.

காகம் ஒரு வீட்டின் கொய்யா மரத்தில் கூடுகட்டி வாழ்ந்து வந்தது. அது எதைச் சாப்பிட்டாலும் பகிர்ந்து உண்ணும், அதற்கு யார் எதைச் சொன்னாலும் கோபமே வராது. அதே கொய்யா மரத்தில் அணில் ஒன்றும் இருந்தது. அது எப்போதும் தன்னைப் பற்றி தற்பெருமை பேசும், பிறரைப் பற்றி குறைகூறிக் கொண்டிருக்கும்.

ஒருநாள் காகத்தைப் பார்த்து. “நீ எவ்வளவு கருப்பாக இருக்கிறாய்...உனக்குக் கைகள்கூட இல்லை.. இறைவன் படைப்பில் எப்படிப்பட்ட குறை இது" என்று பலவாறு பேசியது. ஆனால் அதைக் கேட்டு காகம் கோபப்படவில்லை.தனக்கு அந்த வசதி இல்லை என்பதை ஒத்துக்கொண்டது.

அணில் இனிப்பான கொய்யாப் பழத்தை சாப்பிட்டுவிட்டு சுவை குறைந்த பழங்களை கொறித்துக் கொறித்து கீழே போடும். அப்போது அங்கே வந்த அந்த வீட்டுக்காரர். இந்த அணில் அதிகமாக சேட்டை செய்கிறது. பழங்களை அநியாயமாக்குகிறது  என்று முணுமுணுத்துக்கொண்டே கீழே விழுந்திருந்த பழங்களை எடுத்துச் சென்றார்.

இதைக் கேட்ட காகம், அணிலிடம் நீ பழங்களை சாப்பிடு. ஆனால் கொறித்துக் கொறித்து அநியாயமாக்காதே' என்றது.

உடனே அணில், 'எனக்கு கைகள் இருப்பதால் உனக்கு பொறாமை, அதனால்தான் நீ இப்படி சொல்கிறாய்' என்றது.

அதற்குக் காகம். "இல்லை இல்லை....அந்த வீட்டுக்காரர் நீ  அநியாயமாக்குகிறாய்  என்று முணுமுணுத்தபடி சென்றார். அதனால்தான் அப்படிச் சொன்னேன்' என்றது. ஆனால் அணில் அதை காதில்கூட வாங்கவில்லை.

அன்று அமாவாசை. அந்த வீட்டுக்காரர் ஓர் இலையில் சாப்பாட்டை வைத்துவிட்டு கா...கா... என்று கூவி அழைத்தார். சாப்பாட்டைப் பார்த்ததும் அணில் ஓடிப்போய் அதைச் சாப்பிட முயன்றது. உடனே வீட்டுக்காரர் அணிலை விரட்டியதும் அணில் பயந்து போய் மரத்தின் மீது ஏறியது.

அதன் பிறகு காகம் அந்த இலைக்கு வந்து உணவை உண்ணும்வரை வீட்டுக்காரர் அங்கேயே இருந்தார். அது சாப்பிட்டு முடித்த பிறகே வீட்டுக்குள் சென்றார். அவர் சென்றதும் காகம் அணிலிடம் சென்று, 'பாயாசத்தில் உள்ள கிஸ்மிஸ் பழமும் முந்திரியும் உனக்குப் பிடிக்குமே... அதனால் உனக்காக இலையில் பாயாசமும் அப்பளமும் எச்சில்படாமல் வைத்திருக்கிறேன். நீ போய் சாப்பிடு' என்று அன்பாகக் கூறியது.

இதைக் கேட்ட அணிலுக்கு வெட்கம் வந்தது. உடனே, 'உனது பிறப்பைப் பற்றி குறைவாகப் பேசிவிட்டேன். என்னை மன்னித்துவிடு. இறைவனின் படைப்பில் எந்தக் குறையும் இல்லை... ஒவ்வொரு உயிருக்கும் ஒரு சிறப்பு இருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டேன். பலரோடு பகிர்ந்து உண்ணும் உன் நல்ல குணத்தை நான் மறந்தது தவறுதான்' என்று கூறியது.அதன் பிறகு காகமும் அணிலும் நல்ல நண்பர்கள் ஆயின.






Post a Comment

Previous Post Next Post