.

அடர்ந்த காட்டு வழியே நடந்து கொண்டிருந்த முயல், மூங்கில் குருத்துகளை உடைத்துச் சாப்பிட்டுக்கொண்டிருந்த யானையைப் பார்த்தது. 'வணக்கம் யானை அண்ணா. இன்று நாள் நன்றாக இருக்கிறது' என்றது. தன் காலடியில் நின்ற முயல் குட்டியை அலட்சியமாகப் பார்த்தது யானை. 'என் கால் நகம் அளவு கூட இல்லாத நீ எல்லாம் என்னிடம் நலம் விசாரிக்கும் அளவு வளர்ந்து விட்டாயா?' என்று கடுமையாகக் கேட்டது. முயல் குட்டியின் முகம் வாடிப்போனது. ஏன் யானை தன்னிடம் இப்படி பேசியது என்று யோசித்த படியே நடந்தது. காட்டையொட்டி இருக்கிற கடலில் வாழும் திமிங்கிலத்திடம் கேட்கலாமே என்று கடற்கரைக்கு ஓடியது.

முயலின் சத்தம் கேட்டு, தண்ணீருக்கு வெளியே எட்டிப் பார்த்தது திமிங்கலம். கடற்கரையில் இருந்த முயலைப் பார்த்து, "நீயா? என்னைக் கூப்பிட்டாயா?" என்றது.

'ஆமாம்' எனத் தலையாட்டியது முயல். அது அடுத்த வார்த்தை பேசுவதற்குள், “என் கண்ணைவிட சிறியதாக இருக்கிற உன்னிடம் பேசுவதற்கு எனக்கு நேரம் இல்லை" என்று யானையை விடக் கடுமையாகப் பேசிவிட்டுத் தண்ணீருக்குள் சென்றது திமிங்கலம்.

முயலின் சோகம் அதிகமானது. மீண்டும் திமிங்கிலத்தை அழைத்தது. "நான் உருவத்தில் சிறியவன் தான் இருந்தாலும் பலத்தில் உங்களைவிட பெரியவன். வேண்டும் என்றால் இண்டு பேரும் நேருக்கு நேர் மோதிப் பார்க்கலாமா?” என்று கேட்டது.திமிங்கிலத்துக்குச் சிரிப்பு தாங்க முடியவில்லை. இருந்தாலும் போட்டிக்கு ஒப்புக்கொண்டது.

நீளமான கயிறைக் கொண்டுவந்து திமிங்கிலத்திடம் கொடுத்தது. " இந்தக் கயிற்றின் இன்னொரு முனையை நான் பிடித்துக்கொள்வேன். நான் இழு என்று சொன்னதும் நீங்கள் இழுக்க வேண்டும்" என்று சொல்லிவிட்டு,கயிறுடன் காட்டுக்குள் ஓடியது.

அங்கே இருந்த யானையையும் இதேபோல போட்டிக்கு அழைத்தது."இதென்ன பெரிய விஷயம்? நான் ஒரு இழு இழுத்தால் நீ காணாமல் போய்விடுவாய்" என்று சொல்லிக்கொண்டே கயிறைத் தன் தும்பிக்கையில் கெட்டியாகப் பிடித்துக்கொண்டது யானை.

"நீங்கள் கொஞ்சம் பொறுங்கள் அண்ணா. நான் அந்தப் பக்கம் சென்று, கயிற்றின் இன்னொரு முனையைப் பிடித்துக்கொள்கிறேன். இழு என்று சொன்னதும் போட்டி தொடங்கும்" என்று சொல்லிவிட்டு, யானையின் கண்ணுக்குத் தெரியாமல் ஒரு புதரில் மறைந்துகொண்டது முயல்.

திமிங்கிலத்துக்கும் யானைக்கும் கேட்பது போல் சத்தமாக, "இழுக்கலாம்" என்று கத்தியது. உடனே அடுத்த முனையில் முயல் குட்டி இருப்பதாக நினைத்து இரண்டு விலங்குகளும் கயிறை வேகமாக இழுத்தன. இரண்டுக்கும் ஆச்சரியம் தாங்க முடியவில்லை. முயலுக்கா இத்தனை வலிமை இருக்கிறது என்று நம்ப முடியாமல் கயிறை வேகமாக இழுத்தன.

கொஞ்சம் விட்டால் திமிங்கிலம் தண்ணீரை விட்டு வெளியே வந்துவிடும் போல இருந்தது. யானைக்கும் அப்படித்தான்.தும்பிக்கையே உடைந்துவிடும் போல வலித்தது.இருந்தாலும் இரண்டும் தங்கள் முழு சக்தியையும் பயன்படுத்தி இழுத்தன.

பட்டென இரண்டாக அறுந்தது கயிறு. அந்த வேகத்தில் அருகில் இருந்த மரத்தில் மோதி மண்டை வீங்கியது யானைக்கு. திமிங்கிலம் கடலில் இருந்த பவளப்பாறையில் மோதி சிராய்த்துக்கொண்டது. முயலின் திட்டம் புரியாமல், உருவத்தை வைத்து திறமையை எடைபோட்டுவிட்டோமே என்று நொந்தபடி யானையும் திமிங்கிலமும் அதனதன் வேலையைப் பார்க்கக் கிளம்பின.

அன்று முதல் முயல் குட்டியை எங்கே பார்த்தாலும் புன்னகைத்தபடியே வணக்கம் சொன்னது யானை. திமிங்கிலமும் முயல் குட்டியிடம் மரியாதையாகப் பேசியது.





Post a Comment

Previous Post Next Post