.

அவனியாபுரம் என்னும் ஊரில்,தங்கமணி  என்பவன் வாழ்ந்து வந்தான்.அவனுக்கு பலசரக்கு கடையும், நில புலன்களும் சொந்தமாக இருந்தன.போதுமான வருமானம் கிடைத்தாலும்,மிகவும் கஞ்சனாக இருந்தான்.

அவனுடைய பல சரக்கு கடையிலுள்ள அரிசி,பருப்பு மூட்டைகளை, எலிகள் கடித்துக் குதறி ஓட்டை போட்டு தின்று வந்தன.

தங்கமணிக்கு வயிறு எரிந்தது. 'வாயைக் கட்டி, வயிற்றை கட்டி சேர்க்கும் சொத்துக்களை எல்லாம் எலிகளே தின்று நாசமாக்கி விடுகிறதே...' என்று மிகவும் வருந்தினான்.

நாளுக்கு நாள் எலிகளின் குடும்பம் பெருகி வளர்ந்தன. நண்பர்களிடம், "எலித்தொல்லையில் இருந்து விடுபட ஏதாவது வழி இருக்கிறதா?" என்று கேட்டான்.

"எலிப்பொறி வாங்கி, அதில் ஒரு தேங்காய்த் துண்டை மாட்டி வைத்தால், அதைத் தின்பதற்காக உள்ளே நுழையும் எலி மாட்டிக்கொள்ளும்..." என்று ஒரு நண்பன் கூறினான்.

"நன்றாக இருக்கிறது உன் யோசனை. பணம் கொடுத்து எலிப்பொறி வாங்க வேண்டும், பிறகு தேங்காயை வேறு வாங்கி வைத்து வீணாக்க வேண்டும்; எத்தனை தண்டச் செலவு என்று சலித்துக் கொண்டான் தங்கமணி.''அதானே! எலிகளைப் பிடிக்க, செலவே இல்லாத வழி இருக்கிறபோது, தண்டச் செலவு ஏன் செய்ய வேண்டும்," என்றான் குணசேகர்.

"செலவில்லாத வழி இருக்கிறதா.. என்ன வழி சொல்.' என்று ஆர்வத்தோடு கேட்டான் தங்கமணி"உன் கடையில ஒரு பூனையை வளர்த்தால் போதுமே... 

அது எலிகளைப் பிடித்து பிடித்து விடுமே,"என்றான். பூனையை வளர்க்கிறதா... பூனைக்கு வேறு சாப்பாடு போட வேண்டுமே "என்று கவலையோடு சொன்னான் தங்கமணி.

'அதுதான் இல்லை... பூனைக்குப் பசிக்கும் போதெல்லாம், ஒவ்வொரு எலியாக பிடித்துத் தின்று பசியாறும்," என்றான் குணசேகர்.மறுநாளே வீடு வீடாகப் போய், பூனையை தானம் கேட்டான் தங்கமணி.

ஒரு வீட்டுக்காரர், போனால் போகிறது...என்று ஒரு பூனைக் குட்டியை தங்கமணியிடம் கொடுத்தார்.

அதை வாங்கி வந்து, கடைக்குள் விட்டான் தங்கமணி. அந்தபூனையும், எலிகளை விரட்டி பிடித்துத் தின்று வாழ்ந்து வந்தது.

ஒருநாள் தங்கமணி குடிப்பதற்காக,ஒரு செம்பில் பால் கொடுத்தாள் அவன் மனைவி. அப்போது, கடையில் சிறிது கூட்டம் இருந்ததால், பக்கத்தில் வைத்து விட்டு வியாபாரத்தில் மும்முரமாக இருந்தான் தங்கமணி.

கூட்டம் குறைந்ததும், பாலைக் குடிக்கலாம்...என்று திரும்பிப் பார்த்த தங்கமணி அதிர்ச்சியடைந்தான்.


பாலை, குடித்துக் கொண்டிருந்தது பூனை. 'அட திருட்டுப் பூனையே! உன்னை எலிகளைப் பிடித்து வாழச் சொன்னால் நீ எனக்கு வைத்த  பாலையே குடிக்கிறாயா... உன்னை என்ன செய்கிறேன் பார்... என்று கூறி, எலிகளை அடிப்பதற்காக வைத்திருந்த கம்பை எடுத்து,பூனையின் தலையில் ஒரே போடாகப் போட்டான்.அந்த அடி பூனையின் தலையில் பலமாக விழ, 'மியாவ்' என்ற அலறலோடு அந்த இடத்திலேயே இறந்தது.

‘அதைப் பார்த்த ஒருவர், "ஐயோ என்ன காரியம் செய்து விட்டாய் தங்கமணி. பூனையைக் கொல்வது பெரிய பாவமாயிற்றே.

இதற்கு, உடனே பரிகாரம் செய்துவிடு இல்லாவிட்டால், இந்தப் பாவம் உன்னையும் உன் பரம்பரையையும் விட்டு வைக்காது"என்றார்.

அதைக் கேட்டுப் பயந்த தங்கமணி,உடனடியாக கடையைப் பூட்டி விட்டு, பரிகாரம் செய்பவரைத் தேடிச் சென்றான்.

உள்ளூர்காரனான பரிகாரி, அவனுடைய கஞ்சத்தனத்தை நன்கு அறிந்தவர். அதனால் தங்கமணிக்கு நன்றாகப் பாடம் புகட்ட விரும்பிய அவர்,"அடேடே பூனையைக் கொன்றவனுக்கு நரகம் அல்லவா கிடைக்கும். நீ பூனையை ஏன் கொன்றாய்... எப்படிக் கொன்றாய்? என்று கேட்டார்.

'ஒரு பெரிய கம்பால் அடித்துக் கொன்றேன்.சாமி!'' என்றான்.

பரிகாரம் இருக்கிறது. சுத்தமான தங்கத்தில் சிறிது பூனை உருவத்தை செய்து எவருக்கேனும் வைத்து தானமாகக் கொடுத்தால், பூனையைக் கொன்ற  பாவம் தீர்ந்துவிடும்!" என்றார்.தங்கமணியும் மனம் வருந்தியபடியே, தன் கஞ்சத்தனத்துக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும்! என்று எண்ணியபடி தங்கத்தால் பூனை செய்து,பரிகாரிக்கே தானமாக கொடுத்தான்..







Post a Comment

Previous Post Next Post