.

ஒரு அடர்ந்த காடு ஒன்று இருந்தது, அந்த காட்டுக்குள், கரடி ஒன்று குடும்பத்துடன் வாழ்ந்து வந்த்து. தாய்க்கரடி தினமும் குட்டிகளை விட்டு விட்டு உணவுக்காக வெளியே அலைந்து திரிந்து, மீன், தேனடை, பழங்கள் போன்றவகைகளை, குட்டிகளுக்கு கொண்டு வந்து கொடுத்து தானும் உண்டு, மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தது.

தாய்க்கரடி இவ்வாறு தினமும் வெளியே சென்று நிறைய தின்பண்டங்களை கொண்டு வருவதை அங்கிருந்த நரி ஒன்று பார்த்து வந்தது.அந்த நரிக்கு உழைத்து சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் இல்லை. எப்படியாகிலும் கரடி கொண்டு வருபவைகளை கவர்ந்து கொள்ள வேண்டும் என நினைத்தது. அதற்கு என்ன வழி என யோசித்து, குட்டிகளை பயமுறுத்தி வைத்துக்கொண்டால்,எளிதில் கரடி கொண்டு வருபவைகளை கவர்ந்து கொள்ளலாம் என முடிவு செய்து, ஒரு நாள் தாய்க்கரடி வெளியே சென்றிருந்த் போது கரடிக்குட்டிகள் தங்கியிருந்த குகைக்கு வெளியே வந்து நண்பர்களே! என அழைத்தது.

சத்தம் கேட்டு எட்டிப்பார்த்த கரடிக்குட்டிகள் வெளியே நரி ஒன்று நிற்பதை பார்த்தது.அவைகள் இதுவரை நரியை பார்த்ததில்லை,ஆகவே ஆச்சர்யமுடன் அதனை உற்றுப் பார்த்து நீ யார் ? என்று கேட்டது. நரி நான்தான் இந்த காட்டுக்கு மந்திரி, இங்கு உள்ள அனைவரும் எனக்கு கட்டுப்பட்டவர்கள் என்றது. கரடிக்குட்டிகள் ஆச்சர்யத்துடன் எங்கள் அம்மா இதுவரை உன்னைப்பற்றி சொன்னதில்லையே என்றன. உங்கள் அம்மா அதை சொல்ல மறந்திருக்கலாம்,நீங்கள் இனிமேல் உங்களிடம் எது வைத்திருந்தாலும் அதை என்னிடம் கொடுத்து விடவேண்டும், அப்படி கொடுக்க மறுத்தால் உங்களை இப்படியே என் ஆட்களை வரச்சொல்லி தூக்கிக்கொண்டு போய்விடுவேன் என பயமுறுத்தியது.

கரடிக்குட்டிகள் பயந்துவிட்டன. இப்பொழுது எங்களிடம் ஒன்றுமில்லை, சாயங்காலம் வா, எங்கள் அம்மா எங்களுக்கு ஈப்பிட கொண்டு வருவார்கள் அதை உனக்குத் தருகிறோம் என்றது.சரி நாளை காலையில் இதே நேரத்திற்கு வருகிறேன்,நீங்களிருவரும் உங்கள் அம்மா கொண்டு வருபவைகளை எனக்கு எடுத்து வைத்து கொடுத்து விட வேண்டும்.ஜாக்கிரதை இதை உங்கள் அம்மாவிடம் சொன்னால் அடுத்த நாளே உங்கள் இருவரையும் தூக்கி கொண்டு போக ஏற்பாடு செய்து விடுவேன் என்று பயமுறுத்திவிட்டு சென்றது.

அன்று அம்மா கரடி கொண்டு வந்தவைகளை கரடிக்குட்டிகள் பதுக்கி வைத்து சாப்பிடுவதாக தாயிடம் பொய் சொல்லி விட்டன.சொன்னபடியே மறுநாள் தாய்க்கரடி சென்றவுடன் நரி வந்தது. அதனிடம் அம்மாக்கரடி கொண்டு வந்து கொடுத்தவைகளை கொடுத்து விட்டன. நரியும் அவைகளை பெற்றுக்கொண்டு தினமும் இதே மாதிரி கொடுக்க வேண்டும் என பயமுறுத்தி விட்டு சென்று விட்டது.

இப்படியே ஒரு வாரம் ஓடி விட்டது,அம்மா கரடி கஷ்டப்பட்டு கொண்டு வருபவைகளை எல்லாம் குட்டிக்கரடிகள் நரியாரிடம் கொடுத்ததால், குட்டிக்கரடிகள் மெலிந்துகொண்டே போக ஆரம்பித்தன.தாய்க்கரடி இவைகளை கண்டு ஏன் இப்படி மெலிந்து கொண்டே போகிறீர்கள் என்று கேட்க முதலில் சொல்ல மறுத்த குட்டிகள் பின்னர் அம்மா வற்புறுத்தவே நரி வந்ததையும்,தினமும் சாப்பிட எல்லாவறையும் கொடுக்க வேண்டும் என்று மிரட்டிவிட்டு சென்றதையும் சொல்லிவிட்டன.

அப்படியா சமாச்சாரம் என்று நினைத்துக் கொண்ட தாய்க்கரடி மறு நாள் நான் செல்கிறபடி செய்யுங்கள் என்று குட்டிகளின் காதில் ரகசியமாய் சொன்னது.மறு நாள் வழக்கம்போல தாய்க்கரடி குட்டிகளிடம் சொல்லிவிட்டு கிளம்பி சென்றது. அதை மறைந்திருந்து பார்த்த நரி மெல்ல குட்டிகள் இருந்த குகைக்கு வெளியே வந்து குட்டிகளை அழைத்தது.வெளியே வந்த குட்டிகள் தன் அம்மா சொல்லியிருந்தபடி நரியாரே இன்று நிறைய தின்பண்டங்களை அம்மா கொண்டு வந்துவிட்டதால் அவைகளை தூக்கிக்கொண்டு வெளியே வர முடியவில்லை,ஆகவே நீங்கள் உள்ளே வந்து உங்களுக்கு தேவையானவற்றை சாப்பிட்டு செல்லுங்கள் என்றது. நரிக்கு வாயில் எச்சில் ஊறியது.இருந்தாலும் பயம் வந்தது. உள்ளே யாராவது இருக்கிறார்களா என்று கேட்டது.யாருமில்லை நீங்கள் உள்ளே வாருங்கள் என்று அழைத்தன. சந்தோசத்துடன் உள்ளே நுழைந்த நரி எங்கே உங்கள் அம்மா கொண்டு வந்தவைகள்? என்று கேட்க இன்னும் கொஞ்சே உள்ளே போகச்சொல்லியது.ஆசையில் பின்னால் என்ன உள்ளது என கவனிக்காத நரி இன்னும் கொஞ்சம் உள்ளே வந்தது.

நரியின் பின்னால் வெளியே செல்வதாக சொல்லிச் சென்ற தாய்க்கரடி பாய்ந்து உள்ளே வந்து நரியின் வாலைப் பிடித்து சுழற்றி தரையில் அடிக்க நரியார் ஐயோ என்று சுவற்றில் அடிபட்டு கீழே விழுந்தது.எழுந்து ஓடப் பார்த்த நரியை விட்டு விடாமல் தாய்க்கரடி அடி அடி என அடித்து துவைத்து விட்டது.


நீதி- அறிமுகமில்லாதவர்கள் எது சொன்னாலும் நம்பாமல் மற்றவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.

Post a Comment

Previous Post Next Post