.

லட்சுமிபுரத்தில் சிவராமன் என்ற பணக்கார இளைஞன் வாழ்ந்து வந்தான்.சிறு வயதிலேயே பெற்றோர்களை இழந்த அவனை,அவனுடைய அத்தை கண்ணும் கருத்துமாய் வளர்த்து வந்தாள். சிறு வயதிலிருந்தே ஒரு முழுச் சோம்பேறி யாயிருந்த சிவராமன்,உடல் வணங்கி எந்த வேலையும் செய்வதில்லை.

ஒரு அமாவாசை இரவில், அவன் ஒரு அதிசயமான கனவு கண்டான்.அந்த கிராமத்து துர்கையம்மன் கோயிலுக்குமுன் ஒரு தங்க சிம்மாசனத்தில் தான் வீற்றிருப்பது போலவும் தன் தலையில் ஓர் ஆந்தை அமர்ந்திருப்பது போலவும் அவன் கனவு கண்டான். மேலும் அந்தக் கனவில் ஊரார்கள் துர்கை அம்மனுக்குப் பூசை செய்யாமல் அவனுக்குப் பூசை செய்வது போலவும், தூரத்தில் அவனை நோக்கி ஒரு நாய் குலைத்துக் கொண்டு இருப்பது போலவும் கண்டான்.சிவராமன் விழித்துக் கொண்டதும் தான் கண்ட அதிசயக் கனவை தன் அத்தையிடம் கூறிவிட்டு விளக்கம் கேட்டான்.அத்தை சிரித்துக் கொண்டே, “சிவராமா, கனவுகள் தேவ ரகசியம் என்பார்கள். அதன் பொருளை நம்மால் புரிந்து கொள்ள முடியாது. நீ வேண்டுமானால் புத்திசாலியான நமது பஞ்சாயத்துத் தலைவர் நாராயணனைக் கேள்" என்றான்.


அவரிடம் சென்று தன் கனவைப் பற்றிக் கூறி விளக்கம் கேட்டவுடன் அவர், “உன்னை நீ மிகப் பெரிய மனிதனாக எண்ணிக் கர்வம் கொண்டுள்ளாய்.

அதனால்தான் இப்படிப்பட்ட கனவு கண்டாய்'' என்று கூற, அந்தப் பதிலினால் சிவராமன் திருப்தி அடையவில்லை."பெரியவரே, நான் என்னைப் பெரிய மனிதன் என்று ஒருபோதும் நினைத்ததில்லை. நீங்கள் சொல்வது உண்மை யாகவே இருந்தாலும் ஆந்தை என் தலையில் அமர்ந்திருந்தது பற்றியும் நாய் குரைத்ததைப் பற்றியும் உங்கள் விளக்கம் என்ன?” என்று கேட்டான் சிவராமன். அதற்கு விளக்கம் கூற முடியாத நாராயணன், “நமது பக்கத்து கிராமத்திலுள்ள ஸ்ரீதர் பண்டிதரைப் போய்க் கேள்" என்றார். பிறகு சிவராமன் அந்தப் பண்டிதரிடம் சென்று தன் கனவுக்கு விளக்கம் கேட்டான். இரண்டு மூன்று முறை சிவராமனது முகத்தை உற்றுப் பார்த்த பிறகு, பண்டிதர் "உன்னுடைய கிராமத்தில் ஏதோ விபரீதம் நடக்கப் போகிறது. அதனால்தான் மக்கள் அம்மனை விட்டுவிட்டு உன்னைப் பூசை செய்கிற செய்கிற மாதிரி கனவு ஏற்பட்டது. தவிர "பசியெடுத்ததால் நாய் குலைத்தது. தேவியை மறந்து உன்னை மக்கள் பூசை செய்ததால்,ஆந்தை உன் தலையில் உட்கார்ந்தது” என்றார்.

இந்த விளக்கத்தாலும் திருப்தி அடையாத சிவராமன் பதில் ஏதும் பேசாமல் சலிப்புடன் தன் கிராமத்தை நோக்கித் திரும்பினான். வரும் வழியில் அவன் கிராமத்துக்கு அருகில், ஒரு மரத்தடியில் தாடி மீசையுடன் அமர்ந்திருந்த ஒரு

சாமியாரைப் பார்த்தான். அவரை‘கிறுக்கு சாமியார்' என்று கிராமத்தினர் கேலி செய்வதுண்டு.அவர் சிவராமனை நோக்கி,''என்னப்பா கொஞ்ச நாட்களாக உன்னை இந்தப் பக்கமே காண வில்லையே!” என்றார்.

சிவராமன் அவரிடம், "நான் கண்ட ஒரு அதிசயக் கனவைப் பற்றிய விளக்கம் கேட்க பலரிடமும் சென்று வருகிறேன்” என்றான். “யாராலும் சரியாக விளக்கம் கூறியிருக்க முடியாதே!” என்றார்.

‘நீங்கள் சொல்வது சரி” என்ற சிவராமன், “உங்களுக்கு எப்படி அதைப் பற்றி தெரியும்?” என்று கேட்டான்.

'முட்டாளே, கனவுகளுக்கு விளக்கம் தரக்கூடிய ஒரே ஒருவன் நான்தான்" என்றார். “அப்படியானால் நீங்களே சொல்லுங்கள்” என்ற சிவராமன் தன் கனவைப் பற்றி அவரிடம் விவரித்தான். அதைக் கேட்ட சாமியார் பலமாக சிரித்தார்.

‘‘கேள் மகனே!’’ என்று தொடங்கியவர் “மக்களிடம் தெய்வ பக்தி நாளுக்கு நாள் குறைந்து சுயநலமும், பேராசையும் அதிகரித்துள்ளது. உன்னைப் போன்ற ஒரு
சோம்பேரியை அவர்கள் வழிபடு மாறு கனவு தோன்றியது இதையே காட்டுகிறது. தங்க சிம்மாசனத்தில் நீ உட்கார்ந்திருந்தது உன்னுடைய
பேராசையையும் கர்வத்தையும் காட்டுகிறது.”

“அப்படியா? நாய் குலைத்ததும் ஆந்தை அமர்ந்ததும் ஏன்?” என்று சிவராமன் கேட்க, “உனக்கு வயிறார தினமும் சோறு போடும் உன் அத்தை,ஒரு நாய்க்கு
போடுகிறாள். நீ வேலையற்று சோம்பேறியாகத் திரிந்து வயிறு புடைக்க உண்ணுவதைக் கண்டே, அந்த நாய் உன்னைப் பார்த்து குரைத்தது. ஆந்தை இருட்டில் வசிக்கும் பறவை. அறியாமை என்ற இருளில் மூழ்கி இருக்கும் உன்னையே தன் இருப்பிடமாக ஆந்தைக் தேர்ந்தெடுத்தது,” என்றார்.

'ஆகா, ஊரார் உங்களைக் கிறுக்கு என்கின்றனர். ஆனால் உண்மையிலேயே நீங்கள் தான் அறிவாளி.என் கண்களை இன்று திறந்து விட்டீர்கள்” என்றான் சிவராமன்நன்றியுடன். 'ஊரே என்னை கிறுக்கு என்று தூற்றும் போது நீ மட்டும்
என்னை அறிவாளி என்று எப்படிச் சொல்லலாம்? நான் இனி இந்த கிராமத்தில் இருக்கப் போவதில்லை” என்று அந்த கிராமத்தை விட்டுச் செல்லலானார்.








Post a Comment

Previous Post Next Post