.

அமெரிக்காவைச் சேர்ந்த தோமஸ் அல்வா எடிசன்(Thomas Alv Edison), சிறு வயதில் தீவிர காய்ச்சலில் கஷ்டப்பட்டு தாமதமாக, எட்டரை வயதில்தான் பாடசாலைக்கு சென்றார். மூன்று மாதங்களுக்கு பின் ஒரு நாள் 'மூளைக் கோளாறு உள்ளவன் என்று ஆசிரியர் திட்டியதால் அவரது பள்ளிப் படிப்பு முற்றுப் பெற்றது! எனவே, முன்னாள் ஆசிரியையான அவரின் தாயார் பாடசாலையிலிருந்து எடிசனை விலக்கிவிட்டுத் தானே அவருக்கு பாடங்கள் சொல்லிக் கொடுத்தார்.எடிசன் தாயிடம் மூன்று ஆண்டுகள் வீட்டிலேயே, கல்வி கற்றார்.

பதின்மூன்று வயதில் எடிசன், பைன் எழுதிய ஆக்க நூல்களையும், ஐசக் நியூட்டன் இயற்றிய 'கோட்பாடு' என்னும் நூலையும் ஆழ்ந்து படித்தார். தனது 21ஆவது வயதில், மைக்கல் பரடேயின் செய்தித்தாளில் இருந்த மின்சக்தியின் பயிற்சி ஆராய்ச்சிகளை ஆழ்ந்து படித்து முடித்தார். இவை அவரது வாழ்க்கையில் ஒரு பாரிய திருப்பத்தை உண்டாக்கியது. கணித அறிவு, விஞ்ஞான அறிவு எதுவும் முறையாகக் கற்காத எடிசன்,சோதனைகள் மூலம் மாத்திரமே திரும்பத் திரும்ப முயன்று, பல அரிய தொழில்நுட்பக்கருவிகளைப் படைத்தார்.

1860 இல் இவருக்கு புகையிரத நிலையத்தில் தந்திக் கருவி இயக்குனர் வேலை கிடைத்தது.தந்திக் கருவி இயக்குனராக வேலை செய்த எடிசன் வந்து சேரும் தந்திச் செய்திகளை வேறு கம்பியினூடாக மீள அனுப்பக் கூடிய தானியங்கிக் கருவியொன்றை முதலில் கண்டுபிடித்தார்.

1877இல் ஒலியைப் பதிவு செய்யக் கூடிய கருவியைக் கண்டுபிடித்தார். மக்கள் முன்னிலையில் எடிசன் ஒரு பாடலை தானே பாடி பதிவு செய்து அக்கருவியை இயக்கி பாடலை ஒலி பரப்பினார்.

இவர் கண்டுபிடித்த முதல் மின் விளக்கு, 1879 ஆம் ஆண்டு காட்சிப்படுத்தப்பட்டது. எடிசன் நியூயோர்க் நகரின் பேள் வீதியில், பொது மின்சார வழங்கலுக்கான முதலாவது வர்த்தக ரீதியான நிலையத்தை 1882 இல் ஆரம்பித்தார்.அமெரிக்காவில் மின்னுற்பத்தி தொழிலின் ஆரம்பமாக 400 மின்விளக்குகளை வாடிக்கையாளர்களுக்கு விநியோகம் செய்தார்.எடிசனின் மின்குமிழும் அவரது புகழும் உலகமெல்லாம் பரவியது.

எடிசன் 1883இல் சில பரிசோதனைகளை செய்யும் போது சூடான உலோக இழைகளில் இருந்து இலத்திரன் பாய்ச்சல் நிகழ்வதை அவர் அவதானித்தார். எடிசன் விளைவு என அழைக்கப்படும் இந்தத் தோற்றப்பாடு நவீன இலக்ட்ரோனிக் தொழில் நுட்பத்திற்கு வழி வகுத்தது என்பதை நாம் மறந்திட முடியாது.எடிசன் 1888இல் சினிமா படம் காட்டும் கருவியை கண்டுபிடித்தார். மேலும் எடிசன் 1913 இல் முதலாவது பேசும் சினிமா படக் கருவியை கண்டுபிடித்தார்.

எடிசனுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து,பிரான்ஸ் ஆகிய நாடுகள் பல விருதுகள் வழங்கி கௌரவித்தது.

தோமஸ் அல்வா எடிசன் 1931ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் பதினெட்டாம் திகதி தனது 84 ஆவது வயதில் காலமானார். அமெரிக்க ஜனாதிபதி ஹெர்பர்ட் ஹூவர், எடிசனின் உடல் அடக்கத்தின் போது அமெரிக்காவெங்கும் மின் விளக்குகளை, ஒரு நிமிடம் அணைக்கும்படி ஆணையிட்டிருந்தார்.




Post a Comment

Previous Post Next Post