.
உள்நாட்டுப் போர்கள், கொவிட்-19 கொரோனா தொற்று மற்றும் பொருளாதர நெருக்கடி என்பவற்றுடன் இணைத்து சமூகத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் மாற்றங்கள் காரணமாக பல குடும்பங்கள் ஆண்களுக்கு பதிலாக பெண்கள் தலைமை தாங்கி வழிநடத்திச் செல்லும் நிர்ப்பந்தத்தில் தள்ளப்பட்டுள்ளன.

இலங்கை உட்பட உலகமெங்கும் உள்நாட்டுப் போரில் குடும்பத் தலைவர் உயிரிழந்து அன்றி காணமலாக்கப்பட்ட நிலையில் தனி மரமாக வாழும் பல்லாயிரக் கணக்கான பெண்கள் உள்ளனர். அவ்வாறு குடும்பத் தலைவனை இழந்த பெண்கள் தாமே தமது குடும்பத்தின் முழு பாரத்தையும் சுமக்க வேண்டிய அவல நிலைக்குள்ளாகின்றனர்.

அத்துடன் கணவரால் கைவிடப்பட்ட பெண்களும் விவாகரத்துப் பெற்ற பெண் களும் குடும்பம் என்ற மாபெரும் தூணை ஆண் துணையின்றி தாங்கி நிற்க வேண்டிய கட்டாயத்திற்குள்ளாகின்றனர்.

மேற்படி பெண்களில் பலர் குடும்பத் தலைவரான ஆணில் முழுமையாக தங்கி
வாழ்ந்த நிலையில், அந்த ஆணின் மறைவையடுத்து எதுவித தொழில் அனுப வமும் இல்லாத நிலையில் புதிதாக தொழி லொன்றைத் தேடிக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள்ளாகியுள்ளனர்.

அத்துடன் குடும்பத் தலைவரான ஆணொருவர் தொழில் நிமித்தம் உள் நாட்டில் வேறு ஒரு பிரதேசத்திலோ அன்றி வெளிநாட்டிலோ வாழும் சமயத்திலும் குடும்பத்தைத் தலைமை தாங்கி வழி நடத்திச் செல்ல வேண்டிய பொறுப்பை பெண்கள் ஏற்க நேரிடுகிறது.

நவீன தொழில்நுட்பங்களின் ஆதிக்கத்துடன் இணைந்ததாக ஏற்பட்ட சமூக ரீதியான கலாசார மாற்றங்கள் வீட்டுக்குள் பெண்களை பூட்டி வைத்த காலத்திற்கு மெல்ல மெல்ல விடை கொடுத்து வரும் நிலையில் வீட்டை விட்டு வெளியில் இறங்கி கல்வியிலும் தொழிலிலும் தமக்கென்று ஒரு அடையாளத்தை பதித்து அது தந்த தைரியத்திலும் துணிவிலும் திருமணம் செய்யாது தனித்து தன்னம்பிக்கையுடன் குடும்பத்தை வழிநடத்திச் செல்லும் பெண்களும் உள்ளனர்.

உலகளாவிய ரீதியில் சுயதொழிலில் ஈடுபடும் மற்றும் நிறுவனங்களில் பணி யாற்றும் பெண்கள் அனைவரும் தமது பணிகளின் போது பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ள நிலையில் அவர்களில் குடும்பத்தை தனித்து தலைமை தாங்கி வழி நடத்திச் செல்லும் கட்டாயத்திலுள்ள பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பல மடங்கு அதிகமாகவுள்ளன.

இவ்வாறு குடும்பத்தை தனித்து தலைமை தாங்கி வழிநடத்திச் செல்லும் பெண்களை சமூகம் நோக்கும் கண்ணோட்டமே வேறாகவுள்ளது.ஆண் துணையின்றி தனித்தோ அன்றி பிள்ளைகளுடனோ வாழும் பெண் ணொருவரை அவளைச் சுற்றியுள்ள சமுதாயம் எப்போதும் சந்தேகக் கண்ணுடன் பார்க்கும் போக்குக் காணப்படுகிறது.

அத்தகைய பெண் அயலவர்களான ஆண்கள் மற்றும் தொழில் புரியும் இடத்தி லுள்ள ஆண் சகாக்கள் ஆகியோரிடம் நிர்ப்பந்தம் காரணமாக சாதா ரணமாகப் பழகுவதை கற்பனைக் கதைகளுடன் உருவகப்படுத்தி அவளது நடத்தைக்கு சேறு பூசும் நடவடிக்கைகள் இடம்பெறுவது பல்வேறு சமூகங்களி லும் சாதாரணமாக காணப்படு கிறது இவ்வாறு சேறு பூசுபவர்களில் படித்த வர்கள் மற்றும் பாமரர்கள் என்ற வேறுபாடில்லை என்பது கவலைக்கிடமா னதாகும்.

எனினும் இலங்கையிலோ அன்றி உலகளாவிய ரீதியிலோ குடும்பத்தை வழி நடத்திச் செல்லும் பெண்களின் தொகை தெளிவற்றதாக உள்ள நிலையில் அத்தகைய பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சிகள் பல சமயங்களில் உலகளாவிய ரீதியான ஒட்டுமொத்தப் பெண்களும் எதிர்கொள்ளும் பிரச்சி னைகளுடன் இணைத்து நோக்கப்படுவது வழமையாகவுள்ளது

உலகளாவிய ரீதியிலுள்ள பெண்கள் அனைவரையும் எடுத்துக் கொண்டால்  நூற்றாண்டுகளுக்கு முன்னர் இருந்த காலத்துடன் ஒப்பிடு கையில் தற்போது பெண் கல்வி தொழில்நுட்பம், தொழில் மற்றும் அரசியல் என பல்வேறு துறைகளிலும் தமது அடையாள முத்திரையை பதித்து வருகின்ற போதும் ஆண்களுடன் ஒப்பிடுகையில் அவர்களது பங்களிப்பு தொடர்ந்து மிகக் குறைவானதாகவே உள்ளது.

அவர்களில் தொழில் புரியும் பெண்களைப் பொறுத்தவரை பல சந்தர்ப்பங் களில் அவர்கள் தமது திறன்கள் மற்றும் அடையாளங்களை வெளிப்படுத்துவ தற்கான தமது அபிலாசைகளுக்கு அப்பால் குடும்ப சூழ்நிலை காரணமாக கல்வியை மேலே தொடர முடியாது கிடைத்த தொழிலை பார்க்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள்ளாகின்றனர்.

அவர்கள் வீட்டு பராமரிப்பு மற்றும் பிள்ளைகள் பராமரிப்பு, முதியோர் பராமரிப்பு,சமைத்தல், ஆடைகளைத் துவைத்தல்,வீட்டை நிர்வகித்தல் உள்ளடங்கலான ஊதியமற்ற பணிகளுக்கு அப்பால் ஊதியம் தரும் தொழிலொன்றில் நாளொன்றில் குறைந்தது 8 மணித்தியாலங்களைச் செலவிட வேண்டிய நிலையில் உள்ளனர்.அந்த வகையில் பெண்கள் ஊதிய த்துடன் கூடிய மற்றும் ஊதியமற்ற பணிகளில் இரு மடங்கிலும் அதிகமான நேரத்தைச் செலவிட நேரிடுகிறது.அதேசமயம் ஆண்களின் துணையின்றி தனித்து குடும்பத்தைக் கவனித்துக்கொள்ள வேண்டிய பெண்களின் நிலைமையோ அதை விடவும் மோசமானது.

அவர்கள் உறக்கத்திற்கு செலவிடும் சில மணி நேரப் பொழுதை விடவும் வீட்டு பராமரிப்புடன் தொடர்புபட்ட பாவனைக் கட்டணங்களைச் செலுத்துதல், வீட்டுத் திருத்த வேலைகள் உள்ளடங்கலான பணிகளில் தமது வாழ்நாள் முழுவதையும் செலவிட்டு தமது சுக துக்கங்களைத் தியாகம் செய்து இயந்திர வாழ்க்கையொன்றை வாழ்ந்து இறுதியில் காலதேவனின் பிடியில் சிக்கி மண்ணோடு மண்ணாகின்றனர்.

இவ்வாறு குடும்பத் தலைமைப் பொறுப்பையேற்று தனித்து வாழும் பெண்களைப் பொறுத்தவரை அவர்கள் சுயதொழிலில் ஈடுபடும் போதும் நிறுவனங்களில் பணி யாற்றும் போதும் பல்வேறு இன்னல்களை எதிர்கொள்ள நேரிடுகிறது.

சுயதொழில் முயற்சிகளின் போது கடன் பெறுவது, ஆணாதிக்க போட்டி நிறைந்த தொழிற்றுறைகளில் தமக்கான ஒரு அடையாளத்தை நிலை நிறுத்திக்கொள்வது என்பவற்றில் ஆண்களுடன் ஒப்பிடுகையில் பெண்கள் பாரிய சவால்களை எதிர்கொள்கின்றனர்.



இலங்கையைப் பொறுத்த வரை பெண் சுயதொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்க அரசாங்கம் திட்டங்களை முன்வைத்துள்ள போதும், நடைமுறையில் பெண்கள் தமது தொழிலுக்காக கடன் பெறவோ அல்லது தொழில் முயற்சியை ஆரம்பிக்கவோ ஆதரவைப் பெறுவதில் பல சிரமங்களை எதிர்கொள்கின்றனர். கடன் வழங்கும் பல நிறுவனங்கள் தொழிலில் பின்புல நிலையில் புதிதாக தொழிலொன்றை ஆரம்பிக்கும் பெண்களுக்கு பெரும் தொகை கடனை வழங்கப் பின் நிற்கின்றன.

அத்துடன் பெண்களுக்கு சுய தொழிலொன்றை ஆரம்பிக்க அவர்கள் எதிர்பார்க்கும் ஆதரவு அவர்களுக்கு குடும்ப, சமூக மற்றும் நிறுவன மட்டங்களில் பொதுவாகக் கிடைப்பதில்லை.

அதேசமயம் பிறிதொரு நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்து கடமையாற்றும் பெண்கள் ஊதியம், பதவி உயர்வு என வரும் போது பாரபட்சங்களுக்கு உள்ளாகுவது வழமையாகவுள்ளது. பெண்களுக்கு இறைவனால் இயற்கையாக வழங்கப்பட்ட கொடையான மகப்பேற்று ஆற்றல் அவர்களுக்கு தொழில் என்று வரும் போது பின்னடைவான ஒன்றாக நோக்கப்படும் போக்குக் காணப்படுகிறது.

பெண்களுக்கு மகப்பேற்று காலத்தில் வழங்கப்பட வேண்டிய ஊதியத்துடன் கூடிய விடுமுறையை கருத்திற் கொண்டு பல நிறுவனங்கள் அவர்களுக்கு தொழில் வாய்ப்பையும் உயர் பதவிகளையும் வழங்கத் தயங்கும் நிலைமை வழமையில் காணப்படுகிறது.

அத்துடன் ஆண்களுடன் ஒப்பிடுகையில் பெண்களைப் பலவீனமா னவர்களாகக் கருதி அவர்களால் சவால்களை எதிர்கொள்ள முடியாது எனக் கருதும் மனப்பாங்கு ஆணாதிக்க சமூகங்களில் சாதாரணமாகவுள்ளது. இந் நிலையில் சுயதொழிலிலும் தொழிற்றுறையிலும் சாதித்து வரும் பெண்கள் பெரும் போராட்டத்தையும் சவால்களையும் எதிர்கொண்டே அந்த நிலையை எட்டி வருகின்றனர்.

அத்துடன் சொந்தத் தொழில் புரியும் அல்லது பிற நிறுவனமொன்றில் தொழில் புரியும் பெண்கள் பாலியல் ரீதியான தாக்குதல்களையும் துஷ்பிரயோ கங்களையும் எதிர்கொள்வதுடன் பெண்களை பாலியல்ரீதியில் அச்சுறுத்தி அடிபணிய வைக்க வைக்கும் சம்பவங்களும் ஆங்காங்கே இடம்பெறுகின்றன.

குறிப்பாக குடும்பத்தைப் குடும்பத்தைப் பிரிந்து வந்து பின்தங்கிய பிரதேசங்களிலுள்ள நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் கடமையாற்றும் பெண்கள் அங்கு பல்வேறு மட்டங்களில் பணியாற்றுபவர்க ளிடமிருந்தும் சமூகத்திலிருந்தும் பாலியல் ரீதியான அச்சுறுத்தலை எதிர்கொள்ள நேரிடுகிறது. சில சந்தர்ப்பங்களில் அது வெறும் வார்த்தை மூலமான அச்சுறுத்தலாக இருக்கின்ற போதும் அந்த அச்சுறுத்தலை எதிர் கொள்ளும் பெண்கள் கடும் மன உளைச்சலுக்குள்ளாகின்றனர்.

அத்துடன் ஒரே கல்வித் தகைமை மற்றும் திறன் கொண்ட ஆண்களையும் பெண்களையும் பொறுத்த வரை ஆண்களுடன் ஒப்பிடுகையில் பெண்களு க்கான ஊதியம் குறைவானதாகவே உள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான உலக வங்கியின் தரவுகளின் பிரகாரம்  உலகில் 86 நாடுகளில் பெண்களுக்கு சில தொழில்களைப் புரிவதற்கு கடும் கட்டுப்பாடுகள் நிலவுகின்றன. அதேசமயம் 95 நாடுகளில் பெண்களுக்கு ஆண்களுக்கு நிகரான சம ஊதியத்துக்கான உத்தரவாதம் இல்லாதுள்ளது. அத்துடன் உலகில் தொழில் பார்க்கும் வயதிலுள்ள 2.4 பில்லியன் பெண்களுக்கு அதே வயதிலுள்ள ஆண்களுடன் ஒப்பிடுகையில் சம வாய்ப்புகள் இல்லா துள்ளன.அதேசமயம் 178 நாடுகளில் பெண்கள் பொருளாதாரத்தில் பங்கேற் பதற்கு சட்டத் தடைகளை எதிர்கொண்டுள்ளனர் என உலக வங்கியின் அறிக்கை தெரிவிக்கிறது.

190 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் பிரகாரம் வேலை, தொழில் உரிமை, திருமணம், தொழில் முயற்சி சொத்துரிமை, ஓய்வூதியம் உள்ளட ங்கலான விடயங்களில் பெண்களின் பங்களிப்பு பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

உலக வங்கியின் 2019 ஆம் ஆண்டு தரவுகளின் பிரகாரம் இலங்கை உள்ளடங்க லான நாடுகள் அமைந்துள்ள உலகின் தென் பகுதியில் விவசாயத் துறையில் அதிகளவு பெண்கள் பணியாற்றுகின்ற நிலையில் அந்தப் பெண்களுக்கு வழங்கப்படும் ஊதியம் அதே தொழிலை புரியும் ஆண்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் சுமார் 78 சதவீதமாகவுள்ளது. அத்துடன் உலகில் சுமார் 82 மில்லியன் பெண்களுக்கு உரிய சட்டப் பாதுகாப்பு இல்லாதுள்ளது. அத்துடன் உலகளாவிய ரீதியில் பாராளுமன்றத்தில் பெண்களின் வகிபாகம் 25 சதவீதமாக உள்ளது.

அதே சமயம் உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிக்கையானது உலகில் வாழும் பெண்களில் மூன்றில் ஒரு பங்கு பெண்கள் வீட்டிலும் வெளியிலும் வன்முறைகளை எதிர்கொண்டு வருவதாக தெரிவிக்கிறது.

கொவிட்- 19 கொரோனா வைரஸ் தொற்றுக்குப் பின்னர் உலகளாவிய ரீதியில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகளின் போது பொருளாதார செயற்பா டுகளில் உள்வாங்குவதற்கான அவசியம் உணரப்பட்டது. இந் நிலையில் சுமார் 23 நாடுகள் பெண்களை பொருளாதாரத்தில் உள்வாங்கு வதற்குத் தேவையான சீர்திருத்தங்களை மேற்கொண்டன.

இலங்கையைப் பொறுத்தவரை உள்நாட்டு யுத்தம் ஆழப் பதித்து விட்டுச் சென்றகறை படிந்த வடுவாக அந்த யுத்தத்தால் கணவர்மாரை இழந்து கைம் பெண்களாக நிர்க்கதிக்குள்ளான நிலையில் வாழும் பெண்கள் உள்ளனர். அந்த வகையில் போரால் பாதிக்கப்பட்ட பிராந்தியங்களில் ஒன்றான கிழக்கு மாகாணத்தில் மட்டும் 24 ஆயிரத்து 800 பெண்கள் கணவரை இழந்த நிலையில் உள்ளதாகவும் அவர்களில் 16 ஆயிரம் பேர் மட்டக்களப்பில் வாழ்வதாகவும் ஆய்வொன்று தெரிவிக்கிறது.

உள்நாட்டு யுத்தம் காரணமாக காணாமலாக்கப்படுதல், வன்முறை, பாலியல் வல்லுறவு, நெருங்கிய குடும்ப உறுப்பினர்களின் இழப்பு, போரில் ஈடுபடுவத ற்கான கட்டாய ஆட்சேர்ப்பு, பொருளாதார ரீதியான பாதிப்பு, உளவியல் ரீதியான அதிர்ச்சி,சுரண்டப்படல், பாலியல் ரீதியான தாக்குதல் உள்ளடங் கலாக பல்வேறு துன்பங்களை பெண்கள் அனுபவித்தனர்.

யுத்தத்தால் குடும்பத் தலைவரையும் உடைமைகளையும் இழந்து வாசல்களை விட்டு இடம்பெயர்ந்த வீடு பெருந்தொகையான பெண்கள் தமது பிள்ளைகள் சகிதம் போதிய அடிப்படை வசதிகளற்ற இருப்பிடங்களில் மின்சாரமின்றி குடிக்க தரமான நீர் வசதியின்றி வாழ்கின்றனர். தமது உறவுகள் காணாம லாக்கப்பட்ட நிலையில் அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பதை அறியாது பல குடும்பத் தலைவிகள் அவர்கள் தொடர்பான தகவல்களுக்காக கண்ணீருடன் காத்திருக்கின்றனர்.

அண்மையில் இலங்கை எதிர்கொண்ட கொவிட்- 19 வைரஸ் தொற்றின் போதான முடக்க நிலை மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக அதிகம் குடும்பத்தை பாதிக்கப்பட்டவர்களாக தலைமை தாங்கி வழிநடத்த வேண்டிய
நிர்ப்பந்தத்திலுள்ள பெண்கள் உள்ளனர்.

இதன்போது அத்தகைய பெண்களில் பலர் தொழில் வாய்ப்பை இழந்தனர். அவர்களில் சிலர் நாளாந்த வாழ்வைக் கொண்டு செல்ல வீதிகளில் கையேந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். அவர்கள் வடிக்கும் கண்ணீருக்கு சம்பந்தப்பட்டவர்கள் பொறுப்புக் கூறியே ஆக வேண்டும்.

பிரச்சினைகளுக்கான தீர்வு நடவடிக்கைகளை முன்னெடுக்கும் போது இவ்வாறு குடும்ப பாரத்தை தனித்துச் சுமக்க வேண்டிய கட்டாயத்திற்குள் தள்ளப்பட்ட பெண்கள் தொடர்பில் விசேட கவனம் அவர்களுக்குரிய நன்மைகள் சரியான முறையில் போய் சேர்கிறனவா என உறுதிப்படுத்துவது அனைத்துத் தரப்பினரதும் கடமையாகும்.




Post a Comment

Previous Post Next Post