.

தருமி எழுதிய மதங்களும் சில விவாதங்களும் என்னும் புத்தகமானது மதங்கள் தொடர்பான விவாதங்களை எமக்கு உருவாக்குகிறது.நாம் பின்பற்றும் மதங்களினை கண்மூடித்தனமாக நம்பாமல் அவற்றிலுள்ள மூட நம்பிக் கைகளை நடுநிலையாக நின்று ஆராய்கிறது இந்நூல்.ஒவ்வொருவரும் ஏதோ வொரு மதம் சார்ந்தே பிறக்கிறோம் பிறப்பால் வரும் மதத்தினை நாம் அப்படியே பின்பற்றுகிறோம் அதனை ஆராய்வதில்லை.மதங்களிற்குள் இருக்கும் அரசியலை அதிகாரத்தைப் பேசுகிறது இந்நூல்.

இந்த நூலாசிரியரான தருமி என்னும் புனைப் பெயரில் எழுதி வரும் இவரின் இயற்பெயர் சாம் ஜோர்ஜ்(G.Sam George) தன்னுடைய கிறிஸ்தவ மதத்திலிருந்து தானெப்படி வெளியே வந்தேன் என்று இவர் இணையத்தில் எழுதி வந்தார். அத்தோடு நிற்காது மதங்களில் தான் கண்ட ஓட்டைகளையும் இணையத்தில் சொல்லியிருக்கிறார்.பின்னர் அதற்கு எதிர்ப்புக்கள் வர ஆரம்பித்ததும் புது உத்வேகத்தோடு தேடி புதுப் புது விடயங்களைக் கற்றறிந்து எழுதி முடித்தார்.இவர் ஒன்பதாண்டுகள் இணையத்தில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே மதங்களும் சில விவாதங்களும் புத்தகமாகும்.

மத நம்பிக்கைகள் பொதுவாக பிற்போடு வருகின்றன.ஆனாலும் பிறப்பினால் ஒரு மதத்தினைப் பின்பற்றுபவர்கள் தங்களுடைய சமய நம்பிக்கைகளைக் கேள்வி கேட்பதே இல்லை.ஏனெனில் அவர்களிற்குப் பிறந்த உடன் போடப்பட்ட ஒரேயொரு கண்ணாடி வழியாகப் பார்த்துத்தான் பழக்கம்.அந்தக் கண்ணாடியைக் கழட்டுவதே பாவம் என்ற நினைப்பில் வாழ்வதுவே எம்மில் பெரும்பாலானோரின் வழக்கம்.ஒரு சிலருக்கு ஐயங்கள் எழலாம். அவ்வப்போது தலைகாட்டும் இந்த ஐயங்களை அவர்களது நம்பிக்கைகள் பொதுவாக ஆழப் புதைத்து விடும்.இந்த ஐயங்களின் மீது தொடர்ந்து கேள்விகளை எழுப்பி விவாதப் பொருளாக்கியுள்ளார் தருமி.

இந் நூலில் உள்ள ஒவ்வொரு வரியிலும் நேர்மை, வெளிப்படைத்தன்மை நாகரிகம் என்னும் உயர்ந்த பண்பு,அறிஞர்களிற்கே உரித்தான துணிவு,தங்கு தடையற்ற நடையழகு போன்ற அரிய பண்புகள் இழையோடுவதைக் காணலாம்.கடவுள் என்பது கற்பிக்கப்பட்ட கருத்துத்தான் என்று நிறுவுகிறது இந் நூல்.

எம்முடைய மதங்களைப் பற்றி எமக்கே தெரியாத விடயங்கள் பலவும் காணப்படும்.அவைகளை முதன் முறையாக கேட்கும்போது அவைகள் உண்மையா என கேள்வி மனதினுள் எழுவது இயற்கையாகும்.அது போல பொய்யான தகவல்கள் இட்டுக் கட்டிய கதைள் எவையும் இந்நூலில் இடம்பெறவில்லை என்று உறுதிமொழியைத் தருகிறார் தருமி.அவர் சொல்லியுள்ள விடயங்களுக்கு ஆதாரங்கள் இந்ந நூலில் இணைக்கப்பட்டு ள்ளன வாசகர்கள் நூலாசிரியரை நம்பாவிடில் அவ் ஆதாரங்களைச் சோதித்துப் பார்த்துக் கொள்ளலாம்.

மனிதர்கள் பொருளுற்பத்தியில் தார்மீக உரிமையை இழந்து அந்நியமா க்கப்பட்டிருந்த போது தனக்கு ஆறுதல் இல்லை என்பதை உணர்ந் தார்கள்.தன் கோபத்தை தன்னை அடக்கியாளும் ஆதிக்க சக்திகளின் மேல் காட்ட முடியாமல் இருந்தார்கள்.அப்படிக் காட்டியிருந்தாலும் அது கொடூரமான முறையில் அடக்கப்பட்டிருக்கும்.எனவே கற்பிக்கப்பட்ட இறையிடம் தஞ்சம டைவதன் மூலம் ஆறுதலைப் பெற முடியும் என்று நம்பினார்கள்.அதைத்தான் ஒரே புகலிடமாக ஏற்றுக் கொண்டார்கள்.இறை நம்பிக்கை உழைக்கும் மக்களின் கூட்டுத் தயாரிப்பல்ல.மாறாக ஆதிக்க சக்திகளால் திட்டமிட்டு தயாரித்து அளிக்கப்பட்ட போதை மருந்து.ஒரு மாபெரும் சுரண்டலின் ஒரே வாரிசுதான் இந்த இறைநம்பிக்கை.அதைச் சமயங்கள்தான் கட்டிக் காத்து வருகின்றன.ஒவ்வொரு சமயத்தின் தோற்றத்திற்கான தடித்ததும் நுண்ணியதுமான ஆய்வு செய்தால் விளங்கும் என்கிறார் தருமி.

இந் நூல் நாமறிந்த மதங்களிலே சில கட்டுரைகள்,மதங்கள் என்னும் முப்பெரும் பகுதிகளைக் கொண்டிருக்கிறது.நாமறிந்த மதங்களிலே என்னும் பகுதியில் கத்தோலிக்க குடும்பத்தில் பிறந்த இளைஞன் ஒருவன் கடைப் பிடிக்கும் பக்தியும் சமயச் சடங்குகளும் இந் நூலாசிரியருக்கு ஏற்புடையதாக இருந்திருக்கிறன.ஆனால் ஒரு கட்டத்தில் சமயச் சடங்குகளிலும் போதனைகளிலும் இருந்த முரண்கள் அவருக்குள் பகுத்தறிவுச் சிந்தனையைப் பற்ற வைத்திருக்கிறன.


இந் நூலாசிரியர் சில கேள்விகளிற்குப் பதிலையும் கேள்விகளையும் முன்வைக்கிறார்.அவையானவன 1.இறைத்திட்டம் தீர்மானிக்கப்பட்டதாக இருக்கும்போது மன்றாட்டத்தின் மூலம் அதை மாற்ற முடியுமா..?முடியுமென்றால் இறைத் திட்டத்தின் கதி என்ன..? 2.உலகைப் படைத்த இறைவனுக்கு ஓய்வு தேவையா..? ஓய்வு என்பது மனிதன் சம்பந்தப்பட்டது இல்லையா?3.கடவுளின் தந்தை மகன் பரிசுத்த ஆவி ஆகிய தோற்றங்களிற்கு ஏன் பொருத்தமான விளக்கம் தரப்படவில்லை.4.சமாதானத்தின் தேவன் என்றழைக்கப்படும் கடவுள் சமாதனத்தையல்ல பிரிவினையை உண்டாக்க வந்தேன் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பது ஏன்? 5.என் தேவனே என் தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர் என்னும் கூப்பாடு ஏசு வேறு பிதா வேறு என்பதைத் தானே காட்டுகிறது? 6.இந்து மதத்தில் அறிவிலும் திறனிலும் எவ்வளவுதான் சாதித்தாலும் பிறப்பின் அடிப்படையில் உயர்வு தாழ்வு கற்பித்திருப்பதையும் கடவுளே திட்டமிட்டிருக்கிறார் என்றால் எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியும்?7.தீண்டாமையை  சமூகக் கட்டமைப்பாக பண்பாட்டு நெறியாக வைத்திருக்கும் இந்து சமயத்தை எப்படி ஏற்றுக் கொள்வது?8.எந்த விதத்தில் முகமது நாம் நித்தம் காணும் மனிதர்களை விட உயர்ந்தவராக இருந்தர் என்று வரலாறு கூறுகிறது? 9.நபி முழுக்க முழுக்க தன் குவராஸி குல நன்மைக்காக போராடிய வீரன் என்பதைத் தவிர உலக மக்களிற்காக போரடியவர் என்று குரானில் சொல்லப் படவில்லையே ஏன்? 9.நபிகளின் வாழ்க்கை என்பது குற்றம் சாட்டப்பட்டவரே சாட்சி சொல்வது போல இருக்கிறது? என்று பல கேள்விகளையும் பதில்களையும் ஆதாரத்துடன் முன்வைக்கிறார் தருமி.

Semitic religions என்றழைக்கப்படும் யூதமதம் கிறிஸ்தவமதம் இஸ்லாம் என்ற மூன்று மதங்களுமே தங்கள் மதத்தினரை தங்களின் பிடிக்குள் இறுக்கமாக வைத்திருக்கிறனர் காரணம் கேட்டால் எங்கள் தெய்வமே உண்மையானது என்பார்கள்,எங்கள் மார்க்கமே சரியானது என்பார்கள் அப்படியானால் மூன்றில் எது உண்மையான வேதம்? மூவருக்கும் பொதுவானது பழைய ஏற்பாடு.யூதர்கள் மோசஸ்வரை பழைய ஏற்பாட்டை ஏற்றுக் கொள்கிறார்கள், கிறிஸ்தவர்கள் அதன் பிறகு புதிய எற்பாடு,இஸ்லாமியர்களிற்கு கடைசி ஏற்பாடு ஆனாலும் அவர்களிற்குள்தான் சண்டை அதிகம்.மூவருமே தங்கள் மதத்தின் மேல் கேள்விகளற்ற ஆழ்ந்த  அதை விட கேள்வி கேட்கப்பட்டாலே இதை தேவ தூஸணம் என் நினைக்கும் அளவிற்கு நம்பிக்கை என்கிறார் தருமி.

இயேசுவைப் பற்றிய மேற்கோள்களில் ஒரு சாதி அல்லது குலம் காக்க வந்த ஒரு என்றே இயேசுவைக் கூறுகிறார் நூலாசிரியர்.அவர் நல்லவர் என்ப தையோ சொன்ன கருத்துக்கள் நல்லவை என்பதிலோ நூலாசிரியர் முரண்ப டவில்லை.ஆனால் இயேசு எல்லா மக்களுக்குமான கடவுள் அல்ல என்பதை அவரே குறிப்பிட்டதை சுட்டிக் காட்டுகிறது இந் நூல்.

பொதுவான மதங்களை மூன்றாகப் பிரிக்கிறார் நூலாசிரியர்.பழங்குடி மதங்கள் தேசியத் தன்மை கொண்ட மதங்கள் சர்வதேசியத் தன்மை கொண்ட மதங்கள் என்பனவே அவையாகும்.சர்வதேசிய மதங்களிற்கு ஒற்றைக் கடவுள் ஒற்றை வேதம் அங்கிகரிக்கப்பட்ட தேவ தூதர் என்கிற அடிப்படைகள் உண்டு இவையே அவற்றை உலகு தழுவிய மதங்களாக நில மொழி நிற இன எல்லை தாண்டிச் செயற்பட காரணமாக அமைந்துள்ளது எனலாம்.இச் சர்வதேசிய மதங்களாக இஸ்லாம் கிறிஸ்தவம்,யூத மதத்தைக் குறிப்பிடுகிறது இந்நூல். உலகை அதன் அழிவிற்கு முன்பாக ஆளும் மதங்களாக இவை விரிவடையும் என்பது இம்மதங்களின் மைய நம்பிக்கையாகும்.பிற மதங்களை அறியா மையின் விளைவாகவே இவை கருதுகிறன.அதனால் பிற மதத்தினருக்கு அறிவு ஒளியை ஏற்றுகிற கடமையைக் கொணடதாக தங்களைக் கருதிக் கொள்கிறன.மொத்த மனித குலப் பிரதிநிதியாக அறிவித்துக் கொள்கிறன அதன் நீட்சியே உலகை ஆள்வதற்கான கடும் போட்டியாகும் குறிப்பாக கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் மதங்களிற்கு இவை பொருந்தும்.

உண்மையில் மனக் கதவுகளைத் திறந்து விட்டு இந்தப் புத்தகத்தை வாசிப்பீர்களானால் இந்தப் புத்தகம் நிச்சயம் உங்களுக்கு நிறைய விடயங்களைக் கற்றுத் தரும்.இந்தப் புத்தகம் ஒரு நீண்ட தேடல்.உங்கள் மதத்ததைப் பற்றி தெரியாத விடயங்களைத் தெரிந்து கொள்ளலாம்.ஏனைய மதங்களினைப் பற்றியும் தெரிந்து கொள்ளலாம் ஏனெனில் அவ்வளவு விடயங்கள் இந்தப் புத்தகத்தில் இருக்கிறன.மதங்களின் வரலாற்றைத் தெரிந்து கொள்வீர்கள்.சன்னி ஸியா பக்கங்களைத் தெரிந்து கொள்வீர்கள். மதங்களும் விவாதங்களும் ஒரு வாசிக்க வேண்டிய புத்தகமாகும் வாசிப்போம்.

3 Comments

  1. அருமை,, நானும் வாசித்துள்ளேன்.. 👌 😎 🇨🇭 கண்டிப்பாக பல காலங்களாகப் பின்பற்றப்படும் மதக் கோட்பாடுகளை உடைகுகிறார் ஆசிரியர் தருமி அவர்கள்..

    ReplyDelete
    Replies
    1. மன்னிக்கவும்... உடைக்கிறார் எனத் திருத்திக் கொள்ளவும். நன்றி.

      Delete

Post a Comment

Previous Post Next Post