.

தாயாக, மனைவியாக, சகோதரியாக,மகளாக என்று நம் உறவின் அனைத்து பகுதியிலும் நீக்கமற நிறைந்திருப்பவர்கள் பெண்கள்.ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருப்பாள் என்று கூறப்படுவது இதனால்தான்.ஒருவரின் சொந்த நாடு கூட, தாய்நாடு என்றுதான் அழைக் கப்படுகிறது.ஏன் 700 கோடிக்கும் மேற்பட்ட மனிதர்களை தாங்கும் இந்த பூமி கூட பூமித்தாய் என்றுதான் அழைக்கப்படுகின்றது.இதேபோல் நதிகள், மலைகள் என்று முக்கியமானவை அனைத்துக்கும் பெண்கள் பெயர்கள்தான் வைக்கப்படுகின்றன.அந்த அளவுக்கு பெண்மைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.இதனால் ஒடுக்கப்பட்டுக் கிடக்கும் பெண்கள் தங்களுடைய உரிமைகளுக்காக ஒன்று திரள வேண்டும் என்பதை வலியு றுத்தும் பெண்களின் பிரதிநிதித்துவத்தை உணர்த்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ஆம் திகதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.

மகளிர் தினம் ஏன் கொண்டாடப்படுகிறது?அதனை உருவாக்கியவர் யார்? மகளிர் தினத்துக்கு பின்னாலும் ஒரு போராட்ட வரலாறு உள்ளது என்பது இன்று எம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?ஆண்களுக்கு எதிராக பெண்கள் கிளர்ந்தெழும் தினம், பெண்களை கௌரவிக்கும் போற்றும் ஒரு தினம் என்று மட்டுமே நாம் நினைத்துக்கொண்டிருக்கின்றோம்.ஆனால்,இந்தத் தினம் கூட பெண்களுக்கு இலகுவாக கிடைத்துவிடவில்லை. உலக மகளிர் தினம் தோன்றியதன் வரலாற்றை நாம் பார்த்தோமானால் ஆணாதிக்கம் மட்டுமன்றி ஒட்டு மொத்த சமூக அமைப்பு ஆகியவற்றுக்கு எதிராகப் பெண்கள் திரண்ட வரலாறாகவே அது உள்ளது.

கி.பி.1863. லண்டன்- வேல்ஸ் இளவரசருக்கு ஒரு நடன விருந்து நடத்தப்பட்டது.அதில் கலந்து கொள்ளும் சீமாட்டிகளுக்கு ஆடம்பர உடைகள் உடனடியாக தேவையாக இருந்தன.உடைகளைத் தயாரிக்கும் தலைசிறந்த தையல் நிறுவனமாக கருதப்பட்ட ஒன்றில் இதற்காக பெண்கள் வேலை செய்தனர்.அவர்களில் ஒருவர் மேரி ஆன் வாக்லி. 8 மணி நேரம் அல்ல. தொடர்ந்து 26.5 மணி நேரம் வேலை செய்தார்.ஒரு சிறிய காற்றோட்டம் இல்லாத அறையில் அவரைப் போலவே 30 பெண்கள் வேலை செய்தனர். சரியான உணவு,ஓய்வு இல்லாமல், மேரி ஆன் வாக்லி இறந்து போனார்.அது வேலை செய்யும் பெண்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. வேலை செய்யும் நேரத்தை முறைப்படுத்த வேண்டும் என்று போராட்டம் தொடங்கியது.ஆண், பெண் தொழிலாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து 8 மணி நேர வேலைக்காக போராடினார்கள்.

8 மணி நேர வேலைக்கான இந்தப் போராட்டம் இங்கிலாந்துடன் மட்டும் நின்றுவிடவில்லை.1886 மே மாதம் 1 ஆம் திகதி அமெரிக்காவின் சிகாகோ நகரில் வேலை நிறுத்தப் போராட்டமாக வெடித்தது.வேலை நிறுத்தத்தை ஒடுக்க பொலிஸார் பலரைச் சுட்டுக் கொன்றனர். நீதிமன்றம் விசாரித்து பலருக்குத் தூக்குத் தண்டனை வழங்கியது.எனினும் போராட்டங்களை ஒருங்கிணைக்க பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் சோசலிஸ்ட் அகிலத்தின் முதல் மாநாடு 1889 இல் நடந்தது.வேலை நேரம், பெண்களுக்கான உரிமைகள் தொடர்பாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.அதில் கலந்து கொண்டவர் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த கிளாரா ஜெட்கின். அவருடைய முன் முயற்சியினால் சோசலிஸ்ட் பெண்கள் இயக்கம் உருவானது.

1907ஆம் ஆண்டு ஜெர்மனியில் சோசலிஸ்ட் பெண்கள் மாநாடு நடந்தது.அப்போது பெண்களுக்கு வாக்குரிமை இல்லை. பெண்களுக்கு வாக்குரிமை வேண்டும் என்ற முழக்கம் எழுந்தது. 1908 இல் அமெரிக்காவில் சிகாகோ, நியூயோர்க் நகரங்களில் பெண்களுக்கான சம உரிமை கேட்டுப் போராட்டங்கள் நடத்தப்பட்டன.15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் எட்டு மணி நேர வேலை, கூலி உயர்வு, வாக்குரிமை கேட்டு நியூயோர்க் நகரில் அணி திரண்டனர்.1909 பெப்ரவரி 28 ஆம் திகதி பெண்களின் வாக்குரிமைக் கான ஆர்ப்பாட்டம் அமெரிக்காவில் நடந்தது கருவுற்ற பெண்கள், குழந்தைகள், தாய்மார்கள் பாதுகாப்பு, பெண்களுக்கு வாக்குரிமை,பெண்கள் சமத்துவம் ஆகியவற்றுக்கான தீர்மானங்களுடன், மகளிர் தினம் பற்றிய தீர்மானம் 1910 இல் டென்மார்க்கில் கோபன்ஹேகனில் நடந்த சோசலிஸ்ட் பெண்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.1911, மார்ச் 19 இல் டென்மார்க், ஸ்விட்சர்லாந்து, ஜெர்மனி, ஒஸ்ட்ரியா ஆகிய நாடுகளில் முதல் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.இந்த மகளிர் தினம் உழைக்கக் கூடிய பெண்களை எல்லாம் ஒற்றுமைப்படுத்தும் தினமாக கருதப்பட்டது.30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் நாடு முழுக்க திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தும் நிகழ்வாக இந்த மகளிர் தினம் இருந்தது.இது உலகின் பிற பகுதிகளிலும் பரவியது

1917ஆம் ஆண்டு மார்ச் 8-இல் ரஷ்யாவில் ஆடைத்தொழிற்சாலை பெண் தொழிலாளர்கள்புரட்சியைத் தொடங்கினார்கள். தொழிற்சாலைகளில் வேலை செய்யும் பெண்களுக்கு மேலதிகாரிகளினால் பாலியல் துன்புறுத்துதல்கள் இருந்தன.பெண்கள் அடிமைகளாக நடத்தப்பட்டனர். அவற்றை எதிர்த்து பெண் தொழிலாளர்கள் நடத்திய போராட்டங்களில் ஆண் தொழிலாளர்களும் இணைந்தனர். 2 லட்சம் தொழிலாளர்கள் கலந்து கொண்ட பேரணி நடந்தது. அந்த நிகழ்வை நினைவுகூரும் விதத்தில் மார்ச் 8 - ஐ மகளிர் தினமாகக் கொண்டாட வேண்டும் என்று மொஸ்கோவில் 1921 ஆம் ஆண்டு நிகழ்ந்த கம்யூனிஸ்ட் பெண்கள் அகிலத்தில் முடிவெடுக்கப்பட்டது.


1922 ஆம் ஆண்டு சீனாவில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. 1927 ஹூவாங்சௌ நகரில் நடந்த பேரணியில் 25 ஆயிரம் பெண்கள் கலந்து கொண்டனர்.அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக, உலகமெங்கும் மகளிர் தினம் கொண்டாடப்படுவது வழக்கமான பிறகு, ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச மகளிர் தினத்தை அங்கீகரித்தது. உலக மகளிர் தினம் கொண்டாடப்படும் நிகழ்வு, உழைக்கக் கூடிய பெண்கள் அவர்களுடைய உரிமைக்காக நடத்திய போராட்டங்களின் விளைவாகத் தோன்றியது.சம வேலைக்கு சம கூலிக்காக, பாலியல் துன்புறுத்துதல்களுக்கு எதிராக,பெண்களின் வாக்குரிமைக்காக, பெண்கள் ஆண்களுக்குக்கு சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதற்காக உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.

உலக மகளிர் தினம் என்பது ஒட்டுமொத்த சமுதாயத்தாலும், ஆணாதிக்கத்தாலும் ஒடுக்கப்பட்டுள்ள பெண்கள் ஒன்று சேர்ந்து இந்த ஒடுக்குமுறைகளுக்கு எதிராக திரண்டு எழ வேண்டும் என்பதை உணர்த்துவதற்காகவே கொண்டாடப்பட வேண்டிய ஒன்று.ஆனால் ஒரு ஆடம்பரமாக கொண்டாடப்படும் விழாவைப் போல அது பார்க்கப்படுவதும், பெண்களுக்கு பெண்களும் பெண்களுக்கு ஆண்களும் Happy Woman's Day என்று கை குலுக்கிக் கொண்டால் அல்லது வாழ்த்து சொன்னால் போதும் என்ற வகையிலுமே இன்று மகளிர் தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. உலக மகளிர் தினம் எதற்காக அனுஷ்கப்படுகின்றது என்பது பலருக்கும் தெரியாத நிலையே உள்ளது

பெண்கள் அடிமைகளாக இருப்பதற்கு இந்த ஆணாதிக்க சமூகம் ஒரு காரணம்.ஆணையும், பெண்ணையும் அடிமைகளாக வைத்திருக்கும் ஒட்டு மொத்த சமூக அமைப்பு இன்னொரு காரணம் . அதனால்தான் பெண்ணியம் என்பது ஆண்களுக்கு எதிரானதாக அல்லாமல், ஆணாதிக்கத்துக்கு எதிராக இருக்க வேண்டியுள்ளது. அதேசமயம் ஆண்களுடன் இணைந்து ஒட்டுமொத்த சமூக அமைப்புக்கு எதிராக பெண்கள் போராட வேண்டியுள்ளது.ஆனால் இந்த அடிப்படைகளை மறந்து நமது நாட்டில் மகளிர் தினத்தை வர்த்தகத்தை மையமாக கொண்டதொரு கொண்டாட்ட நிகழ்வாக மாற்றிவிட்டார்கள்.

சமூகத்தில் ஆண், பெண் இருவரும் சம மதிப்பு கொண்டவர்கள். ஆனால், பெண்கள் தான் பெரும்பாலான வன்முறையை எதிர்கொள்ள வேண்டியுள்ளது உலகில் மூன்றில் ஒரு பெண்,தன் வாழ்நாளில் உடல் அல்லது பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றார். பெரும்பாலும் கணவர்களால் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.உலகில் வன்முறையால் பாதிக்கப்படும் இரண்டில் ஒரு பெண், தன் கணவர் அல்லது குடும்பத்தினரால் கொல்லப்படுகிறார். உலகளவில் கடத்தப்பட்ட பெண்களில் 71 சதவீதம், பாலியல் தேவைகளுக்காக கடத்தப்பட்டவர்கள். உலகில் தற்போது வாழும் பெண்களில், 75 கோடி பேர்,18 வயதுக்கு முன் திருமணம் செய்தவர்கள். நோய், விபத்து ஆகியவற்றால் பலியான பெண்களை விட, வன்முறை மற்றும் இளம் திருமணத்தால் ஏற்பட்ட பாதிப்புகளால் இறக்கும் பெண்கள் அதிகம் என ஐ.நா.கூறுகின்றது.

உலகளாவிய ரீதியில் மூன்றில் ஒரு பெண்,மன ரீதியாகவும் பாலியல் ரீதியாகவும் கணவர் மற்றும் மற்றைய சிலரால் ஒடுக்குமுறைக்கு ஆளாக்க ப்படுவதோடு இது உலகளாவிய ரீதியில் , 35 சதவீதத்தை நன்றாக வகிக்கிறது என்று, உலக  சுகாதார ஸ்தாபனத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும், உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் கொல்லப்படும் பெண்களில் 38 சதவீதமானவர்கள், அவர்களது கணவன், காதலன், அல்லது துணைவராலேயே கொல்லப்படுகின்றனர்.மேலும், பெண்கள் பாலியல் வல்லுறவுக்கும் பாலியல் துன்புறுத்தல்களுக்கும் ஆளாக்க ப்படுவதால், அவர்களது குடும்பம்,கல்வி, அவர்களது பிள்ளைகள் போன்ற அனைவரும் பாதிக்கப்படுவதோடு, சில சமயங்களில் மன அழுத்தத்தில் இருந்து வெளியேறுவதற்காக,மது பாவனை உள்ளிட்ட தீய பழக்கங்களுக்குப் பெண்கள் அடிமையாவதோடு, சிலர், தமதுயிரை மாய்த்தும் கொள்கின்றனர்.

உலகில் தற்போதுள்ள பெண்களில் சுமார் 700 மில்லியன் பெண்கள், தமது 18 வயதுக்கு முன்னரேயே திருமணம் முடித்து வைக்கப்பட்டுள்ளனர்.அவர்களில் சுமார் 250 மில்லியன் பேர், தமது 15 வயதுக்கு முன்னர் திருமணம் முடித்து வைக்கப்பட்டனர் என்று, தரவுகள் குறிப்பிடுகின்றன.இதனால், அவர்களுக்கு பாதுகாப்பான உடலுறவில் ஈடுபடுவதற்கும் பிரசவத்தின்போது சரியான உடல் நிலையை பேணுவதற்கும் முடியாமல் போகின்றது.மேலும், திருமணமான பெண்களில் 150 மில்லியன் பெண்கள், பலாத்காரமாக உடலுறவில் ஈடுபடுவதற்கு நிர்ப்பந்திக்கப்படுகின்றனர் என்றும் உலக சுகாதார ஸ்தாபன த்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கைப் பெண்கள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் அறிக்கையில், இலங்கையில் 30 -40 வீதமான பெண்கள், ஏதாவது ஒருவகையில் பாலியல் ரீதியிலான துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்படுகின்றனர்.இவர்களுள் 60 வீதமான பெண்கள், வன்முறைகளால் பாதிக்கப்பட்டு,தற்போதும் அதனால் மன அழுத்தங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.பஸ்களிலும் ரயில் களிலும் நடைபாதையிலும், பெண்கள் வன்கொடுமைக்கு,பாலியல் சீண்ட ல்களுக்கு ஆளாக்கப்படுவது வாடிக்கையாக அமைந்துள்ளது என தெரிவிக்க ப்பட்டுள்ளது.

பெண் சிசுக் கொலை, கல்வி மறுத்தல், சீதனக் கொடுமை, பாலியல் வல்லுறவு, குடும்ப வன்முறை,பாலின பாகுபாடு, சமமற்ற ஊதியம்,பதவி உயர்வில் பாகுபாடு,கட்டாய கருத்தடுப்பு, கருக்கலைப்பு, மற்றும் சமூக நம்பிக் கைகளின் அடிப்படையிலான அடக்கு முறை, கடத்துதல், கட்டாயத் திருமணம் ஆகியவற்றை ஒரு பெண் எதிர்கொள்ளும் வன்முறைகளாக குறிப்பிடலாம். பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தொடர்வதற்கு பிரதான காரணமாக சமூக, மத அமைப்பு இருக்கின்ற போதிலும் ஆழமாக ஆராய்ந்தால், பெண்களே அவர்களுக்கு எதிரியாக உள்ளமை புலப்படும். அதேவேளை, பல்வேறான குடும்பங்களில் சமூக அமைப்பின் திணிப்புகளை பெண்கள் தாமாகவே முன்வந்து ஏற்றுக் கொள்ளும் நிலையும் உள்ளது.

ஆண்களுக்கு நிகராக அல்லது ஆண்களை விடவும் பெண்கள் அதிகமாக உழைத்தாலும் பெண் என்பதால் ஆண்களுக்கு தருவதை விட குறைவான கூலி தரும் நிலையே இப்போதும் உள்ளது.விவசாயம், கட்டுமானப் பணிகளில் வேலை செய்யும் பெண்களுக்கு குறைவாகவே கூலி நிர்ணயம் செய்யப்படுகி றது.பெண்கள் எவ்வளவுதான்கல்வி கற்று உயர்ந்த பதவிகளில் இருந்தாலும் பெண்களுக்காகவே வீட்டு வேலைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.வீட்டு வேலை களையும் பார்த்துக் கொண்டு அலுவலக வேலைகளையும் பெண்கள் பார்க்க வேண்டிய கட்டாய நிலையே இப்போதும் உள்ளது.பெரும்பாலான குடும்பங் களில் எந்தப் பிரச்சினை குறித்தும் முடிவு எடுக்கும் உரிமை இன்னும் ஆண்கள் கைகளிலேயே உள்ளது.

அது மட்டுமல்ல பாராளுமன்றம்,உள்ளுராட்சி சபைகளில் பெண்களுக்கு 25 சதவீதம் இட ஒதுக்கீட்டுக்கான சட்டம் முன்வைக்கப்பட்டாலும் இப்போது வரை அது அமுலாக்கப்படாத நிலையே உள்ளது.ஆண்களுக்கு நிகராக எவ்வளவு பெண்கள் அரசியலில் ஈடுபட்டு பிரகாசிக்கக்கூடிய சூழ்நிலை உள்ளது. ஆனால், அந்த உரிமை பெண்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது. தைரியமாக அரசியல்களத்தில் இறங்கி தேர்தல் ஒன்றில் பெண் போட்டியிடும்போது அந்தப் பெண்ணுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் அந்தப் பெண்ணின் பின்னணியில் செயல்படுபவர் அவரின் கணவராக, தந்தையாக அல்லது சகோதரர் களாகத்தான் உள்ளார்கள்.ஆணைச் சார்ந்து வாழ வேண்டிய நிலையில் தானே இப்போதுவரை பெண்கள் இருக்கிறார்கள். அலுவலகங்களில், பாடசா லைகளில், பொது இடங்களில் பெண்களுக்கான பாதுகாப்பு உறுதிப்படுத் தப்பட்டுள்ளதா? சிறுமிகள் கூட பாலியல் வன்முறைக்கு ஆளாகும் நிலைதான் உள்ளது.பெண்களை வெறும் உடலாகப் பார்க்கும் பார்வை அதிகரிக்கின்றதே தவிர, மாறவில்லை. திரைப்படங்களிலும் விளம்பங்களில் ரங்களிலும் வெறும் உடலாகத்தானே பெண்கள் சித்திரிக்கப்படுகிறார்கள்.

இவ்வாறு பெண்கள் அன்றாடம் சந்திக்கும் தீவிரமான பிரச்சினைகளை, அவர்களின் போராட்ட வாழ்க்கையை முற்றிலும் மறுதலித் துவிட்டு, மகளிர் தினத்தை வெறும் கேளிக்கை,கொண்டாட்டமாக,வர்த்தக யுக்தியாக மாற்றி விட்டார்கள்.மகளிர் தினக் கொண்டாட்டங்கள் வணிக லாபத்துக்கான ஒரு தளமாகிவிட்டது, பெண்கள் சம்பந்தப்பட்ட பொருட்களுக்கான விளம்பரமும் விற்பனையும் செய்து இந்த நாளில் லாபம் பார்க்கிறது ஒரு கூட்டம்.

ஊடகங்களோ மகளிர் தினத்தன்று மட்டும் ஒரு சில பிரபலமான பெண்களை பேட்டி கண்டும் பெண்கள் தொடர்பான சில நிகழ்ச்சிகளை ஒளிபரப்பியும் பிரசுரித்தும் அத்துடன் தமது கடமையை முடித்துக்கொள்கின்றன.எல்லா அலைவரிசைகளிலும் மகளிர் தின கருத்துக் கேட்டு பொதுவெளியில் மைக்கை நீட்ட, பதில் சொல்பவர்களும் தங்களுக்கு தெரிந்த, தெரியாத, நம்பிய ,நம்பாத கருத்துக்களை அபத்தமாக பதிவு செய்வார்கள்.இத்தகைய நிகழ்ச்சிகளைப் பார்த்து அலுத்தும் சலித்தும் போய்விட்டது.

மகளிர் தினம் என்றால் அது எல்லாப் பெண்களுக்கும் உரிய தினம் என்பதாகப் புரிந்து கொள்ளப்படுகிறது.வயல் வெளிகளில், கிராமப்புறங்களில், வெயிலில் கருகி உழைப்பதோடு,சாதிய அடக்குமுறைக்குள்ளாகும் உழைக்கும் பெண்களும், நகரங்களில் அதிக சம்பளம் தரும் பெரிய நிறுவனங்களின் குளிரூட்டி அறைகளில் வேலை செய்யும் பெண்களும் உழைக்கும் பெண்களாக இருந்தபோதிலும், அவர்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகள் வேறு வேறாகவே இருக்கின்றன.பெரிய நிறுவனங்களில் அதிகாரியாக தலைமைப் பொறுப்புகளில் பணிபுரியும் பெண்களின் பிரச்சினைகளும், அன்றாடம் காய்கறி விற்றுப் பிழைக்கும் பெண்களின் பிரச்சினைகளும் வெவ்வேறானவை. அரசியலில்,பொதுவெளியில் பிரபலமாக உள்ள பெண்களின் வாழ்க்கை நிலையும், விவசாய நிலங்களிலும் ஆடைத் தொழிற் சாலைகளிலும் வேலை செய்யும் பெண்களின் வாழ்க்கை நிலையும் வேறு வேறானவை. சீதனம் தர முடியாமல் திருமணம் ஆகாமல் இயல்பான வாழ்க்கையைத் தொலைத்துவிட்ட பெண்களின் பிரச்சினைகளும், செல்வ வளம் மிக்க குடும்பத்தில் பிறந்து பல தலைமுறைகளுக்கும் நன்றாக வாழ்வதற்கு கவலைப்பட எதுவுமில்லாத பெண்களின் பிரச்சினைகளும் வேறுபட்டவை.

எனவே பொதுவான பெண்கள், பெண்களுக்கான பொதுவான பிரச்சினைகள் என்று எதுவுமில்லை.பல்வேறு வாழ்க்கைத் தரங்களையுடைய பெண்களே இருக்கிறார்கள்.அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும் வெவ்வேறான வையாகவே இருக்கின்றன.எனவே எல்லாப் பெண்களுக்கும் பொதுவானதாக மகளிர் தினத்தைக் கருத முடியாது.இங்குள்ள மகளிர் அமைப்புக்கள் கூட மகளிர் தினத்தை சரியாக கையாளவில்லை என்றே கூற வேண்டும்.எனவே மகளிர் தினம் என்பது பொதுவான கொண்டாட்டம் அல்ல. அது உழைக்கும் பெண்களுக்கான தினம். ஒடுக்கப்பட்டுக் கிடக்கும் பெண்கள் தங்களுடைய உரிமைகளுக்காக ஒன்று திரள வேண்டும் என்பதை வலியுறுத்தும் தினம் என்பதனை முதலில் புரிந்து கொள்வோம்.

காலகாலமாக இருக்கும் பாலின பிரச்சினைகள் ஓரளவுக்கேனும் தீர்க்கப்பட்டுள்ளதா? நூறு சதவிகிதம் பெண் கல்வி கிடைத்துள்ளதா? பல இடங்களில் பெண்களுக்கு பெண்களே எதிரி எனும் நிலை மாறிவிட்டதா? பாதுகாப்பான ஒரு பயணம் பெண்களுக்கு முழுமையாக சாத் தியப்படுகிறதா? விளம்பரங்களில் பெண்களை இழிவுபடுத்துவதை தடுக்க முடிந்ததா? பெண்களுக்கு எங்கும் எதிலும் சம வாய்ப்பு, சம உரிமை எனும் கனவு மெய்ப்பட்டுள்ளதா? பெண்கள் அலுவலகத்தில் இரவு நேரத்திலும் பாதுகாப்பாக பணிபுரிய முடிகின்றதா? அரசியலில் பெண்களுக்கான 25 வீத இட ஒதுக்கீடு முழுமையாக அமுல் படுத்தப்படுகின்றதா? பெண்கள் மீதான பாலியல் ரீதியிலான வன்முறைகள், துஷ்பிரயோகங்கள்,அடக்குமுறைகள், கொலைகளுடன் தொடர்புபட்டவர்களுக்கு உடனடியாக சட்ட ரீதியான தண்டனைகள் உறுதிப்படுத்தப்படுகின்றனவா? என்பன போன்ற கேள்வி களுக்கு என்று 'ஆம்'என்ற பதில் வழங்க முடிகின்றதோ அன்றுதான் மகளிர் தினத்துக்கான உண்மையான அர்த்தம் வெற்றி பெறும்.நாடும் உலகமும் உருப்படும்.

@இக் கட்டுரையானது தினக்குரல் பத்திரிகைக்காக H.ஹீஸ்னா எழுதியது





Post a Comment

Previous Post Next Post