கார்ல் மார்க்ஸ் மறைந்து 140 ஆண்டுகள் ஆகிவிட்டன என்றாலும்,மார்க்ஸ் குறித்த விமர்சனங்களும் விவாதங்களும் ஓயவில்லை. உலகமெங்கும் 'கம்யூனிசம் வீழ்ந்துவிட்டது' என்ற அறைகூவல் ஒருபுறம்;கம்யூனிஸ்ட்களின் தளராத செயற்பாடுகள் இன்னொருபுறம்.
இந்த நிலையில்தான் மார்க்ஸின் பங்களிப்புகள், கம்யூனிஸ்ட்களின் தவறுகள், முதலாளித்துவம் வெற்றி பெற்றுவிட்டதா என்ற அலசல்,கம்யூனிஸ்ட்கள் மேற்கொள்ள வேண்டியவை என அ.மார்க்ஸ் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு 'கார்ல் மார்க்ஸ்’வெளிவந்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மக்கள் யுத்தக்குழுவின் புரட்சிகரப் பண்பாட்டு இயக்கம் போன்ற இடதுசாரி அமைப்புகளில் செயற்பட்டு, பிறகு வெளியேறி பின்நவீனத்துவம், தலித் அரசியல்,பெரியார்மீதான மறுவாசிப்பு ஆகியவற்றை முன்வைத்ததால் இடதுசாரிகளே 'மார்க்சியத்துக்கு எதிரானவர்'என்று விமர்சித்த அ.மார்க்ஸ் எழுதியுள்ள நூல் என்பதால் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.
கார்ல் மார்க்ஸின் சிந்தனைப்பங்களிப்புகள் குறித்து பல நுட்பமான விஷயங்களை அ.மார்க்ஸ் முன்வைக்கிறார். 'மதம் மனிதனுக்கு அபின்'என்னும் மார்க்ஸின் ஒற்றை வரி மேற்கோளை மத ஆதரவாளர்களும் மத எதிர்ப்பாளர்களும் எப்படித் தட்டையாகப் புரிந்துகொண்டார்கள் என்பதை விளக்கும் அ.மார்க்ஸ்
"மதத்தின் வரலாற்றுப் பாத்திரத்தை கார்ல் மார்க்ஸ் மறுதலிக்கவில்லை' என்கிறார். ஹெகல், ஃபாயர்பாக் என்னும் இரு சிந்தனையாளர்களின் கருத்துகளை உள்வாங்கி அதைத் தலைகீழாக்கி எப்படி இயங்கியல் பொருள் முதல் வாதம், வரலாற்றுப் பொருள் முதல்வாதத்தை மார்க்ஸ் உருவாக்கினார் என்று விரிவாக விளக்குகிறார். அதேபோல் அந்நியமாதல் குறித்து மார்க்ஸ் வெவ்வேறு காலகட்டங்களில் எடுத்த நிலைப்பாடுகள், அல்தூஸரின் அமைப்பியல் மார்க்சியம், அரசியல் பொருளாதாரத்தின் அடிப்படைகள், தெறிதா மார்க்ஸை அணுகும் முறை ஆகியவை கோட்பாட்டுரீதியில் விளக்கப்பட்டுள்ளன.
மாறியுள்ள உலகச்சூழலில் முதலாளித்துவத்தை மார்க்சிய அடிப்படையில் எப்படிப் புரிந்துகொள்வது, கம்யூனிஸ்ட்கள் தங்கள் போராட்டங்களை எப்படி மாற்றிக்கொள்வது என்பதை ஹார்ட், நெக்ரி, கய் ஸ்டாண்டிங் போன்ற சிந்தனையாளர்களின் ஆய்வுகளை முன்வைத்து அ.மார்க்ஸ் விளக்குகிறார். பழைய மாதிரியில் 'ஒவ்வொரு தொழிலையும் செய்யும் தொழிலாளர் களுக்கான தொழிற்சங்கம்' என்பதைவிடவும் 'வெவ்வேறு தொழில்களில் உள்ள நிரந்தரமற்ற தொழிலாளர்களுக்கான தொழிற்சங்கம்' போன்றவை அவசியம் எனும் அ.மார்க்ஸ், உலக முதலாளியம், ஏகாதிபத்தியம் ஆகியவை குறித்தும் புதிய வரையறைகள் தேவை என்கிறார்.
'கூறியது கூறல்' என்ற குறை தவிர்க்கப்பட்டிருக்கலாம். இன்றைய சூழலில் மார்க்சியத்தை எப்படிப் புரிந்து கொள்வது என்ற தேடல் கொண்டவர்களும் களப் போராளிகளும் அவசியம் படிக்க வேண்டிய நூல்.வாசிப்போம்
Post a Comment