.

ஓர் இனத்தை அது இருந்த சுவடே தெரியாமல் அழிப்பதாகவும், ஓர் இனத்தின் அல்லது அந்தக் குழுவின் உறுப்பினர்களைக் கொல்வது, குழு உறுப்பி னர்களுக்கு உடல் மற்றும் உள ரீதியாக மோசமான விளைவுகளை ஏற்படுத்துவதே இனப் படுகொலையாக சர்வதேச சட்டப்படி கருதப்படுகிறது. ஓர் இனத்தைச் சேர்ந்த மக்களை கொத்துக் கொத்தாகக் கொன்று குவிப்பதுடன், அடுத்த தலைமுறை உருவாக விடாமல் தடுத்து இனப் படு கொலை செய்வது மாத்திரமின்றி - அந்த மக்களை பட்டினி போட்டு கொல்வதும் கொடுமையிலும் கொடுமையான இனப்படுகொலையாகும்.

இக்கோர இனப்படுகொலைகளை எதிர்கொண்ட மக்கள், எப்படி வாழ்வின் இறுதிக்கணங்களில் போராடியிருப்பார்கள் என்பதை எழுத்தில் வடிக்க முடியாது.கட்டாய பட்டினியால் மக்கள் எவ்வாறு போர்க்கால உணவை பெற்றார்கள் என்பதை அலசும் சிறிய ஆவணம் இது.

ஆர்மேனிய இனப்படுகொலையும் ‘மதாக்’ Madagh உணவும்:

இருபதாம் நூற்றாண்டின் முதலாவது பெரும் இனப்படுகொலையாக துருக்கியில் ஒட்டோமான் ஆட்சியில் ஆர்மேனியர்கள் மீது படுகொலை செய்யப்பட்டமை தான் வரலாற்றில் பதியப்பட்ட கோர நிகழ்வாகும்.

இந்த கொடூர சம்பவத்தை உலகமே இனப்படுகொலை என்று கூறிய போது, துருக்கி அதனை கடுமையாக எதிர்த்து வருகிறது. ஆர்மேனிய இனப் படுகொலை இந்த நூற்றாண்டின் மிக கோரமான கொடூரங்களில் ஒன்றாகும். ஒரு நூற்றாண்டு கடந்தும் அட்டூழியங்களால் ஏற்பட்ட வடுக்கள் அழுத்தமாக பதியப்படுத்தப்பட்டுள்ளது.

20 ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய படுகொலையாகக் கருதப்படும் ஆர்மேனிய படுகொலையில் மதாக்(Madagh)என்ற ஒரு வகை உணவுதான் அவர்களை உயிரோட்டமாக வைத்திருந்தது.

ஆர்மேனிய மக்கள் தங்களின் பண்பாட்டு உணவாகவும் இனப்ப டுகொலையின் அவலம் நிறைந்த உணவாகவும் ‘Madagh'யை தாங்கள் புலம் பெயர்ந்த பகுதிகளில் அதன் வலிகளை உணர்ந்து அடுத்தடுத்த தலைமுறையினருக்கு உணர்த்தி வருகின்றனர்.

ஆர்மேனிய இன அழிப்பை பின்னோக்கிப் பார்க்கின்றபோது,1915ஆம் ஆண்டில் மொத்தமாக 15 இலட்சம் ஆர்மேனிய மக்களைக் கொன்று குவித்த, இருபதாம் நூற்றாண்டின் மாபெரும் இனப்படுகொலையாக நடந்தேறிய ஓர் வரலாற்று கொடூரமாகும்.

தற்போது ஆர்மேனிய இனப்படுகொலையை ஏப்ரல் 24 அன்று உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான ஆர்மேனியர்கள் இறந்த தங்கள் மூதா தையர்களின் இழப்பை நினைவு கூர்ந்து மதிக்கிறார்கள். ஒட்டோமான் படைகளால், திட்டமிட்ட வகையில்,15 லட்சம் ஆர்மேனியர்கள் கொல்லப்பட்டதாக ஆர்மீனிய வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.



யூதப் படுகொலை-ஹாலோ கோஸ்ட் :

இரண்டாம் உலகப் போரில் 1941 இலிருந்து 1945 வரை, யூதர்கள் ஒரு இனப்படுகொலை மூலம் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டனர்.நாஸி கட்சியின் உயர் தலைமையின் வழி காட்டல்கள் உடன், ஜேர்மனி அரசின் அதிகார மையத்தின் ஒவ்வொரு பகுதியும் ஜேர்மனி ஆக்கிரமித்த ஐரோப்பா முழுவதும் பெரும் படுகொலைகளை நடத்துவதில் ஏற்பாடுகள் செய்வதில் ஈடுபட்டு வந்தது.இப்பெரும் இன அழிப்பு இரண்டாம் உலகப் போரில், 6 மில்லியன் ஐரோப்பிய யூதர்கள் ஜெர்மனியில் திட்டமிட்டுப் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வை ஹாலோகோஸ்ட் (Holocaust) என்று குறிப்பிடுவர். ஜேர்மனியில் ஆட்சியில் இருந்த, அடொல்ஃப் ஹிட்லரின் நாஸி இன அழிப்புக் கொள்கையின் படி பல அறிஞர்கள் பெருமளவில் இந்த இன அழிப்பில் கொல்லப்பட்டனர்.

ஜேர்மன் அரசு இதனை ‘யூதர் பிரச்சினைக்கான இறுதித் தீர்வு' என வர்ணித்தது.நாஸி ஜேர்மனியில் இவ்வாறு படுகொலை செய்யப்பட்ட எல்லாப் பிரிவினரதும் மொத்தத் தொகை 9 தொடக்கம் 11 மில்லியன் வரை இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

யூதர்களின் பட்டினி தீர்த்த ‘மனா’ :

வரலாற்று ரீதியாக இஸ்ரேலியர்களின் எகிப்திய அடக்குமுறையின் கசப்பை குறிக்கும் அடையாள உணவான மனா (Manna) எனும் உணவை நாஸி வதைமுகாம்களில் உண்டதாகவும் சான்றுகள் உள்ளன.

மனா என்பது பைபிளின் படி, இஸ்ரேலிய யூதர்கள் நீண்ட இடப்பெயர்வில், பாலைவனத்தில் பயணம் செயதபோது கடவுள் அவர்களுக்கு வழங்கிய ஒரு உண்ணக் கூடிய பொருள் என்றும் பொருள்படும்.

யூதர்களின் நீண்ட இடப்பெயர்வு (எக்ஸோடஸ் ) வரலாற்று புத்தகத்தில், மனா தரையில் வீழ்ந்த உறை பனி போன்ற நல்ல, செதில் போன்ற பொருள் என்று விவரிக்கப்பட்டுள்ளது.இரவு நேரத்தில் பனியுடன் வந்து சேருவதாகவும், இது சூரியனின் வெப்பத்தால் உருகுவதற்கு முன் சேகரிக்கப்பட வேண்டும் என்றும்,ஒரு கொத்தமல்லி விதை போன்று, வெள்ளை நிறத்தில் இருந்தது என்றும் எக்ஸோடஸ் நூல் மேலும் கூறுகிறது.


முள்ளிவாய்க்காலும் கஞ்சியும்

2009 மே இறுதிப் போரின், இறுதி நாட்களில் மக்களுக்கு உணவு, மருத்துவ தேவைகளை முற்றுமுழுதாக தடுத்து நிறுத்தப்பட்ட போது சிறிதளவு சேமித்து வைத்திருந்த அரிசிகளைக் கொண்டு பட்டினியால் தவித்துக் கொண்டிருந்த மக்களுக்கு தண்ணீரும் அரிசியும் கொண்ட கஞ்சி கொடுக்கப்பட்டது.

நந்திக்கடலின் இருபுறமும் பெருந்திரளாக நோக்கிவந்த மக்களுக்கு தேவாமிர்தமாக இறுதிநாட்களில் இருந்ததுதான் இந்த முள்ளிவாய்க்கால் கஞ்சி.

முள்ளிவாய்க்கால் கஞ்சி :

மிகக்குறைந்தளவிலான அரிசி,நெல், தண்ணீர் என்கிற இந்த மூன்று பொருட்களாலானதே முள்ளிவாய்க்கால் கஞ்சியாக போர்க்களத்தில் தயாரிக்கப்பட்டது.முக்கியமாக உப்பு, பால் என்பவை அறவே அற்றவை யான தாகவே முள்ளிவாய்க்கால் கஞ்சி இருக்க வேண்டும். அப்படித்தான் அது அன்றைய நாளில் இருந்தது. சுவையற்ற நீருணவு அது. ஒரு லீற்றர் தண்ணீரில் அதிகமாக நூறு கிராம் அரிசியைக் கொண்டதாக அது இருந்திரு க்கலாம்.அப்படித் தான் அது தயாரிக்கப்பட்டது.

சோழர்களின் கூழ்வார்க்கும் விழா:

இந்தியாவில் காலனித்துவ ஆட்சியில் உருவாக்கப்பட்ட பட்டினிச்சாவுகள் எண்ணிலடங்காதவை. ஆங்கிலேயர்களும் உணவை ஓர் ஆயுதமாகவே பயன்படுத்தியதற்கும் சான்றுகள் பல உண்டு.

ஆங்கிலேய ஆட்சியின்போது திட்டமிட்டு உருவாக்கப்பட்ட பெரும்பஞ்சத்திற்கு சோழமண்டல பகுதிகளில் பட்டினிச்சாவு தலைவிரித்தாடியது.அப்போது கம்பு-கேப்பை போன்ற தானியங்களை பயன்படுத்தி கூழாக மக்களுக்கு வழங்கப்பட்ட துயரத்தின் நீட்சியை பண்பாட்டு வழிநின்று ஆடி மாதங்களில் ‘கூழ்வார்க்கும் விழா’ பல பகுதிகளில் நடந்துவருகிறது.

வரலாற்றில் மனித இனம் தோன்றியதிலிருந்து ஒரு இனம் மற்றொரு இனத்தை அழித்து, தனது தேவைகளுக்காக அவர்களின் சொத்துக்களை கவர்ந்து, அவர்களின் இடத்தை ஆக்கிரமித்து வாழ்ந்து வருவதானது இன்று வரையில் ஏதாவது ஒரு வடிவத்தில் தொடர்ந்து வருகிறது.

காலனித்துவ வரலாற்றின் கொடுமைகள் இன்னமும் ஏதோ ஓர் வகையில் தொடர்கிறது. இவையெல்லாம் மானுட தர்மம் நீதியற்று போயுள்ளதையே வரலாற்றின் துயரமாக பார்க்கலாம்.

தமிழர் தாயகம் எங்கும் பயணித்து முள்ளிவாய்க்கால் கஞ்சியினை உறவு களுடன் பரிமாறி இளைய தலைமுறையினருக்கு கடத்தும் செயற்பாட்டினை முன்னெடுப்பதே இதன் நோக்கமாக கருதப்படுகிறது.

போர்க்கால வாழ்வை மீள் நினைவுபடுத்தும் வகையில் எமது உறவுகளின் உயிர்காத்த அரிசியும், தண்ணீரும்,உப்பும் கலந்தாக்கிய முள்ளிவாய்க்கால் கஞ்சியை வீடுகளில் காய்ச்சிப் பருகுவதன் மூலம் அந்த நாட்களின் நினைவுகளை அடுத்த சந்ததியும் இந்த அழியாத நினைவுகளை மறவாதிருக்க வேண்டும்.

பல இலட்சம் மக்கள் கஞ்சிக்காகக் காத்திருந்து தமது பசிப்பிணி போக்கிய வரலாறுகளும் உண்டு. இக் கஞ்சி உணவு அன்றைய நாட்களில் தமிழ் மக்களின் வாழ்வோடு ஒன்றாகப் பின்னிப் பிணைந்ததாகவே காணப்பட்டது. முள்ளிவாய்க்காலில் உணவுக்காகபட்ட அவலத்தையும், கஞ்சி உணவே உறவுகளின் உயிரை தக்க வைத்தது என்பதையும் வெளிப்படுத்தும் முகமாகவும் அவற்றை எதிர்கால சந்ததியினருக்கும், இளைய தலைமுறை யினருக்கும் தெரியப்படுத்தும் முகமாகவும் நினைவேந்தல் நாட்களில் கஞ்சி உணவை வழங்குவது வழமையாகும்.

முள்ளிவாய்கால் கஞ்சியின் உணவு அடையாளம் என்பது, தாயக மண்ணின் வலிகளையும் வரலாறு சந்ததி மறவா சரித்திரமாக வேண்டும்.

@நவீனன்









Post a Comment

Previous Post Next Post