.

இந்த உலகில் தமக்கு முன்பாக கொட்டிக் கிடக்கும் புதுமைகளைத் தேடிக் கண்டறியவும் அவற்றை அனுபவிக்கவும் துடிக்கும் பருவம் பதின்ம வயதுப் பருவமாகும். மற்றவர்களின் குறிப்பாக எதிர்ப்பாலாரின் அங்கீகாரத்தைப் பெறவும் அவர்களின் கவனத்தைக் ஈர்க்கவும் எதையாவது செய்து காண்பிக்க வேண்டும் என்ற தூண்டுதல் இயல்பாகவே உள்ளத்தில் கிளர்ந்தெழுந்த நிலையில் தான்தோன்றித்தனமாக எதையாவது செய்து சில சமயங்களில் பாராட்டையும் பல சமயங்களில் பெரியவர்களிடம் திட்டையும் வாங்கிக் கட்டிக் கொள்ளும் பதின்ம வயதுப் பருவத்தினரைக் கையாள்வது என்பது அன்றும் இன்றும் அனைவருக்கும் சவால் மிக்கதாகவே உள்ளது.

இலங்கையைப் பொறுத்தவரை இன்று பெற்றோரையும் ஏனையவர்களையும் கதி கலங்க வைத்துள்ள பிரச்சினையாக பதின்ம வயதினர் மத்தியிலான போதை வஸ்துப் பாவனை மாறியுள்ளது(Drug Addition)

புதுமை காணத் துடிக்கும் இந்தப் பருவமானது உடலியல் ரீதியான வேகமான வளர்ச்சி நிலை மற்றும் ஹோர்மோன் மாற்றங்களுடன் இணைந்த பாலியல் ரீதியான மாற்றங்களால் உடலிலும் உள்ளத்திலும் ஒரு வேகமும் சுறுசுறுப்பும் பிரவாகம் எடுத்து வழியும் மனித வாழ்க்கையின் ஒரு முக்கிய பருவமாக திகழ்கிறது.

தன்னைச் சுற்றி நடப்பவற்றில் நல்லது எது கெட்டது எது என்பதை சுயமாக வேறுபடுத்தி அறிவதற்கு போராடும் நிலையிலுள்ள இந்தப் பதின்ம வயதி னரை இலக்கு வைத்து பணம் சம்பாதிப்பதை மட்டுமே நோக்காகக் கொண்ட சுயநல போதைவஸ்து வியாபாரிகள் தமது வியாபாரத்தை விசாலப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருப்பது கொடுமையிலும் கொடுமையானது.

யார் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை. தமது பணப்பெட்டியை மட்டுமே நிரப்பினால் போதும் என்ற நோக்கைக் வியாபாரிகளும் போதைப்பொருள் கடத்தல்காரர்களும் தரகர்களும் சூதுவாது தெரியாத பாடசாலை செல்லும் பதின்ம வயதினரின் வாழ்வை அடியோடு சின்னாபின்னமாக்கும் வகையில் முன்னெடுத்துள்ள இந்த நடவடிக்கைக்கு திரைமறைவில் ஒரு சில சுயநல அரசியல்வாதிகளும் அதிகாரத்திலுள்ளவர்களும் துணை போவதாக வெளிவரும் செய்திகள் அனைவரையும் கதிகலங்க வைப்பதாக உள்ளது. அத்த
கைய நிலைமையானது போதைவஸ்து வர்த்தகத்தை ஒழிப்பது என்பதை ஒருபோதும் தீர்வுகாண முடியாத இடியப்ப சிக்கலாக மாற்றுவதாக உள்ளது.

இந்நிலையில் இலங்கை அரசாங்கம் மாணவர்கள் மத்தியில் போதைவஸ்துப் பாவனையை ஒழிக்க பாடசாலை மட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட ஆசிரியர்க ளுக்கு பயிற்சி வழங்கி போதைப்பொருளுக்கு அடிமையான மாணவர்களை கண்டறியும் நிகழ்ச்சித் திட்டத்தை முன்னெடுத்துள்ள போதும் அது எந்தளவிற்கு வெற்றி தரும் என்பதை எதிர்வுகூற முடியாதுள்ளது.

'திருடனாக முன்வந்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது' என்பார்கள்.அந்த வகையில் போதைவஸ்து பாவனைக்கு அடிமையான பதின்ம வயது மாணவர்கள் தாமாக மனதளவில் உணர்ந்து அந்த பாவனையிலிருந்து விடுபட வேண்டும் என்ற மன உந்துதலுக்குள்ளா காவி ட்டால் போதைவஸ்தைத் தேடி பாடசாலைப் பைகளை மட்டும் சோதனையிடுவதால் உரிய பலன் கிடைக்கப்போவதில்லை. பிடிபட்ட அவர்களை புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி அந்தப் பழக்கத்திலிருந்து விடுபட அளிக்கும் பயிற்சியும் தற்காலிக பயனைத் தருவதாக மட்டுமே அமையும்.

போதைவஸ்துடன் சிக்கும் மாணவர்களிடம் மேற்கொள்ளப்படும் விசாரணைகள் போதைவஸ்து பெரும்பாலும் வியாபாரத்தின் பிரதான சூத்திர தாரிகளை அல்லாது இந்த வியாபார வலைப்பின்னலின் கீழ் மட்டத்திலு ள்ளவர்களை கண்டறியவே வழிவகை செய்வதாக உள்ளது. பல சந்தர்பங்களில் அத்தகைய கீழ் மட்டத்திலுள்ளவர்களுக்கு தமக்குப் போதைப் பொருள் கிடைக்கக் காரணமான பிரதான நபர் யார் என்பது தெரியாது ள்ளமையே வழமையாகவுள்ளது. போதைவஸ்து வியாபாரத்தின் மூலம் கோடி கோடியாக சம்பாதித்து சுகபோக வாழ்க்கை வாழும் அரசியல் மற்றும் அதிகார மட்டத்தில் செல்வாக்குள்ளவர்கள் சமூக மட்டத்தில் அதிகம் பரிச்சயமற்ற தமது கைக்கூலிகளைப் பயன்படுத்தியே இந்த சட்டவிரோத வர்த்தகத்தில் ஈடுபடுவது வழமையாக நடந்தேறுகிறது.

சமூக நல சிந்தையற்ற கபட போதை வஸ்து விற்பனையாளர்கள் முதலில் குடும்ப சூழ்நிலையால் ஒருவித மனவிரக்தி நிலையிலும் பாடசாலைகளில் கல் வியில் பின்தங்கிய நிலையிலும் இருக்கும் மாணவர்களையே இலக்குவைத்து தமது வியாபாரத்தை ஆரம்பிக்கின்றனர்.

அவர்கள் பல சமயங்களில் இந்தப் போதைப்பொருளை அந்த மாணவர்களுக்கு உணவிலும் குடிபானத்திலும் தின்பண்டங்களிலும் கலந்து வழங்கி அவர்களை அதற்கு அடிமையாக்கும் முயற்சிகளில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு போதைவஸ்துக்கு அடிமையாகும் மாணவர்கள் தாம் அறிந்தோ அறியாமலோ தமது பாடசாலையில் கல்வி கற்கும் சக மாணவர்களை போதைவஸ்துப் பாவனைக்குத் தூண்டும் செயற்கிரமத்தில் ஈடுபடுவதால் பாடசாலை சமூகத்தில் போதைவஸ்து பாவனை தலைவிரித்தாடும் நிலை வலுப்பெறுகிறது. இதுவே போதைவஸ்து வியாபாரிகளது சூழ்ச்சி இலக்காகவும் உள்ளது.

இந்த சூழ்ச்சி வலையில் பதின்மவயதுப் பெண் பிள்ளைகள் சிக்கும் போது நிலைமை மேலும் விபரீதமாகிறது. அவர்கள் போதைவஸ்து விற்பனை யாளர்களால் அல்லது போதைவஸ்துப்பாவனையுடன் தொடர்புபட்ட ஏனைய வர்களால் பாலியல் ரீதியில் துன்புறுத்தப்பட்டு அவர்களது வாழ்க்கையே சின்னாபின்னமாக நேரிடுகிறது. சில சந்தர்ப்பங்களில் இவ்வாறான சதிக் கும்பலிடம் சிக்கும் சில சிறுமிகள் பணத்திற்காக எந்தப் பாதகத்தையும் செய்ய அஞ்சாத கயவர்களால் அச்சுறுத்தப்பட்டு பாலியல் தொழிலாளிகளாக மாற்றப்படும் சம்பவங்களும் உள்ளன.

நாட்டில் நிலவும் மோசமான பொருளாதார நிலைமையால்  வாழ வழி தெரியாத குடும்பங்களில் அந்தப் பொருளாதார நெருக்கடியுடனும் ஏனைய பிரச்சினைகளுடனும் தொடர்பட்டதாக அடிக்கடி ஏற்படும் பிணக்குகள் பிள்ளைகளுக்கு குறிப்பாக பதின்ம வயதிலுள்ள பிள்ளைகளுக்கு உளவியல் ரீதியில் பாதிப்பை ஏற்படுத்தி அவர்களை மன அழுத்த நிலைக்குத் தள்ளுகிறது.

அத்துடன் பிறப்பாலான உடலியல் மற்றும் உளவியல் குறைபாடுகள், கற்றல் ஆற்றலிலான பாதிப்பு என்பவற்றால் பாடசாலை மட்டத்தில் சக மாணவர் களால் எதிர்கொள்ளும் உளவியல் மற்றும் உணர்வு ரீதியான துன்புறுத்தல்களால் ஏற்பட்ட மனவிரக்தி நிலை மற்றும் பழி வாங்கும் எண்ணம் என்பவற்றால் தூண்டப்படும் பதின்ம வயதினர் நிஜ வாழ்க்கையை மறக்கடித்து கனவுலகில் சஞ்சரிக்க வழிவகை செய்யும் போதைப்பொருளுக்கு இலகுவில் அடிமையாகின்றனர்.




இதற்கு முன்னர் செல்வந்த குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகள் கல்வி கற்கும் கொழும்பிலுள்ள சில உயர் மட்ட பாடசாலைகளை இலக்குவைத்து போதைப் பொருள் வர்த்தகம் முன்னெடுக்கப்பட்டமை குறித்து அறியப்பட்டிருந்தது.

ஆனால் தற்போது கொழும்பில் மட்டுமல்லாது நாட்டின் அனைத்துப் பிராந்தி யங்களிலுமுள்ள அனைத்துப் பாடசாலைகளையும் இலக்குவைத்து போதைப் பொருள் வர்த்தகம் மும்முரமாக விரிவுபடுத்தப்பட்டு வருவது அதிர்ச்சி தருவதாக உள்ளது. குறிப்பாக நாட்டின் வடக்கு, கிழக்கிலுள்ள மாணவர்களை இலக்குவைத்து மோசமான முறையில் போதைவஸ்து வர்த்தகம் கட்டவிழ்த்து விடப்பட்டிருப்பது உள்நாட்டுப் போர் தலைவிரித்தாடிய நெருக்கடிமிக்க காலத்தை உள்ளடக்கி காலங்காலமாக கல்வியில் சாதனை படைத்து வந்த அந்த சமூகத்தை முடக்க ஒரு தரப்பினரால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட சதியாக விமர்சிக்கப்படுகிறது. அது திட்டமிட்ட சதியா அல்லது போதைவஸ்து வர்த்த கத்தை முன்னெடுக்கும் தந்திரோபாயமா என்பது உண்மைகள் வெளிப்படும் போது  வெளிச்சமாகுவது திண்ணம்.

இரு வருடங்களுக்கு முன்பாக பெறப்பட்ட அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட ஆய்வொன்று போதைவஸ்து பாவனை தொடர்பில் கைது செய்யப்பட்டவர்கள் மத்தியில் பதின்ம வயதினரின் தொகை ஏனைய வயது பருவத்தினருடன் ஒப்பிடுகையில் குறைவாகவுள்ளதாக தெரிவிக்கிறது. அந்த ஆய்வில் அநேக பதின்ம வயதினர் கஞ்சா போதை வஸ்து பாவனை தொடர்பிலேயே கைது செய்யப்பட்டுள்ளனர்.

பல குடும்பங்களில் பாடசாலை செல்லும் பதின்ம வயதினர் போதைப்பொருள் பாவனைக்குமையாகியிருப்பதை அறிந்தும் குடும்ப கெளரவம் கருதியும் அவர்கள் சட்டத்தின் பிடியில் சிக்கிக் கொண்டால் அவர்களது எதிர்கால சமூக உறவுகள் பாதிக்கப்படலாம் என்ற அச்சத்தாலும் அவர்களை மேற்படி பாவனையிலிருந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்காது அதனை மூடி மறைக்கும் போக்குப் பரவலாகக் காணப்படுகிறது.

பெரும்பாலும் போதைப்பொருள் வியாபாரிகளையும் தரகர்களையும் அணுகும் போது பிடிபடுபவர்களும் பொது இடத்தில் சந்தேகத்திற்கிடமாக நடத்தை காரணமாக விசாரணைக்குட்படுபவர்களும் மட்டுமே பொலி ஸாரிடம் சிக்கிக் கொள்கின்றனர்.

உலக வரைபடத்தில் முக்கிய கேந்திர நிலையில் அமைந்துள்ள இலங்கைக்கு இந்தியா, ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் உள்ளடங்கலான நாடுகளி லிருந்து போதைவஸ்து கடத்தப்பட்டு வருகிறது. அவ்வாறு வரும் பெருந் தொகையான போதைப்பொருளின் ஒரு பகுதி இங்கிருந்து உலகமெங்குமுள்ள செல்வந்த நாடுகளுக்கு கடத்தப்படுகிறது. மேற்படி போதைவஸ்து கடத்தலுக்கு இலங்கையில் 3 தசாப்த காலமாக இடம்பெற்று வந்த உள்நாட்டுப் போர்,அதைத் தொடர்ந்து தற்போது நிலவி வரும் அரசியல் ஸ்திரமற்ற நிலைமையும் தூபம் போடுவனவாக அமைந்துள்ளன. போதை வஸ்துக் கடத்தல்காரர்கள் அதிகார மட்டத்திலுள்ள சிலருக்கு இலஞ்சம் கொடுத்து அவர்களை தமது விருப்பப்படி ஆட்டுவிப்பதும் போதைவஸ்து வியாபாரம் தங்குதடையின்றித் தொடர வழியேற்படுத்தித்தருவதாக உள்ளது.

இந்த ஆண்டு இரண்டாவது காலாண்டுப் பகுதியில் போதைவஸ்து கண்காணிப்பு அமைப்பால் மேற்கொள்ளப்பட்ட புதிய ஆய்வொன்று போதை வஸ்தானது வேடிக்கை மற்றும் களிப்பு நோக்கிலேயே அதிகளவில் பயன்ப டுத்தப்படுவதாக கூறுகிறது. இலங்கையில் அதிகளவு பாவனையிலுள்ள போதைப்பொருட்களாக ஹெரோயினும் கஞ்சாவும் உள்ளன.

இலங்கையில் அனைத்து வயதுத் தரப்பினரையும் உள்ளடக்கி மேற் கொள்ளப்பட்ட ஆய்வானது ஹெரோயின் போதைப் பொருளை சுமார் 45,000 பேர் ஒழுங்குமுறையில் பாவிப்பதாகவும் சுமார் 60,000 பேர் கஞ்சாவை பாவிப்பதாகவும் தெரிவிக்கின்றன.

பெற்றோர் அல்லது குடும்ப உறவினர்கள் போதைப்பொருட்களைப் பாவிப் பதால் கவரப்பட்டும் அநேக பதின்மவயதினர் அந்தப் பழக்கத்திற்கு தாமும் ஆளாகுகின்றனர்.

மேலும் கொவிட் 19 கொரோனா வைரஸ் தொற்றுக் காலத்தில் பாடசா லைகளுக்குச் செல்லாது இணையத்தளம் மூலம் வீட்டிலிருந்து கல்வி கற்கும் நடைமுறை அமுல்படுத்தப்பட்டமையும் உடலுக்கும் உள்ளத்திற்கும் உத்வேகமும் உற்சாகமும் தரும் பௌதிக ரீதியான விளையாட்டு செயற்பாடுகள் மட்டுப்படுத்தப்பட்டு வீட்டுக்குள் அடைபட்டிருக்க நேர்ந்தமையும் பதின்ம வயதினர் மத்தியில் ஒரு வித மன அழுத்த நிலையை தோற்றுவித்திருந்தமையை நிராகரிக்க முடியாது. இது அவர்களை போதைப் பொருள் வியாபாரிகளின் சூழ்ச்சி வலையில் இலகுவில் சிக்க வைக்கும் நிலைமையொன்றை உருவாக்கியது.

மேலும் கொவிட் 19 கொரோனா வைரஸ் தொற்றுக் காலத்தில் மாணவர்களின் கல்விக்கு இணையத்தளங்கள் மகத்தான பங்களிப்பு செய்து வந்திருந்த நிலையில் அந்த இணையத்தளங்கள் மாணவர்கள் சிலருக்கு தவறா னவர்களுடனான நட்பை ஏற்படுத்தி அவர்களை போதைப்பொருள் பாவனை
என்ற நச்சுச் சுழலில் சிக்கவைத்துள்ளது.

உடலியல் ரீதியான ஹோர்மோன் மாற்றங்களால் ஒருவித தடுமாற்றத் திலிருக்கும் பதின்ம வயதினரை ஒரு செயலைச் செய்ய ஊக்குவிப்பதாக கருதி அவர்களை மற்றவர்களுடன் ஒப்பிட்டு கடிந்து கொள்வது, தாழ்வாக விமர்சிப்பது, அவர்களுக்கு கருத்துகளை பரிமாற சந்தர்ப்பம் அளிக்கா திருப்பது என்பன அவர்கள் தவறான நட்பு வட்டாரத்தில் சிக்கி போதைவஸ்து பாவனை உள்ளடங்கலான வாழ்வை நாசப்படுத்தும் பழக்கங்களுக்கு அடிமையாக வழிவகை செய்கிறது.

இந்த நவீன இயந்திரமயமான வாழ்க்கை நிலையில் தமது தொழில் மற்றும் வீட்டு அலுவல்கள் என்பவற்றில் மூழ்கி தமது பிள்ளைகளுக்காக நேரம் ஒதுக்க பெற்றோர்கள் தவறும் நிலை காணப்படுகின்ற நிலையில் வீட்டில் எவரும் தம்மைப் பொருட்படுத்தாதுள்ளதாக கருதி தமக்கென தனியுலகை சிருஷ்டித்துக் கொண்டு சமூக வலைத்தளங்களுக்குள் மூழ்கி அந்த வலைத் தளங்களில் நயவஞ்சகர்களால் விரிக்கப்படும் பொய்யான காதல் வலையில் சிக்கி பாதைவஸ்துக்கு அடிமைப்பட்டு மன உளைச்சலுக்குள்ளாகி வாழ்வைத்  தொலைத்து விட்டுத் தேடியலையும்    ஒரு சில பதின்ம வயதினரின் கதைகள் பொலிஸ் பதிவேடுகளை அவ்வப்போது அலங்கரித்து வருகின்றன.

இணையத்தளம் மூலம் போதைவஸ்து பாவனைக்கு அடிமையாகும் சம்பவங்களுடன் உளவியல் ரீதியான கேலி மற்றும் துன்புறுத்தல்களுக் குள்ளாகி இளவயதினர் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் உலகளாவிய ரீதியில் ஆங்காங்கே இடம்பெற்று வருவதையும் கேள்விப்படுகிறோம்.

ஒருவரின் வாழ்வில் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் பருவமாக பதின்ம வயது உள்ள நிலையில் அந்த வயதிலுள்ளவர்களை குடும்பத்தினரும் ஏனை யவர்களும் சரியான முறையில் நெறிப்படுத்தி வழிப்படுத்தினால் அவர்களால் சாதிக்க முடியாதது எதுவுமில்லை என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை. இதற்கு அந்தப் பதின்ம வயதினருக்கு பிறப்பாலும் இடை நடுவிலும் ஏற்பட்ட உடலியல் மற்றும் உளவியல் ரீதியான குறைபாடுகள் தடையாகவிருப்பதற்கு சாத்தியம் உள்ள போதும் அவற்றை வெற்றி பெற்ற விசேட தேவையுள்ள பதின்ம வயதினரை உலகளாவிய ரீதியில் மட்டுமல்லாது இலங்கையிலும் காணமுடிகிறது.

எதையும் நிஜத்தில் அனுபவித்து உணரவேண்டும் என்ற துடிப்புடன் காணப்படும் பதின்ம வயதினரின் நடத்தை மாற்றங்கள், நட்பு வட்டாரங்கள், சமூக வலைத்தளங்கள் மூலமான தொடர்புகள் என்பன குறித்து பெற்றோரும் குடும்பத்தினரும் விழிப்புணர்வுடன் இருப்பது அவசியமாகிறது.




Post a Comment

Previous Post Next Post