அந்த ஆடு, தனது எஜமானருடன் தினமும் அந்த தெரு வழியாகத்தான் மேய்ச்சலுக்காக செல்லும். அப்படிப் போகும்போது அங்கிருக்கும் மாடி வீட்டில் இருக்கும் நாயைப் பார்த்து பொறாமைப்படும்.
நான் மட்டும் தினமும் புல் தேடி நீண்ட தூரம் செல்கிறேன். ஆனால் இந்த நாய் மட்டும் மாடி வீட்டில் சொகுசாக வாழ்ந்து கொண்டு இருக்கிறது. எப்படியாவது அந்த நாயை இந்த வீட்டை விட்டுத் துரத்த வேண்டும் என நினைத்து அதற்காக ஒரு திட்டம் போட்டது.
மறுநாள் அந்த வீட்டைக் கடந்து போகும் போது, என்ன நாயாரே, நலமாய் இருக்கிறீரா?
மிக மிக நலமோடு உள்ளேன் ஆடு நண்பரே
நீர் இந்த வீட்டில் அப்படி என்ன வேலைதான் செய்கிறீர்?
வீட்டில் வெளியாள் யாரும் வராமல் காவல் காப்பதுதான் என் வேலை
அப்படியெனில் இந்த வீட்டில் உள்ள பொருள்கள் பாதுகாப்பாக இருப்பதற்கு நீர்தானே முக்கிய காரணம்?
ஆமாம், அதற்கென்ன இப்போது?
இவ்வளவு பொறுப்போடு இருக்கும் உன்னை வெளியில் கட்டிப் போட்டு வைத்துள்ளார்களே,அதற்காகத்தான் வருத்தப்படுகிறேன்
இதில் வருத்தப்பட என்ன இருக்கிறது?
என்ன நண்பா, இப்படி கேட்கிறாய்? இப்போது பார், நான் எவ்வளவு மகிழ்ச்சியாக வெளியில் சுற்றி வருகிறேன். ஆனால் உன்னால் சுதந்திரமாக வெளியில் போக முடியுமா?
இவ்வாறு பேசிக் கொண்டு இருக்கும் போது வீட்டின் உள்ளே இருந்து டாமி, இங்கே வா என்ற குரல் கேட்டது.
கொஞ்சம் நேரம் நீ நிம்மதியாகப் பேசக்கூட முடியவில்லை பார்த்தாயா, அதற்காகத்தான் சொல்கிறேன்.இந்த வீட்டை விட்டு நீயும் வெளியே வந்து என்னைப் போல் சுதந்திரமாக இரு என்று ஆடு கூறிக் கொண்டு இருக்கும் போதே சரி, நான் யோசிக்கிறேன் என்று கூறியபடியே டாமி உள்ளே ஓடியது.
ஆஹா, நல்லா குழப்பி விட்டுட்டேன். சொகுசா வாழ்ந்துகிட்டு இருக்கற நீ, வீட்டை விட்டு வெளியே வா,அப்போதான் என்னை மாதிரி சாப்பாட்டுக்கு சிரமப்படுவ என்று மனதிற்குள் நினைத்து மகிழ்ந்தது ஆடு.
மறுநாள் அந்த வழியாகப் போகும் போது, என்ன டாமி, என்னைக்கு வீட்டை விட்டு வரப் போற? என்று கேட்டது அந்த ஆடு.
தெருவில போற ஆடுகளிலே ஒரு ஆடு எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு,அதை எனக்கு வாங்கி தர்றீங்களா? என்று நேத்து வீட்டம்மா, எங்க முதலாளிகிட்ட உன்னைத்தான் வாங்கி தரச் சொல்லி கேட்டாங்க.நீ என் நண்பனாயிட்டயே, அதான் யோசிக்கறேன். நீ இந்த வீட்டுக்கு வரும் போது நானும் உன்கூட இருக்கலாம்னு நினைக்கறேன். ஆனா,நீ சுதந்திரமா வாழ நினைக்கறயே, இந்த வீட்டுக்கு வருவியா? என்று டாமி கேட்டது.
உடனே சந்தோஷத்தில் ஹையா,ஜாலி, இந்த வீட்ல இருக்கனும்னு தானே ரொம்ப நாளா ஆசைப்படறேன். நேரத்துக்கு சாப்பாடு கிடைக்கும். அது இல்லாம மழை, வெயில் எதுவும் படாம ரொம்ப நிம்மதியா இருக்கலாம் அப்படின்னு தன் மனசில இருக்கற உண்மையைத் தன்னை மறந்து சொல்லிடுவச்சு ஆடு.
நீ என் மேல இருக்கற பொறாமையிலதான் என்னை வீட்ட விட் வரச் சொன்னேன்னு எனக்கு தெரியும், அதனாலதான் இந்த உண்மையை உன் வாயாலேயே நீ சொல்லனும்னு சும்மா அப்படிச் சொன்னேன். உன்னை அறியாம நீயும் உண்மையை சொல்லிட்ட, உன்னை எல்லாம் நண்பன்னு சொல்றதே தப்பு. இனி எப்பவும் என் கிட்ட பேசாதே என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றது டாமி.
சே, அவசரப்பட்டு உண்மையை உளறிவிட்டோமே என்று எண்ணி அந்த ஆடு தலை குனிந்து சென்றது.
நீதி: அடுத்தவர் சொல்வதை எல்லாம் அப்படியே நம்பாமல் நம் அறிவைக் கொண்டு சிந்தித்து செயல்பட வேண்டும்.
Post a Comment