.

மன்னர் மகேந்திரருக்கு ஏழு புதல்வர்களும் ஒரு பெண்ணும் பிறந்தனர். அவளுக்கு சொப்பன சுந்தரி என்று பெயரிடப்பட்டது.மன்னர் தாம் இறப்பதற்குள் தன் புதல்வர்கள் அனைவருக்கும் திருமணம் செய்து விட்டார். மன்னர் இறக்கும் சமயம், சொப்பனசுந்தரி சிறுமியாக இருந்ததால், அவள் திருமணம் மட்டும் மட்டும் நடைபெறவில்லை. சில ஆண்டுகளுக்குப் பின்னர் ராணியும் இறந்து விடவே,சுந்தரியைப் பேணி வளர்க்கும் பொறுப்பு அவளுடைய ஏழு அண்ணன்களைச் சேர்ந்தது .

அண்ணன்மார்கள் அனைவரும் சுந்தரியிடம் மிகவும் பாசம் வைத்திருந்தனர். ஆனால் அவர்களுடைய மனைவிகள் அவளைக் கேவலமாக நடத்தினர். பல நாட்கள் பொறுமையுடனிருந்த சுந்தரி ஒரு நாள் பொறுக்க முடியாமல் தன் அண்ணிகளை நோக்கி, “நீங்கள் இவ்வாறு என்னை கீழ்த்தரமாக நடத்துவதைப் பற்றி என் அண்ணன்களிடம் புகார் செய்யப் போகிறேன்” என்று எச்சரிக்கை விடுத்தாள். அதைக் கேட்டு கோபமடைந்த அவளுடைய அண்ணிகள் அந்த சமயம் தங்கள் கணவன்மார்கள் யாரும் இல்லாத வாய்ப்பைப் பயன்படுத்தி சுந்தரியை அரண்மனையை விட்டே துரத்தி விட்டனர்.



அவர்களால் துரத்தப்பட்ட சுந்தரி அரண்மனையை விட்டு வெளியேறுமுன், “நீங்கள் என்னை துரத்தி விட்டீர்கள். ஆனால் பாருங்கள்.நீங்கள் பொறாமைப் படும்படி ஒரு அழகான ராஜகுமாரனைத் திருமணம் செய்து கொண்டு திரும்பி வருவேன்”என்றாள்.

"ஆமாம், உனக்காக இளவரசன் சந்தன் ராஜா காத்துக் கொண்டுருக்கிறான் பார்! போ, போ” என்று ஏளனம் செய்தனர். அவளுடைய அண்ணிகளில் ஒருத்தி ஓடிவந்து,“சுந்தரி இதோ இந்தத் துணி மணிகளை எடுத்துச் செல். சந்தன் ராஜாவை நீ திருமணம் புரிகையில் இவை உனக்குப் பயன்படும்” என்று மீண்டும் ஏளனம் செய்ய மற்றவர்கள் விழுந்து விழுந்து சிரித்தனர். அரண்மனையை விட்டு வெளியேறிய சுந்தரியின் மனதில் சந்தன் ராஜாவைப் பற்றிய சிந்தனையே இருந்தது.

அப்போது பாதையில் எதிரே பெண்கள் கூட்டம் ஒன்று வந்து கொண்டிருந்தது. அவர்களை நோக்கி,“பெண்களே, சந்தன் ராஜா யார் என்று தெரியுமா?” என்று கேட்டாள்.அவர்கள் எல்லாரும் மௌனமாக ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர். பிறகு அவர்களில் ஒருத்தி, “அவர் வெகு நாட்களுக்கு முன் இறந்து விட்டாரே!” என்றனர்.“அவர் ராஜகுமாரரா? எந்த நாட்டு இளவரசர் அவர்?” என்று மீண்டும் சுந்தரி கேட்க, அந்தப் பெண் “அவர் தென்திசை ராஜ்யத்தில் இளவரசராக இருந்தார்” என்று சொல்லிவிட்டுச் சென்று விட்டாள்.

சுந்தரி தென்திசையை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.பல நாட்களுக்குப்பின் ஒரு காட்டினை அடைந்தாள். அந்தக் காட்டில் ஒரு பெரிய மாளிகை தென்பட்டது.சுற்றுமுற்றும் யாரும் யாரும் தென்படவில்லை. துணிச்சலுடன் அந்த மாளிகையினுள்நுழைந்தாள். உள்ளே ஒரு நாயும், பூனையும் படுத்திருந்தன.நாயும், பூனையும் எழுந்து அவளைச் சுற்றி சுற்றி வந்தன. அதன் செய்கையால் அவை பசியாக இருக்கும் என தான் கொண்டு வந்திருந்த உணவில் கொஞ்சம் அளித்தாள். நாயும், பூனையும் மிகுந்த ஆர்வத்துடன் அதை உண்டன. அதை உண்டு விட்டு உள்ளே சென்ற நாய்,ஒரு பொட்டலம் கொண்டு வந்தது.

"பெண்ணே, இதிலுள்ள சிவப்புப் பொடியை நீ எடுத்துக் கொள்” என்று நாய் பேசியதும் சுந்தரி ஆச்சரியமடைந்தாள். “பரவாயில்லையே!உனக்குப் பேச வருகிறதே!' என்ற சுந்தரி, "இந்த சிவப்புப் பொடி எதற்கு?” என்று கேட்டாள். “இதை நெற்றியில் பூசிக் கொண்டால்,நீ விரும்பும் ஆண் உனக்கு மணாளனாவான்” என்றது நாய்.

உடனே பூனையும் ஒரு பொட்டலம் எடுத்து வந்து, “இதிலுள்ள வெண்மைப் பொடியை எடுத்துக் கொள். இதைக் கண் இமைகளில் பூசிக் கொண்டால், மற்றவர் கண்களுக்குத் தெரியாமல் நீ மறைந்து விடுவாய்.ஆனால் உன்னால் அவர்களைப் பார்க்க முடியும்” என்றது. சுந்தரி அளித்த உணவு அவற்றுக்கு மிகவும் பிடித்திருக்கவே நன்றியறிதலின் பொருட்டு அந்த மந்திரப் பொடிகளை கொடுத்தனவாம்.

அவற்றுக்குத் தன் நன்றியைத் தெரிவித்த பிறகு,சிவப்புப் பொடியை நெற்றியிலும் வெள்ளைப் பொடியை தன் கண் இமைகளிலும் பூசிக் கொண்ட சுந்தரி உடனே தன் பயணத்தைத் தொடர்ந்தாள். இரவு வெகுநேரம் காட்டில் சென்றபின் ஒரு பெரிய அரண்மனையைக் கண்டாள்.அரண்மனை நடுவில் ஒரு திறந்த வெளி முற்றத்தில் ஒரு பெரிய மரத்தடியில் ஒரு மேடையின் மீது ஓர் உருவம் படுத்திருந்தது.அந்த உருவத்தின் அருகே சென்று பார்த்த சுந்தரிக்குத் தன் கண்களையே நம்ப முடியவில்லை. ஒரு அழகான ராஜகுமாரன் அசைவற்றுப் படுத்து இருந்தான். அவன் தூங்கிக் கொண்டு இருப்பவனாகவும் தெரியவில்லை.அதே சமயம் இறந்தவனாகவும் தெரியவில்லை. அடுத்து என்ன செய்வது என சுந்தரி யோசிக்கையில் திடீரென அந்த உருவம் அசைந்தது. அந்த ராஜகுமாரன் திடீரெனக் கண் விழித்துப் பார்த்தான்.“தேவதைகளே? நீங்கள் எங்கே?”என்று அவன் முனக, சுந்தரி தைரியமாக அவன் முன் சென்று நின்றாள். “யார் நீ? நீ தேவதை இல்லையே! நீ எப்படி இங்கு வந்தாய்?” என்று அவன் கேட்க,சுந்தரி அவன் அருகில் சென்று, ''என் பெயர் சொப்பனசுந்தரி. நான் தேவதை இல்லை. நான் ஒரு இளவரசி. எனக்கு ஏழு அண்ணன்கள் உண்டு. என் அண்ணிகள் என்னை அரண்மனையை விட்டுத் துரத்தி விட்டனர். நான் இப்போது ஒரு அனாதை. நான் சந்தன் ராஜாவைத் தேடி அலைகிறேன். அவரைத்தான் திருமணம் செய்வதாக இருக்கிறேன்”எனக் கூறினாள்.நீ தேடிக் கொண்டிருக்கும் சந்தன்ராஜா நான்தான் என்றவனைக் கண்டு சுந்தரி அளவற்ற ஆச்சரியத்தில் சிலையென சமைந்தாள்.


“ஆனால் சுந்தரி, நீ என்னைத் திருமணம் செய்து கொள்ள முடியுமா என்பது சந்தேகம். காரணம் நாளெல்லாம் இறந்தவனாகக் கிடக்கும் நான், நடு இரவில் சில மணி நேரங்களுக்கு மட்டும் உயிர் பெறுகிறேன்” என்றான் அவன். ‘அது ஏன் அப்படி? சற்றுமுன் தேவதைகளை அழைத்தீர்களே? யார் அவர்கள்?” என்று ஆச்சரியத்துடன் சுந்தரி கேட்டாள். “ஓ! அதுவா! அது ஒரு பெரிய கதை” என்று தொடங்கிய சந்தன் ராஜா.‘என்னுடைய பெற்றோர்களுக்குத் திருமணம் ஆகிப் பல ஆண்டுகளாக குழந்தைகளே இல்லை. ஒருமுறை வேட்டையாடச் சென்றபோது, என் தந்தை காட்டில் வழி தவறிப் போய் ஒரு முனிவரின் ஆசிரமத்தை அடைந்தார். இரவு தங்க இடமும், உண்ண உணவும் அளித்த அந்த முனிவர் மறுநாள் காலையில் என் தந்தையிடம் ஒரு மாலையைக் கொடுத்தார். 'இந்த மாலையை உன்னுடைய ராணிக்குக் கொடுத்து அவளை அணியச் செய். இந்த மாலைக்கு உயிர் கொடுக்கும் சக்தி உள்ளது. இதை ஏன் கொடுக்கிறேன் எனில், ராணிக்கு எதிர்காலத்தில் உண்டாகும் குழந்தை இறந்து பிறக்கும். ஆனால் இந்த மாலையை அணிந்து கொண்டதும், அது உயிர் பெறும். அந்தக் குழந்தை இந்த மாலையை அணிந்து கொண்டு இருக்கும் வரை உயிருடன் இருக்கும்' என்றார்.

என் தந்தை மிகவும் மகிழ்ச்சியுடன் அரண்மனை திரும்பியதும்,அதை என் தாய்க்குக் கொடுக்க,அவள் அதை அணிய,சில மாதங்களில் அவள் குழந்தைக்குத் தாயானாள். அந்தக் குழந்தைதான் நான். இறந்தே பிறந்த நான் அந்த மாலையை அணிந்ததும் மீண்டும் உயிர் பெற்றேன்.அதிலிருந்து இந்த மாலையை எப்போதும் அணிந்திருந்தேன்.வாலிபனான பிறகு ஒருநாள் இரவு அரண்மனை உப்பரிகையில் திறந்த வெளியில் உறங்கும் போது வானில் உலவி  வந்த சில தேவதைகள் என்னைப் பார்த்து விட்டு என்னருகில் வந்து அந்த தேவதைகள் என்னைச் சுற்றி களிப்புடன் நடனம் ஆடினர். பிறகு அவர்களுள் ஒருத்தி என்னை அவளுடன் மணம் புரிந்து கொள்ளச் சொன்னாள். அவளை மணம் செய்து கொண்டு அவளுடன் தேவலோகம் செல்ல வேண்டும் என்பது அவள் விருப்பம். நான் மறுத்தேன். திடீரென என் கழுத்திலிருந்த மாலையை அபகரித்துக் கொண்டு அவள் மறைய மற்றவர்களும் மறைந்தனர். நான் உயிரிழந்தேன். அந்த மாலை சந்தன மலர் மாலையாதலால் என் பெர் சந்தன் ராஜா என்று வைத்திருந்தனர்.

மறுநாள் உயிரிழந்து கிடந்த என்னைக் கண்டு என் பெற்றோர்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர். என் கழுத்திலுள்ள மாலையைக் காணாததால் அதுவே நான் இறக்கக் காரணம் என்று அறிந்து தேவதையின் செயல் அறியாமல் அவர்கள் பல இடங்களில் தேடினர். இறந்திருந்த என்னை எரிக்கவோ, புதைக்கவோ செய்யாமல் நடுக்காட்டில் ஓர் அரண்மனை கட்டி என்னை இங்கே வைத்து விட்டனர். பகல் வேளைகளில் என் பெற்றோர்கள் என்னை இங்கே வந்து அடிக்கடி காணுவதுண்டு. எனக்கு உயிரில்லை என அருகில் அமர்ந்து அழுது விட்டு சென்று விடுவார்கள்.அந்த தேவதையின் சக்தியால் நடு இரவு நேரங்களில் மட்டும் எனக்கு உயிர் வரும். அப்போது அவள் என் முன்னே வந்து தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்துவாள். நான் மறுப்பேன். பிறகு அவள் மறைந்து விடுவாள்.இதுதான் விஷயம். ஆனால் இன்று இரவு அவள் ஏனோ வரவில்லை’என்றான்.

'“சந்தன் ராஜா, நான் சொல்வதைக் கேளுங்கள்.நான் இங்கேயே தங்குகிறேன். இன்றில்லாவிடில் நாளை இரவு அவள் வரக்கூடும்.அவளிடமிருந்து அந்த மாலையை எப்படியாவது நான் கைப்பற்றி விடுகிறேன்” என்றாள் சுந்தரி.

காலைப்பொழுது ஆரம்பிக்கும் முன்பே, சந்தன் ராஜா மீண்டும் அசைவற்று பேச்சு மூச்சில்லாமல் போனான். அவனுடைய பெற்றோர்களும் அவனைப் பார்த்து கண்ணீர் வடித்து விட்டுச் சென்றனர். ஆனால் சுந்தரி அந்த வெள்ளைப் பொடியை பூசிக் கொண்டிருந்ததால் அவள் அவர்கள் கண்களில் படவில்லை.நடுநிசியும் வந்தது. சந்தன் ராஜா மீண்டும் உயிர் பெற்றான். அப்போது வானில் இனிய கீதம் மிதந்து வந்தது.சந்தன் ராஜா பரபரப்படைந்து,
“சுந்தரி, தேவதைகள் வருகிறார்கள் எனத் தோன்றுகிறது. அவர்களில் சிவப்பு சிறகுகள் கொண்டவளிடம் என்னுடைய மாலை உள்ளது. அதை எப்படியாவது கைப்பற்று” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே தேவதைகள் நடனம் ஆடிக் கொண்டே வந்தனர்.



சிவப்பு சிறகுகள் கொண்ட அந்த தேவதை, "இன்றாவது சொல்.என்னைத் திருமணம் செய்து கொள்வாயா?” என்று கேட்டுக் கொண்டே சந்தன் ராஜாவை நெருங்கியவள்,அங்கு மற்றவர் கண்களுக்குத் தெரியாமல் மாயமாக மறைந்திருந்த சுந்தரி மேல் மோதிக் கொண்டு கீழே விழ, சுந்தரி அவள் மீது பாய்ந்து அந்த மாலையைக் கைப்பற்றிக் கொண்டாள்.

தேவதையைத் தொட்டதால்,திடீரென சுந்தரி சுய உருவம் பெற்றதும், தேவதைகள் அவளைக் கண்டு பயந்து போய், மறைந்து விட்டனர்.

உடனே சுந்தரி அந்த மாலையை சந்தன் ராஜாவுக்கு அணிவித்து விட்டாள். மிகுந்த மகிழ்ச்சியுடன் சுந்தரியின் கைகளைப் பற்றிக் கொண்ட சந்தன் ராஜா, “சுந்தரி என் உயிரைக் காப்பாற்றினாய். எனக்கு வாழ்க்கையை மீண்டும் கொடுத்து விட்டாய்” என்று நன்றியறிதலுடன் கூறிவிட்டு ''வா, நாம் நமது
நாட்டுக்குச் செல்வோம்” என்று அவளை அழைத்துக் கொண்டு நாடு
திரும்பினான்.

தன் மகன் உயிரோடு மீண்டதை எண்ணி அளவற்ற மகிழ்ச்சி அடைந்த
அவன் பெற்றோர்கள், சுந்தரிக்குத் தங்கள் மனமார்ந்த நன்றியைத்
தெரிவித்ததுடன் அவர்களுடைய திருமணத்தையும் சிறப்பாக நடத்தி
வைத்தனர்.

திருமணம் முடிந்தபிறகு சந்தன் ராஜாவும் சுந்தரியும் மீண்டும் அதே
காட்டுக்குத் திரும்பி வந்து தங்கள் ஆனந்த மயமான வாழ்க்கையைத்
தொடங்கினர்.



Post a Comment

Previous Post Next Post