புத்தகத்தின் பெயர்:- *ஒதுக்கப்பட்டவர்கள் *
ஆசிரியர் :- *மஹாஸ்வேதா தேவி *
தமிழில் :- *அமரந்த்தா *
நூல் வெளியீடு . *போதி வனம் * *
விலை:- ' *200 /-*
1984 ல் சீக்கியர் கலவரம் என்ற நூலை வாசித்தபோது ஏற்பட்ட மனவேதனையை இன்றும் மனக்கண் முன் உலாவுவதை உணரக்கூடியதாக உள்ளது. கோதுமை, நெல், கரும்பு,அத்திப்பழம் இது போன்ற உணவுகளை உற்பத்தி செய்வதிலும் வல்லவர்கள் பஞ்சாப், ஹரியாணா பண்ணை முதலாளிகள். இந்த உணவுகளை உண்ணும் மக்கள் அந்த உணவை உட்கொள்ளவில்லை, உண்ணுவதெல்லாம் பீகார்,மேற்கு வங்க, மற்றும் பிற மாநிலங்களில் வாழும் பழங்குடியினரின் இரத்தத் தையே, என்று குறிப்பிடும் ஆசிரியர் மஹாஸ்வேதா தேவி அவர்கள், தான் இந்தப் பழங்குடி மக்களுடன் மக்களாக இருந்து, பல பழங்குடி மொழிகளைப் புரிந்து, உண்மை நிலையைக் கக்கியிருக்கிறார் என்றே எண்ணத் தோன்றுகின்றது.
ஆயிரக்கணக்கான பழங்குடியினர் வாழும் இந்தியாவில், பல நூறு தத்தம் இனத்தி ற்கே உரிய மொழிகளைப் பேசி வருகின்றனர். அவர்களுடைய வாழ்வாதாரம், வேலை, பசி, பட்டினி, பாலியல் கொடுமை, அரசாலும் மக்கள் சமுதாயத்தா லும் புறக்கணிப்பு இது போன்ற, முழுக்க முழுக்க அவர்களின் உண்மைக் கொடுமைகளை, போட்ட திரையைக் கிழித்துக் காட்டுகிறார் ஆசிரியர் மஹாஸ்வேதா தேவி.
ஒரு குடும்பம் சேர்ந்து சாப்பாட்டு விடுதியில் சாப்பிட்டாலோ அல்லது ஒரு கடையில் நமக்குத் தேவையான துணிமணிகள் வாங்கினாலோ நாம் கொடுக்கும் பணத்தை விட மனிதனின் உயிருக்கு வெறும் 50 ரூபாயோ 40 ரூபாயோ தான் விலை என்றால், இந்தியா நான் ஒரு வல்லரசு என்று சொல்வதில் ஏதும் அர்த்தம் உள்ளதா? என்று தோன்றவில்லை.
ஆச்சரியப்படவைக்கும் சம்பவங்கள் குறித்து நிறையவே வாசிக்கக்கூடியதாக உள்ளன.வறுமையின் காரணமாக( பழங்குடி மக்கள்) இளம் பெண்கள், ஆண்கள், 10,12 வயதுடையவர்கள், தரகர்கள் மூலமாக ஏமாற்றப்பட்டு, வயல்களிலும், வீட்டு வேலைகளுக்கும், மாடு, ஆடுப் பண்ணைகளிலும், செங்கல் சூளைத் தொழிற்சாலைகளிலும் அடிமைகளாக துன்பப்படுவதனையே ஆசிரியர் இங்கு எங்கள் கண்முன் நிறுத்துகிறார். இங்கே பழங்குடியினர் இரண்டு விதமான கட்டங்களில் தங்களது மிகத் துன்பமான வாழ்க்கைக்குத் தள்ளப்படுவதை காணலாம்.
# 1. அவர்கள் வறுமையின் காரணமாக எந்தக் காலத்திலும், எங்கு வேண்டுமென்றாலும் சென்று வேலைசெய்து தங்கள் வயிற்றை நிரப்பத் துடிக்கின்றனர்.
# 2. ஏதாவது தவறு செய்து விட்டால், தமது இனத்திலிருந்து விலக்கிவிடுவர் என்ற பயம். தவறுக்குரிய பிராயச்சித்தம் செய்வதற்கே அவர்களிடம் பணம் இல்லாமை.
உதாரணமாக ஒரு பெண் தனது பழங்குடி ஜாதி உள்ள ஒருவனுடன் இல்லாமல் வேறு ஜாதி ஆணுடன் தொடர்பு ஏற்பட்டுப் பிறக்கும் குழந்தைகளுக்கு அங்கு இடமில்லை. அது பாலியல் பலாத்கார மூலம் பிறந்தாலும் இதே சட்டம்தான். இப்படிப் பல துயர சம்பவங்களைச் சுமந்து செல்கிறது இந் நாவல்.
ஆசிரியர் இங்கு 5 விதமான பழங்குடிப் பெண்களின் சம்பவங்களை விரிவாக எடுத்துரைக்கிறர் என்றே சொல்லலாம்.
தெளலி*
ஷானசாரி*
ஜோஸ்மினா*
சிந்த்தா*
மேரி*
அடிமைகளாக வேலைக்குப் போகும் பெண்கள், அங்கு வேலைசெய்யும் அல்லது பண்ணையாரின் பிள்ளைகளால் வலுக்கட்டாயமாகப் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டுவது குறிப்பிடத்தக்கது. கூடுதலாக எந்த ஒரு பெண்ணும் தப்புவதில். வருட வேலை முடிந்து தமது கிராமத்திற்கு அவர்கள் திரும்பும் போது, அவர்களிடம் ஒரு புடவையும், ரயில் டிக்கெட் மட்டுமே மிகுதியாய் இருக்கும். அவர்களது சாப்பாடு என்றால் காய்ந்த ரொட்டியும் சோளக் கஞ்சியும் தான் வாழ்நாள் முழுக்க.
இந் நாவல் உண்மையிலேயே ஒதுக்கப்பட்டவர்கள் தான் என்பதில் சந்தேகம் இல்லை. நாவல் முழுக்கப் பழங்குடியினரின் இரத்தங்களைப் பிழிந்தெடுக்கும் பண்ணையார், போலீஸ் இலாகா, தரகர்கள், ஆகியோரின் பசுத் தோல்களைக் கிழித்து உண்மையான புலியையே ஆசிரியர் காட்டுகிறார்.
அவர்களது தினக் கூலி வெறும் 1 ரூயாய் மட்டுமேதான். ஆனால் வேலை மட்டும் 14ல் இருந்து 18 மணித்தியலங்கள் இது மட்டுமல்லாது மாதமுடிவில் அது, இது என்று சொல்லி 10 ரூயாய் குறைத்துக் கொடுக்கும் கொடூரம்.
தமிழ் நாடு பழங்குடி மக்கள் சங்கத்தைச் சேர்ந்த வி. பி. குணசேகரண் என்பவர் தனது முன்னுரை யில் பல அதிர்ச்சி தரும் தகவல்களைப் பகிர்ந்து கொள்வது வாசி ப்போர் மனதை நெகிழ வைக்கும் என்பது நிட்சயம். இதனைத் தமிழ் மொழி மாற்றம் செய்த ஆசிரியர் அமரந்த்தா அவர்களுடைய ஆற்றல் முறிவு படாத வசனங்கள், தொடர் வாசிப்புக்கு சோர்வைத் தவிர்ப்பதை உணரலாம்.அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
பழங்குடி மக்கள் இன்றும் தங்களது இனக் கட்டுப்பாடு, மூடநம்பிக்கை இவற்றிலே மிக ஆழமாக ஊறியிருப்பது வேதனையைத் தருகின்றது. இந் நாவலில் தெளலி என்னும் பழங்குடிப் பெண்ணை ஒரு வேறு ஜாதி ஆண்மகன் பிள்ளையையும் கொடுத்து ஏமாற்றுகிறான். அவள் எப்படி பலதரப்பட்டவர்களுக்கு மனைவி யாகிறாள், அதில் ஏற்படும் கசப்பான சம்பவங்களை ஆசிரியர் எப்படி துக்கத்தோடு நகர்த்துகிறார், என்பதே அவளுடைய கதை.
ஜோஸ்மினாவின் வாழ்க்கையில், அவள் ஏன் தற்கொலை செய்து கொண்டாள் என்பதனை அறிய வாசியுங்கள். கூட்டிக் கழித்துப் பார்த்தால், வறுமையானால் கட்டாயமாக வேறு இடங்களுக்கு ஏமாற்றப்பட்டு (நிறையப் பணம் சம்பாதிக்கலாம் என்று சொல்லி) கொண்டு செல்லப்பட்டு, அங்கு ஒழுங்கான கூலியும் இல்லாமல், சாப்பாடும் இல்லாமல், உறங்கவும் முடியாமல், அதைவிடப் பாலியல் பலாத்காரம் இவற்றை அனுபவித்து கடைசியில் தனது பழங்குடி இடத்திற்கு வந்தால், அங்கு வேறு ஜாதி பிள்ளையை வயிற்றில் சுமந்ததால், அவள் காடுகளை நோக்கியோ அல்லது மலைகளை நோக்கியோ அடித்து விரட்டப்படுகி றாள். அதைவிடப் பலரோடு போகும் பெண் என்றால், நீ நகரத்தில் போய் செய், இங்கு கிராமத்தில் சாமியார் கோவிப்பார் என்று உதைத்து அனுப்பப்பாடுவாள்.
வேட்டை என்ற தலைப்பில் வரும் மேரி என்ற பழங்குடிப் பெண்ணின் முடிவு கொஞ்சம் வித்தியாசமான முடிவு. இனிவரும் காலங்களில் அவர்கள் கையில் இப்படியான ஆயுதத்தைத்தான் எடுப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. (பெருமளவில் இல்லையென்றாலும் ஒரளவு).
வேறு இனத்தாரும் அரசாங்கமும் சேர்ந்து சில இடங்களில் பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விடுவர், அதனால் பழங்குடியினரின் உடமைகள் அனைத்தும் எரிக்கப்பட்டு அவர்கள் காட்டுக் குள்ளும் மலைகளுக்கும் ஓடி ஒதுங்குவார்கள். அத்துடன் அவர்களது உடம்பைக் கூட மறைப்பதற்கு ஒரு சிறு துணி கூட இல்லாமல் அவதிப்படும் நிலை மேலேயிருந்து பார்க்கும் ஆண்டவனுக்குக்கூட பொறுக்காத நிலையில் இந்தப் பாடலைப் பாடுவார்கள்.
**என் பாலி காட்டுப் பழங்களைச் சாப்பிட்டு
வாழ்வாள்
என் பாலி காட்டு வேர்க்கிழங்குகளை சாப்பாடு
வாழ்வாள்
ஆனால் மரங்களில் *புடவை காய்ப்பதில்லை*
அதனால் சூளைக்குப் போனாள் என் பெண்
என் பெண் சூளைக்குப் போனாள்**
நான் இந்த 5 பழங்குடிப் பெண்களின் கதைகளை விமர்சனம் செய்ய முடியாமல் உள்ளது. அவ்வளவு சோகங்களும் 2 நாட்கள் என்னை ஆட்டுவித்தன என்றே நான் நினைக்கிறேன்.நிச்சயம் பாவப்பட்ட நெஞ்சங்களுடன் எங்கள் இருதய ஒளியை சிறிதளவேனும் அனுப்பி, அவர்கள் துயரம் தொடரா வண்ணம் இருக்க இறைவனிடம் கேட்டு, கண்டிப்பாக நீங்களும் இந்தக் கொடுமையின் உச்சத்தை வாசியுங்கள்.
இந் நாவல் பல இடங்களில் என்னைச் சோகத்தில் ஆழ்த்திவிட்டதென்றே கூறலாம். இருந்தும், நீங்களும் கொஞ்சம் ஒதுக்கப்பட்டவர்களை உள்வாங்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். வாசியுங்கள்.
@பொன் விஜி
Post a Comment