.

சங்கரன் ஒரு கள்ளம் கபடமற்ற பதினாறு வயது நிரம்பிய பிள்ளை.அவனது மூன்றாவது வயதிலேயே அவனுடைய தாய் இறந்துவிட,அவனுடைய தந்தை சோமன் இளைய தாரமாக லட்சுமி என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். அவளுக்கு இரண்டு பிள்ளைகள் பிறந்தன. தன் சொந்தப் பிள்ளைகளிடம் பரிவும் பாசமும் காட்டிய லட்சுமி சங்கரனை இரக்கமின்றி நடத்தினாள்.

இவ்வாறு காலம் சென்று கொண்டிருக்கையில், சோமன் நோய் வாய்ப்பட்டு மோசமான நிலையை அடைந்தான். ஒரு நாள் அவன் தனது இரண்டாவது மனைவியான லட்சுமியிடம் சங்கரனை நல்லபடியாக நடத்துமாறு கூறி உயிர் துறந்தான்.


ஆனால் லட்சுமியின் தீய எண்ணங்கள் மாறவில்லை. ஒருநாள் சங்கரனை அழைத்து, “சங்கரா,நேற்று என் கனவில் உன்னுடைய அப்பா வந்தார். இதோ இந்த முகம் பார்க்கும் கண்ணாடி மிகவும் மகிமையுள்ளது என்றும், இதை உனக்குக் கொடுக்கும்படியும் கூறினார். இதை உன் தந்தை உனக்குப் பாகம் பிரித்துக் கொடுத்த சொத்தாக நினைத்துக் கொள்” என்று சாமர்த்தியமாகப் பேசினாள்.

அந்தக் கண்ணாடி சங்கரனுடைய அம்மா கண்டெடுத்த ஒன்று. ஒரு நாள் வயலிலிருந்து வரும் சமயம், ஒரு யோகி வசித்து வந்த இடிந்து கிடந்த அவரது ஆசிரமத்தில் அவளுக்கு அது கிடைத்தது. மகிமையுள்ள கண்ணாடி என்று நம்பிய அவள், அதை சங்கரனுடைய தந்தையிடம் கொடுத்தாள்.அதைத் தான் சங்கரனுடைய சித்தி அவனுக்குக் கொடுத்தாள்.

"அப்படியென்றால்,நான் உங்களை விட்டுச் சென்று தனியாக இருக்க வேண்டுமா?” என்று அப்பாவியாகக் கேட்டான் சங்கரன்.

“ஆமாம் சங்கரா! அதுதான் உன் தந்தையின் விருப்பம். இனி நீ எங்காவது சென்று உன் விருப்பப்படி வாழலாம்” என்று கூறி ஐந்து ரூபாய் மட்டும் கொடுத்து அவனை வீட்டில்ருந்து வெளியேற்றி விட்டாள்.

தன்னுடைய துணிமணிகளை ஒரு பையில் திணித்துக் கொண்டசங்கரன், அவற்றுள் அந்தக் கண்ணாடியையும் பத்திரமாக செருகிக் கொண்டு, வீட்டைவிட்டுக் கிளம்பினான். அந்த ஊர் ராஜா கீர்த்திவர்மரின் அரண்மனைக்குப் பக்கத்தில் உள்ள சத்திரத்தில் தங்கிய சங்கரன் அங்கே உணவருந்திய பின், ஓய்வெடுத்துக் கொண்டே தன்தந்தையின் சொத்தான அந்த முகம் பார்க்கும் கண்ணாடியை எடுத்துப் பார்த்தான். பிறகு மனதுக்குள், ‘அப்பா, இது மகிமையுள்ள கண்ணாடி என்று சித்தி சொன்னாள். ஆனால் அந்த மகிமை என்னவென்று தெரியவில்லை’ என்று கூறிக் கொண்டு அதை பக்கத்தில் வைத்துக் கொண்டே உறங்கிப் போனான்.

நடு இரவில் திடீரென்று சத்திரத்தில் ஒரே கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டன. அங்கிருந்தவர்கள் எல்லாரும் பதற்றத்துடன் பேசிக் கொண்டதிலிருந்து பக்கத்து நாட்டு அரசன் நாகவர்மன் திடீரென்று படையெடுத்து வந்து தங்கள் கோட்டையை முற்றுகையிட்டிருக்கிறான் என்று தெரிந்து கொண்டான். சத்திரத்தின் நிர்வாகி, "மிகவும் தங்கமானவரான நமது மன்னருக்கு இந்தப் போரில் வெற்றி கிட்ட வேண்டும்” என்று கவலையுடன் கூறினான்.

தனது விலை மதிப்பற்ற சொத்தான அந்தக் கண்ணாடியை கையில் வைத்துக் கொண்டிருந்த சங்கரன் போரில் "நமது மன்னர் இந்தப் வெற்றி அடைந்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்” என்று வாய் விட்டுக் கூறினான். அந்தக் கண்ணாடி யிலிருந்து ஒரு மின்னல் மின்னியது.அதனுள்ளிருந்து ஏராளமான பொம்மைகள் போன்ற வீரர்கள் வெளி வந்தனர். வெளியில் வந்தவுடன் அவர்கள் உருவம் பெரிதாகி நிஜமான ஆயுதமேந்திய வீரர்களாகவே மாறினர். அந்த ஆயிரக்கணக்கான வீரர்களும் போர் முழக்கம் செய்து கொண்டே நாகவர்மனின் வீரர்களை எதிர்த்து சண்டை போட்டனர். பிறகு அந்தக் கண்ணாடி யிலிருந்து ஒரு பெரிய நீளமான கயிறு வெளிப்பட்டது.அது நீண்டு கொண்டே போய் எதிரி மன்னன் நாகவர்மனைச் சுற்றிக் கொண்டது.

தன் படை வீரர்களைத் திரட்டி வெளிவந்த மன்னர் கீர்த்திவர்மர்,தான் கண்ட காட்சியைக் கண்டு திகைத்தார். “இது என்ன அதிசயம்?” என்று கீர்த்திவர்மர் திக்பிரமை அடைந்ததைப் போலவே சங்கரனும் வியப்பின் எல்லைக்கே சென்றிருந்தான். இறுதியில் நடந்திருப்பதெல்லாம் மாயக்கண்ணாடியின் மகிமையினால் என்றறிந்த கீர்த்திவர்மர், சங்கரனை அணுகி, மிகவும் மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்த பின்,அவனைப் பற்றிய விவரங்களைக் கேட்டார். பிறகு “உன் சித்தி இதை ஏதோ சாதாரணப் பொருள் என்று கருதி உனக்குக் கொடுத்த இந்தக் கண்ணாடி நம் நாட்டையே பகைவர்களிடமிருந்து காப்பாற்றி விட்டது. உன்னுடைய கள்ளங்கடபமற்ற உள்ளத்தையும் உன்னுடைய தற்போதைய நிலைமையும் நான் புரிந்து கொண்டேன். இனி நீ கவலைப்படத் தேவையில்லை. உனக்கு நல்ல முறையில் கல்வி கற்பித்து உன்னைப் போற்றி வளர்ப்பது இனி என் பொறுப்பு” என்று கூறி அவனை அணைத்துக் கொண்டார்.

அந்த சமயம் சங்கரன் கையில் ருந்த கண்ணாடி திடீரென அவன் கையை விட்டு மேலே பறந்து போய் உடைந்து தூள் தூளாகியது. அதைக் கண்டு சங்கரன் மிகவும் வருத்தமுற்றான். 'கவலைப்படாதே” என்று அவனைத் தேற்றிய கீர்த்திவர்மர் “அந்தக் கண்ணாடி தன் கடமையை செய்து விட்டது. நமது முன்னேற்றத்திற்காக இப்படிப்பட்ட மாயமந்திரப் பொருட்களை எப்போதும் நம்பி இருக்கக் கூடாது. நமது உழைப்பும் திறமையுமே நம்மை வழி நடத்திச் செல்லும் என்று அறிவுரை கூறியவாறே, அவனைத் தன்னுடன் அழைத்துக் கொண்டு சென்றார்.



Post a Comment

Previous Post Next Post