.

பரமனூரருகே சிவானந்தர் என்ற அடிகள் ஆசிரமம் அமைத்து வசித்து வந்தார்.அவரது அவரை சீடர்கள் தம் இல்லங்களுக்கு அழைத்த போதெல்லாம் அவர் தம் ஆசிரமத்திலிருந்து நடந்தே அவர்களது வீடுகளுக்குச் சென்று உணவு உண்டு அவர்கள் கொடுக்கும் காணிக்கைகளோடு ஆசிரமத்திற்குத் திரும்பி வருவார். இம்மாதிரி பல ஆண்டுகள் நடந்தது.

சிவானந்தருக்கு வயது எழுபதிற்கு மேலாகி விடவே அவரால் முன் போல நடக்க முடியவில்லை. இதைக் கண்ட அவரது சீடர் ஒருவர் ஒரு கழுதையைக் கொண்டு வந்து கொடுத்து 'சுவாமி! உங்களால் எங்கும் நடந்து போக முடியவில்லை. என்னால் நிறையப் பணம் கொடுத்து ஒரு குதிரை வாங்கிக் கொடுக்க முடியவில்லை. என்னிடமிருந்த பணத்தில் இதைத் தான் வாங்க முடிந்தது. இதனை ஏற்று இதன் மீது அமர்ந்து நீங்கள் எங்கும் போய் வாருங்கள்'' என்று பணிவுடன் கூறினான்.

பக்தி சிரத்தையுடன் சீடன் கொடுத்த கழுதையை சிவானந்தர் ஏற்று அது முதல் அதன் மீது அமர்ந்து செல்ல வேண்டிய இடங்களுக்கெல்லாம் போகலானார். சிவானந்தர் எங்கு போனாலும் அவர் கழுதை மீதிருந்து இறங்கு முன் அவருக்கு மாலைகள் போட்டு சீடர்கள் வரவேற்றனர்.

அந்த மாலைகளிலிருந்து மலர்கள் உதிர்ந்து கழுதை மீது விழும் போதெல்லாம் மக்கள் தன்னையும் கௌரவிக்கிறார்களென்று அக் கழுதை நினைத்து விட்டது. மேலும் சிவானந்தரின் கழுதை என்றாலே அதற்கு நல்ல தீவனம் வைத்து சீடர்கள் அதனை கவனித்துக் கொண்டார்கள். இதனால் கழுதை தன் மதிப்பு உயர்ந்து விட்டது என எண்ணியது.

சிவானந்தரை அப்பகுதி ஜமீன்தாரர் அடிக்கடி அழைத்து கௌரவித்ததால் அவர் தம் கழுதை மீது அமர்ந்தே அவரது மாளிகைக்குச் சென்று வந்தார். அதனால் அவரது கழுதைக்கு விசேஷ கவனிப்பும் நல்ல தீனியும் நிறையக் கிடைத்து வந்தது. இதனால் அக் கழுதை சிவானந்தர் ஜமீன்தாரர் வீட்டிற்கு மட்டுமே போய்க் கொண்டிருக்க வேண்டுமென விரும்பியது.




ஒருமுறை சற்றுத் தொலைவிலுள்ள கிராமத்து சீடர் ஒருவர் சிவானந்தரைத் தன் ஊருக்கு அழைத்துக் கொண்டு சென்று கொண்டிருந்தார். வழக்கம் போல சிவானந்தர் தம் கழுதை மீது அமர்ந்து செல்லவே அவர் கூட சீடரும் அவருடன் வந்தவர்களும் நடந்து சென்று கொண்டிருந்தார்கள். அவர்கள் நான்கு பாதைகள் சேரும் இடத்தை அணுகிக் கொண்டிருந்தார்கள். அதில் இடதுபுறமாக செல்லும் பாதை ஜமீன்தாரரின் ஊருக்கும் வலதுபுறப்பாதை அச்சீடரின் ஊருக்கும் கொண்டு செல்லும்.கழுதை அந்த சந்திப்பை அடைந்ததும் இடது புறம் போக முயலவே சிவானந்தரும், அந்தச்சீடரும் அவரோடு வந்தவர்களும் அக் கழுதையை வலது புறப்பாதையில் திருப்ப முயன்றனர்.ஆனால் கழுதையோ முரண்டு பிடித்து சிவானந்தரைக் கீழே தள்ளி விட்டு தன்னைத்திருப்ப முயன்றவர்களைப் பின்னங்கால்களால் உதைத்து விட்டு ஜமீன்தாரின் வீட்டை நோக்கி ஓடியது.

 ஒரு சில நிமிடங்களில் அது ஜமீன்தாரரின் மாளிகையின் முன் நின்று 'காள் காளென்று கத்தியது. ஒரு கழுதை வந்து பலமாகக் கத்தி தொந்தரவு செய்கிறது என்று கூறி ஜமீன்தாரர் அதை அடித்து விரட்டச்சொன்னார். ஜமீன் பணியாட்களும் தடிகளால் அதனை ஓட ஓட அடித்து விரட்டினார்கள். அப்போதுதான் அக் கழுதைக்கு தான் சிவானந்தரைச் சுமந்து வந்தாலே தனக்கு தீனியும் சிறப்பு கவனிப்பும் கிடைக்கும் என்றும் தனியாக வந்தால் அடியும் உதையும் கிடைக்குமென்றும் தெரிந்தது.



Post a Comment

Previous Post Next Post