.

 புத்தகத்தின் பெயர்:- தனுஜா 

 பதிப்பாசிரியர் :- ஷோபா சக்தி 

நூல் வெளியீட்டு.-கருப்புப் பிரதிகள் 

 விலை:-  330 /-

 பக்கம்:- 342 

எட்னா  எரிமலை தனது புகைச்சலைத்தான் ஆரம்பத்தில் மக்களுக்குக் காட்டியது. சில நாட்களின் பின் தனது சுயரூபத்தை வெளியிட்டது. கரக்கட்டோவாவும் தனது விம்லைத்தான் முதலில் காட்டியது.கடைசியில் தனது முழுப்பலத்தையும் கக்கியபடி யாவாவிலுள்ள ஒரு தீவையே அழித்தது. இதேபோன்றுதான், தமிழர்களது விடுதலைப் போராட்டம் 1958 ல் புகையுடன் ஆரம்பித்து, 1983 ல் நடத்திய திடீர் தாக்குதலில் 12 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதும், அது எரிமலையாக தமிழ் மக்கள்மீது வெடித்தது. அதனைத் தொடர்ந்து தமிழ் மக்கள் அகதிகளாய் பல நாடுகளில் தஞ்சமடைந்தனர். அதிலும் குறிப்பாக, இந்தியத் தமிழ்நாட்டில் ஏராளமான மக்கள் எந்தவித ஆவணங்களுமின்றி, உயிர் பிழைத்தால் போதும் என்று கரை ஒதுங்கினார்கள். அப்படி ஒதுங்கப்பட்ட பல நூற்றுக்கணக்கான குடும்பங்களில் ஒருவர்தான் தனுஜா  அப்போது அவருக்கு வயது வெறும்  3 மாதங்கள் தான்.

முதலில் திருநங்கை  என்றால் யார்? அவர்களது கலாச்சாரம் என்ன? ,அவர்கள் எப்படி திருநங்கையானார்கள், அவர்களை பிறந்த வீட்டிலிருந்தும், சமூகத்திலிருந்து ஏன் துரத்தி அடிக்கப் படுகிறார்கள்,அவர்கள் ஏன் இந்த நிலை குலைந்த தொழிலுக்குத்  தள்ளப்படுகிறார்கள், கண்டிப்பாக இது பரம்பரைத் தொழிலா, இதிலிருந்து விடுதலை கிடைக்காதா, இதனை ஊக்குவிப்பது எந்த சமூகம், இது போன்ற பல கோள்விகளுக்கு, மிகத் துணிவாகவும், ஆச்சரியமாகவும், மக்கள் அறிந்திராத பல உண்மை நிகழ்வுகளையும், தான் அனுபவித்த துன்பங்கள், கொடுமைகள், மன வேதனைகள், மன உளைச்சல்கள், எதிர்காலத்தில் நானும் சர்வ சாதாரணமான ஒரு பெண்ணாக வாழ முடியாதா என்பதனை எடுத்துக் காட்டுகிறது இந்த அருமையான நூல். கண்டிப்பாக எல்லா மக்களும் ( குறிப்பாகத் தமிழ் மக்கள்) வாசித்து அறிந்து கொள்ள வேண்டிய புத்தகம். ஆனால் மிக மிக மிக முக்கியமாக இதனை வசிப்பவர்கள் பொறுமையும், சில பாலியல் நிர்ப்பந்தங்களையும் வாசித்து, அதனையும் கடந்து போகத் தயாராக இருப்பது சிறந்தது. இப்படி,ஒரு பெண் (பையனாக இருந்து பெண்ணாக மாறிய)தனது சகல விடயங்களையும் 29 வருட வாழ்க்கையில், தனது குடும்பத்தாரின் ஒத்துழைப்பு இன்றி, வலைத்தளங்கங்களின் மூலமாகவும், தனது திருநங்கை குடும்பதாரின் உதவியோடு நடத்தப்பட்ட போராட்டமே, தனுஜா குறுகிய காலத்தில் ஒரு சில தன் வரலாறுகளைப்  படித்தாலும், எனது சிந்தனையைத் தூக்கிப் போட்டது இந்தத் திருநங்கையின்  போராட்டம். நண்பர்களே, இந்த நூலைப் படிக்கும் போது, ஏன் இதை வாசிக்க ஆரம்பித்தேன் என்று தோன்றியது. அவ்வளவு மனவேதனைகளைத் தாங்கியபடியே வரிகள்  சென்றன.

தற்போது டுசில்டோர்ப் (Düsseldorf) என்ற நகரத்தில் (Germany) வாழ்ந்துவரும் இவரது மனத்தைரியத்தை  வாசித்து முடிவை அறிய வேண்டும் என்ற ஆவல், தொடர்ந்து வாசிக்க என்னைத் தூண்டியது.

எல்லாவற்றையும் கூட்டிக் கழித்துப் பார்க்கும் போது தனுஜா (ஆரம்பத்தில் தனுஜான் என்ற பையன்) வின் வாழ்க்கையில் அவர் அன்புக்காகவே ஏங்கியதாக உணரமுடிகிறது. 3 வயதிலேயே தான் இந்த உணர்வை உணர்ந்ததாகவும், அதன்பின் வந்த ஆண்டுகளில் அதனை வெளிப்படுத்த முடியாமலும், இடையில் தான் ஆணாகவே இருக்க முயற்சி செய்து தோற்றுப் போனதாகவும் இங்கே பதிவு செய்கிறார். தான் திருநங்கையாக மாறுவதற்குமுன் தனது குரலை வைத்து சிலர் அடையாளம் கண்டபின், தன்னை பாலியல் இன்பத்துக்கே கட்டாயப்படுத்தியதை நினைவு கூறும் தனுஜா இதனை நான் யாரிடம் போய் பகிர்ந்து கொள்வது என ஆதங்கப்படும் அவர், இப்போது தக்க தருணம் வந்துவிட்டது, எனவே அத்தனையும் உடைத்து துண்டு துண்டுகளாக வாசிப்பளர்களாகிய வாசகர்கள் முன் வைக்கிறேன் என்று சந்தோஷம் கொள்கிறார்.

கிட்டத்தட்ட 18 வயது வரைக்கும் தான் பட்ட கடும்(வீட்டில்) சொற்களயும், அடி, உதை, திட்டு போன்றவற்றை மன வேதனையுடன் பகிர்ந்து கொள்ளும் தனுஜா இறுதியில் தன்னை ஒரு பெண்ணாக தனது பெற்றோர்களும், சகோதரர்களும், சொந்தக்காரர்களும் ஏற்றுக் கொண்டதை மிக சந்தோஷமாக பகிர்ந்து கொள்கிறார். தனக்கு ஏற்பட்ட பெண் உணர்ச்சிகளின் வழியே தான் எப்படியும் அதனை அடைந்தே தீருவேன் என்ற நம்பிக்கையில், அதற்கான ஏற்பாடுகளை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தி அதில் வெற்றியும் அடைந்தார்.


பதிப்பாசிரியர்
   ஷோபா சக்தியின் எழுத்துருவாக்கம், வாசிப்போரை இடை நிறுத்தாது என அடித்துச் சொல்வேன். அத்துடன் அவரது வரிகளில் இலங்கைத் தமிழனின் சொல்லாடலைக் காணக்கூடியதாக உள்ளது. மக்களால் புறக்கணிக்கப்பட்ட சில சொற்களைத் துணிவுடன் கூறுவது அவரது பாணி என எண்ணத் தோன்றுகின்றது. அவருக்கு எனது வாழ்த்துக்கள்.

தனுஜா தனது உறுப்பு சத்திரசிகிச்சை பற்றிய விளக்கம், அதனைத் தொடர்ந்து எப்படி அதனை பாதுகாப்பது போன்ற பல மருத்துவ முறைகளை விளக்குகிறார். அதனைத் தான் வளர்ந்த நாடாகிய ஜேர்மனியில் செய்வதில் ஏற்பட்ட சிரமங்களைப் பகிர்ந்துள்ளார்.தனது வாழ்க்கையில் மைத்துனர் மயூரன் தொடங்கி, கனடா வாழ் பரா வரையிலான ஆண் சமூகத்துடன் வைத்திருந்த, சிலர் காதல் என்ற மாயக் கோட்டைக்குள் அன்புக்காக ஏங்கி விழுந்த பின் அவர்களது சுயரூபம் வரை தனது எண்ணங்கள், நம்பிக்கைகள், ஏமாற்றங்கள், துரோகங்கள், எல்லாம் எப்படி தவிடு பொடியாகியது என்பதனை அறிய வாசியுங்கள்.

பலதரப்பட்ட நாடுகளில் வாழ்ந்த தழிழ் ஆண்களுடன் தனது அன்பைக் கொடுத்து, பணத்தைக் கொடுத்து உடலைக் கொடுத்து ஏமாற்றப்பட்ட தனுஜா இடைவிடாது நான் வாழ்ந்தே ஆகவேண்டும் என்ற மனத்தைரியம் என்னை ஆச்சரியப்படுத் தியது. இவ்வளவுக்கும் அவர் தனியாகவே முடிவெடுத்து, தனியாகவே பிரயாணங்களை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. நல்லவேளையாக (அமெரிக்காவில்) ஒரு தொடர் கொலையாளியிடமோ அல்லது பாலியல் கொலைகாரனிடமோ (அதென்ன பாலியல் கொலை, அதில் 2 வகையுண்டு. ஒன்று, பாலியலில் ஈடுபட்ட பின்பு கொலை செய்வது, அடுத்தது கொலை செய்துவிட்டு உடலுறவு கொள்வது, மதன் எழுதிய நூல் மனிதனுக்குள்ளே ஒரு மிருகம் அகப்படாதது, இவரது அப்பழுக்கற்ற சிந்தனையால் அல்லது ஒரு வரமாக இருந்திருக்கலாம்.

சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டு, ஒதுக்கி, நீ ஆண்பிள்ளையும் இல்லை பெண்பிள்ளையும் இல்லை  நீ ஒரு அலி என்று ஒதுக்கிவக்கப்பட்ட திருநங்கைகளும் சமூகத்தில் இடம் பெறவேண்டும் என்று மனவுறுதியுடன் இருக்கும் தனுஜா  விபச்சாரத்திலும் ஈடுபட்டதையும், அதனால் ஏற்பட்ட நன்மை தீமைகளையும் மிகவும் வெளிப்படையாகக் கூறுவது, இதனை வாசிப்போர் மனதில் இருக்கும் தவறான எங்களைக் கண்முன் கொண்டுவருகிறார். திருநங்கையிலிருந்து விடுபட்டு தான் ஒரு பெண்ணாக மாறினாலும் அவர்களது களத்தில் நின்று, அவர்களுக்காகக் குரல் கொடுப்பேன் என்று சத்தியம் செய்கிறார்.

இவரது வாழ்க்கையை ஒரு திருப்பு முனையாக மாற்றிய சுவிஸசர்சலாந்தைச் சேர்ந்த செலினா புரஃபேர்க் என்னும் ஆய்வாளரை (சூரிச் பல்கலைக்கழக ஆய்வாளர்) நினைத்து நன்றி கூறுகிறார்.

திருநங்கைகள் விபச்சாரத்திற்குத்தான் கடவுளால் அனுப்பப்பட்டவர்கள் என்ற மூடநம்பிக்கையை உடையுங்கள். சமூகம், சமூகம் என்று சொல்லியே அதனையும் ஒருவகை மதக் கோட்பாடாகவே மறைமுகமாகக் காட்டுகிறது இந்த உலகம். உயிரை உயிராகவும், அன்பாகவும் ஆதரவாகவும் ஆணைத்து இந்த பூமியில் நிமிர்ந்து நிற்கும்  தனுஜாவின் எண்ணங்களை வாழ்த்துகிறேன்.

உள்ளே மறைந்திருக்கும் பல அழுக்குகளை வெளி உலகுக்கு மனத்தைரியமாக, எந்த எதிர்ப்பு வந்தாலும், பல வசைச் சொற்கள் காதுகளைத் துளைத்தாலும், பட்டவர்த்தனமாக தனது, இதுவரையிலான வரலாற்றை வெளிக் கொணர்ந்த தனுஜாவை ஒருமுறை வாசியுங்கள், உண்மைகளை அறியுங்கள்..


@பொன் விஜி - சுவிஸ்.


Post a Comment

Previous Post Next Post