comment