.

தருமி எழுதிய கடவுள் என்னும் மாயை புத்தகமானது கடவுளைப் பற்றியும் மதங்களைப் பற்றியும் அலசுகிறது.மதங்களின் பெயரால் தினம் தினம் நிகழும் கொலைகள் வன்முறைகள் மற்றும் மதங்களின் உண்மைத் தன்மைகளை தனது பார்வையிலிருந்து சொல்லியிருக்கிறார் தருமி.இந்தப் புததகமானது ஏற்கனவே பல்வேறு மொழிகளில் எழுதப்பட்ட கடவுள் பற்றிய புத்தகங்களின் ஒரு பார்வை யாகவே வெளிவந்துள்ளது.குறிப்பாக ரிச்சட் டாக்கின்ஸ் எழுதிய கடவுள் என்னும் மாயை(The god delusion) என்ற நூலும் அன்னை தெரேசாவின் ஒளியே என்னிடம் வருவாய்The private writting Saint of Calcutta) என்ற நூலும் ரஸ்ஸல் எழுதிய நான் ஏன் ஒரு கிறிஸ்தவனல்ல என்ற நூலும் ரோடால்ப் கேசர் எழுதிய யூதாசின் நற்செய்தி(The Gospel of Judas) என்ற நூலும் எலைன் பேஜல்சின் ஞான மரபு நற்செய்திகள் என்ற புத்தகமும் கிறிஸ்டோபஸ் ஹிட்டனின் கடவுள் என்பது பெரிதொன்றுமில்லை(God is not great) என்ற நூலும் இப்னு வராக் எழுதிய நான் ஏன் ஒரு இஸ்லாமியனல்ல(Why I am not a Muslim) என்ற நூலும் ராகுல் சாங்கித்யன் எழுதிய இஸ்லாமிய தத்துவ இயல் என்ற புத்தகமும் காஞ்சி அய்லய்யா எழுதிய நான் ஏன் இந்து அல்ல என்ற நூலும் மற்றும் ராமானுஐ தாத்தாச்சாரியதர் எழுதிய இந்து மதம் எங்கே போகிறது என்ற நூலும் டான் பிரவுனின் டா வின்சி கோட் என்ற நூலும் விமர்சனத்திற்கு எடுத்துக் கொள்ளப் பட்டுள்ளன.இதனால் மதம்,கடவுள் பற்றி ஒவ்வொரு மதம் சார்ந்த மாபெரும் அறிஞர்கள்,பெரும் ஆராய்ச்சியின் பின் எழுப்பியுள்ள 12 நூல்களின் சாரத்தை ஒரு சேரப் படிக்கும் வாய்ப்பை இந்த நூல் தருகிறது.கிறிஸ்தவம் இஸ்லாம் இந்து என எல்லா மதங்களையும் விமர்சிக்கும் புத்தகங்களைத் தேர்ந்தெடுத்து தருமி அவற்றை தனது பார்வையில் எழுதியுள்ளார்.

மகான்கள் தமது காலத்தின் சர்வதிகாரத்திற்கும் உடமை வெறிக்கும் அநீதிகளிற்கும் எதிரான பொது நீதியை மிக்க துணிவுடன் தருகிறார்கள். ஆனால் பூசாரிகள் அவற்றிக்கு நேர் எதிராக மக்களை ஒடுக்கி ஆளும் வர்க்க த்தின் கேடயமாகவே மதங்களை அவர்கிளின் பெயர்களால் உருவாக்கினர் என்பதே உலகெங்கும் நடைமுறையாக உள்ளது.14,15ம் நூற்றா ண்டுகளில் ஐரோப்பாவின் பெரும் சர்வாதிகாரிகளான அறம் தவறிய போப்புக்களை எதிர்த்து உருவானதே எதிர்ப்புரட்சி மார்க்கமான ப்ராட்டஸ்டென்ட் கிறிஸ் தவம்.முகமது நபியின் மரணத்திற்குப் பின் பதவிப் போட்டியில் இரண்டு பட்ட இஸ்லாம் இன்றுவரை சொந்தச் சகோதரர்களையே கொன்று குவித்துக் கொண்டுள்ள அவலத்தைப் பார்க்கிறோம்.மதம் கடவுள் இவற்றின் குறைகளை அநீதிகளை எத்தனை பேசியபோதும் வறுமையும் அறியாமையும் தனியுட மையும் சுரண்டலும் மிக்க உலகத்தில் மதம் மயக்கும் அபின் மட்டுமல்ல அதுவே குரலற்ற மக்களின் குரவாக,இதயமற்ற உலகின் இதயமாகி உள்ளது என்று கார்ல்ஸ் மார்க்ஸ் கூறுவதை நாம் மறந்து விடமுடியாது.பல ஆயிரம் ஆண்டு கால இருள்,ஒரு நொடியில் விலகாது ஆனால் கீழை வானம் சிவக்கிறது என்ற புதிய நம்பிக்கையை இந் நூல் வளர்க்கிறது.

கிறிஸ்துவின் வாழ்வு உண்மைகள் அவரது போதனைகளை திரட்டி எழுதிய பல்வேறு சுவிஸேங்களை ஆதிக்க சக்திகளின் கேடயமாகிப் போனன மதம் எவ்வாறு இருட்டடிப்புச் செய்து அழித்தது எப்படி ஏகாதிபத்திய சர்வாதி காரிகளின் கையாளக கிறிஸ்தவ மதம் மாற்றப்பட்டது என்பதை பெர்ண்ரண்ட ரஸ்ஸல் உட்பட பல அறிஞர்கள் வெளிப்படுத்தியுள்ளதை இந் நூல் தருகிறது.

மத நம்பிக்கைகள் ஒரு மாயை அவை தவறான நம்பிக்கைகளின் பிறப்பிடம் என்ற கருத்தை இந் நூல் தருகிறது.மத மறுப்பாளர்கள் குற்ற உணர்வுகள் ஏதுமில்லாமல் மிகுந்த பெருமையோடு தலை நிமிர்ந்து நிற்க வேண்டும் மத மறுப்பு என்பது ஆரோக்கியமும் முழுச் சுதந்திரமும் அடைந்த மனதின் வெளிப்பாடு என்கிறது இந் நூல்.விழிப்புணர்வைத் தட்டி எழுப்பும் நான்கு முக்கியமானவைகளைத் இந் நூல் தருகிறது அவையாவன மத மறுப்பாளர்கள் எப்போதும் மனம் நிறைந்த மகிழ்ச்சியோடும் பொறுப்போடும் ஒழுக்கம் நிறைந்த அறிவபூர்வமான வாழ்க்கையை வாழ்கிறார்கள்,இவ்வுலகமும் பிரபஞ்சமும் தோன்றுவதற்கு ஒரு கடவுளும் அவரது விவேகமான படைப்புக்களும் தேவை என்னும் கருத்தை விட பரிணாமக் கோட்பாடுகளும் அதனோடு தொடர்புடைய இயல்புத் தேர்வும் அறிவியல் கோட்பாடுகளும் உயர்ந்தவை பொருள் பதிந்தவை,பிறக்கும் குழந்தைகள் தங்கள் பெற்றோரின் மதங்களோடு இணைக்கப்பட்டு கிறிஸ்தவ இஸ்லாமிய இந்துக் குழந்தைகள் என்று அடையாளப்படுத்துவது தவறு,கடவுள் மறுப்பு என்பது சுய சிந்தனையால் வருபவை.அதற்காக மத மறுப்பாளர்கள் பெருமையோடிருக்க வேண்டும் என்கிறது இந்தப் புத்தகம்.



ஆபிரஹாமிய மதங்கள் வன்முறையை ஊக்குவிக்கிறது என்று சொல்கிறது இந்தப் புத்தகம்.வன்முறைகளின் வழிகளிலேயே மதங்கள் கட்டமைக்கப்பட்டி ருக்கிறன என்கிறார் தருமி.குரானினைப் பற்றிச் சொல்லும் போது குரானின் நிகழ்வுகள் எல்லாமே ஒரு சமூகத்தின் மிகச்சிறிய பகுதிக் கானதாகவும் அங்கே நடந்த சிறு தகராறுகளிற்காகவும் உள்ளன யாவும் வாய்வழியாக அதுவம் அரபியில் மட்டும் வாய்வந்தவைகளாக உள்ளன என்கிறது இப்புத்தகம்.மேலும் குரான் பைபிள்களினை ஆதாரங்களுடன் கேள்விகளை எழுப்புகிறார் தருமி.அவற்றை நீங்கள் புத்தகத்தில் தெரிந்து கொள்ளுங்கள்.

கடவுளைப் பற்றிய சில வசனங்கள் என்னைக் கவர்கிறன அவையாவன பரம்பொருள் ஒன்று உண்டு என்பது ஒரு சர்வாதிக்காரத்தனமான நம்பிக்கை.இது முழுமையாக தனி மனித சுதந்திரத்தை வேரறுத்து விடும். அறிவியல் கண்டுபிடிப்புக்கள்,சுதந்திரமான வெளிப்பாடுகள் இவை இரண்டும் மத போதனைகளிற்கு மாற்றாக அமைய வேண்டும்,மதங்களின் முக்கிய முதலீடுகளே அறியாமையும் அறிவுத் தேடலுக்கு எதிர்ப்பும்,பெண்களை அடிமைப்படுத்துவதும்,குழந்தைகளை வலிந்து இழுத்து வைத்திரு ப்பதும்தான்,கடவள் இருக்கிறார் என்பதை நிரூபிக்க வேண்டிய கடமை நம்பி க்கையாளர்களுக்குத்தான் உள்ளது.கடவுள் மறுப்பாளர்களின் வேலையல்ல அது,படிப்பறிவோ புத்திசாலித்தனமோ அதிகமாக இருப்பவர்கள் மதங்களில் ஆழமான நம்பிக்கையில்லதவர்களாக இருக்கிறனர்.

மொத்தத்தில் இந்தப் புத்தகமானது மதம் என்னும் ஆடையைக் கழற்றி வைத்து விட்டு நடுநிலையிலிருந்து உண்மைகளைத் தெரிந்து கொள்ள உதவும்.மதம் என்னும் மாயக் கண்ணாடியில் சிக்குப்பட்டுக் கிடப்பதை தவிர்ப்போம். வாசிப்போம்.





2 Comments

  1. இன்றைய உலகில் சிந்திக்க வேண்டிய விஷயம் நிறைந்த விமர்சனம்.. 👌 😎 🇨🇭 அருமை

    ReplyDelete

Post a Comment

Previous Post Next Post