.

ஒரு கிராமத்தில் வீரபாகு என்ற விவசாயி, தன் மனைவி ஜமுனா,மகன் கண்ணன் ஆகி யோருடன் வாழ்க்கை நடத்தி வந்தான். கண்ணன் பார்ப்பதற்கு அச்சாக தன் தந்தையைப் போலவே இருந்தான்.

ஒருநாள் அதிகாலை நேரத்திலேயே,வீரபாகு அறுவடைக்காக தன் வயலை நோக்கிச் சென்று விட்டான். சிறிது நேரத்திலேயே, வீரபாகுவின் உயிரற்ற உடலை மற்ற விவசாயிகள் அவன் வீட்டிற்குக் கொண்டு வந்தனர். வீரபாகுவை வயலில் இருந்த ஒரு நாகம் தீண்டியதால், விஷம் தலைக்கேறி அவன் இறந்து விட்டான்.


ஜமுனா தன் கணவனின் மறைவினால் பைத்தியம் பிடித்தவள் போல் ஆனாள். ஒருநாள் ஜமுனாவின் கனவில் கணவன் வீரபாகு ஆவியாகத் தோன்றினான். அதைக் கண்டு எழுந்த ஜமுனா அலறித் துடித்தாள். பக்கத்து வீட்டுப் பெண்கள் ஓடி வந்து அவளை சமாதானப் படுத்தினர். அவர்களிடம்,"என் கணவர் பேயாக மாறி விட்டார்.என் கனவில் அவர் பேயாக வந்தார்,"என்று திக்கித் திணறி கூறினாள்.மீண்டும் அவளை சமாதனப் படுத்தி விட்டு அனைவரும் சென்றனர்.

ஆனால் வீரபாகு இறந்த மூன்றாம் நாள் இரவே ஒரு விசித்திர சம்பவம்
நிகழ்ந்தது. மயானத்தின் வழியாக இரவு நேரத்தில் திரும்பிக் கொண்டு
இருந்த பக்கத்து ஊர் வியாபாரி மயங்கி விழுந்திருந்தான். அவனைக்
கண்ட சி லர், அவனுக்கு ம யக்கம் தெளிவித்து உதவி செய்தனர். பயத்தினால் வெளிறிப்போன முகத்துடன்அவன், "நேற்றிரவு நான் மயானத்திற்கருகே உள்ள ஆலமரத்தின் அருகே வந்தபோது, திடீரென ஆலமரத்தின் கிளைகளைப் பற்றித் தொங்கிக் கொண்டு வெள்ளை உடை அணிந்த ஓர் உருவம் தென்பட்டது.அது என்னைப் பார்த்து, 'உன்னிடம் உள்ளவற்றை எனக்குக் கொடுத்து விடு. என்னுடைய மனைவியையும், பிள்ளையையும் பராமரிக்க எனக்கு பணம் தேவை. நான் யார் தெரியுமா? நான்தான் வீரபாகுவின் ஆவி!' என்று பயங்கரமாக சிரித்தது. அதனால் நான் மயங்கி விழுந்து விட்டேன்.
என்னுடைய பணம் எல்லாம் ஆவி எடுத்துக் கொண்டது!" என்றான்.


இதைக் கேட்டதும் கிராமத்தினர் ஜமுனாவின் வீட்டை அடைந்து சோதனை யிட்டனர். ஆனால் பணம் எதுவும் தென்படவில்லை. ஜமுனாவிற்கோ இதனால் பெருத்த அவமானம் ஏற்பட்டது. மிகவும் நல்லவரான தன் கணவர் ஏன் இறந்த பிறகு இப்படி ஒரு பேயாக மாறி கெட்டகாரியம் செய்ய வேண்டும் என்று புரியவில்லை.

ஆனால் கிராமத்தினர் அன்று முதல் ஜமுனாவையும் கண்ணனையும்
வெறுக்கத் தொடங்கினர். அடுத்த நாள் இரவு, ஒரு புதுமண தம்பதியை
வீரபாகுவின் ஆவி பயமுறுத்தி நகைகளைப் பிடுங்கிக் கொண்டது.
“இவற்றை என் மனைவி அணிந்து கொண்டால் அழகாக இருப்பாள்!’’
என்றும் ஆவி கூறியது.

உடனே மீண்டும் கிராமத்தினர் ஜமுனாவின் வீட்டை சோதனை இட்டனர். ஆனால் திருட்டுப்போன நகை எதுவும் காணவில்லை. இருந்தாலும், மற்றவர்களுக்கு ஜமுனா மீது நம்பிக்கை உண்டாகவில்லை.ஜமுனா திருட்டுச் சாமான்களை எங்கோ பதுக்கி வைத்திருக்கிறாள் என்றும் நம்பினர்.

அடுத்த சில நாள்களிலும், இரவு நேரங்களில் மயானத்தின் வழியே
சென்ற சிலர் வீரபாகுவின் ஆவியைப் பார்த்தாகக் கூறினர். அதனால் இரவு
நேரம் மயானத்திற்கு அருகே யாருமே செல்வதில்லை. ஆனால் இந்தப்
 பிரச்சினைக்கு ஒரு முடிவு கட்ட, ஊரார் கூடி யோசித்தனர். பிறகு அனைவரும் ஜமுனாவின் வீட்டை அடைந்து அவளிடம், “இதோ பார்! நீயும், உ ன் மகனும் இந்த ஊரில் இருக்கும் வரை, வீரபாகுவின் ஆவியும் இங்கேயேதான் இருக்கும்.
நீ உன் மகனுடன் இந்த ஊரை விட்டுச் சென்று விடு” என்றனர்.

தானிருக்கும் வீட்டை விட்டு எங்கே போவது? வெளியூருக்குச் ' சென்று எப்படி இருப்பது என்று கவலையில் ஆழ்ந்தனர் ஜமுனாவும்,கண்ணனும். உடனே ஜமுனா ஒரு  தீர்மானம்  செய்தாள். அதன்படி,அன்றிரவு மயானத்திற்குச் சென்றாள்.அப்போது ஆலமரத்தின் கிளைகளில் அமர்ந்திருந்த ஓர் உருவம், “நில்! உன்னிடம் உள்ளவற்றைக் கொடுத்து விடு. என் மனைவிக்கும், மகனுக்கும் நான் உதவி செய்ய வேண்டும்! நான் யார் தெரியுமா? வீரபாகுவின் ஆவி!” என்றது. அது தன்னுடைய கணவனின் குரலே அல்ல என்று ஜமுனா
தெரிந்து கொண்டாள். உடனே அவள் வீட்டிற்கு ஓடோடி வந்து தன் மகனிடம், 'கண்ணா! மயானத்தில் இருந்து கொண்டு ஊர் மக்களை பயமுறுத்துவது உன் தந்தையின் ஆவியைபோல் ஒருவன் நடிக்கிறான். அவனை சும்மா விடக் கூடாது!” என்று படபடப்புடன் கூறினாள். உடனே இருவரும் அந்தப் போக்கிரியின் முகத்திரையை கிழிக்க ஒரு திட்டம் தீட்டினர்.

அவர்கள் திட்டப்படி கண்ணன் தன் தந்தையைப் போலவே வெள்ளை
வேட்டியும் சட்டையும் அணிந்து கொண்டான். ஏற்கெனவே தன் தந்தையின் சாயலில் இருந்ததால்,கண்ணனைப் பார்த்தால் வீரபாகு போலவே தோன்றியது. பிறகு இருவரும் அந்திப் பொழுதிலேயே மயானத்திற்குச் சென்றனர். கண்ணன் ஆல மரத்தில் ஏறி கிளைகளுக்குள் ஒளிந்து கொண்டான். ஜமுனா ஒரு புதரில் பதுங்கிக் கொண்டாள். இருவரும் போலி வீரபாகுவின் வருகைக்காகக் காத்திருந்தனர்.

நன்கு இருள் கவிழ்ந்ததும்,தொலைவிலிருந்து வெள்ளை வேட்டி சட்டை அணிந்த ஒரு மனிதன் மெதுவாக வந்து, ஆல மரத்தில் ஏறிக் கொண்டான். ‘அடடா! போலி ஆள் வந்து விட்டான். இன்னும் கண்ணன் ஏன் பேசாமல் இருக்கிறான்' என்று ஜமுனா நினைக்கையில் தடாலென்று அவன் மரத்தி லிருந்து குதித்து போலியான ஆளைப்பார்த்து, “டேய் நயவஞ்சகா! யார் நீ? என் பெயரைச் சொல்லிக் கொண்டு ஏன் ஊரை ஏமாற்றுகிறாய்? இதோபார்! நான் வீரபாகுவின் ஆவி!” என்றான்.



போலி மனிதன் பயத்தில் நடுங்கிக் கொண்டே மரத்திலிருந்து கீழே விழுந்தான். “வீரபாகுவின் ஆவியே! என்னை மன்னித்து விடு!” என்று அவன் வீரபாகுவைக் கையெடுத்துக் கும்பிட்டான். “இதுவரை நீ திருடிய பொருட்களை கொடுத்து விடு.உன்னை விட்டு விடுகிறேன்!'' என்று வீரபாகுவின் ஆவி கூற, அவன் ஆலமரத்தின் அடியில் தான் புதைத்து
வைத்திருந்த பொருட்களைத் தோண்டி எடுக்கலானான். அவன் அவ்வாறு செய்து கொண்டிருக்கும் போதே, ஜமுனா கிராமத்திற்கு ஓடிப்போய் கிராமத்து மக்களை கூட்டி வந்தாள்.

மயானத்து ஆலமரத்தினடியில் கண்ட காட்சி கிராமத்தினரைத் திகைக்கச் செய்தது. கிராமத்தினரைக் கண்டதும் வீரபாகுவின் ஆவி மறைந்து விட, போலி மனிதனை கிராமத்தினர் மடக்கிப் பிடித்தனர்.

சற்று நேரங்கழித்து சாவகாசமாகக் கண்ணன் மரத்திலிருந்து கீழே இறங்கினான். “மன்னிக்க வேண்டும் அம்மா! நான் மரத்தில் ஏறிய சில நிமிடங்களிலேயே நன்றாகத் தூங்கி விட்டேன். இவர்களுடைய சத்தம் கேட்டுத்தான் விழித்தேன். அதுசரி,என்ன நடந்தது ?” என்று கேட்டான்.

ஜமுனாவும், மற்றவர்களும் பேசவே மு டியாமல் திகைத்துப் போய் நின்றனர். அப்படியென்றால் அத்தனை நேரம் அவர்கள் முன் இருந்தது வீரபாகுவின் ஆவிதான் என்ற உண்மை தெரிந்தது. அந்த அதிர்ச்சியிலிருந்து அவர்களால்
மீளவே முடியவில்லை. தன் பெயரைச் சொல்லி ஊரை ஏமாற்றிய கயவனைக் கையும் களவுமாகப் பிடிப்பதற்காக, வீரபாகுவின் ஆவியே தக்க நேரத்தில் வந்து விட்டது.ஜமுனாவிடமும், கண்ணனிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொண்ட
கிராமத்தினர் அ வர்களை ஊரை விட்டுச் செல்ல வேண்டாம் என்று
மன்றாடிக் கேட்டுக் கொண்டனர்.அதன்பிறகு யாரும் வீரபாகுவின்
ஆவியைப் பார்க்கவேயில்லை.




Post a Comment

Previous Post Next Post