.

விஜய நகரப் பேரரசின் அவை கலைந்தது. அரசர் கிருஷ்ண தேவராயர் வெளி யேறிக் கொண்டிருந்தார்.மற்ற உறுப்பினர்களும் பின் தொடர்ந்தனர். அப்போது அமைச்சர் தெனாலிராமனிடம் மெல்லியகுரலில், "தெனாலி உனக்கோ வயதாகி விட்டது.ஏன் நீ அரசரிடம் கேட்டு பணி ஓய்வு பெறக்கூடாது?" என்றார்.

அது அரசரின் காதில் விழுந்து விடவே, அரசர் சிரித்தவாறு,"தெனாலிராமா! வேண்டுமானால் சொல்... மகிழ்ச்சியோடு தருகிறேன்" என்றார். "அப்படி யானால் சரி... ஆனால்,ஒரு நிபந்தனை! எனக்குப் பதிலாக வரப் போகிறவரை நான் தான் சோதித்துத் தேர்வு செய்து தருவேன்..." என்றார்.

“அதற்கென்ன... அப்படியே செய்யலாம்...!" என்று அரசர் ஏற்றுக்கொண்டார். "அப்படியானால் உங்கள் மோதிரத்தை என்னிடம் கொடுங்கள்" என்றார். தெனாலிராமன். ஏன்...? எதற்கு? என்று அரசர் கேட்கவில்லை.கழற்றப் போனார்.

அதற்குள் முந்திக்கொண்டு,அமைச்சர் தன் மோதிரத்தைக் கழற்றிக்கொடுத்து விட்டார்.பெற்றுக்கொண்டே தெனாலிராமன், "அடுத்த வியாழக்கிழமை சோதனை...அதில், வெற்றி பெறுபவர் எனது பதவியைப் பெறுவார்... நான் ஓய்வில் போய் விடுகிறேன்" என்றார். மோதிரத்தைப் பெற்றுக் கொண்ட தெனாலி, ஒரு சிறிய மர டப்பாவில் அதை வைத்து மூடி, அரண்மனையில் இருந்த யானை நீர் குடிக்கும் ஆழமான பெரிய தொட்டியினுள் அதைப் போட்டு விட்டு, "யார் இதை எடுக்கிறாரோ, அவரே எனக்குப்பின் என் பதவிக்கு வரமுடியும்..." என்றார்.

அடுத்த சில நாட்களில், பதவித் தேர்வுக்கு மனு செய்திருந்த இளைஞர்கள் அனைவரும் வந்து ஆழமான தொட்டியப்பார்த்தனர். அப்போது தொட்டி முற்றிலும் வறண்டு போயிருந்தது.மோதிர டப்பா அடியில் கிடந்தது. அதனுள் எப்படி இறங்குவது? அதை எடுப்பது? அனைவரும் பல்வேறு உபாயங்களைச்
செய்து பார்த்தனர். எவராலும் எடுக்க முடியவில்லை.

அதற்குள் தெனாலிராமன் மீது பல குற்றச்சாட்டுகள் எழுந்தன. அமைச்சர், அவர் காதில் விழும்படியாகவே,"தெனாலிராமன் அந்த மோதிரத்தைத்தானே அபகரித்துக் கொள்ளச் செய்யும் தந்திரம் இது... இல்லா விட்டால்,
அவனே அதை வெளியில் எடுத்துக்காட்டட்டுமே...!என்றார். அதைக் கேட்டதும்,
தெனாலிராமன் நேராக அரண்மனைக்குச் சென்றார். 

அரசர் ஒவ்வொரு வருடமும் ஹோலிப் பண்டிகையின்போது அந்த
யானைத் தொட்டியில்தான் வண்ண நீரை நிரப்புவது வழக்கம். அதற்கு நீர் நிரப்பவும் வடிகட்டவும் தனித்தனிக் குழாய்கள் உண்டு. தெனாலி
சென்று நீர் நிரப்பும் குழாயை திறந்து விட்டார். தொட்டியில் நீர் நிரம்பவே, அடியில் கிடந்த சிறிய மரடப்பா நீரில் மிதந்து மேலே வந்து விட்டது. அதை
எடுத்துத் திறந்து மோதிரத்தை அரசர் கையில் ஒப்படைத்து விட்டார். அரசரிடமிருந்து அது அமைச்சரைப் போய்ச் சேர்ந்து விட்டது. மகிழ்ச்சி அடைந்த அரசர் கிருஷ்ணதேவராயர்,"மோதிரத்தை எடுத்துத் தருபவர் தான் உனக்குப் பிறகு உன் பதவிக்கு வர முடியும் என்றாய்...இப்போது நீயே எடுத்துத் தந்து விட்டாய்... எனவே, உன் பதவி உன்னையே வந்தடைந்து விட்டது. ஆகவே, உனக்கு ஓய்வு தருவது பற்றி இனி நான் எண்ணிக் கூடப்பார்க்க முடியாது"
என்றார்.





Post a Comment

Previous Post Next Post