.

வாஞ்சிநாதன் என்ற வைத்தியரிடம், ஆதித்தன் எனும் வாலிபன் உதவியாளனாகப் பணி புரிந்து வந்தான். அதே கிராமத்தில், மாயாவி என்ற வயதான மந்திரவாதியும் வசித்து வந்தான். தனது மந்திர சக்தியினால் பல தீர்க்க முடியாத நோய்களையும் குணப்படுத்தினான்.

ஆதித்தனுக்கு மாயாவியிடம்ருந்து மந்திரதந்திர சக்திகளைப் பெற ஆவல் உண்டாயிற்று. ஒருநாள் அவன் மாயாவியிடம் சென்று,அவருடைய விசேஷ சக்திகளை தனக்கு அளிக்குமாறு வேண்டினான்.அதற்கு மாயாவி, “நான் என்னுடைய சக்திகளை அவற்றைப் பெற தகுதியானவனுக்கு மட்டுமே அளிக்க முடியும்” என்று சொல்லி அனுப்பி விட்டான்.

சில நாள்கள் கழித்து, மாயாவி கடும் நோயால் பாதிக்கப்பட்டு வாஞ்சிநாதனிடம் வந்தார். அவரைப் பரிசோதித்த வைத்தியர், இன்று மருந்து தருகிறேன். அது எவ்வாறு பலன் அளிக்கிறது என்று பார்த்து,நாளை மீண்டும் மருந்து தருவேன்.வந்து வாங்கிக் கொள்!” என்றான்.

“என்னால் நடக்கவே முடியவில்லை. நாளைக்கு மருந்தை யாரிடமாவது கொடுத்தனுப்பி விடு”என்று சொல்லிவிட்டு மாயாவி வீடு திரும்பினார். மறுநாள் வாஞ்சிநாதன் ஆதித்தன் மூலமாக மருந்து கொடுத்து அனுப்பினான்.

ஆதித்தன் மாயாவியை அடைந்ததும்,அவன், “எனது உயிர் பிரியும் வேளை
வந்து விட்டது. இறப்பதைப் பற்றி நான் வருந்தவில்லை. ஆனால் என்னுடைய மந்திர தந்திர வித்தைகள் என்னுடனே மறைந்து விடுமே என்று எண்ணித்தான் கவலை அடைகிறேன்” என்றான்.

உடனே ஆதித்தன் ஆவலுடன்,“அப்படியானால் அவற்றை எனக்கு இப்போதாவது சொல்லிக் கொடுங்களேன்!” என்று கெஞ்சினான்.

அவனை உற்றுப்பார்த்த மாயாவி,"தம்பி! அவற்றைக் கற்றுக் கொடுக்க
என்னால் இப்போது இயலாது ஒரேயொரு மந்திர சக்தியை மட்டும் உனக்கு அளிக்கிறேன்,” என்று,மேஜையிலிருந்த ஒரு தொப்பியை அவனிடம் கொடுத்து, "இது மந்திர சக்தி வாய்ந்த தொப்பி. இதைத் தலையில் அணிந்து கொள். இறந்த பிறகும் ஆவி வடிவத்தில் நான் இந்த தொப்பிக்குள் சில காலம் இருப்பேன். இதை நீ ஏதாவது ஒரு நபருடைய தலையில் வைத்தால்,அவனுக்கு அன்றைய தினம் என்ன நடக்கும் என்று நான் உன் காதில் கூறுவேன். நீ அதை அப்படியே அவனிடம் சொல்! அவன் தரும் பணத்தைப் பெற்றுக் கொள்! ஒரு நாளில் ஒரேயொரு முறை மட்டுமே இதைப் பயன்படுத்து!” என்றான்.



ஆதித்தன் அதைப் பெற்றுக் கொண்டு வாஞ்சிநாதனிடம் திரும்பி வந்து மாயாவியின் நிலைமையை விளக்கினான். அன்றிரவே மாயாவி இறந்து போனான். அவனுடைய அந்திமக் கிரியைகளை ஊரார் கூடிச் செய்தனர். ஆதித்தன் அந்தக் கிராமத்தை விட்டு, வேறொரு கிராமத்திற்குச் சென்று விட்டான்.

புதிய கிராமத்தில் ஒரு தெரு வழியே ஆதித்தன் சென்று கொண்டிருந்த போது, அவன் தொப்பியில் சலனம் உண்டாயிற்று. “நான் உன் தொப்பிக்குள் வந்து விட்டேன். அதோ, எதிரில் வருகிறானே! அவன் பெயர் நந்தன்.அவனிடம் இன்று நடக்கவிருப்பதைப் பற்றி ஆருடம் சொல்வதாகச் சொல்!” என்றது மாயாவியின் குரல்.

ஆதித்தன் மாயாவியின் ஆவி கூறியபடி, அந்த நபரை அணுகி,''ஐயா, என்னிடமுள்ள தொப்பி மந்திர சக்தி வாய்ந்தது. அதன் மூலம் உங்கள் பெயர் நந்தன் என்று அறிந்தேன். உங்களுக்கு இன்று நடக்கப் போகும் முக்கியமான சம்பவத்தைப் பற்றி சரியாக என்னால் கூற முடியும். அதற்கு நீங்கள் இருநூறு பொற்காசு தர வேண்டும்!”என்றான். தங்கள் கிராமத்திற்கு வந்த புதிய மனிதன் தன் பெயரைச் சரியாக சொன்னதின் பேரில், அந்த ஆளுக்கு அவன் மீது நம்பிக்கை ஏற்பட்டது.அதனால் இருநூறு காசு தர அவன் ஒப்புக் கொள்ளவும், ஆதித்தன் தொப்பியை அவன் தலைமீது வைத்தான். உடனே அவன் செவிகளில் மந்திரவாதி மாயாவியின் குரல் ஒலித்தது. “பூங்காவனம் என்ற ஆள் இந்த நந்தனிடமிருந்து ஆயிரம் பொற்காசுகள் கடன் வாங்கி, நெடுங்காலமாகத் திருப்பித் தராமல் இருந்தான்.இன்று அவனைத் தேடிப் போனால் கடன் வசூலாகிவிடும்,” என்ற வார்த்தைகளைக் கேட்ட ஆதித்தன் அதை அப்படியே நந்தனிடம் கூறினான். பிறகு இருவருமாக பூங்கா வனத்தின் வீடு நோக்கி சென்றனர்.

நந்தனைக் கண்டவுடன் பூங்காவனம், 'உங்களைத் தேடி நானே வருவதாக இருந்தேன்! நீங்களே வந்துவிட்டதில் மிக்க மகிழ்ச்சி.உங்களுடைய கடனான ஆயிரம் காசுகளையும், வட்டி இருநூறு காசுகளுடன் சேர்த்துத் தருகிறேன். பெற்றுக் கொள்ளுங்கள்!” என்றான்.

மிகவும் மகிழ்ச்சியடைந்த நந்தன், தான் பேசியபடி இருநூறு காசுகளை ஆதித்தனுக்குக் கொடுத்தான்.இந்தச் செய்தி அக்கிராமத்தில் காட்டுத்
தீ போல் பரவியது. ஆதித்தனின் புகழ் ஓங்கியது. ஆனால் மாயாவிக் கிழவன்
கூறியவாறு, ஆதித்தன் ஒரு நாளைக்கு ஒரேயொரு முறை மட்டுமே தொப்பியைப் பயன்படுத்தினான்.ஆதித்தன் கூறும் ஆரூடம் பலிக்க,அவனைத் தேடி வருவோர்களின் எண்ணிக்கை அதிகரிக்க, அவனுடைய வருமானமும் மிகவும் அதிகரித்தது.இவ்வாறு ஓராண்டு கழிந்தபின்,ஆதித்தன் தனவந்தன் ஆனான்.

ஒருநாள் அவனுடைய செவிகளில் மாயாவிக் கிழவன், 'உன் மூலம்
பலருக்கு உதவி செய்ய முடிந்தது குறித்து எனக்கு மகிழ்ச்சி. இனி என்
ஆத்மா சாந்தி அடையும். நான் உன்னை விட்டு, தொப்பியை விட்டுச் செல்கிறேன், '” என்று கூறினான்.இதனால் ஆதித்தன் ஊராரிடம் தன்னுடைய ஆரூட சக்தி மறைந்து விட்டது என்று அறிவித்தான். ஆனால் பலரும் அதை நம்ப மறுத்தனர். சிலர் மன்னரிடம் சென்று ஆதித்தன் வேண்டுமென்றே அவ்வாறு செய்கிறான் என்று கோள் மூட்டினர். உடனே மன்னரும் ஆதித்தனை அழைத்து வரச் சொன்னார். ஆதித்தன் வந்ததும் அவனை உண்மையைச் சொல்லுமாறு மிரட்டினார்.

ஆதித்தனும் தனக்கு ஒரு மந்திரத் தொப்பி கிடைத்ததாகவும், அதன் உதவியால் ஆரூடம் கூறியதாகவும்,இப்போது அது சக்தியை இழந்து விட்டதாகவும் கூறினான். ஆனால் மன்னர் அவன் கூறியதை நம்பாமல் ‘ஆதித்தா! இன்று எனக்காக நீ ஒரு விஷயத்தில் ஆரூடம் கூறித்தான் ஆக வேண்டும்!” என்று அவனை அருகில் அழைத்து ரகசியமாக, “நான் மாளவச் சக்கரவர்த்தியின் பெண் வித்யாவை மணம்புரிய விரும்புகிறேன். ஆனால் சக்கரவர்த்திக்கு இதில் விருப்பமில்லை. என்னிடம் ஒரு மந்திரசக்தி வாய்ந்த கத்தி உள்ளது. இதோ பார்!இதுதான் அந்த கத்தி! சக்கரவர்த்தியுடன் இதைக் கொண்டு நேருக்கு நேர் மோதி அவரை வீழ்த்த விரும்புகிறேன். என்னுடைய விருப்பம் நிறைவேறுமா என்று சொல்!” என்று உத்தரவிட்டார்.

மன்னரின் ஆணையை மீற முடியாமல், ஆதித்தன் தொப்பியை மன்னரின் தலையில் வைத்தான்.அடுத்த கணமே, மன்னருடைய கையிலிருந்து கத்தி நழுவிக் கீழே விழுந்தது. அவருடைய கை அசைக்க முடியாமல் செயலற்றுப் போயிற்று.பீதியடைந்த மன்னர், “ஐயோ! என்ன ஆயிற்று எனக்கு?ஆதித்தா, நீ ஏதாவது மந்திரம் போட்டாயா? என் கையை சரியாக்கு!” என்று கூச்சலிட்டார்.

உடனே ஆதித்தனின் செவிகளில் மாயாவியின் குரல் ‘பயப்படாதே! உன்னை மீட்கத்தான் நான் மீண்டும் தொப்பிக்குள் வந்திருக்கிறேன்.மன்னருடைய கெட்ட எண்ணத்திற்கு, நான் உதவி செய்ய மாட்டேன்.அவருடைய ஆசையை கைவிடச் சொல். அப்போதுதான் அவருடைய கை சரியாகும்!” என்று ஒலித்தது. ஆதித்தனும் அதை அப்படியே மன்னரிடம் கூறினான்.

அதைக் கேட்ட மன்னரும், “சரி,சரி! நான் என் ஆசையை விட்டு விடுகிறேன்!” என்று கூற, மன்னரின் கை சரியாகி விட்டது. உடனே அவர்,‘ஆதித்தா! உன்னுடைய தொப்பியின் மகிமையால், நான் மனம் திருந்தி விட்டேன். தவறான செயலைப் புரியாமல் என்னைக் காத்ததற்காக உனக்கு நன்றி !'' என்று கூறி,ஆதித்தனுக்கு நிறைய பரிசுகள் தந்து அனுப்பி வைத்தான்.






Post a Comment

Previous Post Next Post