தனது குடும்பத்திற்கும் தான் வாழும் சமூகத்திற்கும் நாட்டிற்கும் பல்வேறு வழிகளில் நேரடியாகவும் மறைமுகமாகவும் பங்களிப்புச் செய்து வரும் பெண்கள் தமக்குரிய அங்கீகாரத்தைப் பெறாது வாழ்வின் பல்வேறு கட்டங்க ளிலும் எதிர்நோக்கி வரும் ஒடுக்குமுறைகள் மற்றும் பாகுபாடுகளை முடிவுக்கு கொண்டுவந்து அவர்களது உரிமைகளைப் பாதுகாப்பதையும் அது தொடர்பில் உலகளாவிய ரீதியில் பரந்தளவில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் நோக்காகக் கொண்டு ஐக்கிய நாடுகள் சபையால் முன்னெடுக்கப்பட்ட சர்வதேச மகளிர் தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
காலங்காலமாக பெண்கள் குடும்ப மட்டத்திலும் சமூகத்திலும் அவர்களது தனிப்பட்ட திறமைகள் நிராகரிக்கப்பட்டு நான்கு சுவர்களுக்கள் தமது வாழ்க்கையை முடக்கிக் கொண்டு பாலியல் போகப் பொருட்களாக பிள்ளை பெறும் இயந்திரங்களாக வீட்டு வேலைகளைச் செய்யும் கொத்தடிமைகளாக அல்லும் பகலும் மாடாக உழைத்து தனக்கென ஒரு அடையாளமும் இல்லாமல் மண்ணோடு மண்ணாகிப் போன கதைகளுக்குமுற்றுப் புள்ளி வைத்து அவர் களது சுய கௌரவத்தையும் முக்கியத்துவத்தையும் நிலைநாட்டுவதை இந்த தினம் இலக்காக கொண்டுள்ளது.குறிப்பாக பாலின சமத்துவம், இனவிருத்தி தொடர்பான உரிமைகள்,பெண்களுக்கு எதிரான துஸ்பிர யோகங்கள் மற்றும் வன்முறைகள் என்பன தொடர்பில் கவனம் செலுத்துகிறது.
இன்றைய கால கட்டத்தில் தகவல் தொழில்நுட்பம் உள்ளடங்கலான இலத்திரனியல் தொழில்நுட்பங்கள் அன்றாட வாழ்வியலின் பிரிக்க முடியாத அம்சங்களாக மாறியுள்ளன. இந்நிலையில் அந்த தொழில்நுட்ப கல்வியையும் அது தொடர்பான தொழிற்றுறைகளில் உரிய தொழில் வாய்ப்பு, பதவி நிலை, மற்றும் வேதனத்தைப் பெறுவதிலும் பெண்கள் பாலின ரீதியில் பாரபட்சத்தை எதிர் கொண்டுள்ளதைக் கவனத்திற் கொண்டு நவீன தொழில்நுட்ப உலகின் தேவைப்பாடுகளுக்கு ஏற்ப அவர்கள் தமது இலத்திரனியல் தொழில்நுட்ப வாய்ப்புகளை பெற்று ஆண்களுக்கு நிகராக தமது திறமைகளை விருத்தி செய்து தம்மை வலுவூட்டிக் கொள்வதற்கு களம் ஏற்படுத்தித் தருவது இந்த வருட மகளிர் தினத்தின் நோக்காக உள்ளது. அத்துடன் இலத்திரனியல் தொழில்நுட்ப ரீதியில் பெண்களுக்குள்ள உரிமைகளைப் பாதுகாத்தல், தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பாலின ரீதியில் மேற்கொள்ளப்படும் வன்முறைகள் குறித்து கவனமெடுத்தல் என்பனவும் இதில் உள்ளடங்குகின்றன.
ஐக்கிய நாடுகள் சபையின் பாலினம் தொடர்பான கடந்த ஆண்டு அறிக்கையானது பெண்கள் இலத்திரனியல் உலகில் உள்ளடக்கப்படாமை குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் பெறும் நாடுகளில் கடந்த ஒரு தசாப்த காலத்தில் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான மொத்த உள்நாட்டு உற்பத்தியை இல்லாது செய்துள்ளதாக தெரிவிக்கிறது.இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படாத விடுத்து 2025 ஆம் ஆண்டுக்குள் இந்தத் தொகை 1.5 ட்ரில்லியன் அமெரிக்க டொலராக அதிகரிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இணையத்தளம் மூலமான வன்முறைகளைத் தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியறுத்தப்பட்டுள்ளது. 51 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின் பிரகாரம் 38 சதவீதமான பெண்கள் இணையத்தளம் மூலமான வன்முறைகளை எதிர்கொண்டுள்ளனர்.
சர்வதேச மகளிர் தினம் ஐக்கிய நாடுகள் சபையின் அங்கீகாரத்தைப் பெற்று 1975 ஆம் ஆண்டு முதல் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்ற போதும், அதன் வரலாறு நீண்தாகும், பண்டைய காலம் முதற்கொண்டு குடும்ப, சமூக, மற்றும் தேசிய மட்டத்தில் பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறைக அரங்கேற்றப்பட்டு வருகின்றன.
குற்றங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க சட்டங்கள் இல்லாத பண்டைய காலத்தில் எதிரிகளை வெல்ல உடல் வலிமை முக்கிய காரணியாக கருதப்பட்டமை மற்றும் குழந்தையை 10 மாதம் கருவில் சுமந்து பெறும் அரிய வரப்பிரசாதத்தைப் பெற்ற பெண்களுக்கு தமது குழந்தைகளுடன் இயற்கையாக இருந்த பிணைப்புக் காரணமாக அக்குழந்தைகளை பராமரிப்பதற்கான பொறுப்பு ஒப்படைக்கப்பட்டமை மற்றும் குடும்ப நிர்வாகம், சமையல் உள்ளடங்கலான வீட்டுப்பணிகள் என்பன காரணமாக அவர்கள் வீட்டில் இருப்பதே உசிதமாக கருதப்பட்டது. பெண்கள் உடலியல் ரீதியில் பலவீனமானவர்களாக கருதப்படுகின்றமை, அவர்களுக்கே பிரத்தியேகமாகவுள்ள இனவிருத்தி ஆற்றலுடன் அவர்கள் எதிர்கொண்டுள்ள பல்வேறு சமூக நெருக்கடிகள், குடும்பப் பராமரிப்புப் பணி என்பவற்றைக் காரணம் காட்டி அவர்களை வீட்டுக்குள் பூட்டி வைக்க அன்றைய ஆணாதிக்க சமூகம் முடிவெடுத்ததன் பிரதிபலனை பெண்கள் இன்றும் அனுபவித்து வருகின்றனர்.
நாள் முழுவதும் வீட்டுப் பணிகளில் தம்மை மூழ்கடித்து தமது சொந்த நலன்,மகிழ்ச்சி, ஓய்வு என்பவற்றை பிறருக்காகத் தியாகம் செய்து மற்றவர்களுக்காக வாழ்வை அர்ப்பணித்து சேவையாற்றும் வகை தொகையற்ற பெண்கள் ஆணாதிக்க சமூகத்தில் தமது சேவைக்கும் உழைப்பிற்கும் உரிய அங்கீகாரத்தைப் பெறாது புறக்கணிக்கப்பட்டு பல்வேறு இன்னல்களை காலங்காலமாக அனுபவித்து வருகின்றனர்.
ஆணாதிக்க சிந்தனை எனும் போது அது ஆண்களுக்கு மட்டுமே உரியதல்ல என்பதை இங்கு கவனத்திற்கொள்ள வேண்டியுள்ளது. ஆண் குழந்தைகளை விட பெண் குழந்தைகள் கீழ்ப்பட்டவர்கள்,அவர்கள் ஆண்களுக்கு சேவகம் செய்ய தமது வாழ்வை அர்ப்பணிக்கக் கடமைப்பட்டவர்கள் எனக் கருதும் பெண்களும் இந்த ஆணாதிக்கவாதிகளில் உள்ளடங்குகின்றனர். குறிப்பாக ஆணாதிக்கவாத சிந்தனைக்கு தூபம்போட்டு வளர்ப்பவர்களாக பெண்கள் உள்ளமை இங்கு கவலைக்கிடமானதாகும்.
ஆணாதிக்க சமூகத்தில் தமது உரிமைளுக்காக குரல்கொடுக்கத் தயங்கி வாழ்ந்த பெண்கள் உலகளாவிய ரீதியில் 1760 ஆம் ஆண்டிலிருந்து சுமார் 1840 ஆண்டு வரையான கைத்தொழில் புரட்சியின் விளைவாக ஆடைத் தொழிற்றுறை உள்ளடங்கலான தொழிற்றுறைகளில் உள் வாங்கப்பட்டனர். இதன்போது குறிப்பிட்ட தொழிலில் ஒத்த தகைமை, திறனைகொண்ட ஆண்களுடன் ஒப்பிடுகையில் பெண்களுக்கு குறைந்த ஊதியம் வழங்கப்பட்டமை, ஒரு நாளில் 16 மணி நேரம் வரை பணியாற்ற நிர்ப்பந் திக்கப்பட்டமை என்பன காரணமாக பெண்கள் தமக்கு அநீதி இழைக் கப்படுவதை உணர்ந்தனர்.நிலத்தின் ஆழத்தில் கனன்று கொண்டிருக்கும் எரிமலைக் குழம்பு ஒரு நாள் குண் வெடித்துச் சிதறும் என்பது இயற்கை நியதியாகும்.
1789 ஆம் ஆண்டு பிரெஞ்சு புரட்சியின் போது பெண்கள் தமக்கென சமூக, தொழில் மற்றும் அரசியல் ரீதியில் அந்தஸ்துக் கோரி போராட்டக் களத்தில் இறங்கினர். அவர்கள் தமது உரிமைக்காக வலியுறுத்தி தமக்கென அரசியல் கழங்களையும் பத்திரிகைகளையும் ஆரம்பி முயற்சியில் ஈடுபட்டனர்.
இந் நிலையில் 1917 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ரஷ்யாவில் தற்போது சென் பீற்றர்ஸ்பேர்க்ரோகிரட்டில் என அறியப்படும் பெட்ரோகிரட்டில் பெண்களின் உரிமைகளை வலியுறுத்தி மிகப் பெரிய ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 40,000 க்கு மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர். 1910 ஆம் ஆண்டு டென்மார்க்கின் தலைநகர் கோப்பன்ஹேகனில் இடம்பெற்ற சர்வதேச மாநாட்டில் மார்க்ஸிஸ சிந்தனையாளரும் செயற்பாட்டாளருமான கிளாரா ஜெட்கின் மகளிரின் உரிமைகளுக்கு குரல் கொடுக்கும் வகையில் சர்வதேச தினமொன்று அனுஷ்டிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தார். அவரது இந்தக் கோரிக்கையை அந்த மாநாட்டில் கலந்து கொண்ட 17 நாடுகளைச் சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட பெண்கள் அங்கீகரித்தனர்.
Post a Comment