.

 *-புத்தகத் தலைப்பு:- **ஒரு யோகியின் சுயசரிதம்*

*ஆசிரியர் :- **பரமஹம்ச யோகானந்தர்*

*நூல் வெளியீடு . **யோகதா சத்சங்க சொசைட்டி ஆஃப் இந்தியா*
*பக்கங்கள் : - **764*.
*விலை :- **220/-*
ஆன்மீகம், ஸ்பிரிச்சுவல், யோகா, யோகாவில் பலதரப்பட்ட யோகா இருக்கின்றன. அவற்றிலே மிக முக்கியமான கிரியா யோகா போன்றனவற்றோடு, ஞானிகள் ,துறவிகள் போன்றவர்களைப் பற்றி மிகவும் ஆச்சரியப்படத்தக்க வகையில் அமைந்த இந்த நூலை, முதலில் ஆங்கிலத்தில் தான் எழுதப்பட்டது, பின்னர் பல மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு இன்று வரைக்கும் லட்சக்கணக்கான பிரதிகள் மக்களை சென்றடைகின்றது என்று ஒரு ஆய்வு குறிப்பிடுகின்றது.
59 வயது வரைக்கும் வாழ்ந்து மகா சமாதிய அடைந்து பரமஹம்ச யோகா னந்தர் தன்னுடைய சொந்த வாழ்க்கையில் கேட்ட ,அனுபவித்த, கண்ணால் பார்த்த, உணர்ந்த ,பல சம்பவங்களை மிகவும் தத்துரூபமாக எடுத்துக் காட்டுகிறார். மகா ஞானிகள், மகா யோகிகள் அவர்களுடைய அற்புதங்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு இந்த புத்தகத்தில் விவரித்துள்ளார்.
இந்த புத்தகத்தை வாசித்து கொண்டு போகும் பொழுது அல்லது வாசித்து முடித்ததன் பின்பு, கிட்டத்தட்ட நாங்கள் ஒரு பொலிவூட் சினிமா, அல்லது ஹோலிவுட் சினிமாவுக்குள் போயிட்டு வந்த ஒரு உணர்வு ஏற்படும் என்று நான் நினைக்கின்றேன். அவ்வளவுக்கு மிகவும் திரில்லான சம்பவங்கள், அதாவது இன்றைய காலகட்டத்தில் அறிவியல் உலகத்தில் இதனை நாங்கள் பார்க்கும் போது இப்படி எல்லாம் நடக்குமா என்று ஒரு சிந்தனை நிச்சயமாக இதை வாசிக்கும் போது எல்லோருக்கும் கட்டாயமாக தோன்றும் என நினைக்கின்றேன்.
இதில் பல சம்பவங்கள் பரமஹம்ச யோகானந்தர் அவர்களுடைய குரு, குருவின் குரு, குருவின் குரு, இப்படியாக பலதரப்பட்ட அவர்களுடைய ஞான ஒலிகளையும் ஒளிகளையும் பற்றி பல இடங்களில் வாசிக்க கூடியதாக இருக்கின்றது. அதாவது எல்லாவற்றிற்கும் மேலான, அதாவது மெயின் குரு என்றால் அது பாபாஜி. அவருடைய சிஷ்யன் லாகிரி மகாசாயர் அவருடைய சிஷ்யன் சுவாமி ஸ்ரீ யுத்தேஸ்வர், ஸ்ரீ யுத்தேவர் உடைய சிஷ்யனாகத்தான் சுவாமி பரமஹம்ச யோகானந்தர்.அவர்களும் இங்கே குறிப்பிடப்படுகின்றார்கள்.
நூலில் பைபிளையும் பகவத் கீதையையும்கூடுதலான உதாரணங்களுடன் எங்களுக்கு விளக்குகின்றனர் யோகி . பரமஹம்ச யோகானந்தர் இளம் வயதினிலே எப்படியாவது கடவுளை காண வேண்டும், அவர் எங்கே இருக்கின்றார் என்ற ஒரு உந்துதல் அவரது உள்ளத்தில் எழுகின்றது. குறிப்பாக அவர்களுடைய பெற்றோர்கள் ஞான மார்க்கத்தில் உடையவர்கள் .இதில் அது பற்றி விவரமாக தரப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் அவரது பிறப்பு ,அவரது அன்றாட வாழ்க்கை ,படிப்புப் பற்றியும் அவருக்கு முதலில் முகுந்தன் கோஷ் என்ற பேர்தான் இருந்தது. பின்னாடி முதலில் பரமஹம்சர் என்ற பெயரையும் பின்னர் யோகானந்தர் என்ற பெயரையும் பெற்றுக் கொண்டார்.மொத்தமாக 8சகோதரர்கள் அவருக்கு. அது பற்றிய விவரங்களை இதில் காணலாம் .
இவருடைய பெற்றோர்கள் வங்காளியர்கள் சத்திரிய வகுப்பு சேர்ந்தவர்கள். இவர் வடகிழக்கு இந்தியாவின் இமயமலைக்கு அருகில் கோரக்பூர்என்ற இடத்தில் 1893 ஆம் ஆண்டு ஜனவரி 5ஆம் தேதி பிறந்தார். இவருடைய குடும்ப பெயராக,கோஷ் என்று அழைக்கப்படும் அந்த பரம்பரையில் வந்தவர். சிறுவயதிலேயே ஆன்மீகத்தை தேடி புறப்பட்டவர் ,அப்போது பல சிக்கல்களையும் சந்தித்து அந்த வழியில் நான் அடைந்தே தீருவேன் என்றொரு மன உறுதியுடன் தனது பாதை அமைத்துக் கொண்டார்.
இவர் தனது குருமார்களை தேடி அலைந்து கண்டுபிடித்த சம்பவங்கள் எல்லாமே மிகவும் ஆச்சரியமான சம்பவங்களாக குறிப்பிடுகின்றார்.அவை எல்லாமே ஒரு மாயாஜால வித்தைகள்போல் இருப்பதை நீங்கள் வாசிக்கலாம்.ஆனால் அவர் குறிப்பிடுவது முழுவதும் உண்மை என்றே பதிவு செய்கின்றார்.
இந்நூலில் 49 அத்தியாயங்கள் இருக்கின்றன. அதில் அத்தியாயம் 26 கிரியா யோகா விஞ்ஞானம் அது பற்றிய விளக்கம் மிகத் தெளிவாக தந்துள்ளார்.
கிரியா யோகா என்றால் என்ன?
அதன் அடிப்படை தத்துவம்?
அதனால் ஏற்படும் நன்மைகள்,
அது மனிதனை எந்த அளவுக்கு உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் உயர்ந்த நிலைக்கு இட்டுச் செல்கின்றது
என்பதை மிகவும் விளக்கமாக தந்துள்ள.
பரமஹம்ச யோகானந்தர் சின்ன வயசில் அடிக்கடி இமயமலைக்கு ஓடிப் போய்விடுவார்.போயிட்டு திரும்பி வருவார்.அவருடைய அப்பா கொஞ்சம் கண்டிப்பானவர். யோகிகள், ஞானிகள்,சித்தர்களைத் தேடி போகலாம், முதலில் படிப்பு முடித்து ஒரு நல்ல ஒரு சான்றிதழ் எடுத்த பிறகு நீ அந்த பாதைக்கு போலாம், என்று கண்டிப்பாக சொல்லிவிட்டார்.ஆனால் இடையிடையே பாடசாலைக்கு போறதாக சொல்லி யுத்தேஸ்வர் கிரி அவர்களுடைய சொற்பொழிவுகளை கேட்பதற்காக ஓடிவிடுவார். ஆனால் அவர் தன்னுடைய படிப்பை முடித்து அப்பாவிடம் சொன்ன போது, சரி எனி நீ போலாம்.பின் நாட்களில் யோகானந்தர் அமெரிக்காவுக்கு போய் அங்கு பல சொற்பொழிவுகள், கிரியா யோகா அது பற்றி மக்களிடம் விளக்கமாகத் தெளிவு படுத்தினார்.அங்கு பல ஆச்சிரமங்களை நிறுவியதுடன் கூடுதலாக அவரது வாழ்க்கை அங்கேயே அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இவர் தனது குருவான ஸ்ரீ யுத்தேஸ்வர் என்பவரை எங்கு சந்தித்தார் என்ற விவரத்தை இங்கே தருகின்றார். அது மிகவும் ஆச்சரியமாக இருக்கின்றது. அவரைப் பற்றிய விவரங்கள், அவரோடு கலந்துரையாடிய பல விடயங்கள் எல்லாமே ஆச்சரியப்படவைக்க கூடிய சம்பவங்களாகவே குறிப்பிடுகின்றார். ஞானம் பெறுவதற்கு அல்லது யோகியாக வருவதற்கு கண்டிப்பாக இமயமலைக்கு தான் போக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை, அவர் கூறுகிறார், ஓரிடத்தில் கதவை மூடிக்கொண்டு தனிமையாக அமர்ந்து கொள்ள ஒரு சிறு அறை உனக்குள்ளதா? இவர் ஆம் என்று பதில் அளிக்கின்றார். அதற்குக் குரு, அதுதான் உன் குகை அதுதான் உன் புனிதமான மலை,அங்கு தான் நீ இறைவனின் ராஜ்ஜியத்தை காண்பாய். இப்படி பல கேள்விகளுக்கும் மிகத் தத்ரூபமாக விளக்கங்களை பெறுகின்றார் பரமஹம்ச யோகானந்தா அவர்கள்.


பரமஹம்சர் யோகானந்தர் அவர்கள் பலவிதமான மகான்கள், யோகிகள், சித்தர்கள், மற்றும் பெண் ஞானிகளையும் சென்றடைந்து, அவர்களிடம் நேர்முகத்தேர்வு எல்லாம் எடுத்துள்ளார். காரணம், அவர்களது யோக நிலை எப்படியானது, அதனை அடைவதற்கு எத்தனை ஆண்டுகள் தேவைப்பட்டன, இவற்றை அடைவதற்கு அவர்களது தியானப் பயிற்சிகள் எவ்வளவுக்கு கடுமையானது, இவையனைத்தும் இயற்கையாக அவர்களைச் சூழ்ந்து கொண்டதா அல்லது அவர்களது இறுதியான ஆன்மாவின் பயணத்தை இதன் மூலமாகத் தான் பெறமுடியுமா? போன்ற நூற்றுக்கணக்கான கேள்விகளுக்கு விடை தருவதையும் இங்கே குறிப்பிடுகின்றார். ஆனால் இவர் சந்தித்த அத்தனை ஞானிகளும் ஏதோ ஒரு விதத்தில் தனிமையிலே, எந்த ஒரு விளம்பரங்களோ, ஆட்டம் பாட்டம் இல்லாத முற்றிலும் துறவு முறையில் மிகவும் சர்வ சாதாரணமான வாழ்க்கையே வாழ்ந்தார்கள் என்பதனை ஆச்சரியத்துடன் ஆவணப்படுத்துகிரார்.
வருடக்கணக்கில் தவம் இருந்த மகான்கள், அவர்களுடைய பிரத்தியேகச் சக்தியின் மூலமாக ஏனைய ஞானிகளுடன் அவர்கள் ஒரு நெற்வேக் தொடர்புகளை வைத்திருக்கும் திறமையுடையவர்கள். இப்படித்தான் பரமஹம்ச யோகானந்தரை அமெரிக்காவுக்குப் போகும்படியாக பாபாஜி அவர்கள் லாஹிரி மகாசாயருக்கு தெரிவிக்க, அவர் யுக்தேஷ்வரருக்கு அறிவிக்க, அவர் பின்னாட்களில் இதனை இவருக்குப் பரிந்துரைக்கிறார். இந்த சம்பவத்திற்கும் மேலாக ஒரு முறை லாஹிரி மகாசாயர் தனது குருவான பாபாஜியை முதன் முறையாக சந்தித்து உரையாடிய இடம் இமயமலைக்கு மிக நெருங்கிய இடமான ரணிகோத் ஆகும். எங்கள் கண்களால் பார்த்து நம்பமுடியாத பேர் அதிர்ச்சியான அந்த மாளிகை, பூந்தோட்டம், இன்னும் பல அதிசயங்களைப் பதிவு செய்கிறார்.
அதிசயமான பல சித்தர்களையும், மகான்களையும், யோகிகளையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் வாசியுங்கள்.

நறுமணச் சித்தர்.
புலிச்சாமியார்,
அந்தரத்தில் மிதக்கும் மகான்,
தூக்கமற்ற மகான்,
விந்தை புரியும் ஒரு முஸ்லிம்,
ஒரு மகான் இருஇடங்களில் காட்சி கொடுத்தால்,
தெரஸே நொய்மன்,
உணவே உட்கொள்ளாத யோகினி.


இப்படியாகப் பல அதியச மகான்கள் வலம் வருவதைக் குறிப்பிட்டு, அவர்களது பலமான இறை சக்தியை வியக்கும் வண்ணம் எங்கள் முன் தருகிறார் பரமஹம்ச யோகானந்தர் அவர்கள்.
உதாரணமாக தூக்கமற்ற மகான் என்பவரை யோகானந்தர் சந்திக்கும் போது அவர் சொன்னார், தான் 45 வருடங்களாகத் தூங்கவே இல்லை என்று. இதேபோல் உணவே உட்கொள்ளாத யோகினி என்னும் பெண், 50 வருடங்களாக எந்த உணவும் உட்கொள்ளவில்லையாம்.இந்த யோகினியின் குரு கூட பாபாஜி தானாம். ஏன் நம்ம ரஜனிகாந்த் அவர்களுக்கும் பாபாஜி தானே குரு என அறிந்துள்ளேன்.
சுவாமிஜி யோகானந்தர் இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்த போது, பல அறிவு ஜீவிகளையம் சந்தித்து தனது கிரியா யோகா என்னும் கலை பற்றி விளக்கியுள்ளார். ரவீந்திரநாத் தாகூர், மகாத்மா காந்தி, ரமண மகரிஷி, ஸ்வாமி கேசவானந்தர், இப்படிப் பலரையும் குறிப்பிடலாம்.
இவர் தனது குருவான யுக்தேஸ்வர் அவர்கள் மீண்டும் உயிர்த்தெழுவதை இங்கே பதிவு செய்கிறார். அது ஒரு ஆபூர்வ அதிசயமான நிகழ்ச்சி.
9.06.1936 அன்று தான் தனியாக அமர்ந்து தியானம் செய்யும் போது திடீரென ஒளி அலையினால் உந்தப்பட்டு எழுப்பப்பட போது, ரத்தமும் சதையுமாய் தன் முன் காட்சி கொடுத்ததாகவும், தன்னுடன் சில விடையங்கள் டிஸ்கஸ் செய்ததாகவும் கூறுகிறார். இங்கே தான் நாம் இதுவரை அறிந்திராத உலகத்தைப் பற்றி அறிமுகப் படுத்துகிறார்.
இவரது குருவான யுக்தேஸ்வர் அவர் முன்னிலையில் தொடர்ந்து சொற்பொழிவு ஆற்றினார். அதாவது சூட்சும உலகம் எங்கே உள்ளது அங்கு நடைபெறும் சாகசங்கள் எவை, அங்கு வாழும் மனிதர்களின் உருவம், அவர்களது குணங்கள் எப்படி,, இதுபோன்ற பல தகவல்களைக் குறிப்பிடுகிறார். சூட்சும உலகத்தின் ஆயுட்காலம் மண்ணுலகில் இருப்பதை விட மிக அதிகம் என்றும், முன்னேறிய சூட்சுமவாதியின் சராசரி ஆயுட்காலம் 500 இருந்து 1000 வருடங்கள் என்ற அதிர்ச்சித் தகவலை இந் நூலில் அறியலாம்.
கிரியா யோகா பயிற்சி பற்றி ஆழமான பல தகவல்களை அவர் ஏற்படுத்திய யோகா சத்சங்க சொசைட்டி ஆஃப் இந்தியா என்ற அமைப்பின் மூலமாகத் தொரிந்து கொள்ளலாம் என்றும், இன்றும் கூட அவர்கள் பல வழிகளில் இந்த கிரியா யோகாப் பயிற்சியைத் தொடர்ந்து இந்தியாவிலும் அமெரிக்காவிலும் நடத்தி வருகின்றனர் என்பதனை இந் நூல் கூறுகின்றது.
மனிதனுடைய உடம்புக்குள் எண்ணற்ற கதிரியக்கங்கள் உண்டென்றும், அவற்றை நாம் தியான மூலம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது விட்டால் அவனே ஞானநிலையைப் பெறுகிறான். பல சித்தர்களுக்கிடையே இப்படியான மாற்றமாக இருப்பதனால் அவர்கள் தங்களுக்குள் தொடர்புகளை வாட்ஸ் அப்பை விட மின்னல் வேகத்தில் தங்கள் செய்திகளை அனுப்புவதாக மகான் யுக்தேஸ்வர் குறிப்பிடுகிறார். இறந்து போன ஒருவரை உயிர்ப்பித்த யோகிகளும் உண்டு. நறுமண சித்தரை எடுத்துக்கொண்டால், எங்களுக்கு எந்தப் பூவின் வாசனை தேவையோ அதனை ஒரு நொடியில் பெற்றுத் தருவார். அதுமட்டுமல்லாது அவரைச் சுற்றியிருக்கும் பல மைல்களுக்கப்பால் உள்ள யோகிகளையும் தனது கட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்று அடித்துக் கூறுகிறார்.
நண்பர்களே, ஒன்றைச் சிந்திக்க வேண்டியுள்ளது. ஆன்மா அழிவில்லாதது. கடவுள் தான் இந்தப் பூமியை 6 நாட்களில் படைத்தார். இப்படி ஒரு சாராரும், இல்லை கடவுள் இறந்துவிட்டார், இனி நாம் தான் ஒரு பவர்புல்லான சுப்பர் மானை (Supper MAN) க் கண்டுபிடித்து அவரிடம் மிகுதி வேலைகளைக் கொடுக்க வேண்டும் என்ற நீட்ஷேயின் அறிவியல் தத்துவத்தையும் ஆதரிக்கும் இன்னொரு பகுதியினரையும் நாம் பார்க்கின்றோம். ஆனால் இதில் சில இடங்களில் இரண்டு கோட்பாடுடையவர்களுக்கும் ஒற்றுமை இருப்பதைக் காணலாம். அதில் ஸ்பிறிற்சுவலின் படி பார்த்தால் மலை மீதும், குகைக்குள்ளும் பல வருடங்களாக தியான நிலையில்(தனிமையில்) இருந்து, மக்களின் துன்பங்களுக்கு இதுதான் வழி எனக் கண்டறிந்தபின்னர், அதிலிருந்து விடுபடுவதற்கான மார்க்க த்தினை அவர்களிடம் உரைப்பதற்காக வருகின்றனர். அதேபோல், நீட்ஷேயின் மனிதன் கூட (ஜரதுஷ்ட்ரா) பத்துப் பதினைந் தாண்டுகள் தனிமையில் மலையிலுள்ள குகையில் இருந்துவிட்டு கிழே இறங்கி வருகிறார். இதேபோல் எண்ணங்களின் அலைகளை அறிவியலுடன் பார்க்கும் மகான்களும் உண்டு.
இந் நூலில் மிக முக்கியமாக வாசிப்பாளர்களுக்கு ஒவ்வொரு தலைப்புகளிலும் வாசிக்கும் போது, அடுத்த அதிசயம் என்ன, அடுத்த அபூர்வம் என்ன, போன்ற பல சிந்தனைகள் நம் மூளைக்குள் அந்த அலைகள் சென்று கேட்பது போன்றதொரு உணர்ச்சியை நிட்சயமாக தோற்றுவிக்கும் என்றே எண்ணுகிறேன்.
உண்மையில் பல இடங்களில் என்னைக் கூட ஒரு உலுப்பு உலுப்பி விட்டது என்றே சொல்லலாம். நிட்சயம் தவறவிட்ட நண்பர்கள், அன்பர்கள் எல்லோரும் வாசிக்க வேண்டிய அருமையான புத்தகம்.
@பொன் விஜி 

ஒரு யோகியின் சுயசரிதம் நூலினை வாசிப்பதற்கு கீழுள்ள இணைப்பினை அழுத்தவும்.

You have to wait 45 seconds.

Generating Download Link...

Post a Comment

Previous Post Next Post