.

ஆதிபுரம் கிராமத்தில் வாழ்ந்தான் கதிர்வேல். பெரிய பணக்காரன்;மலை என, குவிந்து கிடந்தது செல்வம். வியாபாரத்தில், நாணயத்துடன் நடந்ததால் புகழும் சேர்ந்திருந்தது.

புகழுடன் வாழ்ந்த கதிர்வேல் திடீர் என மரணமடைந்தான். அவனது ஒரே மகன் மகிழ்வரசு. தந்தையைப் போல் சாமார்த்தியசாலி அல்ல; செல்வத்தின் அருமை, பெருமை தெரியாதவன்.கண்டபடி செலவு செய்தான். அவனை சுற்றி, நண்பர் கூட்டம் உருவாகியது.மகிழ்வரசின் அன்பைப் பெறவோ, நட்புக் கொள்ளவோ வரவில்லை அவர்கள்.அவனது செல்வத்தில் பயன் அடைய வந்தனர். அதனால், தந்தை சேர்த்த செல்வம், சொற்ப நாட்களிலேயே கரைந்தது.வற்றிய குளத்தில், மீன் பிடிக்க முடியாது என்பதை உணர்ந்து பறந்து விட்டனர் நண்பர்கள்.

அனைத்தையும் இழந்தான் மகிழ்வரசு.பிறரிடம் கையேந்தும் நிலை ஏற்பட்டது.உழைக்கும் பழக்கம் இல்லாமலேயே வாழ்ந்து பழகி விட்டான். பொய் நண்பர்கள் போய் விட்டனர்.

எந்த எதிர்பார்ப்பும் இன்றி நட்பு கொண்ட ஒருவன் மட்டும் உடன் இருந்தான். அவன் பெயர் வினோத். மகிழ்வரசுவைத் தேடி ஒரு பெட்டியுடன் வந்தான். மகிழ்ச்சியுடன் வரவேற்று,‘உன்னை பார்க்க, நானே வர வேண்டும் என்று நினைத்திருந்தேன்; நீயே வந்து விட்டாய்... என் நிலைமை..' என்று பேச முடியாமல் அழுதான் மகிழ்வரசு.

‘உன் நிலையை அறிவேன்; உதவி செய்யவே வந்தேன்; இந்த பெட்டியை எடுத்துக்கொள். இந்த ஊரை விட்டு சென்று, பிழைத்துக் கொள். நல்வாழ்வு வந்ததும், பெட்டி உன்னை விட்டு பறந்து விடும்; கவனமாக இரு..' என்றான் வினோத்.

‘இந்த பெட்டியை வைத்து, என்ன செய்வது... உள்ளூரிலேயே பிழைக்க முடியாத நான், வெளியூர் சென்று எப்படி பிழைக்கப் போகிறேன்' என எண்ணினான். மனச் சோர்வும், வேதனையும்,தைரியமின்மையும் அவனை வாட்டின.யோசித்தவாறே, அந்த பெட்டி மீது உட்கார்ந்தான் மகிழ்வரசு.

அடுத்த கணம்... நம்ப முடியாத நிகழ்ச்சி நடந்தது. அவன் உட்கார்ந்திருந்த பெட்டி, பறக்க ஆரம்பித்தது. பயத்தால் பெட்டியைக் கட்டி பிடித்துக் கொண்டான் மகிழ்வரசு. பெட்டியில், 'பிழைக்கப் போ...' என எழுதி இருந்தது.

பல இடங்களுக்கு அவனைச் சுமந்து சென்றது பெட்டி. பல நாடுகளை சுற்றிப் பார்த்தவன், அபூர்வ பொருட்களை வாங்கினான். இறுதியாக அழகிய மாளிகை முன் இறங்கி, பெட்டியை ஒளித்து வைத்தான். பின், மாளிகைக்குள் சென்றான்.தங்க சிம்மாசனத்தில் உட்கார்ந்திருந்த மன்னருக்கு, வணக்கம் தெரிவித்தான். 

‘யாரப்பா நீ... எங்கிருந்து வருகிறாய்...'என்றார் மன்னர். 'நான், அபூர்வ சக்தி வாய்ந்தவன்; அதை பயன்படுத்தி, பல நாடுகளுக்குச் சென்று வந்திருக்கிறேன். உங்கள் பேரும், புகழும் அறிந்து காண வந்தேன்...' என்றான் மகிழ்வரசு.


பயண அனுபவத்தை எடுத்துக் கூறினான். சேகரித்து வந்திருந்த உயர் ரக ஆப ரணங்களை, மன்னரிடம் கொடுத்தான்.அபூர்வ முத்து, பவள மாலைகளையும் கொடுத்தான். அவனது, அபூர்வ சக்தி,துணிச்சல் கண்டு மெச்சினர். மன்னர் அருகில் அமர்ந்திருந்த இளவரசி, 'அப்பா...இந்த அதிசய இளைஞரை, விரும்புகிறேன். தைரியமாகவும், துணிச்சலாகவும் பல நாடுகளுக்குச் சென்று வந்துள்ளார்.அவருடன் இன்ப பயணம் செல்ல விரும்புகிறேன்...' என்று கூறினாள். 

சம்மதித்தார் மன்னர். அவளை, மகிழ்வரசுக்கு மணம் முடிக்க முடிவு செய்தார். திருமண ஏற்பாடுகளை விமரிசையாக செய்யும் படி உத்தரவிட்டார். மண விழா ஏற்பாடு நடந்த போது, மகிழ்வரசு எடுத்த வந்த பெட்டி காணாமல் போய் விட்டது.எதுவும் புரியாத நிலையில் தலைமறைவாகி விட்டான் மகிழ்வரசு. வேதனை மேலோங்க, கண்டபடி அலைந்து திரிந்தான். மகிழ்வரசுவைக் காணாமல் அழுது புலம்பினாள் இளவரசி. மகளின் கவலை அறிந்து, 'விரைவில் கண்டுபிடித்து விடுகிறேன்...' என்று ஆறுதல் கூறினார் மன்னர்.

அங்குமிங்கும் சுற்றிய மகிழ்வரசு,பயண அனுபவங்களையும், அதிசயப் பெட்டி பற்றிய விபரங்களையும் மக்களிடம் கதையாக கூறினான். இதைக் கேட்டவர்கள் மகிழ்ச்சி அடைந்து, சிறிது பணம் கொடுத்தனர். இவ்வாறு கிடைத்த பணத்தில் பிழைப்பை நடத்தி வந்தான் மகிழ்வரசு.

அரண்மனையில் - திருமணம் நின்று போனதால், கவலையில் ஆழ்ந்திருந்தது அரச குடும்பம். விருந்தும், வேடிக்கையும் நின்று போயிற்று.

ஒரு நாள் - அந்த நாட்டு தளபதி,இளவரசியை சந்தித்து, 'நீ வெளிநாட்டிலிருந்து வந்த மகிழ்வரசுவை மணப்பது சரியல்ல... என்னை மணந்து கொள்...அவன் எடுத்து வந்த பெட்டியை நான் தான் மறைத்து வைத்திருக்கிறேன்..'என்றான். ‘அப்படியா... பெட்டியைக் காட்டு பார்க்கலாம்...' என்று கேட்டாள் இளவரசி. அதைக் காட்டினான் தளபதி.பெட்டி மீது, 'பிழைக்கப் போ' என, எழுதியிருந்தது. அதன் மீது அமர்ந்தாள் இளவரசி. சில நொடிகளில் பறக்க ஆரம்பித்தது. தளபதியால் அதைத் தடுக்க முடியவில்லை. பெட்டியிடம், 'மகிழ்வரசு இருக்கும் இடத்துக்கு போ...' என்றாள் இளவரசி. கண நேரத்தில், காட்டுப் பகுதிக்குள் இறக்கியது.

மகிழ்வரசுவைக் கண்டதும், பெரு மகிழ்ச்சி அடைந்தாள். தளபதியின் சதித்திட்டம் பற்றி விவரமாகக் கூறினாள்.இருவரும் அரண்மனைக்கு வந்து, விபரத்தை, மன்னரிடம் தெரிவித்தனர். தளபதி மீது, கடுஞ்சினம் கொண்டு, சிறையில் அடைக்க உத்தரவிட்டார் மன்னர்.

இளவரசி - மகிழ்வரசு திருமணம் இனிதே முடிந்தது. அபூர்வ பெட்டியிடம், 'இளவரசியுடன், உலகப் பயணம் செல்ல விரும்புகிறோம்; எங்களை சுமந்து செல்...' என்றான் மகிழ்வரசு.‘மன்னிக்க வேண்டும் இளவரசே... நீங்கள் நல்லாட்சி நடத்துங்கள்... அது தான் உங்கள் வேலை; என் வேலை முடிந்து விட்டது...' எனக் கூறி, பறந்தது அதிசயப்பெட்டி. 

நீதி-கடின உழைப்பு பலனைத் தரும் என்று நம்பி செயல்படுங்கள்.







Post a Comment

Previous Post Next Post