.

சுகன்யாவிற்குத் திருமணம் முடிந்து கணவன் வீடு செல்லும்போது, அவளுடைய தாய், “இனிமேல் உன் மாமியார்தான் உனக்குத் தாய்! அவரிடம் அன்புடன் நடந்து கொள்”என்று அறிவுரை கூறினாள்.சுகன்யாவும் அதன் படியே நடந்து கொண்டாள். தனது மருமகளின் நடத்தையைக் கண்டு மாமியார் பத்மாவதி மிகவும் மகிழ்ச்சியுற்றாள்.

பத்மாவதி வீட்டை மிகவும் நேர்த்தியாக பராமரித்து வந்தாள்.சமையலும் அவளுக்கு கை தேர்ந்த கலையாக இருந்தது. இவற்றைத் தவிர, இனிய குரலில் நன்றாகப் பாடவும் செய்தாள். தன் மாமியாரின் அற்புதத் திறமைகளைக் கண்டு வியந்த சுகன்யா தன் மாமியாரை"அம்மா, பார்ப்பதற்கு நீங்கள் சாட்சாத் மகாலட்சுமியைப் போல் இருக்கிறீர்கள். அதே சமயம் சரஸ்வதி தேவியைப்போல், சகல கலைகளிலும் வல்லவராகவும் இருக்கிறீர்கள். உண்மையைச் சொல்லப் போனால், என் தாய்க்கு இந்தளவிற்கு விஷயங்கள் தெரியாது” என்று புகழ்ந்தாள்.

மருமகளின் புகழ்ச்சியினால் பெருமிதம் அ டைந்த பத்மாவதி. “உன்னுடைய தாய்க்கு மற்ற விஷயங்கள் தெரியாமலிருக்கலாம். ஆனால் உன்னை நன்கு வளர்த்திருக்கிறாள்,” என்று சொன்னாள்.இவ்வாறு இருவரும் ஒருவருக் கொருவர் அடிக்கடி புகழ் மாலைகள் சூட்டிக் கொள்வதுண்டு.


ஆனால் சில நாள்களில் சுகன்யாவின் கணவன் ராகவனுக்கு ராஜ தர்பாரில் நல்ல வேலை கிடைத்து விட்டது. சுகன்யாவும், ராகவனும் தங்கள் கிராமத்தை விடுத்துத் தலைநகர் நோக்கிச் சென்றனர்.

சுகன்யாவும், ராகவனும் பத்மாவதியை விட்டுப் பிரிந்து நான்கு ஆண்டுகள் கழிந்தன. திருமணமான முதல் ஆண்டே சுகன்யாவிற்கு ஒரு பெண் குழந்தை பிறக்க, அதற்கு சித்ரா என்று பெயரிட்டனர். கிராமத்தில் ராகவனுடைய தம்பியான கணபதி தன் தாய், தந்தையுடன் வசித்து வந்தான். அவனுக்கும் திருமணமாகி, இளைய மருமகளான சுமதி அந்த வீட்டில் வசித்து வரலானாள்.

மாமியார் தன் மூத்த மருமகளைப் பற்றி வாய் ஓயாமல் புகழ்வதைக் கேட்டு, பொறுமை இழந்த சுமதி ஒருநாள் “சுகன்யா இந்த வீட்டில் இருக்கும் வரை அவ்வாறு முகஸ்துதி செய்திருக்கலாம். இப்போது உங்களை எவ்வாறு நினைத்துக் கொண்டிருக்கிறாளோ, யார் கண்டது!” என்று கேட்டு விட்டாள்.

பத்மாவதிக்கு சுமதி சொன்னது 'சுருக்' என தைத்தது. உடனே தன் கணவரை வற்புறுத்தி, தன் குடும்பத்துடன் ராகவன் வீட்டிற்குப் புறப்பட்டுச் சென்றாள். சுகன்யா அனைவரையும் வரவேற்றாள். பத்மாவதி தன் பேத்தி நிர்மலாவிடம் “நான் தான் உன் பாட்டி" என்று அறிமுகம் செய்து கொண்டாள்.

உடனே அவள் “அடடா! என் அம்மா உங்களைப்பற்றி அடிக்கடி என்னிடமும் சொல்லியிருக்கிறாள்.அம்மா சொன்னபடி,நீங்கள்  கறுப்பாக குண்டாக இருப்பீர்கள் என்று நினைத்தேன்.சிவப்பாக, ஒல்லியாக இருக்கிறீர்கள், ” என்று சொன்னதும், பத்மாவதிக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. உடனே இளைய மருமகள் சுமதி தொலைவிலிருந்தபடி சைகையால் “பார்த்தீர்களா!” என்றாள்.

ஆனால் நிர்மலா சொன்னதைக் கேட்டு சுகன்யா சிரித்தாள். அப்போது
சமையல் அறையிலிருந்து கறுப்பாக, பருத்த சரீரம் கொண்ட சமையற்காரி
வெளியில் வந்து, "அம்மா, சமையல் தயார்!” என்று அறிவித்தாள்.

“இவ்வளவு விரைவாக சமையலை முடித்து விட்டாயா? சபாஷ் மகாலட்சுமி!" என்று சுகன்யா அவளைப் பாராட்டினாள். உடனே பத்மாவதிக்கு மட்டுமல்லாமல் அனைவருக்கும் உண்மை புரிந்து விட்டது. தன் பேத்தியை வாரி அணைத்து அன்புடன் முத்தமிட்டாள்.







Post a Comment

Previous Post Next Post