.

அழிந்துவரும் பூச்சி இனங்கள் குறித்து சர்வதேச அளவில் விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வொன்றில் பூச்சி இனங்கள் மட்டுமின்றி வண்டுகள், பறவை இனங்களும் அழிவை நோக்கி சென்று கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது. மனிதர்கள் மற்றும் பருவ நிலை மாற்றத்தால் இதுவரை 5 லட்சம் பூச்சி இனங்கள் அழிந்து வருவதாக அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. உலகில் உள்ள பூச்சி இனங்களில் 40 சதவீதம் வியத்தகு வழியில் குறைந்து வருவதாகவும் ஒரு ஆண்டுக்கு 2.5 சதவீதத்தில் பூச்சிகள் அழிவடைவதாகவும் மனித செயற்பாடுகளால் ஒரு நூற்றாண்டு கால கட்டத்திற்குள் உலகில் உள்ள பூச்சி இனங்கள் முழுவதுமாக அழியலாம் எனவும் எச்சரிக்கிறது இந்த ஆய்வு. 'பயோலொஜிக்கல் கன்சர்வேஷன்' என்ற சஞ்சிகையில் இந்த ஆய்வு முடிவானது பிரசுரமாகி உள்ளது.

நம் வாழ்வில் அன்றாடம் கண்ட தேனீக்கள், எறும்புகள், மற்றும் வண்டுகள் போன்றவை பாலூட்டிகளை விட 8 மடங்கு வேகத்தில் அழிந்து வருவதாக கூறுகிறது இந்த ஆய்வு.ஆனால், அதே நேரம், இலையான் மற்றும் கரப்பான் பூச்சிகள் பெருகி வருவதாக அந்த ஆய்வு கூறுகிறது.இந்த ஆய்வு மட்டுமல்ல, இதற்கு முன்னர் செய்யப்பட்ட ஆய்வுகளும், பூச்சி இனங்கள் மெல்ல மெல்ல அழிந்து வருவதை சுட்டிக்காட்டி உள்ளன.குறிப்பாக பொருளாதார ரீதியாக வளர்ந்த நாடுகளில் இந்த ஆய்வானது, கடந்த 13 ஆண்டுகளில் உலகெங்கும் செய்யப்பட்ட 73 ஆய்வு முடிவுகளை பரிசீலித்துள்ளது.

உலகெங்கும் அனைத்து பகுதிகளிலும் 40 சதவீத பூச்சிகள் அழியும் நிலையில் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.இந்த ஆய்வுக்கு தலைமை தாங்கிய சிட்னி பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர் பிரான்சிஸ்கோ, ‘தீவிரமாக விவசாயம் மேற்கொள்வதால், நகர்மயமாக்கலால், காடுகள் அழிக்கப்படுவதால், பூச்சிகளின் வசிப்பிடங்கள் அழிந்து விட்டன. இவைதான் பூச்சிகளின் அழிவுக்கு முக்கிய காரணம்' என்கிறார். இரண்டாவது காரணம் பூச்சிகொல்லிகள்; மூன்றாவது காரணம் நோய்க்கிருமிகள்; நான்காவது காரணம் பருவநிலை மாற்றம் என்றும் அவர் கூறுகின்றார்.

பூச்சிகள் தானே,அவை அழிந்தால் என்ன ? பூச்சிகள் அழிந்தால் வேறென்ன நடக்கும்? என்ற கேள்விக்கு ஒரே பதில் மனித இனம் அழிந்து விடும் என்பதுதான்.சுற்றுச்சூழல் சமநிலைக்கும், உணவு வளையத்திற்கும் பூச்சிகள் மிகவும் இன்றியமையாதவை.பூச்சி இனத்தின் அழிவானது நேரடியாக மனித இருப்பை கேள்விக்குள்ளாக்கும். மனித இனம் இந்த பூமியில் இருக்க வேண்டுமானால், பூச்சிகள் கண்டிப்பாக இருக்கவேண்டும். தீவிரமான விவசயாமும் பூச்சி இன அழிவுக்கு ஒரு காரணம் என்று சுட்டிக்காட்டுகிறது.

இலங்கையின் நிலை

இலங்கை பரப்பளவில் சிறிய நாடாக இருந்தாலும் அதிகளவான உயிர்ப்பல்வகைமையைக் கொண்ட நாடாகும். இலங்கையில் 486 வகையான பறவைகள்,183 வகையான ஊர்வன, 122 வகையான நீர் நில வாழ் உயிரினங்கள், 93 வகையான நன்னீர் மீன்கள், 245 வகையான வண்ணத்து பூச்சி இனங்கள்,1695 வகையான அந்துப்பூச்சிகள், 181 வகையான எறும்புகள், 70,000 வகையான தேனீக்கள், 131 வகையான நுளம்புகள், 3210 பூச்செடிகள் எனப் பெருமளவிலான உயிர்ப்பல்வகைமைகள் காணப்படுகின்றன. என்றாலும் காலப்போக்கில் அதிகரித்த அபிவிருத்தி நடவடிக்கைகள், நகராக்கம், காடழிப்பு போன்ற நடவடிக்கைகளினால் இன்றளவில் இலங்கை யின் உயிர்ப் பல்வகைமையும் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளது. எனவேதான் CI நிறுவனத்தினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள அருகிவரும் உயிர்ப் பல்வகைமை மையங்களுள் ஒன்றாக இலங்கையும் அடையாளப்ப டுத்தப்பட்டுள்ளது.

ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழக Young Biologists Association இணையத்தளப் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தரவுகளினை மையமாகக் கொண்டு 90 வகையான பாலூட்டிகளில் 16 வீதமும் 441 வகையான பறவை இனங்களில் 5 வீதமும் 162 வகையான ஊர்வனவில் 43 வீதமும் 48 வகையான அம்பி பியாக்களில் 52 வீதமும் 61 வகையான மீனினங்களில் (நன்னீர்) 39 வீதமும் 245 வகையான வண்ணத்துப்பூச்சிகளில் 6 வீதமும் 540 வகையான வண்டுகளில் 23 வீதமும் அழிவின் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளன. இதற்கமைய ஊர்வன, அம்பிபியா,மீன்கள் அதிகளவில் அச்சுறுத்தல்களை எதிர்நோக்கியுள்ளமை தெளிவாகின்றது.



பூச்சிகள் இல்லாத பூமி?

ஒவ்வொரு உயிரினத்திற்கும் சுற்றுச் சூழல் அமைப்பில் ஒரு பங்கு உள்ளது.அதுபோல் பூச்சிகளுக்கும் உள்ளது.அவற்றால் தான் மலர்களில் மகரந்த சேர்க்கை நடந்து பழங்கள், காய்கறிகள் மற்றும் பூக்களின் உற்பத்தி நிகழ்கின்றன.சில பூச்சிகள் பயிர்களை தாக்கும் பூச்சிகளை உண்டு வாழும். பூச்சிகள் இல்லாவிட்டால் விவசாயம் கிடையாது. மரம், செடி,கொடி என்று எதற்கும் அடுத்த தலைமுறையே இல்லாமல் ஆகிவிடும்.இயற்கை பாதுகாப்பு அமைப்பின் கூற்றுப்படி, பூச்சிகள் துப்புரவு நிபுணர்களாக செயல்படுகின்றன. கரிமப் பொருட்களை சிதைத்து கழிவுகளை சுத்தம் செய்கின்றன. இதனால் உலகம் குப்பை மலைகளாக மாறாமல் இருக்கிறது. பூச்சி எண்ணிக்கை இழப்பு கிரகத்தில் இயற்கையின் சமநிலையை மாற்றும். காடுகள் பாலை வனமாகும்,உயிர்கள் வாழ தகுதியற்ற கிரகமாக பூமி மாறிவிடும்.

இப்படிப்பட்ட முக்கியத்துவம் கொண்ட பூச்சிகள் சுற்றுப்புறத் தட்ப வெப்ப நிலைக்கு ஏற்ப மாறுபடும் இரத்த வெப்பநிலை உடையது. ஆயினும் வேகமாக மாறும் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் வெப்பத்தை பூச்சிகளால் தகவமைத்துக் கொள்ள முடிவதில்லை.இதனால் வெப்பம் தாங்க முடியாமல் அழிந்து விடும் நிலை ஏற்பட்டுள்ளது.வெப்பநிலை மாற்றங்களுக்கு பூச்சிகள் எவ்வாறு பதிலளிக்கும் என்பதை ஆராய ஒரு குழு மேம்பட்ட மாதிரிகளைப் பயன்படுத்தியது.அவர்கள் ஆய்வு செய்த 38 பூச்சி இனங்களில் 65 சதவீதம் (25 இனங்கள் அடுத்த 50 முதல் 100 ஆண்டுகளில் அழிந்துபோகும் அபாயத்தை எதிர்கொள்ள நேரிடும் என்று அவர்களின் பகுப்பாய்வு காட்டுகிறது.

காலநிலை மாற்றம் உயிரியல் பன்முகத்தன்மை மற்றும் பூமியில் உள்ள உயிர்களின் மரபணுக்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புக்களில் ஏற்படும் மாறுபாட்டின் அளவை எதிர்மறையாக பாதிக்கும் என்பதை விஞ்ஞானிகள் நீண்ட காலமாக கணித்துள்ளனர்.மனித ஆரோக்கியம், உணவுப்பாதுகாப்பு, சுத்தமான காற்று மற்றும் நீர் மற்றும் உலகளவில் மில்லியன் கணக்கான விவசாய வேலைகளுக்கு உயிரியல் பன்முகத்தன்மையை பராமரிப்பது அவசியம் என்று அவர்கள் கூறினர்.ஆனால், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் இந்த பூச்சிகளின் அழிவு மனிதன் கணிப்பதை விட பெரிதான அழிவுக்கான அபாயத்தை ஏற்படுத்தும். அதை தடுக்கும் நடவடிக்கைகளை இப்போது இருப்பதை விட பன்மடங்கு வேகப்படுத்த வேண்டும் என்று உயிரியல் அறிஞர்கள் எச்சரிக்கின்றனர்.

இதேநேரம், பருவநிலை மாறுபாடு காரணமாக அடுத்த நூற்றாண்டில் இந்த பூமியில் வாழும் 65 சத வீத பூச்சி இனங்கள் அழியும் அபாயம் இருப்பதாக ஆய்வு முடிவுகள் வெளிவந்துள்ளதாக Nature Climate Change- என்ற இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பருவநிலை மாறுபாடு மிகப்பெரும் பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது.அளவுக்கு அதிகமான மழை, வரலாறு காணாத வறட்சி,உணவுப் பஞ்சம், வெப்ப நிலை அதிகரிப்பு என பல்வேறு சிக்கல்களுக்கும் பருவ நிலை மாறுபாடே காரணமாக அமைந்துள்ளது. முக்கியமாக கரியமில வாயு வெளியேற்றம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி புவியின் வெப்பநிலை உயர காரணமாக அமைகிறது.இதனால், பனிப்பா றைகள் உருகுதல், கடல் மட்டம் உயர்வு என நீண்ட கால பிரச்சினைகளுக்கு வழி வகுக்கிறது.பருவநிலை மாறுபாடு காரணமாக மனித சமூகம் மட்டும் இன்றி பூச்சி இனங்களும் பாதிக்கப்படுவதாக Nature Climate Change என்ற இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது பருவநிலை மாறுபாடு பூச்சியினங்களில் எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்துகின்றன என்ற ஆய்வின் முடிவுகள் இந்த இதழில் வெளியிடப்பட்டிருக்கின்றன.

வெப்ப அழுத்தத்தில் ஏற்படும் காலநிலை மாற்றங்கள் விலங்குகளின் எண்ணிக்கையை சீர்குலைக்கும் மற்றும் அவற்றின் அழிவு அபாயத்தை ஊக்குவிக்கும். அதோடு காலநிலை மாற்றத்தின் விளைவுகள் முன்னர் கணித்ததை விட மிகவும் விரிவானதாகவும் ஆபத்து நிறைந்ததாகவும் இருக்கலாம் என்றும் இந்த ஆய்வு கூறுகிறது.






Post a Comment

Previous Post Next Post