பா.இராகவன் எழுதிய நிலமெல்லாம் இரத்தம் என்ற நூலானது இஸ்ரேல் பாலஸ்தீனிய பிரச்சனைகளின் ஆணிவேரை அலசுகிறது.இஸ்ரேலுக்கும் பாலஸ் தீனத்திற்கும் என்ன பிரச்சனை எவ்வாறு எப்படி இந்த யுத்தம் தொடங்கியது இதற்கு ஒரு முடிவே இல்லையா என்பதை வரலாற்றுப் பின்னணி கொண்டு அலசியிருக்கிறார் ராகவன்.இஸ்ரேல்-பாலஸ்தீனியப் பிரச்சனை என்பது 1948ம் ஆண்டு இஸ்ரேல் உருவாக்கப்பட்டபோது தொடங்கியதல்ல மாறாக ஆயிரமாயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்து அங்கே இருந்து வருகிற சிக்கல். தனித்துவம் மிக்க இரண்டு மதங்களின் வலுவான முரண்பாட்டுப் பின்னணியில் திறமை மிக்க அரசியல் வாதிகளால் முன்னெடுத்துச் செல்லப்பட்ட மக்களின் உணர்வு சார்ந்த பிரச்சனை ஆகும்.
குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் ஒரு வருடகாலம் தொடர்ந்து வெளியான நிலமெல்லாம் இரத்தம் தொடரின் தொகுப்பே இப்புத்தகம் ஆகும்.அந்தத் தொடரின்போதே இராகவன் நிறைய வாசகர்களைச் சம்பாதித்துக் கொண்டு விட்டார் அதாவது அவரது எழுத்துக் கென்று தனி வாசகர்களை உருவாக்கி விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.இதனை விட தலிபான்களின் வரலாற்றைச் சொல்லும் மாயவலை,அமெரிக்காவின் வரலாற்றைச் ஒன்றும் விடாமல் சொல்லும் டாலர் தேசம் உள்ளிட்ட அரசியல் வரலாற்றுத் தொடர்களை இராகவன் குமுதம் ரிப்போர்ட்டர் இதழுக்காக எழுதியுள்ளார். அவையும் ஏற்கனவே புத்தகங்களாக வெளிவந்துள்ளன.
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இப் புத்தகத்தை தொய்வில்லாமல் சோர்வடைய வைக்காமல் எழுதியிருக்கிறார் இராகவன் அதற்காக அவர் அனேகமான தகவல்களைச் சேகரித்திருக்கிறார். நிறைய நித்திரையில்லாத இரவுகளையும் எதிர் கொண்டிருக்கிறார்.ஆனால் கள ஆய்வு செய்து எழுதப்பட்ட நூல் இது அல்ல அதனை இராகவன் முன்பே சொல்லி விடுகிறார்.தனக்கு கள ஆய்வு செய்யும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை யென்று.கிடைக்கப்பெற்ற நூல்களின் பிரதிகளை ஆய்வு செய்து பிரதிகளின் வழியாக வரலாற்றினைப் பின்னோக்கி பயணம் மேற்கொள்கிறார். சாத்தியமான மட்டும் நேர்மையுடன் இந்த நூலைத் தொடரைத் தந்துள்ளார் இராகவன்.அதற்கு அவர் ஒரு கிறிஸ்தவனாகவோ யூதனாகவோ இஸ்லாமியனாகவோ இல்லை என்பது வசதியாகிவிட்டது.எந்த மதத்தினரையும் இந்த தொடரில் இராகவன் விமர்சிக்கவில்லை என்பதை சுட்டிக் காட்டலாம்.அவர் ஆய்வு மட்டும்தான் மேற்கொண்டிருக்கிறார்.சரி எது பிழை எது என்பதை இந்தத் தொடரில் எந்த இடத்திலும் இராகவன் சுட்டிக் காட்டவில்லை இதன் பொருள் இராகவன் எந்தப் பக்கமும் இல்லை என்பதுதான்.
யூதர்கள் மற்றும் இஸ்லாமியர்களின் வரலாற்றை உள்ளடக்கிய இந்த வரலாற்றைப் பொறுத்தவரை சில வரையறைகளை தான் வகுத்துக் கொண்டதாக இராகவன் தனது முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.அதாவது கூடிய வரை தொன்மையான ஆதாரங்களை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொண்டுள்ளார்.பிற்கால வரலாற்றாசிரியர்கள் நூல்களை தொடர்ந்து அவர் வாசித்தாலும் அரசியல் கலப்பற்ற புராதன வரலாற்றாசிரியர்களின் பிரதிகளுடன் அவற்றை ஒப்பிடமால் அவர் மேற்கோள் எதையும் காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.தவிர ஒவ்வொரு சம்பவமும் யூத கிறிஸ்தவ இஸ்லாமிய வரலாற்று நூல்களில் எப்படியெப்படி சித்தரிக்கப்பட்டிருக்கிறன என்று ஒப்பிட்டு காட்டியுள்ளது இந் நூல்.
சொந்த மண்ணில் அகதிகளாக வாழும் பாலஸ்தீனிய அரேபியர்களுக்கு பிற அரபு தேசங்கள் ஏன் கை கொடுப்பதில்லை?மத்திய கிழக்கின் வளமையும் செழுமையும் பாலஸ்தீனியர்களிற்கு மட்டும் ஏன் எப்போதும் இல்லாமல் போகிறது இதற்கான விடைகள் நிச்சயம் இந்தப் புத்தகத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறன.அவற்றை புத்தகத்தினை வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்.
ஒதுங்க ஓரிடமில்லாமல் உலகெங்கும் உயிருக்குப் பயந்து ஓடியவர்கள் யூதர்கள்.அப்படிப்பட்டவர்கள் தமக்கு வாழ இடமளித்த பாலஸ்தீன அரேபியர்களை வஞ்சிக்க நினைப்பது எதனால்..?
பாலஸ்தீன் போராளி இயக்கங்களின் தோற்றம் முதல் செயல்பாடுகள் வரையிலான விரிவான அறிமுகத்தை தருகிறது இந்த நூல்.யாசிர் அரபாத்தின் ஆயுதப் போராட்டம் அமைதி முயற்சிகள் அவற்றின் விபரீத விளைவுகள் இஸ்ரேலிய ஆட்சியாளர்களின் கண்ணோட்டம் உலக நாடுகளின் கருத்துக்ள் என்று விரிவான களப் பின்னணியுடன் ஆதாரபூர்வமான அரசியல் வரலாறாக எழுதப்பட்ட புத்தகம்தான் நிலமெல்லாம் இரத்தம்.
இருபதாம் நூற்றாண்டின் மிகப்பெரிய மோசடி என்னவென்றால் அது இஸ்ரேல் பாலஸ்தீனத்திற்கு இழைத்ததுதான் என்கிறது இந்நூல்.21ம் நூற்றாண்டிலும் அது சிக்கலுக்குரிய விடயமாகவே இருக்கிறது.அந்த மோசடியில் பாலஸ்தீன் என்ற ஒரு தேசம் இன்று வரை கற்பனையாகவே காணப்படுகிறது. அங்கே பொருளாதாரம் உயரவில்லை.கல்வி வளரவில்லை கலவரங்களும் பட்டினிகளும்தான் எஞ்சியிருக்கிறன.ஒவ்வொரு நாளும் போராட்டங்கள். கற்பனைக்கும் அப்பாற்பட்ட தீவிரவாதச் செயல்கள் அங்கே நடந்தன, கொத்துக் கொத்தாக கொன்று குவித்தார்கள்,ஆண் பெண்,குழந்தை என்று பாகுபாடு பார்க்காமல் கொல் கொல் என்ற சொல்லே தாரக மந்திரமாக இருந்தது.தினசரி வாழ்வு என்பது வன்முறையாகவே காணப்படுகிறது என்கிறது நிலமெல்லாம் இரத்தம்.
யூதர்கள் தங்கள் வரலாறு முழுவதும் ஒடுக்கப்பட்டுக் கொண்டே வந்திருக்கிறார்கள்.புராண காலங்களில் அவர்கள் ஓடினார்கள்.சரித்திர காலங்களில் தலை தெறிக்க ஓடினார்கள்.இயேசு என்ற மனிதர் யூத குலத்தில் பிறந்து கலகம் விளைவித்த பிறகு கிறிஸ்தவ மதம் தோன்றி யூத மதத்திற்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட போதும் அவர்கள் ஓடினார்கள்.கிறிஸ்தவர்கள் யூதர்களை ஒடுக்கிக் கொண்டேதான் இருந்தார்கள்.ஆனாலும் அவர்கள் எதிர்க்கவில்லை.ஒரு தேவ தூதனுக்காகக் காத்திருந்தார்கள்.இப்போதும் காத்திருக்கிறார்கள்.யூதர்களிற்கு கிறிஸ்தவர்களால் ஏற்பட்ட பிரச்சனைகளைக் காட்டிலும் அரேபிய முஸ்லிம்களால் பெரிதாக எந்தப் பிரச்சனைகளும் ஏற்பட்டதில்லை.எந்த விரோதமும் இருந்ததுமில்லை இஸ்லாமிய கலிபாக்கள் யூதர்களை நல்ல விதமாகவும் மரியாதையுடனும் தான் நடத்தினர்.ஆனாலும் யூதர்களால் ஏன் பாலஸ்தீன் முஸ்லிம்களுடன் ஒட்ட முடியவில்லை என்பதற்கான கேள்விதான் இஸ்ரேல்-பாலஸ்தீன் பிரச்ச னையின் மையப் புள்ளி.யூதர்களால் முஸ்ஸிம்களுடன் மட்டுமல்ல கிறிஸ்த வர்களுடனும் நல்லுறவு கொள்ள முடியவில்லை.நம்ப முடியாத அளவிற்கு பெருகியிருந்த அவர்களது உயர்வு மனப்பான்மைதான் இதன் அடிப்படைக் காரணமாகும்.கடவுளுக்கு உகந்த இனம் தங்களுடையது என்கிற புராதன நம்பிக்கையின் வாசனையை இன்றளவும் தக்க வைத்து அதையே சுவாசித்துக் கொண்டிருப்பது இன்னொரு காரணம்.தங்களது கல்வி புத்திக் கூர்மை தொழில்தேர்ச்சி கலாச்சார பலம் போன்றவை அளிக்கும் தன்னம்பிக்கை மற்றொரு காரணம்.தலைமுறை தலைமுறையாக நூற்றாண்டு நூற்றாண்டாக இவற்றைக் கைவிடாமல் தொடர்ந்து அவர்கள் கடைப்பிடித்து வருவது எல்லாவற்றுக்கும் மிக முக்கிய காரணம் ஆகும்.
யூதர்களைப் பற்றி சொல்லியிருக்கும் இராகவன் அவர்கள் அப்படித்தான் என்கிறார் அதாவது ஒரு தலைமுறை பூர்விக இடத்தை விட்டு இடம்பெயர்ந்து போனபின் நூறு அல்லது இருநூறு வருடம் கழித்து அடுத்த தலைமுறை இந்த பூர்வீpக இடத்தை நோக்கி வரும்போது தாமே வாழ்ந்த மண்ணுக்கு திரும்பி வந்தது போல உணர முடியுமா வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம் நமது முன்னோர்கள் வாழ்ந்த இடம்அ என்று.ஆனால் யூதர்கள் அப்படித்தான் இருந்தார்கள்.இது யூத சமுதாயத்தில் புதைந்து கிடக்கும் ஆச்சரியங்களில் ஒன்று.ஜெருசலேம் என்று சொல்லி விட்டால் போதும் உடனே எந்த யூதரும் அதன் திசையை நோக்கி வணங்கக் கூடியவர்கள்.தங்கள் மண் என்று யோசித்துக் கொண்டுதான் இருப்பார்கள்.
யூதர்களைப் புரிந்து கொள்வது என்றால் ஒரு யூதர் ஒரு விடயத்தில் ஈடுபடுகிறார் என்றால் அதில் மற்றவர்களைக் காட்டிலும் அவருக்குத்தான் வெற்றி வாய்ப்பு அதிகம்.ஏதாவது செய்து தன்வசப்படுத்திக் கொள்வது யூதர்களின் வழக்கம்.உண்மையில் அதற்கும் மதத்திற்கும் தொடர்பில்லை அந்த இனத்தவர்களின் இயல்பு.அப்படியே பழகி விட்டார்கள்.
18ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்தே அரேபியர்களிற்கு யூதர்களைப் பிடிக்காமல் போய்விட்டது..இதற்கு அவர்கள் சொல்லும் காரணங்கள் அவர்கள் அதிகாரிகளை வளைத்துப்போட்டு எங்கள் நிலங்களை ஆக்கிரமித்துக் கொள்கிறார்கள்,வட்டிக்குப் பணம் கொடுக்கிறார்கள்,அரேபியச் சிறுவர் களையும் சிறுமிகளையும் வீட்டு வேலைக்கு வைத்துக் கொள்கிறார்கள் யூதக் குழந்தைகளை முஸ்லிம் குழந்தைகளுடன் பழக விடுவதில்லை,யூதக் குருமார்கள் ஆணவத்துடன் நடந்து கொள்கிறார்கள், முகமது நபியை அவமதி க்கிறார்கள் இன்னமும் பிற.இந்தக் காரணங்களினால் அதுவரை சகிப்புத்த ன்மையுடன் வாழந்த முஸ்லிம்களிற்கு யூதர்களைப் பிடிக்காமல் போயிற்று. இதுவே பின்னர் பூதாகரமாக வெடித்து இன்றுவரைத் தொடர்கிறது.
பாலஸ்தீனியர்கள் தங்கள் வரலாற்றில் இரண்ட பெரும் தவறுகளைச் செய்து யூதர்களிற்கு தாங்களாகவே பாலஸ்தினை பிரிக்கக் காரணமாகிவிட்டார்கள் என்கிறார் இராகவன்.அதாவது முதலாவது விடயம் யூத நிலவங்கிகளின் நோக்கம் தெரியாமல் தங்கள் நிலத்தை இழந்தது இரண்டாவது இரண்டாம் உலகப்போரில் ஹிட்லரை ஆதரித்தது.இவ்வாறாக அரேபிய முஸ்லிம்கள் தம் தலையில் தாமே மண்ணள்ளிப் போட்டுக் கொண்டார்கள்.
நவீன இஸ்ரேலிய பாலஸ்தீனப் பிரச்சனையானது யூதர்கள் அரபுக்களின் நிலத்தை அபகரித்தததில் இருந்துதான் தொடங்குகிறது.நிலவங்கிகள் தோற்றுவிக்கப்பட்ட காலம் முதற்கொண்டு இது பூதாகரமாக நடக்கிற விடயம். உண்மையில் 1948 யுத்தத்தின் போது ஜோர்டானும் எகிப்தும் தமக்கு இலாபமாகக் கிடைத்த நிலப்பரப்பை பாலஸ்தீனிய தேசத்திற்காக அரபுக்களிடம் திருப்பிக் கொடுத்து சுதந்திர பாலஸ்தீனை உருவாக்கி அளித்திருந்தால் இத்தனை தூரம் பிரச்சனை வளர்ந்திருக்காது.அப்போதே முடிந்திருக்கும் அரபுக்களிடம் ஒற்றுமை இல்லாத காரணத்தினால் ஒருமித்த குரலில் இஸ்ரேலை எதிர்க்க முடிவதில்லை.சுய இலாபத்திற்காக பாலஸ்தீனை உருவாக்காமல் விட்டு விட்டார்கள் என்பதையே சொல்ல முடியும்.இங்கு நியாயம் தர்மம் எல்லாவற்றுக்கும் இடம் கிடையாது.
நாலாயிரம் ஆண்டுகளாகத்தொடரும் பிரச்சனைக்குத் தீர்வுகள்தான் என்ன அல்லது தீர்வே கிடையாதா என்று யோசிக்கும் போது இராகவன் தனது யோசனையைக் கூறுகிறார்.நாலாயிரம் வருடங்களாக பிரச்சனை இருக்கிறததே தவிர அமைதி இல்லை.எந்தக் காலத்திலும் பிரச்சனை ஒன்று போலவே இருக்கிறது.இதற்கான காரணங்களாக இஸ்ரேலிய ஆட்சியா ளர்களிற்கு பாலஸ்தீனை ஒரு சுதந்திர தேசமாக வாழவிடுவதில் விருப்பமின்மை,போராளி இயக்கங்களின் செயற்பாடுகள்,அரபு நாடுகளின் ஒற்றுமையின்மை,அகதிகள்,ஈகோ பிரச்சனை
இரண்டு தேசங்களையும் அருகருகே அமைதியாக பிரச்னைகளை களைந்து இருக்க விடுவதுதான் பிரச்சனையின் தீர்வாகும்.ஜெருசலேம் பொதுவான நகரமாக ஐ.நா கண்காணிப்பில் இருப்பதே சிறப்பு என்பதை இந்த நூல் கூறுகிறது.ஏனெனில் ஜெருசலேம் யாருடையது என்ற கேள்வி இருக்கும் வரை பாலஸ்தீனுக்கு அமைதி கிடையாது.மனதளவில் இரு தரப்பினரும் இதனை ஏற்றுக் கொள்வதே பொருத்தமானதாகும்.
மொத்தத்தில் நிலமெல்லாம் இரத்தம் இரத்தத்தில் நனைந்த கறுப்பு பக்கங்களைச் சொல்கிறது வாசிப்போம்.புரிதல் உண்டாகட்டும்.
நிலமெல்லாம் இரத்தம் புத்தகத்தினை வாசிப்பதற்கு கீழுள்ள இணைப்பை அழுத்தம்.
Post a Comment