.

டான் பிரவுன் எழுதிய தேவதைகளும் சாத்தான்களும்(Angels and Demons) என்ற புத்தகமானது அதிர்ச்சியில் உறைய வைக்கும் நிகழ் நேர சாகச மாகும்.பிரவுனின் ஏனைய நாவல்களான நரகம்,(Inferno)தி லாஸ் சிம்பல்  ஆரிஜின்,மற்றும் டாவின்சி கோட் ஆகியவற்றைப் போல இந் நாவலும் குறியீட்டை மையமாகக் கொண்டே பின்னிப் பிணைகிறது.தேவதைகளும் சாத்தான்களும் என்ற இந்தப் புத்தகத்திலேயே முதன் முதலாக ராபர்ட் லேங்டன் என்னும் கதாப்பாத்திரத்தினை உலகிற்கு அறிமுகப்படுத்துகிறார் பிரவுன். அதனைத் தொடர்ந்து ஏனைய அவரின் நாவல்களிலும் லேங்டனின் சாகசங்கள் தொடர்கிறன.

டான் பிரவுன் உலகின் மிக அதிகமாக விற்பனையாகும் நூல்களின் ஆசிரிய ராவார்.இவரின் புத்தகங்களை வாசிக்கத் தொடங்கினால் கீழே வைக்க மனம் இருக்காது அப்படி சுவாரஸ்யத்திற்கு சற்றும் குறைவில்லாத புத்தகங்களே இவருடையதாகும்.நரகம் மற்றும் டாவின்சி கோட்(Davinci Code) நாவல்கள் போன்றே தேவதைகளும் சாத்தான்களும் என்ற இப் புத்தகமும் திரைப்படமாக வெளி வந்துள்ளது.அனேகப் பேர் அத் திரைப்படத்தினைப் பார்த்திருப்பீர்கள் என்றே நினைக்கிறேன்.

லேங்டன் என்னும் கதாப்பாத்திரம் நாவல் முழுவதும் வருகிறது.அதனை விட விட்டோரியா என்னும் கதாப்பாத்திரமும் கூடவே பயணிக்கிறது மேக்ஸிமிலியன் கோஹ்லர் என்னும் கதாப்பாத்திமும் வருகிறது.கதையின் திருப்புமுனை ஏற்படுத்தும் கதாப்பாத்திரமாக பாதிரியார் கேமர்லெக்னோ கார்லா வென்ட்ரேஸ்கா வருகிறது ஊகிக்க முடியாத கதையின் திருப்பம் அது. ஆலிவெட்டி என்னும் கதாப்பாத்திரம் நாவலின் அரைப்பகுதி வரைக்கும் வந்து பின்னர் தன் உயிரை விடுகிறது. ஏனைய கதாப்பாத்திரங்கள் தேவைக்கு ஏற்றது போல் அறிமுகப்படுத்துகிறார் பிரவுன்.அவை அவ்வப்போது வந்து செல்கிறன.

ஐரோப்பாவில் இல்லுமினாட்டிகள் பற்றிய கதை பிரபலமானது வரலாற்றில் இல்லுமினாட்டிகள் என்றால் யார்..?அவர்கள் என்ன செய்கிறார்கள் அவர்களுடைய நோக்கம் என்ன...?இல்லுமினாட்டி என்ற பெயர் எங்கிருந்து வந்தது..? இல்லுமினாட்டிகள் அமைப்பு ஏன் எவ்வாறு உருவாக்கப்பட்டது...?இல்லுமினாட்டிகள் தற்போதும் இருக்கிறார்களா..?இல்லுமினாட்டி அமைப்பு இயங்கு நிலையில் செயற்படுகிறதா போன்ற கேள்விகளிற்கு விடை இந்தப் புத்தகத்தில் காணப்படுகிறது.ஆனாலும் இல்லுமினாட்டிகள் பற்றிய கதையை அவர்களுடைய வரலாற்றை இன்னமும் ஆழமாக ஆராய்ந்திருக்கலாம் என்றே தோன்றுகிறது.இல்லுமினாட்டிகள் என்றால் என்னவென்றே தெரியாத வர்களிற்கு அவர்கள் யார் என்ற அறிமுகமே இந்தப் புத்தகத்தில் வருகிறது இன்னமும் தீவிரமாகத் தேடியிருக்கலாம் பிரவுன்.இதனைத் தொட்டுச் சென்றதே பெரிய விடயம்தான்.சமூகத்தால் மறக்கப்பட்ட அல்லது திருச் சபையால் மறைக்கப்பட்ட ஒரு அமைப்பைப் பற்றி தொட்டுச் சொல்வதற்கு ஒரு துணிச்சல் வேண்டும் அதனை பிரவுன் துணிச்சலாகவே செய்தி ருக்கிறார்.மிகுதியை வபசகர்கள்தான் தேடி அறிந்து கொள்ள வேண்டும்.

திருச்சபை கோலொச்சிய 15ம் நூற்றாண்டில்,உண்மையில் அப்போதைய காலகட்டம் ஐரோப்பாவின் இருண்ட காலம் ஆகும்,ரோமில் இருந்த  பௌதீக வாதிகள்,கணிதவியலாளர்கள்,வானியல் ஆராய்சியாளர்கள் ஆகியோர் தேவலாயத்தின் தவறான போதனைகளால் கவலையடைந்து தாங்கள் இரகசியமாகச் சந்தித்துக் கொண்டனர்.அதேபோல உலகம் முழுவதிலுமுள்ள கல்விப்புலன் கொண்ட கல்வியாளரகளையும் இணைத்து உலகின் முதலாவது அறிவொளிக் கூடத்தை உருவாக்கி அறிவொளி பெற்றவர்கள் என அழைத்துக் கொண்டனர் அவர்களே இல்லுமி னாட்டிகள்.அதாவது ஐரோப்பாவின் மிகவும் கற்றறிந்த மூளைகள் என்பதே இல்லுமினாட்டி என்பதன் பொருள் என்கிறார் பிரவுன்.

தேவாலயம் உமிழ்ந்து வைத்துள்ள மூட நம்பிக்கைகள் மனித குலத்தின் பெரும் எதிரி என்பதே இல்லுமினாட்டிகளின் நிலைப்பாடு.மதமானது புராணீ கத்தை உயர்த்திப் பிடிக்குமானால் அறிவியல் வளர்ச்சி அப்படியே நின்று விடும் இதனை நிறுத்த வேண்டும் என்பதற்காகவே இல்லுமினாட்டிகள் உழைத்தனர் என்கிறது இந்நூல்.இதற்கு அப்போது அதிகாரத்தில் இருந்த தேவாலயம் எப்படி எதிர்வினையாற்றியது என்பதையும் விளக்குகிறது இந்நூல்.திருச்சபையின் எதிர்வினையானது எவ்வளவு கொடூரமாக இருந்தது என்பதை விபரித்திருக்கிறார் பிரவுன்.அதனை இப் புத்தகத்தினை வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்.ஆனாலும் இப் புத்தகத்தில் இல்லுமினாட்டிகள் பற்றிய வரலாற்று ஆவணங்கள் குறைவாகவே உள்ளன.


உலகப் புகழ் பெற்ற ஹார்வர்டு சின்னவியலாளர் ராபர்ட் லேங்டன்,கொலை செய்யப்பட்ட இயற்பியலாளர் ஒருவரின் மார்பில் பதிக்கப்பட்ட ரகசியச் சின்னம் பற்றி ஆராய ஸ்விஸின் ஆய்வமைப்புக்கு அழைக்கப்படுகிறார். அங்கே அவர் கண்டறிவதோ கற்பனைக்கும் அப்பாற்பட்டது.நூற்றாண்டு பழைமையான தலைமறைவு அமைப்பான இல்லுமினாட்டி,கத்தோலிக்க தேவலாயத்திற்கு எதிராக மேற்கொள்ளும் அழிவு பயக்கும் பழிக்கு பழி நடவடிக்கை.

வத்திக்கானில் போப்பாண்வர் தேர்வக்கான தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நேரம் அங்கு போட்டியில் முன்னணியில் இருக்கும் நான்கு பாதிரியார்கள் காணாமல் போகிறார்கள் அவர்களை சகோதரத்துவ அமைப்பு கடத்துகிறது.1688 இல் லாபர்கா என்ற நிகழ்வு நடந்தேறுகிறது அப்போது நான்கு இல்லுமினாட்டி அறிவியலாளர்களைச் சிலுவைக் குறியை வைத்து திருச்சபை சூடு போட்டது.அவர்களுடைய பாவத்தைப் போக்குவதற்காக அதன் பின்னர் அந்த நால்வரும் கொல்லப்பட்டனர்.பின்னர் அவர்களுடைய உடல்கள் பொது இடத்தில் வீசப்பட்டன.அதற்கு பழி வாங்கும் நடவடிக்கையாக இரவு எட்டு மணியிலிருந்து நள்ளிரவுக்குள் ஒவ்வொரு மணித்தியாலத்திற்கும் ஒருவர் என்ற ரீதியில் பொது இடத்தில் வைத்து  கொலை செய்யப்பட இருக்கிறார்கள் இறுதியாக ஆற்றல் மிக்க டைம்பாம் ஒன்றின் மூலம் வத்திக்கான் நகரத்தையே சாம்பல் மேடாக்கப் போவதாக மிரட்டுகிறது சகோதர அமைப்பு.இதனைக் கண்டு பிடிக்க மூடப்பட்ட நிலவறைகள் அபாயகரமான நிலத்தடி கல்லறைகள்,கைவிடப்பட்ட கிறிஸ்தவ தேவால யங்கள் பூமியின் மிகவும் இரகசியமான பெட்டகங்கள் நெடுங்கா லமாக மறைத்து வைக்கப்பட்ட இல்லுமினாட்டியின் மறைவிடங்கள் ஊடாக வெறித்தனமாக தேடுதல் நடத்துகிறார்கள் லேங்டனும் விக்டோரியாவும்.

கடத்தப்பட்ட பாதிரியார்கள் கொலை செய்யப்பட்டார்களா...?அவர்களுக்கு என்னவானது..?இல்லுமினாட்டிகள் தங்களுடைய இலக்கை அடைந்தனரா..?ஆற்றல் மிகு டைம்பாம் வெடித்ததா..?வத்திக்கான் தரை மட்டமானதா..?புதிய போப்பாண்டவருக்கான தேர்தல் நடைபெற்றதா..?போப் தெரிவு செய்யப் பட்டாரா..?உண்மையில் தலைமறைவாக இருந்த இல்லுமினாட்டிகள்தானா வெளிப்பட்டனர்..?என்ற கேள்விகளிற்கான விடைகள் இந்த நாவலில் இருக்கிறன.அதற்கான விடைகள் நிச்சயம் நீங்கள் எதிர்பார்க்காத வையாகத்தான் இருக்கும்.விறு விறு சுவாரஸ்யத்துடன் கதை நகர்கிறது ஆரம்பத்தில் கொஞ்சம் சலிப்புத் தட்டினாலும் போகப் போக கதையின் போக்கு புகையிரதத்தின் வேகத்தை விஞ்சுகிறது.நிச்சயம் நீங்கள் தேவதைகளும் சாத்தான்களும் நூல் உங்களிற்கு வேறு வகையான வாசிப்பு அனுபவத்தை கொடுக்கும் என்பதை என்னால்  உறுதியாகச் சொல்ல முடியும்.

பிரவுனின் எழுத்துக்களில் நான் வியந்த விடயங்கள் இந்த நாவலில் இருக்கிறன.குறிப்பாக மதம் பற்றி விக்டோரியா சொல்லும் கருத்துக்கள்.அவற்றுள் சில பைபிள்,குரான் பௌத்தம் இவை எல்லாமே ஒரே போன்ற நிபந்தனைகளைச் சுமந்திருக்கிறன.ஒரே போன்ற அபராதங்க ளையும்தான்.அவையெல்லாமே நாம் ஒரு குறிப்பிட்ட விதிமுறைப்படி வாழாவிட்டால் நரகத்திற்குத்தான் போக வேண்டும் என்கிறன.மதம் என்பது மொழி அல்லது ஆடையைப் போன்றது.நாம் வளர்க்கப்பட்ட நடைமுறைகளை நோக்கி நாம் ஈர்க்கப்படுகிறோம்,என்னுடைய கடவுள் உன்னுடைய கடவளை விடச் சிறந்தவர் என்பனவை அவையாகும்.

மேலும் சில தத்துவங்கள் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன அவையாவன இரகசியங்கள் நாம் நீண்ட காலம் தாக்குப் பிடிக்க முடியாத ஆடம்பரம்,மேதமை என்பது மேதமையை நிபந்தனையின்றி ஏற்றுக் கொள்வதுதான்,துயரங்களிலிருந்து மரணம் ஒரு பெரும் வரவேற்கத்தக்க ஆறுதலாக இருக்கும்,நிபுணத்துவம் இல்லாத வீரம் தற்கொலைக்குச் சமனானது என்பனவாகும்

ஒரு பழங்கால இரகசிய சகோதரத்துவ அமைப்பு,ஒரு புதிய பேரழிவு ஆயுதம்,சிந்திக்கவியலாத ஒரு இலக்கு,சுவாரஸ்யம் குறையாத தொய்யாத கதையின் வேகம் ஊகிக்க முடியாத திருப்பம் வாசித்தவுடன் வியந்து போவீர்கள் இவரால் மட்டும் எப்படி எழுத முடிகிறதென....உங்களுக்கும் வாசிக்க சந்தப்பம் கிடைத்தால் வாசியுங்கள் தேவதைகளும் சாத்தான்களும் புத்தகத்தை.வாசிப்போம்.


டான் பிரவுனின் ஏனைய நாவல்களை வாசிப்பதற்கு

  1. நரகம்
  2. ஆரிஜின்
  3. டாவின்சி கோட்



Post a Comment

Previous Post Next Post